அரூபமாய் உருளும் பந்து

ஓவியம்: மு. மகேஷ்
அதிகாரம் 3
அலைச்சத்தம் கேட்டபடியே தயாராகிக் கொண்டிருந்த சேசடிமைக்கு, அன்று காலையிலிருந்தே மிகுந்த படபடப்பாக இருந்தது. வெள்ளை மணல் சூழ இருந்த அவன் வீட்டுக்கும் குளிமுறிக்குமாக நடந்தபடி இருந்தான். அம்மை கொடுத்த அவனுக்குப் பிடித்தமான கஞ்சியையும் நெத்திலிப்பொடியையும் சாப்பிடக்கூட முடியவில்லை. முதன் முதலாக தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில், நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தான். அரசு அலுவலகம் எதற்கும் இதற்கு முன்னால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. அவனுக்கும் சகோதரிகளுக்கும் சான்றிதழ்கள் பெறுவதற்கு, படகுக்கு டீசல் மானியம் பெறுவதற்கு, மீனவர் குறைதீர்ப்புத் தினங்களுக்கு, மற்றபடி ஊருக்கு ஒரு தேவை என்றாலும் அப்பாவே போய்ப் பார்த்துத்தான் பழக்
