ஆகஸ்ட் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: தமிழ்
      பெருங்கடலில் சிற்றோடம்
    • திரை; ஹபீபி
      தமிழின் புதிய சலனம்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: இந்தி
      இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மராட்டி
      வார்ப்புகளுக்கு வெளியே
    • பதிவு
      சுதந்திரச் சுடரின் குரல்
    • சிறப்புப் பக்கங்கள்
      இந்தியச் சிற்றிதழ்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மலையாளம்
      புதிய பூக்கள் மலர்ந்தபோது...
    • அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)
      தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்
    • அஞ்சலி: எஸ். ஜானகி (1938-2026)
      காற்றில் உந்தன் கீதம்...
    • அஞ்சலி: செழியன் (1972 - 2026)
      ஒளியில் நிலைத்தல்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: வங்காளம்
      மரபை மீறும் வேட்கை
    • பத்தி இன்றும் என்றும் 4
      ஒரு தலைவர், ஓர் அமைப்பு சில அதிகாரிகள்
    • கதைகள்
      அருண்பாண்டியன் மனோகரன் கதைகள்
    • மதிப்புரை
      தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு
    • நேர்காணல்: இயக்குநர் மீரா கதிரவன்
      “நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்”
    • இந்தியச் சிற்றிதழ்கள்: கன்னடம்
      முடிந்துபோன அத்தியாயத்தை அசைபோடுதல்
    • அஞ்சலி: பூமணி (1947 - 2026)
      “அப்பிடிச் சொல்றீங்களோ!”
    • தலையங்கம்
      கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் 2026 தலையங்கம் கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி

கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி

தலையங்கம்
ஆசிரியர் குழு

தமிழகத்தில் ஊழலுக்கு அரண் சேர்க்கும் வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஊழலால் அரசாங்கத்தின் கஜானாவில் சில கோடிகள் குறைவதோடு இது முடிந்துவிடுகிறது என்கிற அளவிலேயே பொதுப்புரிதல் சுருக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒரு மேட்டுக்குடிக் கரிசனம் என்றும் பேசப்படுகிறது. மக்கள் ஊழலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஊழல் சமூக நீதியோடு பிணைக்கப்படுகிறது. அரசியல்வாதிகளும் சில புத்திஜீவிகளும் இத்தகைய பார்வையை வளர்த்து வருகிறார்கள். ஆனால், ஊழல் சமூகத்தின் பல்வேறு அலகுகளையும் சூழலியலையும் மனித உரிமைகளையும் அரிக்கும் புற்றுநோய்.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பொது விவாதப் பொருளாகியுள்ள கனிமவள முறைகேடுகள், ஊழலின் கோர முகத்தைத் தெளிவுபடுத்துகின்றன. கனிமவள முறைகேடுகள் சட்டமீறல்கள் மட்டுமல்ல; அவை மக்களின் வாழ்வாதாரத்தை ஆழமாகப் பாதிக்கின்றன; நிலத்தடி நீர் எனும் இயற்கை ஆதாரத்தைச் சிதைக்கின்றன; சாதிய அமைப்புகளின் மோதல் போக்குகளையும் ஊக்குவிக்கின்றன.

சுரங்க உரிமம் அல்லது குத்தகை பெறுவதற்குக் காகிதத்தில் பல நிர்வாக வழிமுறைகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. காப்புக்காடுகள், சூழல் உணர்திறன் மண்டலங்கள், கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் இல்லாத இடத்தையே அடையாளம் காண வேண்டும்; சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்; மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலோடு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட வேண்டும் எனப் பல விதிகள் உள்ளன. ஆனால், இவை அனைத்துமே காகிதப் புலிகளாகவே இருக்கின்றன.

நடைமுறையில், குத்தகை பெறும் நபர் விரிவான சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கையைத் தவிர்க்கத் திட்டமிடுகிறார். இதற்காகத் தன் குடும்பத்தினர், தன் பங்காளிகள் பெயர்களில் தனித்தனியாக விண்ணப்பிக்கிறார். சட்டத்தைத் திசைதிருப்ப அடுத்தடுத்து ஒரே எல்லையாகக் குவாரிகளை அமைக்கும் நிர்வாக அநாகரிகம் அரங்கேறுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ‘ஸ்டெரைல் ஜோன்’ பகுதியிலும், இடிந்தகரை போன்ற கிராமங்களின் அருகிலும் ஆபத்தான முறையில் குவாரிகள் செயல்படுகின்றன.

