கடிதங்கள்

பண்பாட்டுக் கல்வியும் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து தமிழ்நாட்டின் அறிவுப் பரவலாக்கத்தை மென்மேலும் விரிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இன்றைய தவெக அரசுக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தும் தலையங்கம் சிறப்பு.
மு. இராமனாதனின் கட்டுரையின் இறுதியில் ஹென்றி கிஸ்ஸிங்கரின் புகழ்பெற்ற மேற்கோள் காட்டி வெற்றி பெற்றவர் யார், வெற்றி பெறாதவர் யார் என்பதைக் காரணகாரியங்களோடு விளக்கியிருப்பது அருமை. ஸர்மிளாவின் ‘அடலார் தீவுக் கப்பல் பயணம்’ அவருக்கு மட்டுமல்ல நமக்கும் புதிய அனுபவம்தான்.
காந்தி குடும்பமும், பா.ஜ.க.வின் ஆதிக்கமும் என்ற குஹாவின் கட்டுரை இன்றைய அரசியல் தலைமையை ஆய்கிறது. முடிவில் வாக்காளர்களைக் கவரக்கூடிய தலைவர்களாக ராகுல் காந்தியும் இல்லை, பிரியங்காவும் இல்லை என முடித்திருப்பது நடு நிலையானது.
ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரையில் ‘மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர்’ என்ற பார்வையில் பாரதிராஜாவைக் காண்கிறார். பாரதிராஜா மத எதிர்ப்புக் கருத்துக்கள், தமிழ்ப் பண்பாடு, சீர்திருத்த உணர்வோடு தன் படைப்புகளை முன்னெடுத்துச் சென்றவர். பின்தங்கிக் கிடந்த தமிழ்த் திரைப்பட உலகை முன்னோக்கி நகர்த்தியவர் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களோடு அவரை ஒப்பிட வேண்டியதில்லை. அண்மைக் காலத் திரைப்பட உலகில் அவர் இமையம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பல்லடம் மாணிக்கம், மு. பரமசிவம் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள் அவர்கள் செய்த சாதனைகளை உலகுக்கு உணர்த்தும் ரீதியில் அமைந்திருக்கின்றன.
சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின், ‘247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்’ கட்டுரை ஒரே எழுத்து முறையின் மூலம் இந்திய மொழிகளை ஒரே தரத்தில் கொண்டுவரும் கிறித்தவப் பாதிரிமார்களின் முயற்சி கிறித்துவத்தை இந்தியாவில் பரப்புவதற்கே என்பதை ஆழமாக உணர்த்துவது பாராட்டத்தக்கது.
சுற்றுச்சூழல் சார்ந்த பார்வைகளையும் அக்கறையையும் உள்ளடக்கிய புனைவுகள் குறித்த அரவிந்தனின் ‘தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச்சூழல் ஓர்மை’ கட்டுரை சிறக்கக் காரணம் தமிழில் எழுந்த பல்வேறு நாவல்களைச் சான்று காட்டி நிறுவியதே எனலாம்.
கா. ஆபத்துக்காத்த பிள்ளை
கன்னியாகுமரி
***
‘அதிகாரப்பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி’ தலையங்கம் படித்தேன். நூலகம் இல்லாத ஊர்கள் இல்லை. 1990 முதல் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவராக இருக்கிறேன் (36 ஆண்டுகள்). ஜெயகாந்தன் வாசகர் வட்டம் ஆரம்பித்த கிருஷ்ணசாமி ஆசிரியர் “பஞ்சலிங்கம்தான் வாசகர் வட்டத் தலைவராக இருக்கத் தகுதியானவர்” என்றார். அவர் கருத்தை ஏற்று இன்றுவரை தொடர்கிறேன். நூலகங்கள் புத்தகங்களை அடுக்கும் இடமல்ல, எழுத்தாளர்களின் ஆன்மா இருக்கும் இடம். நூலகம் என்று ஒன்று இருப்பதால்தான் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்பதைத் தலையங்கம் உயர்வாக வழிகாட்டுகிறது.
