தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு

அதிகாரமும்
தமிழ்ப் புலமையும்
(தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)
ந. கோவிந்தராஜன்
வெளியீடு:
க்ரியா பதிப்பகம்
சென்னை
தொடர்புக்கு: 72999 05950
ரூ. 280
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் என்று கேட்டால் பலரும் ஜி.யூ. போப் என்பார்கள். ஆனால் நதேனியல் எட்வர்ட் கைண்டஸ்லி (Nathaniel Edward Kindersley) என்பவரே திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். யார் அவர், ஏன் அவர் அவ்வளவாக அறியப்படாமல் இருக்கிறார், மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளிலிருந்து அவருடையது எவ்வாறு வேறுபட்டுத் தனித்துவம் பெற்றுள்ளது, ஆய்வுக் களங்களில் ஏன் அவருக்கு அதிக இடம் தர வேண்டும் போன்ற கேள்விகளை ந. கோவிந்தராஜன் எழுப்பி அவற்றுக்கான விடைகளை ‘அதிகாரமும் தமிழ்ப் புலமையும்’ என்ற தன்னுடைய தமிழ் ஆய்வு நூலில் தேடுகிறார்.
‘க்ரியா’ வெளியீடான இந்நூல் பல அரிய, புதிய செய்திகளை நமக்குத் தருகிறது. அதை உலகளாவிய ஆங்கில வாசகர்களுக்காக சி.டி. இந்திரா, பிரேமா ஜெகன்னாதன் இருவரும் லண்டன் Routledge பதிப்பு நிறுவன வெளியீடாக ‘Colonial Authority and Tamil Scholarship’ என்று ஆங்கில மொழிபெயர்த்துள்ளார்கள்.
18ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்துசேர்ந்த பிரித்தானியக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியார் காலப்போக்கில் பல இந்திய நிலப்பரப்புகளில் தங்கள் காலனிய ஆட்சி அதிகாரத்தை நிறுவினர். அவற்றின் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் தங்கள் முக்கியப் பணியாக நில வகைகள், வளங்கள், அளவீடுகள், இந்திய நிர்வாக - சட்ட அமைப்புகள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள் போன்ற பல களத் தகவல்களை நேரடியாகச் சேகரித்து ஆவணப்படுத்தினார்கள்.
கல்கத்தாவுக்கு ஆங்கில நீதிபதியாக வந்த வில்லியம் ஜோன்ஸ் (William Jones) சமஸ்கிருதத்தை மிகக் குறுகிய காலத்தில் கற்று விற்பன்னர் ஆனார். அம்மொழி பற்றிய பல ஒப்பியல் ஆய்வுகளை மேற்கொண்டார். சமஸ்கிருதம் இலத்தீனத்தைவிட உயர்ந்த, வளமான, செம்மையான மொழி என்ற பார்வையை மேலை உலகத்துக்கு அறிமுகம்செய்தார். அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த காளிதாசரின் செவ்விலக்கியமாகிய ‘சாகுந்தலம்’ உலகளாவிய புகழ்பெற்றது.
அவருக்குப் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சென்னை மாகாண அதிகாரியாக வந்த ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மொழியான தமிழையும் பிற மொழிகளையும் கற்றார். அதற்கும் மேலாக, ‘தென்னிந்திய மொழிக்குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தினார். சான்றுகளும் தந்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் பெரும் புலமையுடன் மொழிபெயர்த்தார். ஜோன்ஸ், எல்லிஸ் போன்ற ஆங்கில அதிகாரிகள் அந்தந்த மூல மொழிப் பண்டிதர்களையும் விஞ்சும் வகையில் உயர்வழக்குச் செவ்விலக்கிய, செம்மொழி ஆய்வுப் பங்களிப்புகளைச் செய்தார்கள்.
வில்லியம் ஜோன்ஸின் சமகாலத்தில் தமிழகத் தென்னாற்காடு மாவட்ட ஆங்கில நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர்தான் நதேனியல் எட்வர்ட் கைண்டஸ்லி. ஆனால் கைண்டஸ்லி எந்த ஆரவாரமும் இல்லாமல், எந்தக் கவனத்தையும் ஈர்க்காமல், ஒரு முக்கியப் பங்களிப்பைச் செய்தார். இதுவரை பார்வைக்கோ ஆய்வுக்கோ எடுத்துக்கொள்ளப்படாத பாமர மக்களின் எளிய நாட்டார் தமிழ் இலக்கிய, பண்பாட்டு மரபின் சில கூறுகளை அவர் முதன்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தார்.
‘ஹிந்து இலக்கிய மாதிரிகள்’ (Specimens of Hindoo literature) என்ற தலைப்பில் லண்டனில் 1794ஆம் ஆண்டு ஒரு நூலாக வெளியிட்டார். மேலை உலக சராசரி ஆங்கில வாசகர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்துவைத்தார். அக்கூறுகள்: 1) இந்து தெய்வங்கள், பாமரத் தமிழ் மொழி பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் 2) ‘திருவள்ளுவர் குறள் அல்லது ஞானக் கடல்’ என்ற தலைப்பில் குறளின் சில அதிகாரங்கள் 3) ‘நள ராஜா வரலாறு: ஒரு இந்து காதல் கதை’ என்ற தலைப்பில் நளன் – தமயந்தி கதை 4) மதுரை புது மண்டபச் சிற்பங்கள் சிலவற்றின் கோட்டு ஓவியங்கள், சிறு விளக்கங்கள்.
