மெதுவாக சுவாசிக்கும் இளவரசர் தீவுகள்
அடலார் தீவுக்கு (Princes’ Islands) செல்வதற்காக கபடாஷ் துறைமுகத்தில் நின்றபோது, நகரம் முழுவதுமாக விழித்திருக்கவில்லை. ஆனால் கடல் ஏற்கெனவே நாளைத் தொடங்கிவிட்டிருந்தது. வெள்ளை சீகல் பறவைகள் அமைதியான காலையில் சிறிய அசைவுகளை உருவாக்கிக் கப்பலின் மேலாக வட்டமிட்டுப் பறந்தன. இடுப்பு நெளிந்த கண்ணாடிக் குவளைகளில் தேநீர் சிணுங்க, சூடான வாசனை காற்றில் மெல்லக் கலந்தது. சிமிட் (வட்ட வடிவ எள்ளு ரொட்டி) விற்பவர்களும் வாடிக்கையாளர்களும் முகம் மலர்ந்து பரிமாறிக்கொள்ளும் மெர்ஹபா, அந்நாளை ஒரு மொட்டுப்போல் மலரச் செய்யும் காட்சி தத்ரூபமாயிருந்தது.
கப்பலில் ஏறியவுடன் இஸ்தான்புல் நகரத்தின் கூச்சலிலிருந்து மெதுவாக விலகும் அமைதி உணர்வு உண்டாகிவிட்டிருந்தது.
கரையோரச் சத்தங்கள் பின்னால் தங்கி, கடல் காற்று மட்டும் முகத்தைத் தொட்டது. கப்பல் மெதுவாக நகரத் தொடங்கியபோது நகரம் அசையாமல் உறைந்து நிற்க, நான் மட்டுமே நகர்வது போன்ற விசித்திர உணர்வு என்னுள் எழுந்தது.
கரையின் நீளமெங்கும் உயர்ந்து நிற்கும் பள்ளிவாசல்களின் மினாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பின்னோக்கி நகர்ந
