ஜூலை 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூலை 2026
    • கட்டுரை
      ஈரான் போர் நிறுத்தம் வென்றவர் யார்?
      மெதுவாக சுவாசிக்கும் இளவரசர் தீவுகள்
      247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
    • உரை
      தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச்சூழல் ஓர்மை
    • கதை
      தீ இனிது
      பாடிங்க்டன் கரடி
    • அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026)
      பாட்டாளிப் படைப்பாளி
    • தொகுப்புரை
      கலையை எழுதுதல்
    • அஞ்சலி: பல்லடம் மாணிக்கம் (1936 - 2026)
      புத்தக மாணிக்கம்
    • விருதுகள்
      விருதுகள் வாழ்த்துகள்
    • பதிவு
      பயன்தெரி பனுவலாளர்
      ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’
    • திரை
      நீளிரா
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை
    • கவிதைகள்
      ப. நீலாராமன் கவிதைகள்
    • தலையங்கம்
      அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி
    • பத்தி இன்றும் என்றும் 3
      காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்
    • பத்தி: மெய்யுரைப்பேன் மனமே!
      ‘அக்கா, அங்க பாரு’
    • அஞ்சலி: பாரதிராஜா (1941 - 2026)
      மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூலை 2026 தலையங்கம் அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி

அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி

தலையங்கம்
ஆசிரியர் குழு

ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார விடுதலையைவிட அதன் பண்பாட்டு விடுதலை மிக முக்கியமானது. எல்லாருக்கும் எல்லாம் என்ற சமூக நீதிக் கோட்பாட்டைப் பொருளாதாரப் பங்கீடாக மட்டும் பார்க்காமல், அறிவுப் பங்கீடாகவும் பண்பாட்டு அதிகாரப் பரவலாக்கமாகவும் மாற்றியமைத்ததில் கடந்த திமுக அரசுக்கு முக்கிய இடமுண்டு.

புத்தகக் காட்சிகளை வணிகத் தளமாக மட்டும் பார்க்காமல், அதை ஜனநாயக விழாவாக மாற்றியமை, மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தியது, புத்தகப் பண்பாட்டைத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தியது கடந்த திமுக அரசின் முக்கியமான பண்பாட்டுச் செயல்பாடு. ஆனால், இத்திட்டத்திற்கான அடித்தளம் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் (2019ஆம் ஆண்டு) சென்னைப் புத்தகச் சந்தைக்காக பப்பாசிக்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது. எனினும், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இத்திட்டத்தை செம்மையாக ஒழுங்குபடுத்திக் கூடுதல் நிதியோடு தமிழ்நாட்டின் அனைத்து (38) மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் கிராமப்புற எளிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுலகின் கதவுகள் திறக்கப்பட்டன. இவை குறித்து 2018 அக்டோபர் 226 காலச்சுவடு இதழில் வெளியான த. உதயச்சந்திரனின் நேர்காணலில், பெருமாள்முருகன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, முந்தைய அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டம், செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள், அதிமுக அரசின் கொள்கை முடிவுகள், இந்த ஒட்டுமொத்தக் கூட்டு முயற்சியின் போக்கு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2023இல் 24 நாடுகளுடன் தொடங்கப்பட்டது. இந்த உலகளாவிய முயற்சி படிப்படியாக வளர்ந்து அண்மையில் நடைபெற்ற கண்காட்சியில் 103க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அளவுக்குப் பிரம்மாண்டமடைந்தது.

