கடிதங்கள்
100 அகவை கண்ட ‘புவியின் சாட்சி’யாகத் திகழும் டேவிட் அட்டன்பரோ பற்றிய கட்டுரையை சே.இரா. செல்வகுமரன் அருமையாகத் தொகுத்துள்ளார். வாழ்த்துக்கள். காந்தி படம் எடுத்து ஆஸ்கர் விருது பெற்று ரிச்சர்ட் அட்டன்பரோ இவரது மூத்த சகோதரர் என்ற தகவலையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கே. வைத்தியநாதேஸ்வரன்
தஞ்சாவூர்
***
காலச்சுவடு ஜூன் இதழ் தலையங்கம் எண்ணித் துணிந்து எழுதப்பட்டுள்ளது. தலையங்கம் குறிப்பிட்டிருப்பதுபோல தவெகவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் அனைத்து அரசியல் கட்சிகளின் மீது ஏற்பட்ட அதிருப்தியும் மாற்றத்தை விரும்பிய மனப்பாங்கும் ஆகும். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்னும் கட்சிகளின் போக்கு இனி எடுபடாது. அதுபோல வெறுப்பரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது. ஊடகத்துறை திரைப்படத்துறை போன்றவற்றைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் களமாடிய திமுக ஆட்சியின்மீது அறிவு ஜீவிகள் வெறுப்படையத் தொடங்கி இருந்தனர். இரு திராவிடக் கட்சிகளுமே ஊழல் கறை படிந்தவை என்னும் எண்ணம் பாமர மக்களிடம் தோன்றிவிட்டது. எனவே ஒரு மாற்றத்தை விரும்பிய அவர்களுக்குத் தவெகதான் அடுத்த தேர்வாக இருந்தது. மேலும் இன்றைய தலைமுறையைத் தற்குறி என இகழ்ந்தது எம்மை விட்டால் யாருமில்லை என்னும் ஆணவம் போன்றவையும் திமுகவிற்குத் தோல்வியைத் தேடித் தந்துள்ளன. தமிழக வாக்காளர்களின் அறிவுத் திறன் வெளிப்பட்டுள்ள தேர்தல் முடிவு இது. மக்களுக்கு நம்பிக்கை தரும்படிக் கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும்.
வளவ. துரையன்,
முகலிவாக்கம்.
***
எலிப் பந்தயமோ கல்வி? சாரா அருளரசி எழுதியிருந்த ‘கற்றனைத்தூறும்’ தொடர் கட்டுரை படித்தேன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாடறிந்த உண்மை. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டின் தேர்ச்சி விகிதத்தைவிடக் கூடுதலாக இருப்பதற்கு என்னென்ன முயற்சிகள் செய்யலாம் என்பதை முயன்று செய்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அடிப்படைத் திறன்கள் இல்லாத மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவது ஆச்சரியமாக இருக்கிறது. அடிப்படைத் திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள இன்றைய மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது. தரமான கல்வி உண்மையான கல்வி மிகவும் அவசியமானது. எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான வகையில் உண்மையாகக் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். வங்கிக் கல்வி முறை என்பது இன்றைய கல்வி முறையாக இருப்பது வேதனைதான். தேர்ச்சி குறைவாக இருக்கும் பள்ளிகளையும் அந்தப் பாட ஆசிரியர்களையும் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் வதைப்பது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.
துளசிதாசன் கட்டுரை நீட் தேர்வின் தன்மைகளை விவரித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு என்பது எவ்வளவு பெரிய அநீதி. தேசிய அளவில் நடைபெறும் தேர்வினை சரியாக நடத்த முடியாதவர்கள் மாணவர்களைத் தேர்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கும்போது நடத்தப்படும் சோதனைகள் கெடுபிடிகள் முகம் சுளிக்க வைக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்காணிக்க இவ்வளவு சிரமப்படும் தேசியத் தேர்வு முகமை தேர்வு வினாத்தாளைப் பாதுகாக்கத் தவறுவது எப்படி? நம்பிக்கையோடு நீட் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுக் கணக்கில் தயாராகி வரும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். நீட் தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்றது என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் உருவாகி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்துவிட்டுப் பள்ளி இறுதி ஆண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்வதே சரியாக இருக்கும். நீட் தேர்வு வைத்து மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதன் மூலமாக என்ன சாதனை நடந்தேறிவிட்டது என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டியது அவசியம். தேசிய அளவில் நடைபெறும் பல தேர்வுகளும் இன்று குளறுபடியாக மாறி இருப்பது வேதனை தருவதாக உள்ளது.
