சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை

பட்டறை
(நாவல்)
பரத்ராஜ் ரவிதாஸ்
வெளியீடு: பரிசல்
235, எம்.ஜி.ஆர் 1வது தெரு, எம்.எம்.டி.ஏ (MMDA) காலனி,
அரும்பாக்கம், சென்னை-600106.
பக். 262
ரூ. 300
நவீன இலக்கியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி நாவலின் மூலமாகவே அறிய முடிகிறது. தமிழில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்கச் சில நாவல்களேனும் வந்து வாசகர் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. இவ்வாறு வெளிவரும் நாவல்கள் பெரும்பான்மை யதார்த்தவாதத்தைப் பேசக்கூடியவையாக உள்ளன. அந்தவகையில் இந்த ஆண்டு வந்துள்ள பரத்ராஜ் ரவிதாஸ் எழுதியுள்ள ‘பட்டறை’ நாவல் கவனிக்கத்தக்கது. சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல், பாலியல், நட்பு, துரோகம், காதல், தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல், முதலாளித்துவ ஆதிக்கம் முதலியவற்றை மையப்படுத்தி நேர்கோட்டுத் தன்மையில் இந்நாவல் பயணிக்கிறது.
‘பட்டறை’ ஒரு சிறு தொழிற்கூடத்தில் வேலைப் பார்க்கின்ற எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் மறைந்திருக்கும் ஏராளமான திரைகளை விலக்கிக் காட்டுகிறது. மனித உணர்ச்சிகளின் தீவிர நிலையையும் மனிதர்களின் மூர்க்கத்தனங்களையும் எளிய மொழியில் புனைவாகப் படைத்திருக்கிறார் பரத்ராஜ் ரவிதாஸ்.
மனித வாழ்வின் உள்மன போராட்டங்களின் பிரதிபலிப்பே ‘பட்டறை’ நாவல் எனலாம். இந்நாவலில் பேசப்பட்டிருக்கும் பட்டறைத் தொழிலாளர்களைக் கூர்ந்து அவதானித்து இதுவரையிலும் புனைவுகள் பெரிதாக வெளிவந்ததாகத் தெரியவில்லை. லேத்துப் பட்டறை, உழைப்பும் திறனும் இணைந்த ஒரு சிறிய தொழில்துறை உலகம். இங்கு இயங்கும் லேத் இயந்திரங்கள் உலோகத்தைக் கலைப்படைப்பாக மாற்றுகின்றன. அந்த மாற்றத்தின் பின்னணியில் நிற்பவர்கள் லேத்துப் பட்டறைத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்வியல் பதிவுகள் உழைப்பின் சுவடுகளாலும் பொருளாதார போராட்டங்கள் நிரம்பியவையாகவும் காணப்படுகின்றன. இவ்வாறு இத்தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களின் பின்னல்களை அவிழ்த்துக் காட்டத்தான் ‘பட்டறை’ முயன்றிருக்கிறது.
சொக்கத்தங்கம் என்னும் மையப்பாத்திரத்தைக் கொண்டு பரத்ராஜ் ரவிதாஸ் இப்புனைவை எழுதியிருக்கிறார். லேத்துப் பட்டறையாக இருந்து டை - காஸ்டிங் எனப்படும் அலுமினிய அச்சு இயந்திர கம்பெனியாக மாறியிருந்த ‘கிரி - அண்ட் -கோ’வின் நீண்ட கால ஊழியர்தான் சொக்கத்தங்கம். இவனுடைய மனதில் விரியும் காட்சிகளிலிருந்தே நாவல் பயணிக்கிறது. சொக்கத்தங்கத்தின் வாயிலாக 2010ஆம் ஆண்டின் சென்னையின் சூழல் காட்டப்படுகிறது. தென்சென்னை பெரும்பாலும் நடுத்தர மக்களின் புகலிடமாக இருந்தமையை அறிய முடிகிறது. சென்னை மக்களைச் சொகுசுப் பேருந்துகளில் கட்டாயமாகப் பயணிக்கவைத்த அன்றைய அரசின் ராஜதந்திரத்தைப் புனைவாசிரியர் ஓரிடத்தில் எடுத்துக்காட்டியிருக்கிறார். உழைத்து உழைத்து உரமேறிப்போன உழைப்பாளர்கள் வறுமையால் கையற்று நிற்கும் சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுவதே ‘பட்டறை’யின் மையம். புனைவில் கதை நகர்வைவிட அதை எடுத்துக்கூறும் முறை நாவலுக்கு முக்கியம். சொக்கத்தங்கத்தின் ஆயுதபூஜை விவரணையிலிருந்தே நாவல் முதலில் நகர்கிறது. நாவலில் மூன்று கட்டங்களாகக் காட்டப்பட்டிருக்கும் ஆயுதபூஜை நிகழ்வுகள் உள்ளீடாகக் கூறப்பட்டிருக்கும் முக்கியமான விஷயமாகத் தொழிற்பட்டிருக்கிறது. இந்நிகழ்வினைத் தொடர்ந்து புனைவில் வெட்டி வெட்டிச் சொல்லப்பட்டிருக்கிற நனவோடை தன்மையில் கூறப்பட்டிருக்கும் கதைகளின் போக்குகளையும் நுட்பமாக வாசிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களின் உள்மனதிலும் கனன்றுகொண்டிருக்கும் பதற்றம், தவிப்பு, போராட்டம், ஏமாற்றம் எனப் பொதிந்து வைத்திருக்கக்கூடிய இம்மனநிலையைப் பிரதி இறுதிவரையிலும் கவனப்படுத்தியிருக்கிறது.
