நட் சாம்ராட்டின் சாபம்
‘மரணம் ஒருவரைப் புனிதராக்கிவிடாது, திறமை நற்குணத்தின் சான்றாகாது, பிறருக்கு உதவுவதால் மட்டுமே ஒருவரை நல்லவர் என்று சொல்லிவிட முடியாது.’
நடிகர் நானா பாடேகரின் மரணத்தைத் தொடர்ந்து வெளியான பின்னணி பாடகர் சின்மயி ஸ்ரீபாதாவின் இந்தச் சமூக வலைதளப் பதிவு முக்கியமானது.
2018ஆம் ஆண்டு, இந்தியாவில் ‘மீடூ’ சர்ச்சை தொடங்கியபோது, பாலிவுட் நடிகர் தனுஸ்ரீ தத்தா, 2008ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நானா பாடேகர் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டினார். வழக்கு விசாரணையின் முடிவில் நானா பாடேகருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அந்தச் சம்பவத்தினாலும் வழக்கின் பின்விளைவுகளாலும் இன்றளவும் தான் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா, இத்துடன் ‘தீமை அழிந்தது’ (Evil Dead) என்று பதிவிட்டு தன் நீண்டகாலக் குமுறலைப் பகிர்ந்துகொண்டார்.
மகாராஷ்டிராவின் முருத் – ஜஞ்சீரா பகுதியில் பிறந்த நானா பாடேகரின் இயற்பெயர் விஸ்வநாத் பாடேகர். ஐந்து தசாப்தங்கள் கடந்தும் இந்தியத் திரையுலகின் சாம்ராட்டாக விளங்கிய நானா பாடேகரின் கலைப்பயணம் மேடை நாடகக் கலைஞராகத் தொடங்கியது. “மேடை நாடகங்கள் எப்போதுமே விசேஷமானவை. ஒவ்வொரு நாடகமும் தனித்துவமானது. மேடையில் பலவிதங்களில் ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்த முடியும். நேற்று நீங்கள் நடித்தது, நேற்றோடு முடிந்துவிடும்; நாளை நீங்கள் ஏற்கப்போகும் கதாபாத்திரம் முற்றிலும் புதிதாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உணர்வை அரிதாரமாக மேடை நாடங்களில் மட்டுமே பூசிக்கொள்ள முடியும்,” என்று தேசிய நாடகப் பள்ளியின் ஒரு கருத்தரங்கில் நானா பாடேகர் சொன்னார்.
நாடகங்களும், ‘தமாஷா’ என்ற தெருக்கூத்து வடிவமும் அவருடைய தந்தையின் மூலம் அவருக்கு அறிமுகமாகியிருந்தன. கேளிக்கையாக மட்டும் அவற்றை அணுகாமல் அவற்றில் நடித்த கலைஞர்களின் சிறப்பம்சங்களையும் அவருடைய தந்தை அவருக்கு விளக்கிக் கூறும்போது தன்னியல்பாகவே அவை நானாவின் வாழ்வின் பகுதிகளாக மாறின. “கலைஞர்களைப் பெரிதும் மதித்தவர் என் தந்தை. அந்தத் தகுதியை நானும் அடைய வேண்டும் என்ற முனைப்பே என்னை நடிகனாக மாற்றியது,” என்பார் நானா.
எந்தவொரு பயணத்தின் தொடக்கமும், அது கலையோ வாழ்க்கையோ, கடினமாகவும் தவறுகள் நிறைந்ததாகவும்தான் இருக்கும். ஒவ்வொரு தவறும் ஒரு பாடம் என்று புரிந்துகொண்டால் போதும் என்றவரது வாழ்க்கையும் பிறழ்வுகளின் தொகுப்பாகவே இருந்தது. கற்பிதங்களின் இருமைகளுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாத பிடிவாதமான நேர்மைக்குச் சொந்தக்காரர் நானா பாடேகர். கடினமான இளமைப் பருவமும் வறுமையும் அவருடைய வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், எளிதில் கோபமுறும் சுபாவம் தன் தாய்வழி இயல்பு என்று வேடிக்கையாகச் சொல்வார். “அம்மா ஒருபோதும் தன் கோபத்திற்காக வருந்தியதே இல்லை. நாள் முழுதும் என்னையும் என் உடன்பிறந்தவர்களையும் அடித்து முடித்த பிறகும், தன்னுடைய கோபத்தை நினைத்து அவர் வருந்தியதே இல்லை. அந்த இயல்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. அதுதான் உண்மை.”
