ஜூலை 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூலை 2026
    • கட்டுரை
      ஈரான் போர் நிறுத்தம் வென்றவர் யார்?
      மெதுவாக சுவாசிக்கும் இளவரசர் தீவுகள்
      247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
    • உரை
      தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச்சூழல் ஓர்மை
    • கதை
      தீ இனிது
      பாடிங்க்டன் கரடி
    • அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026)
      பாட்டாளிப் படைப்பாளி
    • தொகுப்புரை
      கலையை எழுதுதல்
    • அஞ்சலி: பல்லடம் மாணிக்கம் (1936 - 2026)
      புத்தக மாணிக்கம்
    • விருதுகள்
      விருதுகள் வாழ்த்துகள்
    • பதிவு
      பயன்தெரி பனுவலாளர்
      ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’
    • திரை
      நீளிரா
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை
    • கவிதைகள்
      ப. நீலாராமன் கவிதைகள்
    • தலையங்கம்
      அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி
    • பத்தி இன்றும் என்றும் 3
      காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்
    • பத்தி: மெய்யுரைப்பேன் மனமே!
      ‘அக்கா, அங்க பாரு’
    • அஞ்சலி: பாரதிராஜா (1941 - 2026)
      மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூலை 2026 பதிவு பயன்தெரி பனுவலாளர்

பயன்தெரி பனுவலாளர்

பதிவு
இஸ்க்ரா

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வு எழுத்தாளர் மருதனைக் கொண்டாடும் விதமாக நடைபெற்றது. பொது வாசகர்களுக்கான குறிப்பிடத்தக்க வரலாற்று, அரசியல் புத்தகங்களை எழுதிக் குவித்த மருதனின் படைப்புலகம்சார் உரையமர்வும் கலந்துரையாடலும் இந்நிகழ்வில் இடம்பெற்றன. மருதனின் எழுத்துலக நண்பர்கள் சுஜாதா, முகில், ஆர். முத்துக்குமார், ச.ந. கண்ணன், வள்ளிதாசன் முதலியோரால் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறார் எழுத்து, பொது வாசகர்களுக்கான வரலாற்று எழுத்து, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, பதிப்பக ஆசிரியர் எனப் பன்முகங் கொண்டு அறியப்பட்ட ஆளுமை மருதன். சே குவேரா, ஹிட்லர் எனத் தொடங்கி ஹூஜிண்டாவ், ஹோசி மின், ஹொசேமார்த்தி என வளர்ந்து, எரிக் ஹாப்ஸ்பாம், எட்வர்ட் சையத், ரொமிலா தாப்பர் எனத் தமிழில் உலக வரலாற்றையும் வரலாற்றியலையும் வாசித்த ஓர் அறிவுஜீவிதத் தலைமுறை உருவாக இவர் எழுத்து உறுதுணையாக இருந்தது.

மருதனின் 50ஆவது அகவை தினத்தையொட்டிய இந்நிகழ்வு இலக்கிய நண்பர்களும் வாசகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த காணொளியோடு விழா தொடங்கியது. ஆய்வறிஞர் ஆ. இரா. வேங்கடாசலபதி மெட்ராஸ் பேப்பர் இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான பா. ராகவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

திரைப்படக் கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விழா எடுக்கும் சூழலில் பொது வாசக எழுத்துக்காக மருதன் எனும் ஆளுமையை விழா எடுத்துக் கொண்டாடுவது மிகவும் வரவேற்புக்குரியது எனத் தொடங்கிய சலபதி, மருதன் தனக்கு அறிமுகமான நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். 2011இல் ‘கிழக்கு’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த ஆழம் எனும் மாத இதழுக்காக நேர்காணல் மேற்கொள்ள சலபதியைத் தொடர்புகொண்டார் மருதன். அவ்வாய்ப்பு ஈடேறாமல் போகவே, தி இந்துவில் வெளியான சலபதியின் கட்டுரையொன்றை அனுமதி பெற்று நல்ல முறையில் தமிழில் மொழிபெயர்க்கவே இருவருக்குமான அறிமுகம் பலம் பெற்றது.

