பெருங்கடலில் சிற்றோடம்
சிறுபத்திரிகைகள் நவீனத்துவத்தின் ஊடகமாகத் தொடங்கியவை. கலக மனோபாவத்தைக் கைக்கொண்டு, இலக்கியத்திலும் கலைகளிலும் நிறுவப்பட்ட வற்றுக்கு எதிரான சமரைப் புரிவது அவற்றின் ஆதார குணம். புதிய சிந்தனையை, புதிய குரல்களைக் கிளர்ச்சியுடன் முன்வைப்பது அவற்றின் வெளிப்பாட்டு முறை. அனைத்து மொழிகளிலும் முன்பின்னாக நிகழும் அவற்றுக்கு உலகளாவிய பொது இயல்புகள் உண்டு:
அ. வாசக ரசனைக்கு ஏற்றவற்றை மட்டுமே பிரசுரித்து, புதுவகை எழுத்தைப் புறக்கணிக்கும் வணிக இதழ்களின் போக்குக்கு மாற்றாக தரமான வாசகர்களை வரையறுத்துக் கண்டடைதல்.
ஆ. பொதுப்புத்தியில் படிந்துவிட்ட கருத்துக் களையும் எழுத்து முறைகளையும் துறத்தல்.
இ. பொருட்படுத்தக்கூடிய புது எழுத்தை/ எழுத்தாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தல். (பின்னாளில் அவர்கள் புகழ் பெறலாம் / பெரிய பத்திரிகைகளில் எழுதலாம்.)
ஈ. லாப நோக்கு அறவே இல்லாமை.
உ. மொழிபெயர்ப்புகளுக்கு இடமளித்துச் சர்வதேசத் தன்மையைப் பெற்று இலக்கியம் பொது, மொழி மாறலாம் என்னும் கருத்தாக்கத்தை உருவாக்குதல்.
ஊ. உலகெங்கும் உருவாகும் நவ சிந்தனைகளை/ எழுத
