வாராவழி

ஓவியம்: நரசிம்ம பாலாஜி
காலையில் அலுவலகத்திற்கு வந்தவுடனே உடன் பணிபுரிபவர் அன்றைக்கு அமாவாசை என்று சொல்லி, பிரசாதம் என்று சிறிய டப்பர்வேரில் இருந்த சர்க்கரைப் பாயசத்தை நீட்டினார். அன்றைக்கு ஆடி அமாவாசை என அம்மை நேற்று அழைத்தபோது சொன்னது ஓர்மைக்கு வந்தது. சென்னை வந்ததிலிருந்து எந்த ஆடி அமாவாசைக்கும் ஊருக்குச் செல்லும் திட்டம் நிறைவேறவில்லை. அம்மை நிச்சயம் கன்னியாகுமரிக்குக் காலையிலேயே சென்று தர்ப்பணம் கழித்திருப்பாள்.
சர்க்கரைப் பாயசத்தில் பூசை கழிக்கும்போது திருநீறும் சிறிதளவு கலந்திருக்கிறது போலும். வாயில் இட்டதும், அந்தச் சுவை சட்டென்று வெள்ளமடம் ஆச்சியின் நினைவுகளைக் கிளறியது. நெற்றியில் நீட்டி முழக்கிப் பூசிய திருநீற்றுப் பட்டையோடு, நூல் சீலை கட்டி, கையில் எப்போதும் சிறிய வாளியோடும் மஞ்சள் பையோடும் திரியும் ஆச்சியின