எஸ். பஞ்சலிங்கம்
மடத்துக்குளம்
***
‘அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி’த் தலையங்கம் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக அமைந்திருந்தது. யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்தத் தேவையை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
கடந்த கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வாசிப்பு இயக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாகப் புத்தகத் திருவிழாக்கள் மாவட்டங்கள் தோறும் நடத்தி மக்களை அறிவார்ந்த தளத்தில் பயணிக்க நல்ல விழிப்புணர்வைப் புத்தகத் திருவிழாக்கள் உண்டாக்கியது.
தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் புத்தகங்களை வாங்கி வாசிக்கும் நடைமுறைப் பழக்கம் மாறாமல் இருப்பதற்குப் புதிய தலைமுறையிடம் புத்தகங்களை வாங்கி வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்குவதற்குப் புத்தகத் திருவிழாக்கள் மிகச்சிறப்பான பங்களிப்பைச் செய்தது.
பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் முழுமையாகப் பயனடைய நூல் கொள்முதல் அவசியம். நூலகங்களுக்குப் புதிய நூல்களை வாங்குவது வாசகர்கள் மத்தியில் வரவேற்பைக் கூட்டும். படைப்பாளிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
நூலகங்கள் அறிவுக் கருவூலங்களாகச் செயல்பட நூலகங்களின் தரத்தை மேம்படுத்த நூலகர் பணியிடங்களை நிரப்பி வாசகர்கள் வரவேற்பைப் பெறுகின்ற வகையில் நூலகக் கட்டமைப்பை இன்னும் கூடுதலாக்க வேண்டியது அவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை எடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வழி காட்ட வேண்டும். பள்ளி, கல்லூரி நூலகங்கள் முறையாகச் செயல்பட்டு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு சரியான வழிகாட்டுதல்கள் அவசியம். எந்த ஆட்சியில் எந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தி இருந்தாலும் அந்தத் திட்டம் மக்களிடையே என்ன வரவேற்பைப் பெற்றுள்ளது, மக்களுக்கு எந்தவகையில் பயன்படுகிறது என்பதை மட்டும் கருத்தில் கொண்டு திட்டங்களில் தொய்வு இல்லாமல் செயல்படுத்தினால் அனைவருக்கும் பயனளிக்கும்.
கடந்த கால ஆட்சியில் நடைமுறைப்படுத்திய நல்ல திட்டங்களைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது வரவேற்புக்குரியது. புத்தகத் திருவிழாக்கள் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் நடத்த வேண்டும் அதன் மூலம் வாசகர்கள், படைப்பாளர்கள் பயனடைய வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக உள்ளது. புதிய அரசு வாசகர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு வாசகர்கள் மத்தியில் உள்ளது. அதேபோன்று படைப்பாளர்கள் பதிப்பாசிரியர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
***
புதிய பத்தியை எழுதத் தொடங்கியிருக்கும் ரேவதியின் முதல் அத்தியாயத்தைப் படித்து மகிழ்ந்தேன். எந்தப் பிரச்சினையின் மீது வாசகர்களின் கவனம் குவிய வேண்டும் என அவர் விரும்பியிருப்பாரோ, அது அத்தியாயத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அவருடைய தெளிவான மொழியோட்டமும் கச்சிதமான சித்தரிப்புத் திறமையும் அவருக்கு உதவியாக அமைந்திருக்கின்றன. நல்ல தொடக்கம். அந்தப் பத்தியின் திசையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தியாயத்தைப் படித்து முடித்ததும் அடிக்குறிப்பில் வழங்கப்பட்டுள்ள அவருடைய வலைப்பூவின் முகவரிக்குச் சென்று அவர் எழுதியிருக்கும் நூல் அறிமுகக் கட்டுரைகளையும் படித்தேன். அந்த வாசிப்பு அவருடைய ரசனையைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. ரேவதிக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
கோகுலகண்ணன் எழுதிய ‘பாடிங்க்டன் கரடி’ சிறுகதையை படித்து மகிழ்ந்தேன். சமீபத்தில் வாசித்த சிறந்த கதைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.
