ஜனநாயகத்தை நெரிக்கும் பொதுவெளி முடக்கம்
ஆரோக்கியமான ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு மக்களின் நேரடிப் பங்கேற்பு. நாட்டின் சட்டதிட்டங்கள், அரசின் கொள்கைகள், நிர்வாகத்தின் செயல்பாடுகள்மீது உடன்பாடில்லை எனில் அதனை அமைதியான முறையில் வெளிப்படுத்தவும் ஒன்றுசேரவும் போராடவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்குத் தெளிவான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. தங்களை உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றும் ஜனநாயகத்தின் தாய் என்றும் உலக அரங்கில் முழங்கும் இந்திய அரசு சொந்த மண்ணில் மக்கள் ஒன்று கூடுவதற்கான பொதுவெளிகளைத் திட்டமிட்டு முடக்குகின்றது. தமிழக அரசும் இதே அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது தீவிரமான பரிசீலனைக்குரியது. பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு எனும் சாக்குப்போக்குகளால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அரசுகள் எத்தனிக்கின்றன.
அரசின் முன்அனுமதி பெற்றுத்தான் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிலையும் மாற்றப்பட வேண்டும். அரசின் அனுமதியின்றிப் பொதுமக்கள் சுதந்திரமாகப் பழங்குவதற்கான பொதுவெளிகளை உருவாக்குவது தற்கால ஜனநாயகத்துக்கு மிக முக்கியமானது. அதிகாரத்தின் தயவுக்காகக் காத்திருக்கும் மக்கள் கூட்டங்கள் ஒருபோதும் சுயாதீனமான அரசியல் வெளிப்பாடாக மாற முடியாது. அரசாங்கங்களின் இந்த அடக்குமுறைக் கட்டுப்பாடுகள் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவை.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாரதியும் வ.உ.சி.யும் காந்தியும் சுபாஷ் சந்திர போஸும் அன்னி பெசண்ட்டும் கூடிநின்ற சென்னையின் மெரீனா கடற்கரை இன்று காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கிக் கிடக்கிறது. 2017இல் இளைஞர்களும் மாணவர்களும் திரண்டு நடத்திய ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் தலைவர்களற்ற மக்கள் சக்தியின் உன்னதப் புள்ளி. அந்த மாபெரும் மக்கள் எழுச்சிக்குப் பரிசாகத் தமிழக அரசு கொடுத்தது மெரீனாவில் போராட நிரந்தரத் தடை என்கிற அடக்குமுறை உத்தரவு. பல முதல்வர்கள் மாறினாலும் தடை மட்டும் மாறவில்லை. தமிழ்நாட்டின் வள்ளுவர்கோட்டமும் தில்லியின் போட் கிளப்பும் மும்பையின் ஆசாத் மைதானமும் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானமும் மக்களின் எதிர்ப்புக் குரல்களை அடைக்கும் சிறைக்கூடங்களாக மாற்றப்பட்டுவருகின்றன. போராட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இடம் என்ற பெயரில் மக்களாட்சியின் நேரடிப் பங்கேற்பை நகரின் ஒதுக்குப்புறத்திற்கோ முட்கூண்டுகளுக்குள்ளோ அடைப்பது மாபெரும் கள்ளத்தனம். வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டியதுபோலப் போக்குவரத்துக்கும் நடைப்பயிற்சிக்கும் சாலைகளும் பூங்காக்களும் எந்த அளவுக்குப் பயன்படுகின்றனவோ அதே அளவிற்கு அவை எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் முந்தைய வரலாற்று நிலைப்பாடு. இன்றைய ஆட்சியாளர்களோ பொதுவெளிகளைத் தங்களது குடும்பச் சொத்தாகப் பாவித்துப் பூட்டுப் போடுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்த்தல், சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை அரசின் முக்கியமான கடமைகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆளும் தரப்புகளும் இதையே தங்களின் முதன்மை வாதமாக முன்வைக்கின்றன. பொதுமக்கள் நலன் என்ற பெயரில் எதிர்ப்புக் குரல்களை ஒட்டுமொத்தமாக நெரிப்பது ஜனநாயகத்தின் சாராம்சத்தையே சிதைப்பதாகிவிடும்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது போராட்டங்களை முழுமையாகத் தடைசெய்வதில் இல்லை. அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்குப் பாதகம் வராத வகையில் கூட்டங்களைச் சீரமைத்து ஒழுங்குபடுத்துவதில் தான் காவல்துறையின் உண்மையான திறன் அடங்கியுள்ளது. அதிகாரத்திற்கு எதிரான குரல்களை முடக்குவது புதியதல்ல. இது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து கைமாறி வந்த அடக்குமுறை மனோநிலை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரௌலட் சட்டத்தாலும் 144 தடை உத்தரவுகளாலும் மக்கள் கூடுவதைத் தடுத்த அதே உத்தி 1975இல் அவசரநிலைக் காலத்திலும் ஏவிவிடப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நெருக்கடிநிலைக் காலகட்டத்தின் பின்னான காலங்களில் பொதுவெளிகளின் முடக்கம் பன்மடங்கு அதிகமானது. இலங்கையில் 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னரான காலத்தில் தமிழகத்தில் எழுந்த தன்னெழுச்சியான ஈழத்தமிழர் ஆதரவுக் குரல்களுக்கும் இந்தப் பொதுவெளிகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததற்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஏனெனில் எல்லைகளைத் தாண்டிய மக்களின் உணர்வுகளும் இன உறவுச் சிந்தனைகளும் அரசு கட்டமைக்கும் தேசிய எல்லைகளின் அதிகார அரசியலை கேள்விக்குள்ளாக்கும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள். மக்கள் உணர்வுகள் ஒருமுகப்படும்போது அது தங்களின் அதிகாரப் பீடத்திற்கு ஆபத்தாக முடியும் என்ற பயமே பொதுவெளிகளைச் சுருக்க அரசுகளைத் தூண்டியது.