பள்ளிக் கல்வியோடு கற்றலை நிறுத்திக்கொண்டு, எழுத்துலகில் சாதித்த பல எழுத்தாளர்களோடு ஒருவராக மருதன் ஒளிர்வதைச் சலபதி கோடிட்டுக் காட்டினார். தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான நூல் என்றறிந்து எவ்வகைப் பீடிகையும் பெருமைப் பீற்றலும் இல்லாமல் ‘இது ஓர் எளிய அறிமுக நூல்’ என்ற குறிப்போடு எழுதிவருகிறார். இவர், தொட்டுச்சென்ற களங்களை எழுதுவதற்கு ஆற்றலும் தகுதியும் வாய்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றும் மருதன் எடுத்த நேர்காணல்கள் தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு முன்மாதிரியாகத் திகழக்கூடியவை என்றும் குறிப்பிட்டு அமர்ந்தார் ஆ.இரா. வேங்கடாசலபதி.

பா. ராகவன், மருதனின் எழுத்து இடதுசாரிப் பின்புலத்தால் செதுக்கியெடுக்கப்பட்டது என்றார். குறைந்த காலத்திற்குள் திட்டமிட்டு எழுதும் எழுத்துப் பழக்கம் மருதனிடம் குடிகொண்டிருக்கிறது; அவரைக் கவிழ்த்துப் போட்டுக் குலுக்கினால்கூடச் சொற்கள்தான் விழும். சே குவேரா பற்றி மருதன் எழுதியபோது, தமிழில் அதற்கொரு மாற்றுப் புத்தகம் கிடையாது எனக் கூறி தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

மருதன் எழுதிய ‘உன் உலகம், என் உலகம், நம் உலகம்’, ‘How to humanize God?’ (ஆங்கிலத்தில் லூனா ஜெ) புத்தகங்கள் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டன. நாகூர் ரூமி சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார். மருதன் எழுத்தில் வெளிப்படும் பெண்ணியக் கூறுகள் குறித்துப் பேசிய பத்மினி, தம் வாழ்க்கையோடு அவற்றைப் பொருத்திப் பேனார்.

கல்விப்புல ஆய்வாளர்கள் சுவைபட வரலாறு எழுதுவதில்லை; பொது வாசகர்களுக்கு எழுதுபவர்கள் தக்க சான்றுகள் கொண்டு, ஆய்வு முறையியலைப் பின்பற்றுவதில்லை என்ற வசையை உடைத்ததில் மருதனுக்குப் பெரும் பங்குண்டு என்று பேசினார் இஸ்க்ரா. அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் மருதன், பொதுஜன வரலாற்றெழுதியலுக்குக் கற்பனை அவசியமானது என்பதை வரையறுத்தவர் எனவும் வரலாறு படிக்கத் தூண்டும் புதிய தமிழ்நடையை உருவாக்கினார் என்றும் இஸ்க்ரா குறிப்பிட்டார்.

மருதனின் ஆரம்பகால வரலாற்று நூல்களின் காட்சியமைப்பு நடை நவீன இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்ததை நன்மாறன் திருநாவுக்கரசு சினிமா பின்னணியிலிருந்து விளக்கினார். புனைவின் சாகசங்களுக்குள் மூழ்கித் திளைக்கும் இளைஞர்களை மிகச் சரியான புள்ளியில் வரலாறு, அரசியல், தத்துவத்தோடு இணைத்ததில்தான் மருதனின் எழுத்து காலங்கடந்து நிற்கிறது எனவும் தெரிவித்தார்.

சிறார் எழுத்துக்கள் குறித்துப் பேசிய 10ஆம் வகுப்பு மாணவி மீனா, மருதன் குழந்தைகளை மையமிட்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் பற்றிச் சுவைபடப் பேசினார். ‘கிளியோபாட்ராவின்’பன்மொழிப் புலமை, ‘பிகாசோவின் கியூபிச பாணி’ என்று பல  கட்டுரைகளையும்; ‘இந்தியா என்றால் என்ன?’, ‘பாரதியின் பூனைகள்’ முதலான நூல்களையும் மேற்கோளிட்டு மருதன் உருவாக்கும் சித்திரத்தை நுட்பமாக விவரித்தார். மருத்துவர் எஸ். சரத்குமார் மருதனோடு உண்டான நட்பை நினைவு கூர்ந்து வாசகர்களுக்கு நெகிழ்ச்சியூட்டினார்.

