கலையை எழுதுதல்
2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கியபோதுதான் கவிஞராக மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் வலுவான இன்னொரு பரிமாணம் வெளிப்படலானது. கூர்மையும் நுட்பமும் நளினமும் மிக்க மொழியும், மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்ட படிமங்களும் கொண்ட அவரது கவிதைகள் தந்திருந்த அதே ஈர்ப்பையும் சுவையையும் கட்டுரைகளிலும் காண முடிந்தது. கட்டுரை வடிவம் மந்தமான வாசிப்புத்தன்மை கொண்டது என்றொரு பொதுவான அபிப்ராயம் உண்டு. தமிழில் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள் பலவும் அந்த அபிப்ராயத்தை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன. ஆனால் கட்டுரைகளையும் நேர்த்தியாக, வாசிப்புத்தன்மை கொண்டவையாக எழுத முடியும் என்று சுந்தர ராமசாமி, அ. முத்துலிங்கம் ஆகியோர் நிரூபித்தார்கள். சுகுமாரனின் கட்டுரைகளும் அந்த வரிசையில் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர அற