‘பட்டறை’ சிறுதொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்களை எடுத்துக்காட்டி அவர்களுக்காகக் குரலெழுப்புகிறது. சொக்கத்தங்கம் என்னும் கடைநிலை ஊழியரின் பார்வையிலிருந்து நாவல் சொல்லப்படுவதோடு கதை நிகழும் இடங்களின் சூழ்நிலையையும் மையப்படுத்துகிறது. தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டங்களினூடே புனைவு மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வறுமையால் இங்கு வந்து தொழில்புரியும் பீகாரிய இளைஞர்களின் வாழ்வியலையும் பெரும்வலியுடன் முன்வைத்திருக்கிறது.
சொக்கத்தங்கத்தின் விவரிப் பினைத் தொடர்ந்து முகேஷ், சம்பந்தம், தேசராசா, விஜி, மயில் போன்ற அச்சு இயந்திர நிறுவன ஊழியர்களின் போராட்டங்களையும் சுவாரசியமாக எடுத்துக்காட்டியிருக்கிறது. புனைவில் காட்டப்பட்டிருக்கும் பசி குறித்த பதிவுகள் மனதை அழுந்தச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன. இச்சூழ்நிலையை மயிலுவின் தம்பி வேலுவின் திருமணத்தின் போதும், தேசராசாவின் படையல் விருந்தின்போதும் புனைவு புலப் படுத்துகிறது. மாட்டுக்கறி குறித்த பதிவுகள், அவை தொடர்பாக மயிலுவின் ஊரில் எழும் பிரச்சினை களையும் புனைவு கவனப்படுத்து கிறது. ஆனால் உணவின் சுவை பற்றிய வருணனைகள் புனைவில் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
பட்டறை தொழிலாளர்களின் வாழ்வில் கல்வி ஓர் எட்டாக்கனி யாகவே இருந்திருக்கிறது. குடும்பச் சூழலால் இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் திறமைகள் இருந்தும், மேம்பட்ட நிலைக்கு உயர முடியாமல் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையை இப்புனைவில் சொக்கதங்கத்தின் உள்ளே நீண்ட நாட்களாய் மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கும் ‘இன்ஜீனியர் கனவு’ இறுதிவரையிலும் கனவாகிப் போனமையின் மூலமாக நிறுவியிருக்கிறார். புனைவின் தொடக்கத்தில் ஐஸ்வர்யா எடுத்துக்காட்டும், “கண்ணுக்குத் தெரியாம நம்மள கட்டிப் போட்டுக்குற எல்லாத்தையும் படிப்பு பிச்செரியும்” என்ற வாக்கியத்தைச் சொக்கத்தங்கம் நினைக்காத நாளில்லை என்பதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தேசராசாவிடம் படிப்பு குறித்து சொக்கத்தங்கம் கேட்கும் பல கேள்விகளையும் முன்வைக்கிறது.வறுமையால் அவர்களின் கனவுகள் நசுக்கப்படுதலை சொக்கத்தங்கத்தின் வாயிலாக நேர்த்தியாக மொழிப்படுத்தியிருக்கிறார் பரத்ராஜ் ரவிதாஸ்.