இக்கண்காட்சியின் முதன்மை நோக்கம் உலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும் கொண்டுசேர்ப்பதுதான். இதன் விளைவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர்களுக்கும் சர்வதேசப் பதிப்பாளர்களுக்கும் இடையே கணிசமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் தமிழின் மிக முக்கியப் படைப்புகள் உலக மொழிகளுக்கும் உலகளாவிய நவீனப் படைப்புகள் தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட சட்டபூர்வமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளை அறிவுசார் சொத்துரிமைகளைப் பரிமாறிக்கொள்ளும் உரிமைச் சந்தையாக மாற்றியதில் மொழிபெயர்ப்பு நல்கைத் திட்டத்திற்கு (Translation Grant) மிக முக்கியப் பங்கிருக்கிறது. வரலாற்றுரீதியாக, இதற்கான முதல் முன்னெடுப்பும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் (2018-19) நடந்தது. தொடக்கத்தில் இத்திட்டம் தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கே முதன்மை முக்கியத்துவம் அளித்து நல்கைகளை வழங்கியது. எனினும், அடுத்து வந்த மு.க. ஸ்டாலின் அரசு இத்திட்டத்தைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியது. தமிழிலிருந்து பல்வேறு உலக மொழிகளுக்கும் நூல்களைக் கொண்டுசெல்லும் அயல் பதிப்பாளர்களுக்கான உலகளாவிய மொழிபெயர்ப்பு நல்கைத் திட்டம், திமுக அரசால் பன்னாட்டுப் புத்தகச் சந்தையோடு இணைக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழ் நூல்கள் பன்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

நூலகங்கள் புத்தகங்களை அடுக்குமிடம் அல்ல, அவை சமூக சமத்துவத்திற்கான குறியீடுகள். கடந்த ஆட்சிக்காலத்தில் நூலகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெரும் நிதி முதலீடு செய்யப்பட்டது. தென் தமிழக மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்கும் பொருட்டு மதுரையில் சுமார் 2.12 லட்சம் சதுர அடி பரப்பளவில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் அதிநவீன நூலகம் திறக்கப்பட்டது.

ஊரக, நகர்ப்புற மாணவர்களின் வாசிப்புத் தேவையை நிறைவு செய்ய அண்மையில் ஒரே கட்டமாக ரூ.39.33 கோடி செலவில் 146 புதிய நூலகக் கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன. மேலும், கள்ளக்குறிச்சி நகரில் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவை வரவேற்கப்பட வேண்டிய பண்பாட்டு நடவடிக்கைகள்.

அதிகாரப் பரவலாக்கத்தின் அடுத்த கட்டம், ஒரு சமூகத்தின் அரிய வரலாற்று ஆவணங்கள் சாமானிய மனிதருக்கும் ஆய்வாளருக்கும் தடையின்றி எட்டக்கூடியதாக மாற்றுவது. அந்த வகையில், தமிழ் இணையக் கல்விக்கழகம் வெறும் தொழில்நுட்ப அமைப்பாகச் செயல்படாமல், தமிழின் அறிவு வேர்களைக் காக்கும் முதன்மை அரணாக மாறியது. காலக் கோலத்தாலும் முறையான பராமரிப்பின்றியும் அழிந்துபோகும் நிலையிலிருந்த பல்லாயிரக்கணக்கான பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், அசைக்க முடியாத வரலாற்று ஆவணங்கள் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன.

இதன் உச்சகட்டமாக, தமிழ்ச் சிந்தனை மரபிலும் உலக அறிவியல்-இலக்கியப் பரப்பிலும் பெரும் தடம் பதித்த ஆளுமைகளான மகாகவி பாரதியார், புதுமைப்பித்தன், கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஆகியோரின் கையெழுத்துப் பிரதிகளும், அவர்களின் தனிப்பட்ட கடிதங்களும் நுணுக்கமாக ஆவணப்படுத்தப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. இது சிதறிக் கிடக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் எவ்விதக் கட்டணமு மின்றித் தங்களின் கைப்பேசி வழியே அணுகக் கிடைத்த அறிவுப் பெட்டகமாகும்.

பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் நிறுவனமாக இருந்த கல்விக்கழகம், தமிழ்நாடு அரசுப் பதிப்பகமாக உருவெடுத்தது. தீவிரமான கல்விப்புல ஆய்வுகளையும் பொதுவெளிக்குக் கொண்டுவரும் நோக்கில், பல புதிய ஆய்வு நூல்களை அரசு வெளியிட்டது வரவேற்கத்தது.

இக்கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பண்பாட்டுப் பணிகள் மூன்று பிரிவுகளாக விரிவடைந்தன. வணிகப் பதிப்பகங்களால் கைவிடப்பட்ட, காலப்போக்கில் அச்சு வடிவில் கிடைக்காமல் மறைந்துபோன தமிழின் செவ்வியல் நூல்களை மீட்டெடுக்கும் அரும்பணியை இக்கழகம் செய்தது. ‘நாளைய தலைமுறையினருக்கு நாட்டுடைமை நூல்கள்’ என்ற வரிசையில் பெரியாரின் வாழ்வியலைச் சொல்லும் ‘தமிழர் தலைவர்’, மகாகவியின் வரலாற்றைப் பேசும் ‘பாரதி நினைவுகள்’, ‘பாரதியார் சரித்திரம்’, ‘என் குருநாதர் பாரதியார்’, தமிழின் சிற்றிதழ் இயக்க வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’ போன்ற நூல்கள் வெளிவந்தன. காந்தியின் தமிழகப் பயணங்களை விவரிக்கும் ‘தமிழ்நாட்டில் காந்தி’, மயிலை சீனி வேங்கடசாமியின் ‘சமணமும் தமிழும்’, ‘பௌத்தமும் தமிழும்’, ‘கிறித்துவமும் தமிழும்’ போன்ற அரிய வரலாற்றுப் பதிவுகளும் மறுபதிப்பு செய்யப்பட்டன. இவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவரவும் தமிழ்நாடு அரசு ஆவன செய்தது. சங்க இலக்கியங்களை இன்றைய வாசகர்களும் வாசிக்கத் தூண்டும் வகையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பனுவல்கள் எளிமையான உரையுடன் வெளியிடப்பட்டன.  இந்தச் சங்க இலக்கிய உரைகள் அனைத்தும் தேர்ந்த உரையாசிரியர்களைக் கொண்டு எழுதப்பட்டவை. மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த நூல்களைப் புத்தகக் கண்காட்சிகளில் பலரும் விரும்பி வாங்கிச் சென்றனர். அம்பேத்கரின் எழுத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ‘அம்பேத்கர் ஆக்கங்கள்’ என்ற தலைப்பில் 17 தொகுதிகளாக மிகக் குறைந்த விலையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

மூத்த வரலாற்று அறிஞர்கள் எழுதிய தமிழ்நாட்டு வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பொருட்டு, ‘பல்லவர் வரலாறு’ சிந்துவெளி நாகரிகத்தின் திராவிடத் தொடர்பை நிறுவும் ‘மொகஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்’ ஆகிய மிக முக்கிய ஆய்வுப் படைப்புகள் மீண்டும் அச்சேற்றப்பட்டு வரலாற்று ஆர்வலர்களின் கைகளுக்குக் கொண்டுசேர்க்கப்பட்டன.

அறிவியல், வரலாறு, தத்துவம், உளவியல், பொருளியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அறிவைத் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பெற வேண்டும் என்ற நோக்கில் பாடநூல் கழகம் ஏற்கெனவே வெளியிட்டிருந்த அகராதிகள், நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. 

சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 100 சிறார் நூல்களை வெளியிடும் இலக்குடன் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ‘ஆதியும் நடேசன் தாத்தாவும்’, ‘பூத்த சிறகுகள்’ உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.

உலகமயமாக்கப்பட்ட சூழலில் எளிய பின்னணியைச் சேர்ந்த அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வியையும் உலக இலக்கியத்தையும் தங்கள் மொழியில் எளிதாகப் புரிந்துகொள்ள இத்திட்டம் அவசியமாக இருந்தது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை உலகத்தரம் வாய்ந்த மாற்று சினிமாக்கள், சிறுவர் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அது குறித்த விவாதங்களும் நடத்தப்பட்டன. இது மாணவர்களின் உலகப் பார்வையை விரிவாக்கக்கூடியது.

