கடிதங்கள்
‘மகளிர் நலத்திட்டம்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...’ என்ற தி. பரமேசுவரியின் கட்டுரை அருமை. அரசியல்வாதிகளின் திட்டங்களில் ஆணாதிக்கம் இருக்கிறதோ, இல்லையோ கட்டுரையில் கூறுவதுபோல் ஓட்டுத் தேவைக்காக அரசின் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்பதே உண்மை. அவரது கட்டுரையை உறுதிப்படுத்துவதுபோல் தீபா சின்ஹாவின் கட்டுரையும் அமைகிறது. தாய்மாமன் தங்க மோதிரம், தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள் எல்லாம் கட்டுரையின் இறுதியில் பெண்களிடம் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, உரிமை சார்ந்த விஷயமாகச் சொல்கிறதா அல்லது மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்பாக, பரிசாக, நிபந்தனையாகச் செய்கிறதா என்பதுதான் இப்போது கேள்வி என முடித்திருப்பது அருமை.
‘மூன்றாயிரத்தின் கதைஞன்’ என்ற சுப்பிரமணி இரமேஷின் கட்டுரை அரவிந்தனின் சிறுகதைப் படைப்புலகைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைகிறது. அவரது பல சிறுகதைகளை இக்கட்டுரையில் பேசுகிறார். ‘பொறி’ என்ற சிறுகதையில் தொழில்நுட்பம் அன்றாட முழுக்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டதைக் குறிப்பிடுகிறார். சங்ககாலத்திற்கும் தற்காலத்திற்குமான ஆண், பெண் முரணை ‘வெல்கம் டு மில்லினியம்’, கரையும் யதார்த்த வாழ்க்கையில் உள்மனச் சலனங்களை ‘சலனங்கள்’, ‘வலி’ போன்ற கதைகளிலும் கூறிச்செல்வதைச் சுட்டிக்காட்டுகிறார். கட்டுரையில் அரவிந்தனின் மொழிவளம் பற்றியும் சிலாகிக்கத் தவறவில்லை. முடிவாக, “அரவிந்தனுக்குப் புனைகதையில் ஓர் இடம் இருக்கிறது, இந்த மூன்றாவது ஆயிரமாண்டில் குறிப்பிடத்தக்க எழுத்தாக அவரது சிறுகதைகள் இருக்கின்றன,” எனக்கூறி முடிக்கிறார். அரவிந்தனின் சிறுகதைகளைப் பற்றிய சிறந்த திறனாய்வுக் கட்டுரை எனப் பாராட்டலாம்.
அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்’ கட்டுரை ஈழத்து இதழ்களின் வரலாற்றை அறியத் துணைசெய்கிறது. ய. மணிகண்டனின் ‘பாரதியும் பாரத மாதாவும்’ கட்டுரையின் மூலம் பாரதமாதா இதழிலும் பாரதி எழுதியிருக்கிறார் எனக் கண்டறிந்து கூறுவதில் உள்ள ஆர்வம் நமக்குப் புரிகிறது. ‘தென்மொழிகளின் திருவிழா’ என்ற சிவப்பிரசாத்தின் கட்டுரை ‘பெங்களூரு புக் பிரம்மா’ நடத்திய நிகழ்ச்சிகளின் அருமையான தொகுப்பு.
‘மெய்வருத்தம் பாராத கலகக்காரர்’ எனும் சுவாமி ஆனந்த தீர்த்தரைப் பற்றிய தி.அ. ஸ்ரீனிவாஸனின் கட்டுரையில் சுவாமி ஆனந்த தீர்த்தரை முழுமையாகக் காண வேண்டும் என்ற ஆர்வத்தைக் காண முடிகிறது. அவர் நாராயணகுருவைக் குருவாக ஏற்றுக்கொண்டது, தீண்டாமைக்கு எதிராகப் போராடி அடிபட்டதை ‘தல்லு வாங்குன்னசாமி’ எனறு ஊரார் பெயர் கொடுத்தது அரிசன சேவா சங்க மண்டலப் பொறுப்பாளராகப் பணியாற்றியதும் குருவாயூரில் சாதிவெறியர்களால் தாக்கப்பட்டு, மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிர் துறந்ததுமான அனைத்துச் செய்திகளையும் தொகுத்துத் தருகின்ற சிறப்பான கட்டுரையாக அமைந்தது.