சமூகத்தில் மாறா சாதிய இருப்பு குறித்த போக்குகளைப் புனைவில் ஊடாடும் கதாபாத்திரங்களின் வாயிலாகக் கவனப்படுத்தியிருக்கிறார். சாதிய அடுக்குகளில் மேலிருப்பவர்கள் இரண்டு அல்லது மூன்று கழனி குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்துப் பிழைக்கும் சூழல் காட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஊரில் கட்சியில் இருப்பவர்களுக்கும் காலனி மக்களுக்கும் இடையில் ஏற்படும் சாதியப் பிரச்சினைகளையும் புனைவு பேசியிருக்கிறது. சம்பந்தம், முத்தாரச்செல்வி இருவருக்குமான காதல் விவகாரச் சிக்கல்களுக்கிடையே சொக்கத்தங்கம் இருவரின் சாதிய நிலை குறித்து அறிந்துகொள்ள விழைந்த கருத்தாடல்களின் மூலமாகவும் பிரதி இன்றளவும் சாதியப் பிடியில் உழலும் சமூகத்தையும் காட்டியிருக்கிறது.
பட்டறைத் தொழிலாளர்களின் பணிச்சூழல் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாக இருக்கின்றன. தொழிற்கூடத்தில் ஏற்படுகின்ற அலுமினியக் குழம்புகள், நெடி, தூசி, புகை, அதிகப்படியான இரைச்சல் முதலிய காரணங்களால் உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன. பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு இல்லாமலிருந்தால் விபத்து ஏற்படும் சூழலுக்கும் வாய்ப்பிருக்கிறது. இச்சூழலை இப்புனைவில் பீகாரிய இளைஞர்களின் வேலைசெய்யும் முறையைக் கூறுமிடத்தில் அறிய முடிகிறது. இப்பிரச்சினைகள் இவர்களின் வாழ்வில் சாதாரணமாகி விட்டன. இருப்பினும் வாழ்க்கை நெருக்கடியால் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. புனைவில் காட்டப்பட்டிருக்கும் தொழிற்கூடப் பதிவுகள் பதற்ற மனநிலையை உருவாக்குகின்றன. ஒரு கணம் கவனம் தப்பினாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
கோபங்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் முடங்கிப்போகும் செயலற்றத் தன்மையின் அடையாளம் மௌனம். இதனை நாகராஜனின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவிக்கும் தங்கத்தின் வாயிலாகப் புனைவு எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவ ஆதிக்கத்தைக் கையிலெடுத்து, தொழிலாளர்களுக்குக் கலகம் செய்யும் நாகராஜனின் திட்டங்கள் சொக்கத்தங்கத்தின் மூலமாக முறியடிக்கப்படுகின்றன. இறுதிவரையிலும் சொக்கதங்கம் கதாபாத்திரம் புனைவில் நிலைத்த தன்மையைப் பெற்றிருப்பதை உணர முடிகிறது. இறுதியில் நாகராஜனின் திட்டத்தை முறியடிப்பதற்கு எதிர்பாராத திருப்பத்தையும் பிரதி உருவாக்குகிறது. நாகராஜன், பருஷி இருவரிடையே காட்டப்பட்டிருக்கும் ஓரினமோகத் திரிபு நிலையைப் புனைவு பொதுப்புத்தி மனநிலையிலிருந்து பேசுகிறது. தொடக்கம் முதல் இறுதிவரையிலும் தப்பிப் பிழைக்கப் போராடும் மனநிலையைக் கதாபாத்திரங்களின் வழியாக நுட்பமாக எடுத்துக்காட்டத் தவறவில்லை.
பட்டறைத் தொழிலாளர்களின் வாழ்வியல் பின்னணியை அவர்களின் பேச்சு நடையிலே கச்சிதமாகப் படைத்துக் காட்டியிருக்கிறார் புனைவாசிரியர். பட்டறைத் தொழிலாளர்களின் வாழ்க்கை கடின உழைப்பும் தியாகமும் நிரம்பியது. இதனைப் புனைவினூடாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டார் பரத்ராஜ் ரவிதாஸ். புனைவில் சில இடங்களில் கூறப்பட்டுள்ள மிகையுணர்ச்சிப் பதிவுகள், ‘கூறியது கூறல்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. லேத்துப் பட்டறை தொழிலாளர்களின் வாழ்வியலையும் அவர்களது அவலங்கள், அவர்கள்மீது நடத்தப்படும் வன்முறை முதலியவற்றை இதுபோன்ற நாவல் வழியேதான் எடுத்துரைக்க வேண்டும்.
மின்னஞ்சல்: msoniya118@gmail.com