மா. கல்பனாபழனி
பென்னாகரம்
***
காலச்சுவடு தலையங்கம் படித்தேன். முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய்க்கு காலச்சுவடு சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கலாம். அவர் முன் பூதாகரமாக எழுந்திருக்கின்ற சவால்களைக் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கலாம். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தம்மை வளர்த்துவிட்ட திரைத்துறைக்கு ஏதாவது நன்மை செய்துள்ளாரா? ஆட்சியின் நோக்கம் ஊழலை ஒழிப்பதுதான் என்று முழங்கும் விஜய், தமது திரைப்படங்களுக்குத் தமது ரசிகர்களால் கொடுக்கப்பட்ட கட்டணக் கொள்ளை புகார் பற்றி மௌனமாக இருந்தவர்தான். கரூரின் துயரச் சம்பவத்திற்கு இதுவரை வருத்தம்கூடத் தெரிவிக்காதவர். மக்கள் இவரை முதலமைச்சராக்கியதற்கு வருத்தப்படப் போகிறார்களா? மகிழ்ச்சியடையப் போகிறார்களா?
என். பாபு அருள் ஜோஷி
களக்காடு
***
ஜூன் மாத இதழில் 2026 தேர்தல் முடிவுகள் தலையங்கத்தின் ஒவ்வொரு வரிகளும் அணுஅணுவாக உண்மையின் யதார்த்தங்களை விவாத விளக்கங்களுடன் அக்னிப்பிழம்பாக விவரிக்கிறது. தோல்விக்கான காரணங்களைப் பொதுக்குழு, செயற்குழு, கருத்துக்கேட்பு என விவாதங்களைத் தவிர்த்து இதை வாசிக்கும்போது அத்தனை விவரங்களும் மின்னல் வெளிச்சம் புலப்படும் வண்ணம் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். திமுகவின் தோல்விக்கும், விஜய் வெற்றிக்குமான மூன்று தாக்கங்களையும் அப்பட்டமாக உணர்த்தியுள்ளீர்கள். முதன்மை ஊடகங்கள் அரசின் விளம்பரப் பலன்களுக்காக மக்கள் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டத் தயங்கியதும், அறிவுஜீவிகளின் விவாதங்களும்தான் மக்களின் கோபத்திற்கான திருப்புமுனை என்பது மிகச் சரியானது. புதிய கூட்டணிஅரசு எப்படிச் செயல்பட வேண்டும் எனப் பெருந்தன்மையுடன் சுட்டிக்காட்டித் தட்டிக்கொடுத்த விதம் பாராட்டத்தக்கது.
கி. ராமராஜ்
இராயபாளையம்
***
தலையங்கத் தலைப்பிலேயே ஆசிரியரின் சாட்டையடி தெரிகிறது. திராவிட அரசியல் (அதாவது இரு துருவ அரசியல்) வீழ்ந்தது என்று அறுதியிட்டுக் கூறுவது எப்படி என்று கேள்வி எழுகிறது. தலையங்கத்தின் மூன்றாவது பத்தியின் கடைசி வரிகளில் ‘மாற்றத்திற்கான அவாவும், புதிய தலைமுறையின் உளவியல்தான் முதன்மையான காரணிகள்’ என்று சொன்னது முற்றிலும் உண்மை.ஆனால் தெளிவாகச் சொல்வதென்றால் “அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையே” என்று தோன்றுகிறது. காரணம் புதிய தலைமுறைக்குப் புரிதலும் இல்லை, வரலாறும் தெரியாது, கண்ணைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்வதுபோலத்தான் புதிய தலைமுறையினரின் செயல்பாடு.
