ஒளியில் நிலைத்தல்
செழியன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், ‘திரைப்படக் கலை’ ஆசிரியர், இசைப்பள்ளி நடத்திய இசைக்கலைஞர் எனப் பன்முகங்களில் அறியப்பட்டவர். இவை ஒவ்வொன்றையும் ரசனையில் தொடங்கியவர். எதை ரசித்தாரோ அதைக் கற்றும் கொண்டார், கற்றும் கொடுத்தார். தன்னிடம் பழகிய எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் நம்பிக்கைத் தந்துகொண்டிருந்தவர். திரைப்படத் துறையில் எல்லாமே கிடைத்துவிடும், நம்பிக்கை ஒன்றைத் தவிர. அதை ஒருவர் தருவார் என்றால், அவர் எல்லோருக்குள்ளும் அசையா இடம் பெற்றவராகிறார்.
சிவகங்கையிலிருந்து சென்னை வரும்போது செழியனுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாவில் இணைந்துகொள்ள முடியும் என்பதுதான். சிவகங்கையில் அப்பத்தாவுடன் இரவுகளில் காற்று கொண்டுவரும் திரையரங்கின் வசனங்களையும் பாடல்களையும் கேட்டபடி தூங்கி எழுந்த பால்ய வயதில் திரைப்பட ஈர்ப்பு தொடங்கியிருக்கிறது. மதுரையில் திரைப்பட இயக்கங்கள் வழியாக ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தைப் பார்த்தபோது இப்படியான படங்களும் எடுக்க முடியுமென அறிந்துகொள்கிறார். நண்பர்களுடன் நாடகங்கள் எழுதுவது, மேடையேற்றுவது எனச் சினிமாவுக்குள் வரப்போகிற இளைஞர்களின் அத்தனை செயல்பாடுகளையும் முன்னெடுத்திருக்கிறார். அப்பா ஓவியர். அம்மாவுக்குப் பாடுவதில் விருப்பம். அப்பா வரையும்போது அருகிலிருந்து பார்த்ததும், அம்மா பாடுகிறபோது கேட்டதும் அவரைக் கலைஞனாக்கியிருக்க வேண்டும்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றினார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேவை என்றபோது பலரும் அதற்கு விண்ணப்பித்துத் தாம் எடுத்திருந்த காட்சிகளை அனுப்ப, செழியன் அனுப்பியதை பாலாஜி சக்திவேல் தேர்ந்தெடுத்தார். ‘கல்லூரி’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘ஜோக்கர்’, ‘ரெட்டைச்சுழி’ என நிதானமாகத் தேர்ந்தெடுத்துப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
இரானியப் படங்கள்மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்கள் அவரை வெகுவாக ஈர்த்திருந்தன. திரைப்படமென்பது திட்டமிட்டு எழுதி இயக்கக்கூடிய ஒன்றுதான்; என்றாலும், இயல்பான காட்சிகளோடு நம் கண் முன்னே திரையில் பார்க்கும் வாழ்வியலில் நாமும் அங்கமாக மாறும் பாணியை ஈரானியப் படங்களின் பாதிப்பிலிருந்து பெற்றுக்கொண்டிருந்தார். செழியனின் ‘டு லெட்’ படத்தில் இந்தப் பாணியைப் பார்க்க முடியும். வாடகைக்கு வீடு தேடி அலையும் குடும்பத்தைப் பற்றிய கதை அது.
டுலெட் படம் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டது. செழியனும் அவரது மனைவி பிரேமாவும் சேர்ந்து தயாரித்தார்கள். படத்தைத் தயாரிக்கையில் பொருளாதாரம் சுமையாக இருந்தாலும் குறைந்த முதலீட்டில் தரமான படத்தைத் தர முடியும் என்று நிரூபித்தார். நம்முடைய கதைகளைச் சொல்கிறபோது அது உலக சினிமாவாகிறது என்பதைக் காட்டும் படமாகவும் அது இருந்தது. படம் முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றது.
ஆனந்த விகடனில் ‘உலக சினிமா’த் தொடரை செழியன் இரண்டு வருடங்கள் எழுதினார். வாரத்திற்கு ஓர் உலகத் திரைப்படம். ஒரு படம் குறித்து எழுத வேண்டும் என்றால், குறைந்தது பத்து படங்களையாவது பார்த்து அதிலிருந்து தேர்ந்தெடுத்து எழுதுவது சவாலானது; அந்தந்த நாட்டின் அரசியல் கலாச்சாரப் பின்புலங்களையும் விளக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகக் கையாண்டதால் தொடர் பெரும் வெற்றி பெற்றது. உலகத் திரைப்படங்கள் பற்றித் தமிழக மக்கள் வாரந்தோறும் படித்ததோடு, தேடி வாங்கிப் பார்க்கவும் தொடங்கினார்கள். வெகுஜனங்களுக்கு மஜீத் மஜீதி, பெர்னார்டோ பெட்ருலுச்சி போன்ற இயக்குநர்கள் அறிமுகம் ஆனார்கள். இப்போதுவரை செழியனின் அடையாளமாக இந்தத் தொடர் நிலை பெற்றிருக்கிறது.
