தீ இனிது

ஓவியம்: நரசிம்ம பாலாஜி
தீவைக்கக் குமரேசன் கிளம்பியபோது மூர்த்தியும் வந்து சேர்ந்துகொண்டான்.
மட்ட மத்தியான வெயில் தலை தீய்த்துக் கொளுத்தியது. பக்கத்து ஊரில் பெரிய காரியத்திற்குப் போக வேண்டியிருந்த அம்மாவுக்கு வெயில் உறைக்கவில்லை. ஊளையைச் சிந்திச் சிந்திப் போட்டுக் கட்டியழுவதில் ஆர்வம். ஒப்பாரியில் ஐந்தாறு பாட்டும் தெரியும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொன்றை எடுப்பார். ‘வாசலிலே காசரளி தானே இன்னைக்கிப் பாடுன’ என்று அம்மா பாடிய பாட்டைச் சரியாக ஊகித்து அப்பன் கேலி செய்வார். வெயிலில் போக இன்னொரு காரணமும் உண்டு. இப்போது போனால் மாடு பால் பீய்ச்சும் நேரத்திற்குத் திரும்பி வந்துவிடலாம் என்பது கணக்கு. மாட்டை வைத்துத்தான் தன் வேலைகளை எல்லாம் அம்மா தீர்மானிப்பார். மாட்டுக்கு முன் வெய