கிடைத்துள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் தோராயமாக 5,000 குவாரிகள் இயங்கி வந்தன. இதில் சுமார் 1,600 குவாரிகள்தான் முறையான அனுமதியோடு செயல்பட்டவை. மீதமிருந்தவை சட்டவிரோதமானவை அல்லது அவற்றின் குத்தகைக் காலம் முடிவடைந்துவிட்டவை. கடந்த திமுக அரசாங்கம் கொண்டுவந்த ‘தடையற்ற குத்தகை நீட்டிப்பு விதி’ அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டையே இல்லாமல் ஆக்கியது.  ஆனால் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் அமைச்சர் டி.கே. பிரபுவின் தொடர் ஆய்வுகளால் 67 குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இப்போது அனுமதியில்லாத குவாரிகள் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2022இல் திருநெல்வேலியில் பாதுகாப்பு விதிமீறலால் ஆறு தொழிலாளர்கள் பலியாயினர். அதன்பின் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் ஆய்வில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. அங்கு உரிமம் பெற்றிருந்த 54 குவாரிகளில், 53 குவாரிகள் முற்றிலும் சட்டவிரோதமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் படிக்கட்டு முறையைத் தவிர்த்து, செங்குத்தாகப் பாறைகளை வெட்டுகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல நூறு அடி ஆழம் வரை பூமியைக் குடைந்து கல், மணல் அள்ளப்பட்டு வந்தது.

கல்குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலோ கொத்தடிமை முறையிலோ வேலை செய்யும் புலம்பெயர், விளிம்புநிலைச் சாதியினர். இவர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடோ, வருங்கால வைப்புநிதியோ வழங்கப்படுவதில்லை. ஹெல்மெட், தகுந்த காலணிகள், காதுப் பொத்தன்கள் போன்ற எந்தவொரு அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மரணத்தின் விளிம்பில் அவர்கள் வேலை செய்கிறார்கள். பாறைகளைத் தகர்க்கும்போதும் அரைக்கும்போதும் காற்றில் பரவும் நுண்ணிய சிலிக்கா துகள்களைத் (Silica dust) தொடர்ந்து சுவாசிப்பதால், நுரையீரலில் தழும்புகள் ஏற்பட்டு ‘சிலிக்கோசிஸ்’ என்னும் தீராத கொடிய நோய் ஏற்படுகிறது. அத்தோடு, பாறைகளை உடைக்கும் இயந்திரங்களின் சத்தத்தால் நிரந்தரக் காது கேளாமை, வெடிமருந்துகளின் நச்சுப் புகையால் நாள்பட்ட ஆஸ்துமா, காசநோய் போன்ற வியாதிகளுக்கும் இவர்கள் ஆளாகிறார்கள்.

கனிமக் கொள்ளையைக் அம்பலப்படுத்திய 24 பத்திரிகையாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதும், விதிகளை மீறித் தோண்டப்பட்டு அப்படியே கைவிடப்பட்ட மரணக் குழிகளில் விழுந்து சுமார் 400 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதும் இத்துறையின் கொடூர முகத்திற்குச் சாட்சிகள். ஐந்து ஆண்டுகளில் வெட்ட வேண்டிய மூன்று லட்சம் கன மீட்டரைத் தாண்டி ஒரே ஆண்டில் ஆறு லட்சம் கன மீட்டர் தோண்டி எடுக்கும் அளவிற்கு லாப வெறியால் சட்ட விதிகளெல்லாம் முற்றாக மீறப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டமும் ஒரு முக்கிய விதியைக் கூறுகின்றன. அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறி வெட்டினால், கனிமத்தின் 100% சந்தை மதிப்பை அபராதமாக வசூலிக்க வேண்டும் என்கிறது சட்டம். இதன் அடிப்படையில் ராதாபுரம் தாலுகாவின் 24 குவாரிகளுக்கு அப்போதைய சார் ஆட்சியர் ரிஷப் பாஷல், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐ.ஏ.எஸ் ஆகியோர் 262 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால் இந்த நடவடிக்கை அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களால் முடக்கப்பட்டது.