ஒளிப்பதிவைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அதனை அடிப்படையாகக் கொண்டே இயக்குநர் தனது கதைக்கான ஒளிப்பதிவாளரைத் தேர்ந்தெடுக்கிறார். செழியனுக்கும் தனக்கென ஒரு பாணி இருந்தது. அவரைப் பொறுத்தவரை தனக்கான கதைகள் தன்னைத் தேடிவரக் காத்திருந்தார். திரைப்படங்களை இலக்கியப் படைப்பின் அங்கமென உணர்ந்திருந்தார். திரைக்கதைகள் இலக்கியத் தரமாகத் தகுதியுள்ளவை தான் என்பதில் அவருக்கு உறுதியான நிலைப்பாடு இருந்தது. காகிதத்தில் எழுதப்பட்ட திரைக்கதையைக் காட்சியாக மாறுகிறபோது அது அடுத்தடுத்த நிலையை அடைய வேண்டும். அதற்கு ஒளிப்பதிவு துணை நிற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர் ஒளிப்பதிவு செய்த படங்களில் அதை உள்வாங்கிக்கொள்ள இயலும்.
வாசிப்புப் பழக்கம் ஒளிப்பதிவாளர்களுக்கு அவசியமானது என்பதை வலியுறுத்தியவர். அவரது ‘ஒளியில் எழுதுதல்’ புத்தகம் ஒளிப்பதிவாளர்களுக்கு முக்கிய ஆவணம். ஏழு நீள் கட்டுரைகள் அதில் உண்டு. அவருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர்கள், ஒரு காட்சியை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் தயராக வேண்டும், இலக்கியத்துக்கும் ஒளிப்பதிவுக்குமான நெருக்கம், கேமராக்கள் குறித்த அவதானிப்பு எனத் திரைப்பட மாணவர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.
2004ஆம் ஆண்டு செழியன் எழுதிய ‘ஹார்மோனியம்’ கதைக்கு கதா விருது கிடைத்தது. எதையும் காட்சியாகவும் உணர்வாகவும் உள்வாங்குகிற ஒருவர் இசை குறித்து எழுதினால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணம் அந்தக் கதை. இசையின் மீது தீவிரப் பற்றும், ஆழ்ந்த ஞானமும் கொண்டவர். ஆனால் தான் இயக்கிய டுலெட் படத்தில் பின்னணிக்குக்கூட இசையைப் பயன்படுத்தவில்லை அது இயக்குநராகத் தன் கதைக்காக அவர் எடுத்த முடிவு.
செழியனின் மிகப் பெரும் பலம் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு எளிமைப்படுத்திக் கற்றுக் கொடுப்பது. ஒளிப்பதிவு, இயக்கம், திரைக்கதை அமைப்பது, இசை எனத் தான் பல வருடங்களாகப் பயிற்சிசெய்து கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களுக்கு எப்படி எளிமையாக்கித் தரலாம் என்று அவர் சிந்தித்ததன் விளைவுதான் இசைப்பள்ளியும். திரைப்பள்ளியும். (‘THE MUSIC SCHOOL, THE FILM SCHOOL.’)
மேற்கத்திய இசையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்; கற்றுக்கொள்ளவும் முடியும் என்பதற்காகப் பத்து தொகுதிகள் அடங்கிய பாடப் பயிற்சிப் புத்தகத்தினை எழுதியுள்ளார். ஒரு கதையை எப்படித் திரைக்கதையாக மாற்றுவது, அதை எப்படிக் குறைந்த செலவில் படமாக்குவது எனத் தொடர்ந்து பயிற்சி கொடுத்து வந்தார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் படமெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சினிமா மக்கள் கலையாக மாற வேண்டும் என்பது அவருக்கிருந்த ஆர்வம்; அதற்கு முன்னோடியாகவும் இருந்திருக்கிறார். கோடிக்கணக்கில் ஒரு படம் எடுத்துக் கடத்தும் உணர்வினைச் சில இலட்சங்களிலும் கடத்திவிட முடியும் என்பதைத் தனது மாணவர்களுக்குத் தான் தயாரித்து இயக்கிய படத்தின் மூலமாகவே காட்டியிருக்கிறார். திரைப்படத்தின் மீதான ஈர்ப்பில் இந்தத் துறை நோக்கி வரும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவதெல்லாம் தோளைத் தட்டிக் கொடுத்து நம்பிக்கைத் தருவதுதான். “உன்னுடைய கதையை, கற்பனையை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று சொன்ன மனித செழியன்.
ஒருவர் நம்மைவிட்டு நீங்குகையில் அவருடனான நமது உரையாடல்கள், எண்ணங்கள், விவாதங்கள், எதிர்காலக் கனவுகள் எல்லாவற்றையும் நாம் தனியே சுமக்க வேண்டியதாகிவிடும். செழியனைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் ஒவ்வொருவருக்கும் தொடக்கி வைத்துவிட்டு இனி நீங்கள் தொடருங்கள் என்று நம்பிக்கை தந்து சென்றிருக்கிறார். எதுவும் தடையில்லை என்பதைத் திரும்பத் திரும்பத் தன் செயலின் வழி காட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.
ஓர் ஒளிப்பதிவாளரை, இயக்குநரை, இசையாசிரியரை, நண்பனை, திரைப்பட ஆசிரியரை இழந்தததற்கும் அப்பாற்பட்டு, சினிமாவில் அபூர்வமாகத் தென்படும் மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைத்த ஒருவரைத்தான் நாம் இழந்திருக்கிறோம்.
மின்னஞ்சல்: deepaj82@gmail.com
