காதல்-, காமம்: தத்துவ, முரண், கற்பித மொழிநடை
பியானோக் கலைஞரும் இசையியலாளருமான லுட்விக் குந்தேராவின் மகனான மிலன் குந்தேரா, தற்போதைய செக் குடியரசில் உள்ள பிர்னோவில் (ஏப்ரல் 1, 1929) பிறந்து வளர்ந்தவர். பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் (ஜூலை 11, 2023) இறந்தார். மிலன் ஆரம்பத்தில் இசை பயின்றார்; ஆனால் படிப்படியாக எழுத்துத் துறைக்குத் திரும்பினார். அடிப்படையில் இவர் செக் மொழியில் கவிதை, நாவல், சிறுகதை படைக்கும் எழுத்தாளர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர்; இவரது படைப்புகள் பாலியல் சார்ந்த நகைச்சுவை, அரசியல் விமர்சனம், தத்துவார்த்தச் சிந்தனைகளை ஒன்றிணைத்து வெளிப்படுத்துபவை.
தனது ஆரம்பக்காலப் பணியின்போது, இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதும் விலகுவதுமாக இருந்தார்: 1948இல் கட்சியில் இணைந்த இவர், 1950இல் வெளியேற்றப்பட்டார்; பின்னர் 1956இல் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டு, 1970 வரை உறுப்பினராகத் தொடர்ந்தார். 2008ஆம் ஆண்டில் ஒரு செக் இதழில் வெளியான கட்டுரையின்படி, 1950இல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, பிராக்கில் ஒரு மேற்கத்திய உளவு முகவர் நடமாடுவதாக குந்தேரா காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்; அத்தகவலின் அடிப்படைய
