புத்தக மாணிக்கம்
நூல்களைத் தன் உயிரினும் மேலாக நேசித்த பல்லடம் மாணிக்கம் (1936-2026) அண்மையில் மறைவுற்றது துயர்மிகு செய்தியாகும்.கோவை மாவட்டம் பல்லடத்தில் எளிய உழவர் குடியில் பிறந்த மாணிக்கம், தன் குக்கிராமத்தில் பள்ளிக்கல்வியை முடித்த பின் 1954முதல் 1956வரை கோவை மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் நூலகராகப் பணியாற்றினார். அதன்பின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து 1962இல் புலவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் தமிழறிஞர்களாக விளங்கிய க.ப. அறவாணன், பொற்கோ, சுந்தரமூர்த்தி போன்றோர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவருடன் பயின்றனர். பல்லடம் எனும் சிற்றூரில் பிறந்த தனக்குப் புத்துலகைக் காட்டியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். படிப்பு முடிந்ததும் 1962முதல் 1975வரை 13 ஆண்டுகள் சென்னையிலுள்ள பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
1961இல் அவரது முதல் கவிதைத் தொகுப்பாகிய ‘ஆயிரம் பூ’ வெளியானது. இதற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கா. அப்பாதுரையார் போன்றோர் சிறப்புரை வழங்கி ஊக்குவித்தனர்.
1968இல் ஏ.கே. வேலன் இயக்கத்தில் வெளியான ‘தேவி’ எனும் திரைப்படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் இவர் எழுதினார். அப்பாடல்களை டி.எம். சௌந்தரராஜன் பாடியிருந்தார். அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தந்தை சேகர், அப்போது ‘தேவி’ திரைப்படத்தின் இணை இசையமைப் பாளராக இருந்தார். பல்லடம் மாணிக்கம்மீது அன்பு கொண்டிருந்த அவர், திரையுலகில் இவருக்கான வாய்ப்புகளை உருவாக்க முனைந்தார். ஆனால் திரைத் துறையில் அதிக ஈடுபாடு இல்லாத காரணத்தால், பல்லடம் மாணிக்கம் திரை முயற்சிகளிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
திருமணத்திற்குப் பிறகு விருத்தாசலம் பகுதியே அவரது வாழ்விடமானது. அங்கு செங்கல் உற்பத்தி வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேற்றம் கண்டார். மாணவப் பருவத்திலிருந்தே நூல் சேகரிக்கும் ஆர்வம் இருந்த காரணத்தால், விருத்தாசலத்தில் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபாடு காட்டினார். புத்தகக் கண்காட்சிகள், பழைய புத்தகக் கடைகள், புகழ்வாய்ந்த புத்தக நிறுவனங்கள், தமிழறிஞர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு வழிகளிலும் ஆண்டுக் கணக்கில் சிறிது சிறிதாகப் புத்தகங்களைச் சேகரித்தார். ஏறக்குறைய 1,00,000 நூல்களுக்கும் மேலாகத் தனி ஒருவராக நூல்களைத் திரட்டி, விருத்தாசத்தில் அதற்கெனத் தனியே ஒரு மாடி வீட்டையே ஒதுக்கிப் பாதுகாத்து வந்தார். 8000 சதுர அடியில் அமைந்த அதை, ‘தமிழ்நூல் காப்பகம்’ என்றே அழைத்து வந்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய தனியார் நூலகமாக அது அமைந்திருந்தது.