இன்றுவரை அந்த மனோநிலை சிறிதும் மாறவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் 144 தடை உத்தரவு போட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டமாகட்டும் டெல்லி எல்லையில் நியாயமான கோரிக்கைகளுக்காக வந்த விவசாயிகளைத் தடுக்கத் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆணிகளை அடித்து வீதித் தடைகள் அமைத்ததாகட்டும் இப்போது ஜன்தர் மந்தரில் போராட்டத்தைத் தடை செய்திருப்பதாகட்டும். அரசுகள் அனைத்துமே காலனிய ஏகாதிபத்திய அடக்குமுறை வாளைச் சுழற்றும் பழைய சாகசங்களையே தொடர்கின்றன. 2009க்கு முந்தைய காலகட்டங்களில் வீதிப் போராட்டங்கள் மட்டும் அல்லாமல் அரங்குசார் நிகழ்வுகளிலும் அனுமதி பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது. நிகழ்வில் அரசியல் பேசப்படுமா, யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் போன்ற தகவல்களை முன்கூட்டி அளித்தே இலக்கியக் கூட்டங்களையும் நடத்த வேண்டிய ஒடுக்குமுறைச் சூழல் நிலவுகிறது. பக்தி, ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளைச் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக் காரணங்களைச் சொல்லி அரசு தடை செய்வதில்லை. ஜனநாயகத்துக்கான பங்கேற்பான பொதுவெளிகளை மட்டும் அரசு திட்டமிட்டு மூடுவது எந்த வகையில் நியாயமானது? இன்றைய தில்லி ஆட்சியாளர்கள் ஒருபடி மேலே சென்று, போராட்டங்களை முடக்குவதையே சட்டப்பூர்வ அரசாங்க நெறிமுறையாக மாற்றத் துடிக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆய்வுசெய்து, எதிர்காலத்தில் மக்கள் திரள் போராட்டங்கள் எழுவதைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு உத்தவிட்டுள்ளது இதற்குச் சான்றாகும். மத்திய அமலாக்கத் துறை, FIU-IND போன்ற நிதிப் புலனாய்வு அமைப்புகளை ஏவி, போராட்டங்களின் பின்னணியைப் பயங்கரவாத வலைப்பின்னல் என்றும் நிதி முறைகேடு என்றும் முத்திரை குத்த எத்தனிக்கிறார்கள். மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக வீதியில் திரள்வதை வெளிநாட்டுச் சதி என்றும் சுயநலன் சார்ந்த குழுக்களின் சூழ்ச்சி என்றும் சித்திரித்து, பொதுவெளிப் போராட்டங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட நினைக்கின்றன மத்திய மாநில அரசுகள்.