பாவண்ணன்
மின்னஞ்சல் வழி
***
ஜூலை மாதக் காலச்சுவடில் உத்தமதானபுரம் சு. அன்பழகனின் வாசகக் கடிதத்தைப் படித்து நானும் அதே நிலையை அடைந்தேன். நான் எழுத நினைத்ததை வரிக்கு வரி அப்படியே எழுதியிருக்கிறார் தோழர் சு. அன்பழகன். சுயமரியாதைக்காரர்களுக்கும் சுவர்முட்டிக்காரர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்பதைத் துல்லியமாய்ப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அட்டைப்படத்தில் விஜய்யைக் கௌரவித்ததற்குக் காலச்சுவடுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறுபது ஆண்டு காலத் திராவிட கட்சிகளின் ஆட்சியில் நன்மையை விடத் தீமையை அதிகம் என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் அழியாத சாட்சிகள் நிறையவே இருக்கின்றன. அன்றாடம் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் உழைக்கும் மக்களின் முகத்தில் கொதிக்கும் வெஞ்சினத்தை ஊற்றுகின்றன. ஊழல் இல்லாத உலகை நோக்கி நாம் அனைவரும் காலடி எடுத்துவைக்க வேண்டிய மகத்தான தருணம் இது.
ரேவதியின் ‘அக்கா அங்க பாரு’ சித்திரம் இதயத்தை உலுக்கிற்று. மூன்று வயது மலரையும் எட்டு வயது லதாவையும் காலமெல்லாம் மறக்கவே முடியாது. நேற்று இரவெல்லாம் நிலா முத்தத்தில் அமர்ந்துகொண்டு சிறுமிகள் இருவருக்கும் மானசிகமாய் பிரியாணியை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தேன். அதிகாலையில் நரசிங்க நல்லூரின் சித்திரத்தை மனத்திரையில் ஓட விட்டுக்கொண்டிருந்தேன். லதாவையும் மலரையும் சித்திரவதை செய்யும் அரக்கர்கள் யாரும் எங்கள் ஊரில் இல்லை என்பதை நினைத்துச் சற்றே நிம்மதி அடைந்தேன். அன்பின் முகவரியாய் ஒளிரும் ரேவதி வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்.
ப. மணி பாரதி
திருநெல்வேலி
***
பெருமாள்முருகனின் ‘தீ இனிது’ சிறுகதை கிராமத்து மொழிநடையில் அழகாக நகர்த்திக்கொண்டு போனாலும், சிறப்பான கருத்து ஏதுமில்லை என்பது எனக்கு வருத்தம். தொய்வின்றிப் படிக்க வைத்துள்ளார் ஆசிரியர். அநேகக் கிராமத்துச் சொல்வழக்குகளை இக்கதையில் அறிந்துகொள்ள முடிந்தது.
வி. சகாயராஜா
திண்டுக்கல்
***
ஜூலைத் தலையங்கம் முந்தைய அரசின் நற்செயல்களை எடுத்துக்காட்டி அவை தொடர வேண்டும் எனும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. நூலகங் களுக்கு நூல்கள், சிற்றிதழ்கள் வாங்குவதில் விருப்பு வெறுப்பின்றிச் செயல்பட வேண்டும். நூலகங்கள் மாதத்திற்கொரு நாள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று மாணவருக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெருமாள் முருகனின் ‘தீ இனிது’ சிறுகதையைக் களைப்பின்றி வாசிக்க முடிந்தது.
வளவ. துரையன்
முகலிவாக்கம்
***
