காற்றில் உந்தன் கீதம்...
அதிகாலை எழுந்ததும் என் அம்மாவின் முதல் பழக்கம், தன்னிடமிருந்த சிறிய டிரான்ஸிஸ்டரைத் திருகிப் பாட விடுவதுதான். அதிகாலை தொடங்கி இரவு உறக்கம் வரும்வரை பாடல்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பல நேரம் உறங்கிய பின்னும் ரேடியோ சன்னமாக ஒலித்துக்கொண்டிருப்பதை உறக்கத்திலும் உணர முடியும். இப்படியாக என் சிறுமிப் பருவம் முழுக்கப் பாடல்கள் கேட்டபடிதான் கழிந்தது. அப்போது தொற்றிக்கொண்ட அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. என் வீட்டிலும் நாள் முழுக்க ரேடியோ பாடியபடிதான் இருக்கும். பிள்ளைகளும் கணவரும் கேலி செய்தாலும் மாற்ற முடியாத பழக்கம் அது.
பெண்குரல்களில் என்னை அதிகம் கவர்வது எஸ். ஜானகிதான். எழுபது, எண்பது, தொண்ணூறுகளில் அதிகம் கோலோச்சியது ஜானகிதான் எனினும் அவர் குரல் நம்மைக் கவர்வதற்கு அதிக எண்ணிக்கை மட்டுமே காரணமில்லை. மாறாக, குரலில் அவர் காட்டிய மாயாஜாலமே அதற்குக் காரணம். நீரில் சிந்திய எண்ணெய்த் துளி வர்ணஜாலம் காட்டுவதுபோல, ஜானகியின் குரலில் ஒவ்வொரு பாடலும் தனித்தன்மையோடு திகழ்ந்தது.
ஒருநொடி நின்று திரும்பிப் பார்த்தால் மலைப்பை உண்டாக்குகிறது. எத்தனையெத்தனை காதலிகளுக்காகப் பாடியிருக்கிறார். அவரது குரல்தானெனினும் அந்தப் பாடல்களில் பிரத்தியேகமான காதலிகளையும் நாயகிகளையுமே கண்டோம். ‘அன்னக்கிளி’ காதலியின் ஏக்கமும் தாபமும் இன்றளவும் தீர்க்க முடியாதவை. ‘நதியில் ஆடும் பூவன’த்தில், கண் தெரியாத காதலன் முன் நீரில் அளைந்தபடி பாடுவதெனினும் நாயகியின் வெட்கமும் நாணமும், மனதைக் கொள்ளை கொள்ளும். ‘ராசாவே உன்னை எண்ணி இந்த ரோசாப்பூ காத்திருக்கு’ பாடலில் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் காதலியின் மனதை ஜானகி அழகுற வெளிப்படுத்தியிருப்பார். ‘சின்னச் சின்ன வண்ணக்குயிலில்’, காதலிக்கத் தொடங்கியிருக்கும் இளம் மனைவியின் ஆசை நெஞ்சம் வெளிப்படும். ‘அவர்கள்’ திரைப்படத்தில் வரும் இரண்டு பாடல்கள் எனக்கு விருப்பமானவை. அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்: “காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி” என்ற பாடலும் “இப்படி ஓர்் தாலாட்டுப் பாடவா... அதில் அப்படியே என் கதையைக் கூறவா” என்ற பாடலும். இரண்டும் ஒரே நாயகியால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடப்படுபவை. “காற்றுக்கென்ன வேலி”யில், இன்னும் எந்தக் கூட்டுக்குள்ளும் சிக்காத விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகடிப்பு. இரண்டாவது பாடலிலோ, வாழ்வு காலிலே கட்டிவிட்ட இரும்புக் குண்டுகளை இழுத்துக்கொண்டு சுமை தாங்க முடியாமல் நடக்கும் பெண்ணின் தேய்ந்த நடை. கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு அந்தப் பாத்திரங்களைத் தன் குரலில் பிரதிபலிப்பதை ஜானகி ஒரு தவம்போல அதே சமயம் அவருக்கே உரிய திறனால் அநாயாசமாகச் செய்திருப்பார். மனதைப் பிசையும் இன்னொரு பெண்குரல், ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம், நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்’ என்ற பாடல், ‘நிழல்கள்’ படத்தில் வருவதாக இருந்தது. ஆனால் திரைப்படத்தில் பாடல் இடம்பெறவில்லை. இதன் தெலுங்கு மொழிப் பாடலுக்காக ஜானகி தேசிய விருது பெற்றார். எனினும் ஜானகியின் அற்புதமான தமிழ்ப் பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு. ‘மேகம் மறைந்த வானில் தனிமை இன்று நான கண்டதுண்மையே’ என்ற வரியில் ஒலிக்கும் ஜானகியின் குரலின் பாவம், இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து மலையுச்சியில் நொச்சிப் பூ உதிரும் ஓசையைக் கேட்டபடி தனிமையில் கரைந்திருக்கும் காதலியினுடையது.