வளர்ந்த நாடுகளின் உதாரணங்களை நோக்குவது பொருத்தமாக இருக்கும். நியூயார்க்கின் ஐக்கிய நாடுகள் சபை எதிரே உள்ள டாக் ஹேமர்ஷீல்ட் பிளாசாவிலோ லண்டனின் பாராளுமன்ற வீதிகளிலோ பாரிஸின் கான்கார்ட் சதுக்கத்திலோ மக்கள் கூடி அதிகார மையங்களை நோக்கிக் குரல் எழுப்ப முழு உரிமை உண்டு. அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கும்போது காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்களே தவிரப் போராட்டங்களை முடக்குவதில்லை. வரலாற்று ஆய்வாளர் ருச்சிகா சர்மா குறிப்பிட்டதுபோல மக்கள் கூடும் எந்தவொரு இடமும் ஓர் அரசியல் வெளியாக மாறக்கூடும். தாங்கள் செய்யும் தவறுகளும் கார்ப்பொரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் இயற்கை வளச் சூறையாடல்களும் தெருவுக்கு வந்துவிடுமோ என்ற பயமும்தான் பொதுவெளிகளை அடக்கக் காவல்துறையை ஏவிவிடுகிறது. நாட்டின் அடிப்படை வசதிகளில் இன்னும் பற்றாக்குறைகள் உள்ளன. மக்கள் கூடும் பூங்காக்களுக்கும் கடற்கரைகளுக்கும் சிசிடிவி கேமராக்களையும் முள்வேலிகளையும் அமைப்பதில் காட்டும் வேகத்தை நிர்வாகம் அடிப்படை வசதிகளில் காட்டுவதில்லை. தெருக்களில் இறங்கித் தன் கோரிக்கையை உரக்கச் சொல்ல முடியாத ஒரு குடிமக்கள் தன் சொந்த நாட்டிலேயே அகதியாக மாற்றப்படுகிறார்கள்.
போராட்டங்கள் ஏதோ சிலரின் வீண் முழக்கம் அல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான குரல். அரசு தன்மீதான விமர்சனங்களுக்கும் போராட்டங்களுக்கும் பயப்படக் கூடாது. மக்கள் அமைதியான முறையில் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்ய மெரீனா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவெளிகளைச் சீராக அனுமதிப்பதே உண்மையான ஜனநாயகத்திற்கான மாண்பு. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும் அத்தகைய போராட்ட வெளிகள் அமைக்கப்பட வேண்டும். பொதுவெளிகளை முடக்கி அதிகாரத்திற்கு எதிரான குரல்களை மண்ணில் புதைக்க நினைக்கும் எந்தவொரு அரசும் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கே தள்ளப்படும்.
*******************************************
மாற்றம் தொடருமா?
தமிழகத்தில் அண்மையில் முடிவடைந்த இடைத்தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் வரலாற்றில் கவனிக்கத்தகுந்த திருப்புமுனையை அடையாளப்படுத்தியுள்ளன. வழக்கமாக இருதுருவ அரசியல் சட்டகத்திற்குள் முடங்கிக் கிடந்த தமிழ்நாட்டுத் தேர்தல் களம், இம்முறை மும்முனைப் போட்டியாக உருப்பெற்றுள்ளமை ஜனநாயக வெளியை அகலப்படுத்தியிருப்பதாகவே உணர முடிகிறது. ஆளும் கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சி என்கிற அடைப்புக் குறிக்குள் மட்டும் மக்கள் தங்கள் விருப்பங்களை ஒடுக்கிவைக்க வேண்டியதில்லை என்கிற நிலை உருவாவது ஆரோக்கியமான மக்களாட்சியின் அறிகுறி.
இந்தத் தேர்தலில் களம் இறங்கிய மூன்று பிரதான அரசியல் தரப்புகளும் இருபது முதல் முப்பது சதவீதம் வாக்குகளைப் பகிர்ந்துகொண்டிருப்பது தேர்தல் அரசியலின் சமநிலையை உணர்த்துகிறது. ஓட்டு எண்ணிக்கையும் வாக்குச் சதவீதமும் ஜனநாயகக் கணிப்புகளின் அளவுகோல்களாகக் கொள்ளப்படும் சூழலில், எந்தவொரு தனித்தரப்பும் களத்தில் ஆதிக்கம் செலுத்த இயலாதபடி மக்கள் தங்களின் வாக்குகளைப் பகிர்ந்தளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் வரலாற்றுப் போக்கில், ஆளுங்கட்சியின் அதிகாரப் பலத்திற்கும் பண பலத்திற்கும் சான்றாக நின்று எப்போதும் ஆளுங்கட்சியே வெல்லும் என்ற எழுதப்படாத விதியை இடைத்தேர்தல்கள் உருவாக்கி வைத்திருந்தன. இம்முறை உருவெடுத்துள்ள மும்முனைப் போட்டியும் வாக்குச் சதவீதப் பகிர்வும் அந்த வழக்கமான அரசியல் நம்பிக்கையை மாற்றி அமைத்துள்ளன. அதிகாரம் வசமிருக்கும் ஒரே காரணத்திற்காக மட்டுமே வெற்றியை எளிதாகத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதையும் வாக்காளர்களின் அரசியல் தீர்ப்பு ஆளும் வர்க்கத்தின் பிடிக்குள் முடங்கிக் கிடப்பதில்லை என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
சாதிச் சார்புகளும் அதன் துல்லியமான கணக்குகளும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான சக்திகளாகக் கருதப்படும் தமிழகச் சூழலில், இந்த இடைத்தேர்தல் அதற்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட சாதிய வாக்குகளைக் குத்தகைக்கு எடுக்கும் வழக்கமான பேரங்கள் களத்தில் பெரிய அளவில் எடுபடவில்லை. மக்கள் தங்களின் சுயாதீனமான அரசியல் தெரிவை நோக்கி நகர்ந்துள்ளனர் என்பதைத் தேர்தல் முடிவு தெளிவுபடுத்துகிறது.
மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம், இடைத்தேர்தல் என்றாலே, திருமங்கலம் பார்முலா, ஆர்.கே.நகர் பார்முலா, பட்டி பார்முலா எனப் பல வகைகளில் ஏவிவிடப்படும் பணப்பட்டுவாடா கலாச்சாரம் இம்முறை பிரதான காரணியாக இருக்கவில்லை என்பதுதான். மக்கள் பணத்தை மீறித் தங்களின் சுயமான வாக்களிப்புப் பங்கேற்பைப் பதிவுசெய்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவின் வாக்குகள் இதற்குச் சான்று. கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 40.56% வாக்குகளையும் (80,000-க்கும் அதிகமான வாக்குகள்) பெற்ற சத்தியபாமா தற்போது கட்சி தாவி தவெக சார்பில் போட்டியிட்டபோது, 37.02% வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. வெற்றி பெற்றிருந்தாலும் அவரது வாக்குச் சதவீதம் குறைந்திருப்பது, அரசியல்வாதிகளின் சுயநலக் கட்சித் தாவல்களை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதையும் வாக்காளர்கள் தங்களின் எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளதையும் காட்டுகிறது.
ஆனால் இந்த இடைத்தேர்தல் தந்த அரசியல் விழிப்புணர்விற்கு நேர் எதிராக, பிரச்சார மேடைகளில், திமுக தலைமை மேற்கொண்ட அரசியல் உரையாடல்கள் பெரும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா ஒரு தலித் பெண். அவரது கட்சித் தாவலைக் கொள்கைரீதியில் எதிர்கொள்வதற்குப் பதிலாக, திமுக தலைவர்கள் அவரது உடலையும் தோற்றத்தையும் குறிவைத்து வசைபாடினர். பிரச்சார மேடைகளில் அவரை ‘பெட்டி பாமா’, ‘பல்டி பாமா’ என்றெல்லாம் ஏளனம் செய்ததோடு நில்லாமல், “அந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தார் என்று தெரியவில்லை,” என மு.க. ஸ்டாலின் பேசியது அப்பட்டமான உருவக் கேலியாகும். ஆனால் இதே விமர்சனத்தை இங்கே சத்தியபாமா என்ற தனிநபரின் அரசியல் தேர்வு குறித்த விமர்சனத்தைவிட, அவர் ஒரு தலித் பெண் என்பதே இத்தகைய சொல்லாடல்களுக்குப் பிரதான காரணியாக மாறுகிறது. இந்த எள்ளி நகையாடல் வெறும் அரசியல் கேலி அல்ல; தலித் பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் நுண்மையான அரசியல் வன்முறை என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களை நோக்கி வீசப்படும் இத்தகைய எள்ளிநகையாடல்களும் வசைபாடல்களும் தமிழகப் பொதுவெளிக்குப் புதிதானவை அல்ல. ஆனால், இதே உருவக் கேலிகளையும் ஒழுக்கம் சார்ந்த தாக்குதல்களையும் ஆதிக்க சாதிப் பின்னணியோ அல்லது எண்ணிக்கைப் பெரும்பான்மையோ கொண்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதை அரசியல் நாக்குகள் மிகத் கவனமாகத் தவிர்க்கின்றன. கொள்கைரீதியிலான விமர்சனங்களைத் தாண்டிச் சாதிய, சமூகப் பலம் கொண்ட பெண்களை நோக்கி இத்தகைய சொற்களைப் பயன்படுத்தினால், அது தங்களின் வாக்கு வங்கி அரசியலிலும் தேர்தல் அறுவடைகளிலும் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சமே முக்கியக் காரணம்.
தேர்தலில் எழும் அதிகாரக் கூட்டணிகளும் வாக்குச் சதவீத மாற்றங்களும் மட்டுமே ஜனநாயகத்தின் அளவுகோல்கள் அல்ல; பெண்களையும் விளிம்புநிலை மக்களையும், ஜனநாயகச் சக்திகளாக அறியப்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறு நடத்துகின்றனர் என்பதில்தான் சமூகத்தின் அரசியல் முதிர்ச்சி அடங்கியுள்ளது. மக்கள் தங்களின் வாக்களிப்பின் மூலம் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருந்தாலும், மேடைகளில் அரங்கேறும் அரசியல் ஆபாசங்களையும் சாதிய மனோநிலையையும் முறியடிக்காதவரை உண்மையான ஜனநாயக வெளி மலரப்போவதில்லை.
*******************************************