பின்னர் மருதனோடு பல்லாண்டுக் காலமாக நட்பு பாராட்டிவரும் எழுத்துலக நண்பர்கள் ‘மருதனும் நானும்’ எனும் பொருண்மையில் பேசினர். முதலில் பேசிய பத்திரிகையாளர் சுஜாதா, தன்னை மருதனின் வாசகர், நண்பர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்வதாய்க் கூறினார். கல்கி இதழில் தொடங்கி இன்றுவரை அவரின் எழுத்தை வாசிக்கும் முதல் வாசகர் என்று உவகை கொண்டார். கல்கி ஆசிரியர் ‘சீதா ரவி’ மருதனுக்கு ‘ஜூனியர் கல்கி’ என்ற பட்டம் சூட்டினார் என்றும் குறிப்பிட்டார், சிறார்களுக்கு எழுதிய 175 கட்டுரைகளில் சே பற்றி ஒரு கட்டுரையும் இடம்பெறாத பாங்கு என்று மருதன் குறித்த பல மதிப்பீடுகளையும் மகிழ்ச்சி கலந்த நினைவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது அவ்வுரை. குறிப்பாகச் சிறார்களுக்குப் ‘பெரியார்’ (மாய உலகம்: ஈ.வே.ராமசாமி என்கிற நான்...) குறித்து மருதன் எழுதிய கட்டுரையின் தாக்கத்தை இவரது உரையிலும் சலபதியின் உரையிலும் கேட்க முடிந்தது.

‘மருதன்– 50’ தனிப்பட்ட ஒருவரின் கதை அல்ல. முகில், ஆர். முத்துக்குமார், ச.ந. கண்ணன் என மொத்தம் நால்வரின் கதை என்று பேசினார் எழுத்தாளர் முகில். 2004இல் கல்கி இதழின் ‘சென்னை ஸ்கேன்’ இணைப்பிதழில் தொடங்கிய நால்வர் கூட்டணி இன்றுவரை பழமை மாறாமல் நீடிப்பதாகக் கூறினார். பின்னர் பா. ராகவன் ஆசிரியத்துவத்தில் இயங்கிய கிழக்கு பதிப்பகத்தில் ‘துப்பாக்கி மொழி’ நூலின் மூலம் கூட்டாகப் புத்தகம் எழுதியது, நால்வரும் ஒவ்வொரு தளம் நோக்கி நகர்ந்தது என்று நெகிழ்ச்சிபடப் பேசினார். தமிழில் பின்னட்டைக் குறிப்பு எழுதுவதில் மருதனின் தனித்தன்மையை முகில் சுட்டிக்காட்டினார்.

தொடக்கத்தில் நகைச்சுவை பொதிந்த சிறுசிறு கட்டுரைகளை கல்கி இதழில் மருதன் எழுதியதாகக் குறிப்பிட்ட ச.ந. கண்ணன், அதில் எழுத்தாளர் சுஜாதாவின் சாயல் இருந்தது குறித்தும், கிழக்கு பதிப்பகத்தில் ரூ. 1,00,000 ராயல்டி பெற்றது குறித்தும் பேசினார்.

இறுதியில் ஏற்புரை வழங்கிய மருதன், வழக்கம்போல் நகைச்சுவைக் குண்டுகளை வீசியதும் அரங்கம் அதிர்ந்தது. பா. ராகவனிடமிருந்து எழுதக் கற்றுக்கொண்டு, பின்னர் சலபதியின் தொடர்பால் சரியான ஆய்வு முறையியல் நோக்கி நகர்ந்த புள்ளியை நினைவுகூர்ந்தார். இந்நிகழ்வின் மூலம் மேலும் உந்துதல் பெற்றுத் தொடர்ச்சியாக இயங்கப் போவதாக முறுவல் பூத்து அமைதியாகத் தன் இடம் சேர்ந்தார்.

பெரும் படைப்பிலக்கியவாதிகளுக்குத்தான் பொன்விழாக்கள் என்ற கலாச்சாரத்தை உடைத்த ‘சலபதி – 50’ நிகழ்வு, ஆராய்ச்சியாளர்களுக்கும் அவ்விடத்தை வழங்கியது. அவ்வகையில் மருதன், பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்ததுபோல, பொன்விழாக் கொண்டாட்டத்தின் மூலம் எழுத்துலகில் அதைச் சாதித்திருக்கிறார்.

இஸ்க்ரா: முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

        மின்னஞ்சல்: iskrathewriter@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.