மேடை நாடக வடிவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த நானாவை, மையப்போக்கு சினிமாவை நோக்கி உந்தியவர் நடிகர் ஸ்மிதா பாடீல். வணிக சினிமாவின் பரப்பையும் வீச்சையும் அவருக்கு உணர்த்தித் திரையுலகின் கதவுகளைத் திறந்துவைத்தவரும் அவர்தான். “சினிமா மட்டுமல்ல எனக்கு கார் ஓட்டப் பழக்கியதும் ஸ்மிதாதான். இன்று அவர் உயிரோடிருந்திருந்தால் இந்திய சினிமா வேறொரு உச்சத்தை அடைந்திருக்கும். அவரைப் போன்றவர்கள் ஏனோ சீக்கிரம் மறைந்துவிடுகிறார்கள்,” என்று தன் நண்பரின் பெருமையை எப்போதும் நானா நினைவுகூர்வார்.
1978இல் முஸாபர் அலியின் இயக்கத்தில் ஸ்மிதா பாடீல் கதாநாயகியாக நடித்து வெளியான ‘கமன்’ (Gaman) திரைப்படத்தில் நானா பாடேகர் வாசு என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகரும் இளைஞர்களின் பிம்பமாகச் சித்திரிக்கப்பட்ட வாசு கதாபாத்திரம், நகர வாழ்வின் கட்டுகளுக்குள் சிக்கிக்கொண்டு கோபமும், அமைதி யின்மையும், கொந்தளிப்பும் நிரம்பிய அவர்களுடைய அன்றாடத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
அதைத் தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு மராட்டித் திரைப்படங்களும் ஹிந்தித் திரைப்படங்களும் (ஆஜ் கி ஆவாஸ், பரிந்தா, அன்குஷ், ப்ரதிகாட், அந்தா யுத், மோஹ்ரே, த்ரிஷாக்னி, சாகர் சங்கம்) அவரை இந்தியத் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் பரிமளிக்கச் செய்தன. 1986இல் ‘லார்ட் மௌண்ட்பேட்டன்: தி லாஸ்ட் வைஸ்ராய்’ என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடரில் நாதுராம் கோட்சேவாக நடித்ததும், 1988இல் ‘சலாம் பாம்பே’ திரைப்படத்தில் நடித்ததும் சர்வதேச அங்கீகாரத்தை நானாவிற்குப் பெற்றுத்தந்தன.
1990களில் வெளியான நானா பாடேகரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அவருடைய கலை ஆளுமையை வெளிப்படுத்தின. 1991ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான ‘ப்ரஹார்: தி பைனல் அட்டாக்’ திரைப்படத்தில் ராணுவ வீரராக ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்காக, மூன்று வருடங்கள் இந்திய ராணுவத்தின் ‘மராட்டா லைட் இன்பாண்ட்ரி’ பிரிவில் இணைந்து கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். அவருடைய ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, அவருக்குக் கௌரவ கேப்டன் பதவி வழங்கிச் சிறப்பித்தது இந்திய ராணுவம். அதேபோல் ‘காமோஷி’ திரைப்படத்திற்காகப் பதினான்கு மாதங்கள் சைகை மொழியைப் பயின்றார்.

தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் ஒரு நடிகரின் ஆளுமையில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த நானா பாடேகர், “அதற்கு நேர்மாறாக நடப்பதும் பல சமயங்களில் சாத்தியம்,” என்றார். கலை மனம் அப்படித்தான் இயங்கும். தன் ஆளுமையின் பண்புகளையொத்த கதாபாத்திரங்களில்தான் ஒரு நடிகரால் நன்றாக மிளிர முடியும். அப்படி அவர் உளவியலைப் பெரிதும் பிரதிபலித்த இரண்டு படைப்புகள் ‘புருஷ்’, ‘நட்(ட) சாம்ராட்’. ஜய்வந்த் தல்வி எழுதிய ‘புருஷ்’ என்ற மராட்டி நாடகம் முதன்முதலில் 1982இல் மேடையேற்றப்பட்டது. ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக, குலாப் ராவ் என்ற அரசியல்வாதியாக நடித்திருப்பார் நானா பாடேகர். துடிப்பான துணிச்சல் மிகுந்த பள்ளி ஆசிரியர் அம்பிகாவின் ஆளுமையால் சீண்டப்படும் குலாப் ராவ், அவளைப் பாலியல் வன்புணர்வு செய்வதன் மூலம் அடக்கிவிட முடியும் என்று நம்புகிறான். “ஓர் ஆணால் பெண்ணை வன்புணர்வு செய்ய முடியும். ஒரு பெண்ணால் அது எப்போதுமே முடியாது. இது ஒன்று போதாதா ஆண் உயர்ந்தவன் என்று நிரூபிக்க,” என்ற வசனம் பல இரவுகள் தனது தூக்கத்தைப் பறித்ததாக நானா ஒரு நேர்காணலில் சொன்னார்.
வீ.வீ. ஷீர்வத்கர் எழுதிய மராட்டியத் துன்பியல் நாடகம் ‘நட் சாம்ராட்’ (1970) , 2016இல் மஹேஷ் மஞ்சரேகரின் இயக்கத்தில் மராட்டி மொழித் திரைப்படமாக வெளியானது. ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ நாடகத்தின் தழுவல் என்று சொல்லப்படும் இந்த நாடகத்தில், ஓய்வு பெற்ற நாடகக் கலைஞர் கண்பத் ராவ் பேல்வல்கர் என்ற கதாபாத்திரத்தில் நானா பாடேகர் நடித்திருப்பார். அவருடைய நடிப்பாற்றலின் மகுடம் இந்தக் கதாபாத்திரம். “நான் ஜூலியஸ் சீஸர், நான் ஒதெல்லோ, நானே ப்ரதாப் ராவ், நானே சுதாகர், நான்தான் கண்பத் ராவ் பேல்வல்கர், நட் சாம்ராட், ” என்று சொல்லும் காட்சியில் நடிகர் என்ற நிலையை உடைத்து வேறு ஒரு நிலையை அடைந்திருப்பார் நானா. எளிதில் எட்டிவிட முடியாத நிலை அது. அவரே நினைத்திருந்தாலும் அத்தகைய நடிப்பை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். கலைஞர்களைக் கலை ஆட்கொண்டுவிடும் வலிமிகுந்த தருணங்கள் அவை; ஒரு வகையான சிதைவு. அதற்கு முன் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர்கள் அனைவரும் மாரடைப்பால் உயிரிழந்தனர். அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். இறுதியில் நட் சாம்ராட் சாபம் அவரையும் விட்டுவைக்கவில்லை.
‘பரிந்தா’, ‘க்ராந்திவீர்’, ‘அக்னிசாக்ஷி’ திரைப்படங் களுக்காக தேசிய விருதுகளும், மேலும் பல படங்களுக்கு பிலிம் பேர் விருதுகளும் நானா பாடேகருக்கு வழங்கப் பட்டன. 2013ஆம் ஆண்டு அவருடைய கலைத்துறைப் பங்களிப்புகளை அங்கீகரித்து இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
கலையின் பல பரிமாணங்களை அநாயாசமாக வென்றெடுத்த நானா பாடேகர் தன்னை ஒருபோதும் பாலிவுட் சினிமா நட்சத்திரமாகக் கருதியதில்லை. தன்னை ஒரு கிராமத்தானாகவும் மலைகளின் பிள்ளையாகவுமே அடையாளப்படுத்திக்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மழை பொய்த்த மராட்வாடா, விதர்பா பகுதி விவசாயிகளின் நலனுக்காக நானா பாடேகரும் அவருடைய நண்பர் மகரந்த் அனுஸ்புரேவும் சேர்ந்து ‘நாம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். “ஒரு