கா. ஆபத்துக்காத்த பிள்ளை
ஆரல்வாய்மொழி
***
மாணவர் பருவத்திலேயே ஜனநாயக நடைமுறைகள், கூட்டுச் செயல்பாடு, தலைமைத்துவம் போன்ற பல்வேறு நடைமுறைகளை அறிந்து, செயல்படும் களமே மாணவர் மன்றத் தேர்தல். சில கசப்பான நிகழ்வுகளை மட்டும் கருத்தில்கொண்டு மாணவர் மன்றத் தேர்தல்களை கடந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டே மறந்தும், மறைத்தும் விட்டதைச் சரியாகவே சுட்டிக்காட்டியது. தற்போதைய ஆட்சியாளர்கள் இளைஞர்களின் சக்தியால் ஆட்சியை பிடித்துள்ளனர் எனில், மாணவர் மன்றத் தேர்தலை உடன் நடத்தி “இளம் ஜனநாயகவாதிக”ளை உருவாக்கிட வேண்டும்.
மகளிர் நலத்திட்டங்கள் 16.11.1920இல் நீதிக்கட்சி காலத்தில் சர்.ப்பிட்டி. தியாகராயரால் ‘மதிய உணவுத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். சிவில் உரிமைப் போராளிகள்: சிவில் உரிமைகளை பறிக்கும், முடக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய தெளிவான கட்டுரையை வாசகர்களுக்கு அளித்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். ‘சிற்றிதழ்கள்: ஈழச்சிற்றிதழ்கள்’ சிறந்த பதிவு. தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடுகளில் சிற்றிதழ்கள் பதிவை வாசகர்களுக்கு அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
சீனி. மணி
பூந்தோட்டம்
***
‘முடக்கப்படும் வளாகங்கள்’ தலையங்கம் கண்டேன். நீண்ட தலையங்கமாக இருந்தாலும் வேண்டிய தலையங்கம். மாணவர் மன்றத் தேர்தல் என்பதை அறவே மறந்துவிட்ட நிலையில் அதன் தேவையைப் பல உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருப்பது சிறப்பு. நான் படிக்கிற காலத்தில் மேனிலைப் பள்ளிகளில்கூட மாணவர் தேர்தல் நடந்தது நினைவில் இருக்கிறது. மாணவர்களின் எழுச்சி காரணமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுககூட மாணவர் மன்றத் தேர்தலைக் கைவிட்டது துரதிர்ஷ்டமே! தலையங்கத்தின் இறுதியில் தெரிவித்துள்ளவாறு இன்றைய அரசாவது இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அல்லது ஏமாற்றம் மிஞ்சுமா? காலம் பதில் சொல்லும்.
என். பாபு அருள் ஜோஸ்
களக்காடு
***
அக்டோபர் இதழில் வெளியான எழில் சின்னத்தம்பியின் ‘வால்’ சிறுகதை சிறந்த வாசிப்பனுபவமாக அமைந்துள்ளது. மரபின் தடங்களைத் தாண்டிப் புதுமைப் பாதையில் தமிழ் இலக்கியத்தை வழிநடத்திய சுந்தர ராமசாமியின் செழுமையான இலக்கிய மரபை முன்னெடுத்துச் செல்லும் காலச்சுவடு இதழின் இலக்கியப் பொறுப்புணர்வை இக்கதையின் வெளியீடு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
வேறொரு உயிரியாக உருமாற்றம் அடைந்ததை உணரும் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் அகப் போராட்டங்களைப் பதிவுசெய்த காஃப்காவின் ‘உருமாற்றம்’ புதினத்தை இக்கதை நினைவூட்டுகிறது. எனினும், ‘உருமாற்றம்’ எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியம் கையாண்ட தனிமனித இருத்தலியல் நெருக்கடி மட்டுமல்ல இக்கதையின் பேசுபொருள். பின்நவீனத்துவ இலக்கியத்தின் பல படைப்புகள், தனிமனித இருத்தலியல் துயரம் போன்ற தனிப்பட்ட அனுபவங்களின் எல்லைகளைக் கடந்து, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளையும், சமூகப் பின்னணியுடன் இணைந்து உருவாகும் தனிமனித ஆளுமையையும், அது தனிமனித உணர்வுகளில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் ஆராய்கின்றன.
இக்கதையில் தனிநபர் இயங்கும் சமூகத்தின் உடலில்தான் பல்வேறு குணநலன்களைக் குறிக்கும் ‘வால்’ முளைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ‘வால்’ என்னும் உருவகத்தின் வழியே எழில் சின்னத்தம்பி இக்கதையைத் தனித்துவமான, ஆழமான தளங்களுக்கு நகர்த்துகிறார். நவீன மனிதன் எதிர்கொள்ளும் காலத்தின் பல்வேறு நெருக்கடிகளைச் செயற்கைத்தன்மை இல்லாத எளிய, இயல்பான மொழிநடையில் கதையோடு பிணைத்து, சிக்கலான கருப்பொருளைப் புரிந்துகொள்ள முடியாத புதிராக மாற்றாமல் மிக நேர்த்தியாகப் படைத்துள்ளார்.