திராவிடம் என்பது சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. இது கடந்த 60 ஆண்டு காலமாகக் கட்டமைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுக் கட்டிய கருங்கோட்டைப் போன்றது. அப்படிப்பட்ட கோட்டையில் அதிகார அரணில் அமர்ந்து ஆட்டுவிக்க வேண்டும் என்ற பேராசையில் உழைக்காமலும், உறுதியில்லாமலும் நுழைந்தவர்களின் எதிர்காலம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதற்கு உதாரணமாக 19ஆம் நூற்றாண்டிலிருந்து நடைமுறையிலுள்ள காலம்வரை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இவற்றை அறியாத புதிய தலைமுறையினர் எதையோ சாதித்ததுபோல உணர்ச்சி வசப்பட்டு மனிதத் தன்மையைச் சிறுகச் சிறுக இழந்துவருகிறார்கள் என்பது வருந்தத்தக்கது.
உரிமைகளில் தலையாய உரிமை வாக்களிக்கும் உரிமை. ஒரு காலத்தில் அதாவது பண்டைய காலத்தில் குறிப்பாகக் குடைஓலை முறை பின்பற்றிய காலத்தில் எல்லோர்க்கும் வாக்களிக்கும் உரிமை கிடையாது. பெரும் செல்வந்தர்களுக்கு, பிராமணர்களுக்கு, ஓரளவு படிப்பறிவு பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. பெண்களுக்குக் கிடையாது. ஆனால் அதே பெண் இனம்தான் இன்று புதிய தலைமுறை என்ற அங்கீகாரத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நினைத்து வாக்களிக்கும் உரிமையை மனம்போன போக்கில் உபயோகிக்கிறார்கள். பலர் அதைப் பணத்துக்கு விற்று வாக்களிக்கிறார்கள். அரசியல் என்பது அரசு + இயல். அதாவது உண்மை, நேர்மை, கொள்கை, கோட்பாடு, கட்டுப்பாடு, திட்டம், தொலைநோக்குப் பார்வை இன்னும் பல அடங்கியது, இறையாண்மை பொருந்தியது. இவை புதிய தலைமுறைக்குத் தெரியுமா, புரியுமா என்பது சந்தேகத்திற்குட்பட்டது. திராவிடக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட அஸ்திவாரம் வீழ்வது சாத்தியமில்லை. இது இரு துருவ அரசியலுக்கும் பொருந்தும்.
ஜி. சிவகுமார்
அஞ்சல்வழி
***
ஜூன் 2026 காலச்சுவடு இதழில். தலையங்கம் இருதுருவ அரசியலின் வீழ்ச்சியை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள இயலாமல் ‘தற்குறிகளின் வருகை’ என்பதையும் இணைத்தே எழுதியிருக்கிறீர்கள். 60 ஆண்டுக்கால ஆட்சியின் நன்மை தீமைகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். அதில் தவெகவினரை தற்குறிகள் * என்று தலைப்பில் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை. யார் தற்குறிகள் என்று எழுத ஆரம்பித்தால் 1967இலிருந்து இன்றுவரை எழுதுவதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்கள் தலையங்கத்தின் இறுதியில் குறிப்பிட்டுள்ளதுபோல் 1952க்குப் பிறகு முதல்முறையாக ஏற்பட்டுள்ள கூட்டணி ஆட்சி முதல் நிலையில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையைத் தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் புதிய அரசு உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். அந்த நம்பிக்கை பொய்த்துப்போகும்போது இந்த ஆட்சியையும் தூக்கி எறிவதற்கு இளைஞர்கள் தயாராயிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. ஆனால் 60 ஆண்டுக்காலத் திராவிடக் கட்சிகள் இனி ஏதாவது ஒரு கூட்டணியில் இருக்க முடியுமே தவிர தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
அடுத்த கட்டுரை எழுதிய க. திருநாவுக்கரசு ‘விஜய் எனும் புலப்பாடு’ என்று மட்டும் எழுதியிருக்க வேண்டும். ‘சுயமரியாதையின்மையின் வெளிப்பாடு’ என்றும் சேர்த்திருக்கிறார். இதுவும் தவெகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற மனப்பான்மையின் வெளிப்பாடுதான். திராவிட இயக்கத்தின் சுயமரியாதைக் கோட்பாட்டிற்கு ஒரேயொரு உதாரணம் ஒரு மூத்த அமைச்சர், 80 வயதைக் கடந்தவர் ‘இன்பநிதி’ அமைச்சரவையிலும் தான் அமைச்சராக இருப்பேன் என்று ஒரு கூட்டத்தில் பெருமை பொங்கச் சொன்னார். இன்பநிதிக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது. அவரையும் முதலமைச்சராக்குவதற்கு அந்தக் கட்சி தயாராயிருக்கிறது என்றுதானே பொருள்.
‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற கருத்தை உள்வாங்கியிருந்தால் கழகங்களின் அமைச்சர்கள் கருணாநிதியின் காலிலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலிலும் விழுந்திருக்க மாட்டார்களே! இந்தக் கட்டுரையாளர் விஜய் வெற்றி பெறுவதற்கு முதன்மையான காரணம் ‘பிரபல்ய வழிபாடு’ என்றும் தனது ஆராய்ச்சியைத் தொடங்குகிறார். 1990களின் மத்தியில் அரசியலில் ரஜினி தீவிரமாக இறங்கியிருந்தால் முதலமைச்சராகியிருப்பார், அல்லது 2017 இல் ஜெயலலிதா இறந்தவுடன் அரசியலில் இறங்கியிருந்தால்கூட வாய்ப்பு இருந்திருக்கும், ஜெயலலிதா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இன்று இருந்திருந்தால் விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் இந்த வாய்ப்பு ‘ஒரு லாட்டரி’ என்றும் எழுதியிருக்கிறார்.
ரஜினி எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் இனியும் அவர் கனவில்கூட வர முடியாது என்பதும் அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரியும். பழைய கதைகளைப் பேசியிருக்கும் கட்டுரையாளர் இன்றைக்கு திமுக தோற்றதற்குரிய காரணங்களை ஆராய்ந்திருக்க வேண்டும்.
விஜயின் வெற்றிக்கு மூன்று காரணங்களில் இரண்டு மட்டுமே உண்மை. அவற்றின் விகிதாசாரங்கள் வேறுபடலாம். அவரது ரசிகர்களும் திமுக, அதிமுக ஆட்சிகளை வெறுத்துப்போய் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தவெகவிற்கு வாக்களித்திருப்பது உண்மை. ஆனால் இரண்டாவதாக அவர் குறிப்பிட்ட தங்களது மகன், மகள் அல்லது பேரக்குழந்தைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக வாக்களித்தவர்கள் என்று; இதெல்லாம் திராவிட உளவியல் புளுகு மூட்டைகளும், தங்களைத் தாங்களே அறிவுஜீவிகள் என்று அறிவித்துக்கொண்டவர்களின் கருத்துமாகும். குழந்தைகளின் மனநிலை பாதிக்குமென்றும் அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டுமென்றும், விஜய் தோற்றுவிட்டால் அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் ஊடகங்களில் அறிவுரை சொன்னார்கள்.
விஜய் 108 இடங்களில் தானே தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார் மீதமுள்ள இடங்களில் தோற்றிருக்கிறாரே, எத்தனை குழந்தைகளின் மனது பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எந்த அறிவாளிகளாவது சொல்வார்களா? உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது இந்த அறிவுஜீவிகள்தான். தேர்தலுக்கு முந்தைய பிதற்றல்தான் என்று நினைத்தேன், தேர்தல் முடிவுக்குப் பிறகும் பிதற்றுவது அறியாமையின் உச்சம். தமிழ்நாட்டில் பாஜக சக்தி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக திமுகவையும் காங்கிரஸையும் ஆதரிக்கிறவன் நான் என்கிறார். எதிர்மறை அரசியல் மட்டுமே எடுபடாது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. திமுக அரசின் சாதனைகளைச் சொல்லியல்லவா ஓட்டுக் கேட்டிருக்க வேண்டும். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?” ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் 234 தொகுதியிலுள்ள வாக்காளர்களுக்கும் கொடுக்க இந்த இரண்டு கட்சிகளுக்கும் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளைத் தரக்குறைவாக விமர்சித்தவர்களை ஏன் ஆட்சியிலிருந்து அகற்றக் கூடாது என்று கேட்டிருக்க வேண்டும். ஊழலின் உறைவிடம் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டவர்களைத் தன் கட்சி ‘வாஷிங் மெஷினில்’ போட்டு வெளுத்தவர்களுக்கு மீண்டும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். அத்தனையையும் மக்கள் மனதில் வைத்தே ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.