பத்து ரூபாய் நோட்டை வீட்டு வாசலில் வைத்துவிட்டால், அன்றிரவு முழுவதும் நம்மால் தூங்க முடியாது. ஆனால் விவசாயிகள் தங்கள் மொத்த செல்வத்தையும் (வயல்கள்) பொது வெளியில் விட்டுவிட்டு அப்படியே உறங்கச் செல்கிறார்கள். அவர்களுடைய கண்ணீரும் வேதனையும் விலைமதிக்க முடியாதவை. அவர்களுக்காகவே இந்தத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தோம்,” என்று சொல்லும்போதெல்லாம் நானா தன்னையும் மீறி உணர்ச்சிவசப்படுவார். பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவிகளையும் வேறு பல ஒத்துழைப்பையும் தொடர்ந்து நல்கிவரும் ‘நாம்’ நிறுவனம் நானா பாடேகரின் மனிதநேயத்தின் சான்று. விவசாயிகளுக்கு நவீன வேளாண்மை குறித்த பயிற்சிகள், இளைஞர்களுக்கு விவசாயத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் கல்வியும் அளிப்பது போன்ற எண்ணற்ற முன்னெடுப்புகளை ‘நாம்’ இயக்கம் தொடர்ந்து செய்து வருகிறது. ஔரங்கபாத் பகுதியின் தொண்டல்காவ் கிராமத்தைத் தத்தெடுத்துப் பராமரித்து வருவதோடு, மழை பொய்த்த மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி மரங்களை நடும் முன்னெடுப்பையும் மேற்கொண்டுவருகிறது.
நானாவிற்கு இயல்பிலேயே நாட்டுப்பற்று அதிகம். அது வெளியிலிருந்து திணிக்கப்பட்ட செயற்கையான ஒன்றல்ல. அதனால்தான், அவருடைய திரைப்படங்களில் பெரும்பாலும் மேடைப் பிரசங்கம் போன்ற அறிவுரைகளும், ஆட்சி முறைக்கு எதிரான ஆவேசப் பேச்சுகளும், அதிகப்படியான வன்முறையும் நிறைந்திருந்தன. தன் பழைய நண்பரான சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் செயல்களை எதிர்த்து அவர் குரலுயர்த்தத் தயங்கவில்லை. இதற்காக சிவசேனா தலைவரின் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருந்தது. அதேபோல், 1992 மும்பைக் கலவரத்தின்போது ‘சிட்டிசன் ஆப் பீஸ்’ (Citizen of Peace) இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சொல்லப்போனால், மக்களுக்குத் தைரியம் அளிப்பதற்காக அவர் தனியாகவே பலரது வீடுகளுக்குச் சென்றார். “வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது எனக்குள் பெரும் வலியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இதை எவ்வளவு காலம்தான் சகித்துக் கொள்ள முடியும்? நான் தெருவில் இறங்கி, வன்முறையை நிறுத்துமாறு மக்களிடம் கைகூப்பி வேண்டினேன். நாம் இப்படி அறிவில்லாமல் ஒருவரை ஒருவர் கொல்லக் கூடாது,” என்று அவர்களிடம் வேண்டியதாகச் சொன்னார்.
மரணத்தைக் குறித்து நானா பாடேகர் எப்போதும் பேசி வந்தார். அவர் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. அது தன் அருகில் தன் தோள்மீது கை போட்டிருக்கும் நண்பனைப் போல் இருக்கிறது என்பார். “நான் இறந்த பிறகு என்னை எரிப்பதற்காகப் பன்னிரண்டு காய்ந்த விறகுகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவை மட்டுமே என்னுடையவை. ஈரமான விறகுகளைப் பயன்படுத்திவிடாதீர்கள். பிறகு கண் எரிச்சலில் மற்றவர்கள் அழுவது, ஏதோ என்னை நினைத்து அழுவதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். மரணித்த பிறகு அத்தகைய தவறான கருத்துகள் உருவாக நான் அனுமதிக்க மாட்டேன். அதுவே என் இறுதி ஆசையும்,” என்று தன் மரணத்திற்கும் மேடை நாடகத்தின் தொனியில் முடிவுரை எழுதிவிட்டு மறைந்திருக்கிறார் நானா பாடேகர் என்ற நட் சாம்ராட்.