மாதிரிப் பள்ளிகளில் தவில், நாதஸ்வரம், பறையாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்ற பாரம்பரியக் கலைகளைப் பயிற்றுவிக்க நாட்டுப்புறக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். அரசு நடத்திய ‘கலைத் திருவிழா’ போட்டிகளில் பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் விளிம்புநிலையில் உள்ள கலை வடிவங்களுக்கு அரசின் அங்கீகாரமும் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமும் கிடைத்தது.

இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுத வேண்டும் என்ற முழக்கத்திற்கு வடிவம் கொடுத்தது கீழடி அகழாய்வுப் பணிகள். சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் சுமார் 18.43 கோடி ரூபாய் மதிப்பில் செட்டிநாட்டுப் பாரம்பரியக் கட்டடக் கலையில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த அருங்காட்சியகம் வைகைக்கரை நாகரிகத்தின் தொன்மையைப் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

24 மொழிகளில் கீழடி குறித்த தரவுப் புத்தகங்கள் வெளியிடப்பட்டு, தமிழ் பிராமி எழுத்துக்கள், நகர நாகரிகத்தின் சான்றுகள் உலகறியச் செய்யப்பட்டன.

சாகித்திய அகாதெமி போன்ற உயரிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அரசு சார்பில் வீடு வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டமும் செயல்படுத்தப்பட்டது.

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம், காலம் காலமாக குறிப்பிட்ட சமூகத்தின் வசம் இருந்த கோவில் கருவறை அதிகாரத்தைப் பரவலாக்கி, சமூக நீதியை ஆன்மிகத் தளத்திலும் நிலைநாட்டியது.

அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறலாம்; மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் அறிவுசார், பண்பாட்டுக் கட்டமைப்புகள் முடக்கப்படக் கூடாது. தற்போது அமைந்திருக்கும் புதிய அரசு, கடந்த அரசின் இத்தகைய நற்பணிகளைக் காய்தல் உவத்தல் இன்றி அணுக வேண்டியது கட்டாயமாகும்.

சமூக நீதி தொடர் சங்கிலி போன்றது. முந்தைய அரசு போட்ட பாதையை அடுத்த அரசு இன்னும் செப்பனிட வேண்டும்; மேம்படுத்த வேண்டும். அவ்வாறே அணுகுவோம் என்று புதிய தவெக அரசு அறிவித்துள்ளமை நம்பிக்கை அளிக்கிறது.

மாவட்டப் புத்தகக் கண்காட்சிகள், பன்னாட்டுப் புத்தகத் திருவிழாக்கள், பாடநூல் கழகத்தின் நூல் வெளியீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகத்தின் உலகளாவிய அடையாளமாகக் கருதி, தொடர வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் திரைப்படத் திரையிடல், கலை விழாக்கள் சீரமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் போதிய நேரமும் நிதியும் வழங்கி இன்னும் திறம்பட நிர்வகிக்க வேண்டும்.

அண்ணா நூற்றாண்டு நூலகமும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் எவ்வாறு எளிய மாணவர்களின் புகலிடங்களாக இருக்கின்றனவோ, அதேபோலப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 146 நூலகங்களும் செயல்பட வேண்டும். இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுத் தடையற்ற முறையில் நூல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். போதிய நிதியும் வழங்கி, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

பண்பாடும் கல்வியும் நாட்டின் முதுகெலும்பு. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அறிவுப் பரவலாக்கத்தை மென்மேலும் விரிவுபடுத்த தவெக அரசும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.

த. உதயசந்திரன் நேர்காணலுக்குக் காண்க:  

https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/226/search/articles/18-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%A4.%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.