அப்போதைய சபாநாயகர் அப்பாவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் போன்றோர் நிர்வாக அழுத்தம் கொடுத்தனர். இதனால் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் மாற்றப்பட்டார். புதிதாக வந்த ஆணையர் ஜெயகாந்தன், உச்ச நீதிமன்றத்தின் ‘காமன்காஸ்’ தீர்ப்பை முற்றிலும் சிதைத்து, 262 கோடியை வெறும் 13.8 கோடியாகக் குறைத்தார். தனிநபரின் 28 கோடி அபராதம் 1 கோடியாகச் சுருங்கியது.

இயற்கைச் சுரண்டலைத் தடுக்கவும் விதிமீறல் லாரிகளைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அரைகுறை நடவடிக்கைகளைக்கூட ஆளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நெல்லை - குமரி எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் விதிமீறி கனிமங்களை ஏற்றி வரும் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. திமுகவின் தலைமை அளித்துவந்த பாதுகாப்பு நிர்வாகம் நீக்கியதே இதற்குக் காரணம். இதைக் கண்டித்து, தேர்தல் காலத்தில் கனிம வர்த்தகர்களின் நலனுக்காகத் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் ஆகியோர் நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அழுத்தம் கொடுத்துள்ளனர். ‘கேரளா என்ன துபாயிலா இருக்கிறது? அங்கேயும் பொருட்கள் போகத்தான் செய்யும்’ எனச் செய்தியாளர்களிடம் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது, தமிழகத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றி திமுக எத்தகைய அலட்சியப் போக்கைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது.

கனிம மாஃபியாக்களின் வன்முறைக்குச் சட்டப் போராட்டம் நடத்தும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் விதிவிலக்கல்ல. திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதக் கல்குவாரிகளால் ஏற்படும் சமூக-சூழலியல் சீரழிவுகள் குறித்து ‘அறப்போர் இயக்கம்’ நடத்திய பொதுக் கருத்துக்கேட்புக் கூட்டத்தின் நடுவராகச் செயல்பட்ட மூத்த வழக்கறிஞரும், ‘பியுசிஎல்’ அமைப்பின் பொதுச்செயலாளருமான டாக்டர் வி. சுரேஷ் மீது, சுரங்க மாஃபியாக்களின் ஏவலாட்களான  திமுக வழக்கறிஞர்கள், ரவுடிகள் துணிச்சலாகத் தாக்குதல் நடத்தியது இதற்கு அண்மையச் சான்று. தென்னகக் கடற்கரை மணல் கொள்ளையைச் சட்டப் போராட்டத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்த நீதிமன்ற அலுவலரான ஒரு மூத்த வழக்கறிஞர்மீது காவல்துறை வேடிக்கை பார்க்க அரங்கேற்றப்பட்ட இத்தாக்குதல், தமிழகத்தில் கனிம மாஃபியாக்களின் கைகள் எந்த அளவிற்கு நீண்டுள்ளன என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.

சொந்த மாநிலத்தின் நிலத்தடி நீரும் மலைகளும் மொட்டை அடிக்கப்படுவதைப் பற்றி எவ்விதக் கவலையுமின்றி, ‘கேரளத்திலிருந்து கனிமங்கள் வருவதில்லையே’ என்ற கேள்விக்கு ‘அவர்கள் செய்யும் தவற்றை நாம் செய்யக் கூடாது’ என வாதாடும் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் பேராசைதான், சூழலியல் குற்றவாளிகளுக்கு அதிகாரபூர்வமான பாதுகாப்புக் கேடயமாகச் செயல்படுகின்றது. கனிமவள கொள்ளையை தவெக அரசு கட்டுப்படுத்தியதும் அடுத்த ஆறு மாதங்களில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் நெருக்கடி ஏற்படும் என்று பதறுபவர்களின் கரிசனத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

சுரங்க ஊழல்களின் பின்னணியில் அடியாள் படையும் அரசியல் செல்வாக்கும் இருக்கின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெல்லாரியில் ரெட்டி சகோதரர்கள் மாநில எல்லையையே வரைபடத்தில் மாற்றிய மோசடியும் நடந்தது. சாமராஜ நகர், கனகபுரா போன்ற இடங்களிலும் வன்முறைகள் நடந்தன. பத்திரிகையாளர்களை 150 அடி குழியில் தள்ள முயன்றது, பாறைகளை உருட்டிவிட்டது போன்ற சம்பவங்கள் நடந்தேறின.