தமிழ்ப் புனைகதை உலகம் கட்டாயம் விவாதிக்க வேண்டிய சிறந்ததொரு கதையை வாசிக்கத் தந்தமைக்காகக் காலச்சுவடு இதழுக்கும் கதாசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கே. பிரதீப் குமார்
கோழிக்கோடு
***
கல்லூரி மாணவர் தேர்தலை முன்னிறுத்தி எழுதப்பட்ட தலையங்கம் சிறப்பு. வாசித்து முடித்தபோது பெரு வியப்பும் கோபமும் கொப்பளித்தது மனதுக்குள். பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை தவறாமல் உண்டு. வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாகவும் நாட்டைத் தீர்மானிக்கப் போகிறவர்களாகவும் களம் காணும் மாணவர்களுக்குக் கல்லூரிகளில் தேர்தல் நடத்தப்படாதது பெரும் துரோகம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏன் தமிழக மாணவர்கள் அரசியலில் அங்கம் வகித்து முன்னிலை பெறவில்லை என்ற நீண்ட நாளைய கேள்விக்கும் பதிலைத் தந்தது. இதற்கு மேலும் காத்திருக்காமல் எப்பாடுபட்டாவது தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று நம்புவோம்.
பல்வேறு கலைகளின் ஒட்டுமொத்த உருவமான திரைப்படங்களில் உருவம் கொண்டு கட்டமைக்கப்பட்ட கடவுள்கள் மனித வடிவத்தில் தோன்றும்போதெல்லாம் அவர்கள்தான் உண்மையான கடவுளோ என்று மெய் சிலிர்க்கும் நிலைக்குச் சென்றுவிடுவதுண்டு. ஆனால் அதன் பின்னாலுள்ள சுவீகரித்துக்கொள்ளும் முறையையும், தவறியும்கூடச் சாதியால் கீழாக்கப்பட்ட ஒருவர் சமத்துவத்தைப் போதிப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இந்நாடு இல்லை என்பதையும் தோலுரித்துக் காட்டியது ‘சினிமாவும் தெய்வங்களும்’ கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருவது சமத்துவத்திற்கான தெளிவான நேர் பாதையை அமைக்கும் என்பது உறுதி.
சி.சு. ஜெகன்நாதன்
பெங்களூரு
***
காலச்சுவடு அக்டோபர் இதழில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவிற்கான அஞ்சலி படித்தேன். இரா. பிரபாகரின் கட்டுரை வெற்றுப் புகழ்ச்சியின்றி விருப்புவெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகப் பட்டிமன்றத்தை மலினமாக்கியவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதற்குக் காரணம் அவர் தேர்ந்தெடுத்த இரண்டாவது பார்வை என்றும் குறிப்பிட்டது நியாயமே. அவரின் தீர்ப்புரை தீவிரமான பேச்சாக இருக்கும் என்பதையும் சொல்லியிருப்பது எனக்குப் பிடித்திருந்தது.
வளவ. துரையன்,
முகலிவாக்கம்
***
அரசியலோ, சினிமாவோ, வர்த்தகமோ, பெண்களைக் குறி வைத்தால் ஜெயிக்கலாம் என்பது லாபத் தந்திரம். பெண்களின் வாக்கு வங்கியைச் சுரண்டவே அன்றைய தாலிக்குத் தங்கம் முதல் இன்றைய தாய்மாமன் சீர் வரை பட்ஜெட்டைப் பதம் பார்க்கிறது. சுய சம்பாத்தியத்தில் தங்க மோதிரம் வாங்கிக் கொடுக்கும் சுயமரியாதையோடு, பொருளாதாரப் பலமும் அரசிடம் கேட்பதே நம் உரிமையாகும்.
இலவசம் ஒரு அவமானம் எனும் தன்மானம் கொண்ட மக்களால்தான் தூய ஆட்சி சாத்தியமாகும். ரத்த தானம் என்றால் விலகும் மக்கள் அன்னதானம் என்றால் அடித்துக்கொள்ளும் அவலமும், உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத்தொகை என விலை போவதால் நோட்டுக்கு ஓட்டை விற்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்த அசிங்கமும் மாறினால்தான் ஜனநாயகம் பிழைக்கும். புரையோடிப்போன லஞ்ச ஊழலைக் கொடுத்துக் கெடுத்ததும் நாம்தானே. ஐந்தாண்டு ஆட்சியில் மாறும் அரசியல்வாதிகளைச் சிறையிலடைக்கும் காலம் வந்ததுபோல, தவறுசெய்ய வழிகாட்டிப் பயனடைகிற நிரந்தர அரசு அலுவலர் களையும் தண்டிக்கக் கடும் சட்டம் வருமா?
அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை
***