‘பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க’, இந்தப் பாடல் இடம்பெற்ற ‘உயிரே உனக்காக’ திரைப்படத்தைத் திருச்சியில் பார்த்தேன். மிகவும் மலர்ச்சி தரும் பாடல். அந்த வருடத்தோடு நாங்கள் பாட்டியின் வீட்டிற்குத் திருச்சி வருவதும் நின்று போனது. இரட்டைச் சடையுடன் மகிழ்ந்து திரிந்த என் பதின்பருவம் அந்தப் பாடலில் உறைந்து போனது. பின் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் போல , இந்தப் பாடலைக் கேட்கும்தோறும் பாட்டி வீட்டின் இனிய நினைவுகளும் வந்துபோகும். என் கற்பனைக் காதலனுடன் காலை நடையின்போது பாடுவதாக எப்போதும் கற்பனை செய்துகொள்வது ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாடலைத்தான். மிகுந்த புத்துணர்வைத் தரும் பாடல்.
கடற்கரையில் அந்தி மயங்கும் வேளையில் உலவுவதாய்க் கற்பனை செய்கையில் ‘இது மௌனமான நேரம், இளமனதில் என்ன பாரம்’ பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் ஜானகியின் குரல், புலரியில் பவளமல்லி மரத்தினடியில் நிற்பதுபோலக் கிறக்கம் தருவது. அந்தி சாயும் வேளையில் மகிழ மரத்தடியில் நின்று பார்த்தவர்களுக்குப் புரியும், இருள் சூழும்போது அந்த மரம் செய்யும் மாயம், ஒவ்வொன்றாக, லேசான பழுப்புக் கூடிய வெண் மகிழ மலர்கள் விழத் தொடங்கும், கூடவே சுகந்தமும், கொஞ்சநேரத்தில் அந்த இடம் விண்ணை ஒத்ததாக மாறும். ஜானகி, தன் எத்தனையோ பாடல்களில் இதைச் செய்திருக்கிறார். குறும்பும் தாபமும் காதலும் ஏக்கமும் நிறைந்த அந்தப் பாவங்களை அழகுற வெளிப்படுத்திய எத்தனையோ பாடல்கள் உண்டு.ஒவ்வொருவருக்கும் ரசனைப்படி பாடல்களின் பட்டியல் மாறலாம்.
வண்ணக் கலவைகளைத் தன் குரலால் தெளிக்கும் ஜானகியின் குரல், ஹோலி பண்டிகையின் வண்ணநீர்த் தெளிப்பானை ஒத்தது. ‘பொன்மானே சங்கீதம் பாடிவா’ என்ற பாடலில் ஆலாபனை செய்யும் ஜானகியின் குரலில் இளநீல வர்ணமும் மரகதப் பச்சையும் சேர்ந்து காண்பதாய்க் கற்பனை செய்துகொள்வேன். அந்திவான இளஞ்சிவப்பு (ஒரு பூங்காவனம் புது மணம்) கொன்றையின் மஞ்சள் (அழகிய கண்ணே), புது நாற்றின்பச்சை (பொத்தி வைச்ச மல்லிகை), கடல் அலையின் நுரைப்பூ வண்ணம் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்), இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். உண்மையில் காற்றில் தவழும் இளங்கொடியின் நுனிச் சுருளின் இலாவகம் கொண்டது ஜானகியின் குரல் என்பதே என் துணிபு. இனிவரும் காலங்களிலும் இந்த இளங்கொடியின் காற்று நடனம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கப்போகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்கம், ஒரியா, ஆங்கிலம், சமஸ்கிருதம், கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, படுக மொழி, ஜெர்மன் எனப் பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள். ஐம்பது வருடங்கள் நீண்ட கலைப் பயணம். பற்பல மாநில விருதுகள், தேசிய விருதுகள் எனஅயராத கலை வாழ்வு ஜானகியினுடையது. நினைவுப் பெட்டகமாக என்றும் நம்முடன் கலந்திருக்கும் அந்த இனிய குரல்.
மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com