பல அரிய நூல்கள் நூலகத்தில் இருந்தன. அது குறித்து அவரே ஒரு பேட்டியில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். ‘1786இல் பெப்ரிசியஸ் பாதிரியார் தொகுத்த மிக மிக அரிதான ‘பெப்ரிசியஸ் தமிழ் அகராதி’ இங்கு உள்ளது. அதேபோல், தொன்மை வாய்ந்த மதுரை தமிழ்ப் பேரகராதி, 1894இல் உ.வே.சா. பதிப்பித்த புறநானூறு முதல் பதிப்பு, சங்க இலக்கியம், சிற்றிலக்கியங்களின் முதல் பதிப்புகள் ஆகியனவும் இங்கு உள்ளன. கம்ப இராமாயணம், தொல்காப்பியம் ஆகியவற்றின் அனைத்து உரைகள், பன்னிரு திருமுறைகள், பிரபந்தங்கள், இந்தியத் தத்துவங்கள் குறித்த ஆய்வு நூல்கள் 50 தொகுதிகள் ஆகியனவும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கூழங்கைத் தம்பிரான் எழுதிய நன்னூல் உரையை ஜெர்மனியிலுள்ள ஒரு நண்பர் மூலம் பெற்று, அதன் பிறகு வெளியிடப்பட்ட அந்த அரிய நூலும் தமிழ்நூல் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறள் மொழிபெயர்ப்புகள், பல்வேறு பதிப்புகள், ஆய்வு நூல்கள் எனத் திருக்குறள்பற்றி மட்டும் 1,500க்கும் அதிகமான நூல்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.
செவ்வியல் இலக்கியங்களைப் போலவே நவீன இலக்கியங்களுக்கும் இங்கு தனியிடம் உள்ளது. பாரதி, பாரதிதாசன் ஆகியோரது படைப்புகள், வாழ்க்கை வரலாறுகள், இலக்கிய இதழ்கள், பல்வேறு பத்திரிகைகள், 500க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகள் போன்றவையும் இங்கு உண்டு. தமிழ்க் கலைக் களஞ்சியம் போல ஆங்கிலக் கலைக் களஞ்சியங்கள், நேஷனல் ஜியாகிரபி 60 ஆண்டுத் தொகுப்பு ஆகியனவும் பட்டியலில் உள்ளன. கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் நூல் தொகுதிகளும் உள்ளன.
நூல்கள் தவிர்த்துக் கர்நாடக இசை, திரை இசை குறித்த சி.டி., டிவிடி, பீத்தோவன், மொசார்ட் ஆகிய இசை மேதைகளின் இசைத் தொகுப்புகள், பல்வேறு இசைப்பேழைகள், ஆஸ்கர் விருதுபெற்ற பெரும்பான்மையான திரைப்படங்களின் குறுந்தகடுகள் ஆகியனவும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன எனத் தனது நூலகத்தின் பட்டியலை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
பல்லடம் மாணிக்கம், பேராசான் வள்ளுவர்மீது அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். 1999ஆம் ஆண்டில் ‘வள்ளுவம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதைக் கண்கவர் வண்ண அச்சில் கொண்டுவந்தார். அது மொத்தம் 24 இதழ்கள் வெளிவந்தது. திருக்குறள் குறித்து எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகள் அதில் வெளியாயின.
தொடக்க காலத்தில் ‘நிறங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக இலக்கியப் பணி ஆற்றி வந்தார். அதேபோல் ‘திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் திருக்குறள் குறித்து மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஊட்டினார்.
தனக்குப் பிறகுதான் சேகரித்த நூல்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நன்நோக்கில் கோவையிலுள்ள குமரகுரு பொறியியல் கல்லூரிக்கு அந்த நூல்களை வழங்கினார். அந்நிறுவனம் அந்த நூல்களைத் தனியே ஒரு வளாகத்தில் வைத்துப் பேணிவருகிறது. விருத்தாசலத்திலிருந்த தமிழ்நூல் காப்பகம் இன்று இடம்பெயர்ந்து கோவைக்குச் சிறப்புச் சேர்த்து வருகிறது.
வாழ்நாள் முழுவதும் தமிழ் அறிஞர்களோடும், தமிழ் இயக்கங்களோடும் இடையறாத தொடர்பில் இருந்துவந்தார். “வாசிப்பு ஒன்றே வாழ்வை அர்த்தமாக்கும் என்பது என் வாழ்வில் நான் கண்டறிந்த உண்மை” எனத் தன்னைப் பற்றிப் பல்லடம் மாணிக்கம் குறிப்பிடுவது வழக்கம். அத்தகைய தமிழ்த்தொண்டரது நினைவு கொண்டாடத்தக்கது.
மின்னஞ்சல்: gana.kurinji@gmail.com