நாட்டுப்புறப் பாமர வழக்கு வாய்மொழிக் கதை களின் பாரம்பரியம் நகர்ப்புற எழுத்துமொழி உயர் வழக்கு இலக்கியப் பாரம்பரியத்தை விடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொன்மையானது. பின்னது முன்னதிலிருந்து தோன்றியதே என்ற மறுக்க முடியாத பார்வை உள்ளது. பண்டைக்காலங்களில் விழாக் கொண்டாட்ட இரவு நேரங்களில் பொது வெளிகளில் ‘கதைசொல்லிகள்’ வாய்மொழிக் கதைகளை உடுக்கை அடித்து உரத்த குரலில் கூறுவது வழக்கம். பாமர மக்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இருந்ததால் அக்கூறல்கள் பெருந்திரளாகக் கூடிய பாமர மக்களை மகிழ்வித்தன. அறநெறிகளைப் போதித்து, வாழ்வித்தன. சமணர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இப்பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தது. இன்றும் தமிழகத்தின் சில கிராமப்புறங்களில் இப்பழக்கம் தொடருகிறது.
ஆனால் ஆன்றோர்களின் அவையேறும் தகுதியையும் பண்டிதர்களின் மதிப்பையும் பெறாமல், எழுத்து வடிவம்கூட இல்லாமல், அது விளிம்பு நிலையிலேயே ஆனால் மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்துவந்தது. அதன் பல வாய்மொழிப் பதிவுகளின் சில கூறுகளே எச்சங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன. மற்றவை கிடைக்காமல் போயின. 1960களில் மதுரைப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் தமிழறிஞர் தெ.பொ.மீ. தமிழ் இலக்கியத்தின் இரு ஓடைகளில் ஒன்றாக வாய்மொழிப் பாரம்பரியத்தைக் கருதினார். அவற்றில் சிலவற்றைப் பல்கலைக்கழக அச்சு வடிவ ஆவணங்களாக வெளியிட்டார். இன்று நாட்டாரியல் பல பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களிலும் ஆய்வுகளிலும் மதிப்புமிக்க அங்கமாக இடம்பெற்றுள்ளது.
என்ன செய்கிறோம் என்று காலனிய ஆங்கில அதிகாரி கைண்டஸ்லி அறியவில்லை. ஒரு கருத்தாக்கமாகக்கூடத் தன்னுடைய பங்களிப்பைக் கருதவில்லை. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய கல்விப்புலத்தில் புதிய போக்கின் தொடக்கப் புள்ளியை அவர் வைத்தார். ‘வழுக்கள்’ நிறைந்த ‘பாமரத் தமிழ் வாய்மொழி வசன உரைகளை’ மூலமாகக் கொண்டார். அவை ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உகந்தவையா என்று யாரையும் கேட்கவில்லை. அவற்றை அப்படியே ஆங்கிலத்தில் கொண்டுசேர்த்தார். எனவே தமிழின் நாட்டார் மொழி இலக்கிய மரபை முதன்முதலில் ஆங்கில மொழிபெயர்ப்புக்காகக் கையில் எடுத்தவர் கைண்டஸ்லி. அவரின் முக்கியப் பங்களிப்பைத் தன்னுடைய ஆய்வு நூலில் கோவிந்தராஜன் மையப்படுத்துகிறார்.
தமிழ் மூல ஆய்வு நூலின் வரலாற்று, சமூக, பண்பாட்டுச் செறிவுகள், வளங்கள், மொழிப் பயன்பாட்டு ஆழங்கள்பற்றி ஆங்கில மொழி பெயர்ப்பு நூலின் வாசகர்கள் பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வாசகர்களுக்கு வேண்டிய அனைத்து வாசிப்பு உதவிகளையும் தருவது மொழிபெயர்ப்பாளரின் தலையாயக் கடமை. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்கள் அக்கடமையைச் சிறப்புறச் செய்துள்ளார்கள். ஒரேயொரு எடுத்துக் காட்டாக, மூல நூலின் தலைப்பு: ‘அதிகாரமும் தமிழ்ப் புலமையும்.’ எக்காலத்து அதிகாரம், யாருடைய அதிகாரம், எப்படிப்பட்ட அதிகாரம் போன்ற கேள்விகளுக்கு மூலத் தலைப்பில் தகவல் இல்லை. மொழிபெயர்ப்பு நூலின் தலைப்பு: ‘Colonial Authority and Tamil Scholarship.’ மேலே கேட்ட கேள்விகளுக்கான தகவல்கள் மொழிபெயர்ப்புத் தலைப்பில் ஓரளவு கிடைக்கின்றன.
மூல நூலின் ஆய்வுகள்பற்றி மட்டுமல்லாமல், மேலதிகச் சில ஆய்வுக் கேள்விகளையும் தன்னுடைய முன்னுரையில், சி.டி. இந்திரா முன்வைக்கிறார். வாசகர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான பின்குறிப்புகளும் கலைச்சொல் விளக்கக் கோவையும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. மூலம், மொழிபெயர்ப்பு ஆகிய இரு நூல்களும் தலைப்பைப் பற்றிய நல்ல அறிமுக நூல்களாக உள்ளன. ஆழமான ஆய்வுகளுக்கு வழிகாட்டும் நூல்களாகவும் உள்ளன.
மின்னஞ்சல்: raajan.kt@gmail.com