பாசிசத்தை ஒப்பிடும்போது ஊழல் எவ்வளவோ பரவாயில்லை; குறைந்த தீமையெனினும், இடதுசாரிகள் தவெக கூட்டணியில் இருந்திருந்தால் தவெகவிற்கு ஓட்டளித்திருப்பேன் என்கிறார். என்னைப் பொறுத்தவரை ஊழல்தான் அனைத்து பாசிச, நாசிச, நாசகார சக்திகளுக்கும் ஆதாரம். ஊழலை ஒழித்தால் இவையெல்லாம் ஒழிந்துவிடும். இடதுசாரிகளை நான் மிகவும் மதிப்பவன். ஆனால் அவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடத்திற் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார்கள். அவர்கள் தனியாக நின்றபோது தோற்பார்கள் என்று தெரிந்தும் வாக்களித்தவன் நான். கட்டுரையாளர் சொல்வதுபோல் இப்போது இடைத்தேர்தல் வந்தால் இடதுசாரிகள் ஆதரவு பெற்ற தவெகவிற்கு வாக்களிப்பாரா அவர்?
தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. முன் எப்போதையும்விட இப்போது அவர்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சினிமா கவர்ச்சியோ இலவசங்களோ ஓட்டுக்குப் பணமோ அவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது. திராவிட இயக்கங்கள் பிஜேபி எதிர்ப்பு ஒன்றையே தங்களின் ஆயுதமாகவும், எதிர்க்கட்சியினரை வசை பாடுவதையே பேராயுதமாகவும் பத்திரிகையிலும் காட்சி ஊடகங்களிலும் தங்களுக்கு எதிராகப் பேசுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் தவிர்த்திருந்தால் இந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
சு. அன்பழகன்
உத்தமதானபுரம்
• ‘தற்குறிகள்’ என்று தலையங்கத்தில் மேற்கோள் குறிகளுக்குள் வைத்து குறிப்பிடும்போது அதன் பொருள் அவ்வாறு பரவலாக அழைக்கப்பட்டார்கள் என்பதுதான். காலச்சுவடு அவ்வாறு சொல்வதாகப் பொருள் கொள்வது பிழை.
- ஆசிரியர்
***
‘அரசியல் ஜூகல்பந்தி’ தேச விடுதலைக்கு முன்னர் வரமும் சாபமுமாகத் தேசத் தலைவர்களின் கூட்டணிச் செயல்பாட்டைக் கட்டுரையாளர் எடுத்துரைத்துள்ளார். அழிவை ஏற்படுத்தியவர்கள் பட்டியலையும் தெளிவாகத் தந்துள்ளார். ‘டேவிட் அட்டன்பரோ- 100’, மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள் அருமை. ‘காலத்தை படம் பிடித்த ரகுராய்’, ‘என் குருநாதர்’ அஞ்சலிக் கட்டுரைகள் மாபெரும் ஆளுமைகளுக்கான அஞ்சலிப் பதிவுகள் சிறப்பு. ‘நீட் என்னும் வன்கொடுமை’ ஆம், இது வன்கொடுமையேதான் என்பதைத் தெளிவாக்கியுள்ளது.
சீனி. மணி
பூந்தோட்டம்
***
July Kalachuvadu 319 Cover Art Courtesy: Rose-Mary Vallas