ஆற்று மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், பாறைகளை உடைத்து எம்-சாண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்குப் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. குமரியில் தோவாளை போன்ற பகுதிகளில் இந்த மாஃபியாக்கள் இயங்குகிறார்கள். அவர்கள் தங்களின் சாதி, அரசியல், பணபலத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள். வெளியில் சாதாரண அரிசி ஆலை நடத்துவது போன்ற பிம்பத்தைக் காட்டுகிறார்கள்; உள்ளே பிரம்மாண்டமான கனிமவளக் கொள்ளை நடக்கிறது. இந்த ஆலைகளுக்குள் ஆய்வு செய்யச் சென்றால், உடனடியாக ரவுடிக் கும்பல்கள் ஆயுதங்களுடன் அச்சுறுத்துகின்றனர்.

ஆற்று மணலை இல்லாமலாக்கிய கனிமவளக் கொள்ளை பற்றியும் பேச வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், தேர்தல்களின்போது வாக்காளர்களுக்குப் பணமழை பொழியப்படுவதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவாறு பின்னப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் பார்பரா ஹாரிஸ்-ஒயிட், ஜே. ஜெயரஞ்சன் ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின்படி (Building on Sand? Criminal Markets and Politics in Tamil Nadu, Rethinking Markets in Modern India கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடு 2020), தமிழ்நாட்டின் ஆற்று மணல் சந்தையின் ஆண்டு வருமானம் சுமார் 19,163 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட நிலையில், அரசுக் கருவூலத்திற்குச் சென்றதோ வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே. மீதமுள்ள சுமார் 19,000 கோடி ரூபாய் முறைகேடான பணம், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், காவல்துறை, கார்டெல் ஒப்பந்தக்காரர்களிடையே சட்டவிரோதத் தனியார் நிதியாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. திருமங்கலம் ஃபார்முலா என அறியப்படும் ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் ஜனநாயக அவலத்திற்கு, இத்தகைய மணல் கொள்ளைப் பணமே பிரதான மூலதனமாகப் பயன்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்துகிறது. கிராமக் கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர் முதல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் முக்கியப் புள்ளிகள் வரை மாதம் தோறும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும் இந்த மாஃபியா கலாச்சாரம், அரசு இயந்திரத்தையே ஒரு குற்றச் சந்தையாக மாற்றி அமைத்துள்ளது.

இக்கட்டுரை குறிப்பாக 1990கள் முதல் 2018 வரையிலான காலகட்டத்தைச் சான்றாகக் கொண்டு தயார் செய்யப்பட்டதாகும். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் மணல் கார்டெல்கள் எவ்வாறு இயங்கின என்பதை விரிவாகப் பேசுகிறது இந்த ஆய்வு.

தங்களுக்கு எதிராகப் போராடும் சாமானிய மக்களை ஒடுக்க இந்த ஒப்பந்ததாரர்கள் ஆதிக்க சாதியினரை அணுகிப் பணம் கொடுத்து, கிராமங்களுக்குள் சாதிய மோதல்களையும் வன்கொடுமைகளையும் நிகழ்த்துகிறார்கள். பிரண்ட்லைன் இதழில் இளங்கோவன் ராஜசேகரன் விவரித்த புதுக்கோட்டைச் சம்பவம் இதற்குச் சான்று. அறந்தாங்கி வருவாய்க் கோட்டத்தில் மட்டும் 250 கோடி ராயல்டி முறைகேடு கண்டறியப்பட்டது. அதை எதிர்த்த தகவல் அறியும் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர் ஜெகபர் அலி டிப்பர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் தன் அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ்.

குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து விழும் குவாரித் தூசுகளால் கிணறுகள், குடிநீர் நிலைகள் மாசுபடுவதால், அந்த நச்சு நீரைக் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தும் மக்களுக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறுகளும், சுகாதாரச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. பாறை வெடிப்புகளின் அதிர்வுகளாலும் அதிரும் சத்தத்தாலும் குழந்தைகளின் தூக்கம் கெட்டு, கடுமையான நரம்பியல் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் குழந்தைகளின் மென்மையான சுவாசப்பைகளைப் பாதித்து, இளம் வயதிலேயே மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.

இக்கனிம வேட்டைக்குப் பயங்கர வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை மக்களின் வீடுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன; விவசாய நிலங்களைப் பாறைத் துகள்களாலும் குவாரித் தூசுகளாலும் பாழாக்குகின்றன.

தமிழக எல்லையான புளியரை, கன்னியாகுமரி மாவட்ட வழிகளைப் பயன்படுத்தித் தினந்தோறும் கடத்தல் நடந்தது. கேரளாவுக்குத் தடையின்றிப் பல நூறு லாரிகளில் கல்லும் மணலும் கடத்தப்பட்டன. அங்கிருந்து வரும் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டன. அபாயகரமான கழிவுகள் தென் தமிழகக் குவாரிகளின் பள்ளங்களில் கொட்டி மூடப்படுகின்றன. இது கேரளா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் கழிவுகளாகவும் இருக்கின்றன. வரும் தலைமுறைகளையும் தீரா நோய்க்குள் தள்ளும் நச்சுச் சுழற்சி இது.

இத்தனை அழிவுகள் போதாதென்று, திமுக அரசாங்கம் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக, தேர்தலுக்காக நிதித்திரட்டும் நோக்கில் கடந்த ஜனவரியில் ‘ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டம்’ (One-time regularization scheme) என்ற அரசாணையைக் கொண்டுவந்தது. கனிமத்தின் முழுச் சந்தை மதிப்பை அபராதமாக வசூலிப்பதற்குப் பதிலாக, வெறும் இரண்டு மடங்கு தரைவாடகைக் கட்டணத்தை (Two times seigniorage fee) மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். கொள்ளையர்களை முறைப்படுத்த முனையும் இந்த அரசாணையால் அரசுக்குக் குறைந்தது 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம், குவாரிகளை மூடும்போது கட்டுமானப் பொருட்களின் விலை உயர்கிறது (விலை 3,000இலிருந்து 3,500 ஆகவும், 6,000இலிருந்து 8,000 ஆகவும் உயர்ந்தது). இது இந்த மாஃபியாக்களும் லாரி உரிமையாளர்களும் கூட்டுச் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கும் செயற்கையான தட்டுப்பாடு; அவர்களின் நெருக்கடி உத்தி.

அமலாக்கத்துறையின் பதிவுகளின்படி 4,300 கோடி ரூபாய் மணல் கொள்ளை நடந்திருக்கிறது. இதனால் அரசின்  வருவாய் 36 கோடியாகக் குறைந்தது. ஆகவே சட்டவிரோதக் குவாரிகளின் செயல்பாடுகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஒரு கனமீட்டர் கனிமம் அள்ளப்பட்டிருந்தாலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின்படி 100% சந்தை மதிப்பை அபராதமாகச் செலுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

முன்னர் தென்காசி மாவட்ட ஆட்சியரால் புளியரையில் அமல்படுத்தப்பட்ட ‘பார்-கோடு / க்யூஆர் கோடு’ மென்பொருள் சரிபார்ப்பு முறையைக் கட்டாயமாக்க வேண்டும். இது போலியான பாஸ்களைத் தடுப்பதோடு, கனிமக் கடத்தலையும் அண்டை மாநிலக் கழிவுகள் உள்ளே நுழைவதையும் தடுத்து நிறுத்தும்.

இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய எல்லையோரச் சோதனைச் சாவடிகள், தற்போது தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு, முறையான வாகன வசதிகளோ நிர்வாகக் கண்காணிப்போ இன்றிச் சீர்குலைந்து கிடக்கின்றன. அங்கு நிலவும் நிர்வாகக் கட்டுப்பாடற்ற சூழலைப் பயன்படுத்தி, வெறும் 200, 300 ரூபாய்களைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு கனிம வாகனங்கள் எல்லையைத் தாண்ட அனுமதிக்கப்படுகின்றன. இதன் பக்கவிளைவாகவே, அபாயகரமான மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு எல்லையோர கிராமங்களின் நிலத்தடி நீரை நஞ்சாக்குகின்றன.

அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தும் ‘ஒரே முறை வரன்முறைப்படுத்தும்’ மக்கள் விரோத அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். தற்போது அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அள்ளப்படும் கனிமக் கொள்ளைக்குச் சலுகை அளிக்கும் வகையில் ஒருமுறை வரன்முறைப்படுத்தப்படும் அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா தன் பகுதிகளைச் ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக’ அறிவித்துப் பாதுகாக்கிறது. இதையடுத்து காட்டி, தமிழகக் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தவெக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு சட்டவிரோதச் சுரங்கங்கள், கனிமப் போக்குவரத்து, சேமித்தலைத் தடுத்தல், கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011இல் அவசரத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப் படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் இந்த நிர்வாக உத்தரவை வரவேற்றுள்ளனர். இது வெறும் காகித அளவிலான தற்காப்பு நடவடிக்கையாக நின்றுவிடாமல் தீர்க்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

கனிமக் குவாரிகளைத் தனியார் ஒப்பந்ததாரர்களின் பேராசைக்கு விடுவிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, அரசே நேரடியாக ஏற்று நடத்தும் கொள்கை முடிவை நோக்கி நகர வேண்டும். கைவிடப்பட்ட குவாரிக் குழிகளில் வெளிநாட்டுக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க, உள்ளூர் மக்கள், சூழலியலாளர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட வேண்டும்.

கனிம வளங்கள் கொள்ளையடிப்பதற்கானவை அல்ல, அவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கானவை என்ற உண்மையை உரக்கப் பேச வேண்டும். குவாரிகளை அரசே நடத்த வேண்டும் என்ற வாதம் வருமானம் பற்றிய அக்கறை சார்ந்ததாக மட்டுமே இருக்கக் கூடாது. அதைத் தாண்டி வளங்கள் அழிப்பு குறித்த பார்வையும் அவசியம்.

சூழலியல், நிலைபெறு வளர்ச்சி, வருங்காலத்தை மனங்கொள்ளல் எனும் கோணங்களிலிருந்து சிந்திக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் இயல்பைத் தொடக்கப்பள்ளி முதல் கற்பித்து வளர்ப்பதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும். இத்தகையத் தொலைநோக்குப் பார்வை அதிகார மட்டங்களிலும் பயிற்சிகள் மூலம் கடத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஃபிளை ஆஷ் போன்ற மாற்றுப் பொருட்களை உள்ளடக்கிய மாற்றுக் கட்டுமான முறையை அரசும் பெருநிறுவனங்களும் முதன்மைத் திட்டங்களாக மாற்றியமைக்க முடியும். இது இயற்கை வளங்களை மிகக் குறைவாகப் பயன்படுத்த உதவும்.

இவற்றுக்குத் துணையாக நிற்கும் ஊடகச் சூழலிலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ வேண்டும். செய்திப் புலனாய்விற்கான தார்மீகத் துணிச்சலை நிறுவன ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும். ஜெகபர் அலி, லூர்து பிரான்சிஸ் போன்ற சாமானியர்களின் மரணங்களை வெறும் குற்றச் செய்தியாகக் கடந்துபோகக் கூடாது. மக்கள் இயக்கங்களுக்குத் துணையாக நின்று அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் ஊடகங்களின் தேவை இன்று முன்பை விடவும் அதிகமாக உள்ளது.

பொருளாதார இழப்பாக மட்டுமே பார்க்கப்படும் இந்த ஊழலை ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையாக அணுக வேண்டும். ஊழல் முடி முதல் அடி வரை புரையோடியிருக்கும் தமிழக சமூகத்தில் இதற்கு அசாதாரணமான ஊக்கமும் முன்னெடுப்புகளும் அவசியம்.

நன்றி: தி நியூஸ் மினிட்ஸ், அறப்போர் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், பெருந்தேவி முகநூல் பக்கம்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.