காலக் கண்ணாடிக் கதைகள்

கடவுளுக்குப் பின்
(சிறுகதைகள்)
பொன்முகலி
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு,
நாகர்கோவில் - 1
பக். 112
ரூ.. 145
கனவுகள் இன்றி உறங்குவதற்கு ஏங்கியிருக்கிறேன். கனவுகள் இடையூறு செய்யும் இரவுகளில், மறுநாள் பகல் முழுவதும் சோர்வு இருக்கும். தூங்கி எழுந்த நிறைவை, கனவுகள் தடுக்கின்றன. பொன்முகலியின் ‘கடவுளுக்குப் பின்’ தொகுப்பில் வரும் மித்ராவும், தினமும் கனவுகளுடன் போராடுகிறாள். ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்குச் சென்று, கனவுகள் இன்றி உறங்கி எழும்படியான தங்கும் அறைகள் இங்கு இருக்கிறதா என்று கேட்கிறாள். மித்ராவுக்கு அடுத்து அங்கே நானும் அமர்ந்திருக்கிறேன்.
சமகால வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒன்பது கதைகள் அடங்கிய இந்நூல், பொன்முகலியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் மனிதர்கள் சந்திக்கும் சமூக, உளவியல் சிக்கல்களைப் பல்வேறு கோணங்களில் கதைகளாக எழுதியுள்ளார்.
நீர்ச் சுழலுக்குள் விழும் பூவின் ஓர் இதழ் மெல்ல உள்ளிழுக்கப்படுவதுபோல மனதை இக்கதைகள் வாசிப்பின்போது இழுத்துச் செல்கின்றன. உறவுச் சிக்கல்கள், உளவியல் அலைக்கழிப்புகள், பாலியல் ஈர்ப்பினால் உருவாகும் தடுமாற்றங்கள், காலத்தின் முன்-பின் நகர்வு, காதலின் பரிணாமம், குற்றவுணர்வு என்று ஒவ்வொரு கதையும் புதிய பொருண்மையைக் கொண்டுள்ளது. நவீன வாழ்வின் இழைகளை இக்கதைகள் நேர்த்தியான கதைசொல்லலோடு அணுகுகின்றன. பெண்கள் வீட்டிலும், வெளியிலும் சந்திக்கும் பலவற்றைக் கதைகளாக்கியுள்ளார். மனித மனங்களின் இருண்மை வெளிகளை கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக, பெண்கள் மனவெளியில் சந்திக்கும் போராட்டங்கள் கதைகளின் மையமாக உள்ளன. அப்பா, அம்மா, காதலன், நண்பர்களுடனான உறவால் பெண் அகம் சந்திக்க நேரிடும் முரண்களும் கதைகளில் வெளிப்படுகின்றன.
பொன்முகலியின் கதைசொல்லல் முறை தனித்துவமானது. கதைகளை, ஒளிவுமறைவின்றி அவற்றின் மையப்புள்ளியிலிருந்து விலகாது எழுதுகிறார். ‘வெளியற்ற நிழல்’ கதையில் அம்மாவுக்குத் துரோகம் இழைத்த அப்பாவுடன் சிறுவயதில் நெருக்கமாக இருக்கும் மகள், வளர்ந்து திருமணத்துக்கும் தயாராகிப் பின் அப்பாவைச் சந்திக்கச் சென்று அப்பாவுடனான உரையாடல் முடிந்து திரும்பும்போது குற்றவுணர்வில் எழும் சில கேள்விகளால் அவள் மனம் நடுங்குகிறது.அப்போது அவளுக்கு, காதலனை வெற்றுடம்புடன் கட்டிக்கொண்டு, அவன் நெற்றியில் தலைசாய்க்கும் இச்சை, காட்டாறுபோல வருகிறது. கடும் வெயில் பயணத்தில் திடுமென மரநிழலில் காற்றைச் சந்திக்கும் ஆசுவாசத்தையும் அமைதியையும் உணர முடிந்தது. நமக்குள் நாம் மறைக்கும் குணாதிசயத்தைக்கூட வெளியுணரும் ஆற்றல் மிக்கவைதான் கதைகள். இத்தொகுப்பின் கதைகள், நவீன வாழ்வின் அறியப்படாத பக்கங்களையும் நெருங்கிப் பார்க்கின்றன.
இன்றைய மனிதர்கள் பலரும் சிறிதினும் சிறிய பிரச்சினைக்கும் தடுமாறுகிறார்கள். குண்டூசி அளவுப் பிரச்சினைக்கும் தண்டவாளத்தில் தலை வைக்கத் தயங்குவதில்லை. தேன்கூடு கதையில் நாயகி சந்திக்கும் மனப்போராட்டங்கள் பெரியது. அவளின் மன அவஸ்தையைத் தாண்டி, பணிந்தே போகிறாள். இத்தகையப் பூஞ்சை மனம் கொண்ட மனிதர்களையும் உறுதியான மனிதர்களையும் கதைகளில் மாறிமாறிக் கண்டடைய முடிகிறது. ஆனால் ஒவ்வொன்றும் முற்றிலும் புதிய பாத்திரங்கள்.
‘வடு’ என்ற கதை இனக்கலவரத்தின் பாதிப்புகளை உணரவைக்கிறது. ஒரு பிரச்சினையை மூன்றாவது மனிதராக நின்று வேடிக்கைப் பார்க்கலாம். ஆனால் ஒரு கலவரத்தின் நெருக்கடி, பாதிப்பை இக்கதை நாடகத்தன்மை இன்றி உயிர்ப்போடு முன்வைக்கிறது. கலவரங்களின் கோர முகத்தைக் காட்சிகளாகப் பார்த்திருப்போம். ஒரு கதையாகப் படிக்கும்போது அதன் விளைவுகள் மனதில் தங்கிவிடுகின்றன. ‘வடு’ கதையை வாசித்து முடித்ததும் பிணங்களைச் சுமந்துபோகும் ரயிலின் சக்கரங்களுக்கு உலகில் எப்போது ஓய்வு வரும் என்று மனம் கல்லறைக்குள் ஆழ்ந்தது.
இக்கதைகள் பெண் பார்வையில் நவீன வாழ்க்கையை அணுகியுள்ளன. தொகுப்பை வாசித்து முடித்ததும் புதிய இடத்திற்குத் தனித்துப் பயணித்துத் திரும்பிய உணர்வோடு மலர்ச்சியும் களைப்பும் ஒருங்கே மனதில் விளைகிறது.
மின்னஞ்சல்: stalinsaravanan@gmail.com
