சுதந்திரச் சுடரின் குரல்

காலச்சுவடு 300 இதழ்களைக் கடந்துள்ளது; காலச்சுவடு பதிப்பகமும் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இவற்றைச் சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடும் 2026 ஜூன் 28 அன்று மாலை நாமக்கல் தங்கம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடத்தின. கருத்தரங்கில் பங்கேற்பாளர்களுக்குக் காலச்சுவடு இதழின் பிரதி கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள்.
தலைமையுரை ஆற்றிய நாமக்கல் தமிழ்ச்சங்கத் தலைவர் மருத்துவர் இரா. குழந்தைவேல் “காலச்சுவடு பதிப்பகம் தமிழ்ச் சிந்தனை மரபில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் முக்கியமானதுபோல ஒரு நாட்டிற்கு அறிவு ஆரோக்கியம் முக்கியமானது. அதை காலச்சுவடு சிறப்பாகச் செய்கிறது” என்றார்.
தொடக்கவுரை ஆற்றிய பெருமாள்முருகன் ‘காலச்சுவடு பதிப்பகம் 30 ஆண்டுகள், காலச்சுவடு 300 இதழ்கள்’ என்பதைக் கொண்டாடத் தமிழ்நாட்டில் நடக்கும் முதல் நிகழ்வு இது என்றும் அதற்குக் களம் அமைத்துக் கொடுத்து நாமக்கல் தமிழ்ச்சங்கம் பெருமை பெறுகிறது என்றும் குறிப்பிட்டதோடு. காலச்சுவடின் வரலாற்றுப் பயணத்தையும் நினைவுகூர்ந்தார். “1988இல் தொடங்கிய காலச்சுவடு முதல் இதழின் தலையங்கத்தில் ‘சுதந்திரச் சுடரின் குரலாகக் காலச்சுவடு செயல்படும்’ எனச் சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருப்பார். சு.ரா.வின் தீர்க்கதரிசன வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் எவ்விதச் சமரசமுமின்றி மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கும் நடுநிலை இதழாகக் காலச்சுவடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார்.
1989இல் தற்காலிகமாக நின்ற இதழ் 1994ஆம் ஆண்டு மீண்டும் உயிர் பெற்று இன்றுவரை தொய்வின்றித் தொடர்வதையும் சுட்டிக்காட்டினார். பதிப்புலகில் 1995இல் கால்கோளிட்ட காலச்சுவடு “சு.ரா.வின் ‘107 கவிதைகள்’ நூலை முதலில் வெளியிட்டது. அடுத்தடுத்து ‘ஒரு புளியமரத்தின் கதை’, ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளான ‘அன்னையிட்ட தீ’ ஆகிய நூல்கள் வெளிவந்தன” என்று அதன் வரலாற்றுப் பயணத்தை விவரித்தார்.
காலச்சுவடுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் பொ. வேல்சாமி. காலச்சுவடு பல தளங்களில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது எனக் கூறியவர், காலச்சுவடில் வெளிவந்த கட்டுரை ஒன்றின் மீதான விமர்சனத்தை முன்வைத்தார். “கீழடி குறித்து பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் கி.மு. 1, 2ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பேரிலக்கியங்கள் வடமொழியில் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். அந்தக் கருத்தை மறுத்து முகநூலில் பதிவு எழுதினேன். அதில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடமொழி நூல் ஒன்றையாவது உங்களால் காட்ட முடியுமா என்று கேட்டேன். தற்போதுவரை அதற்குப் பதில் இல்லை. ஏனெனில் அப்படி எந்த நூலும் கிடையாது” என்றார்.
காலச்சுவடில் வெளியான சிறுகதைகள் குறித்து ஜார்ஜ் ஜோசப் பேசினார். இதழ்களில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன என்ற தகவலைப் பகிர்ந்தார். தேவிபாரதியின் ‘தீர்ப்பு’, அம்பையின் ‘மல்லுக்கட்டு’ ஆகிய சிறுகதைகளில் ஊடாடும் நுட்பங்களை விவரித்தார். காலச்சுவடு இதழ் மெல்லுணர்வு சார்ந்த கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்ற பார்வையை முன்வைத்தார்.
காலச்சுவடு வெளியிடும் பதிப்புகள் பற்றிப் பேசிய ‘அழிசி’ ஸ்ரீநிவாச கோபாலன் “பதிப்பு என்பதும் ஒருவகைப் படைப்புச் செயல்பாடு” எனத் தொடங்கினார். புதுமைப்பித்தன், பாரதி, உ.வே.சா., கு.ப.ரா., கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன் முதலியோரின் படைப்புகள் காலச்சுவடின் முத்திரைப் பதிப்புகளாகத் திகழ்வதைச் சுட்டிக் காட்டி ஆ.இரா. வேங்கடாசலபதி, ப. சரவணன், பழ. அதியமான், பெருமாள்முருகன், சுகுமாரன், ய. மணிகண்டன் ஆகிய பதிப்பாசிரியர்களின் பதிப்பு நுட்பங்களை விவரித்தார். அவர் உரை அத்தனை எளிதாக நிறைவு பெறவில்லை. பதிப்பு சார்ந்து காலச்சுவடு செய்திருப்பது பெரும்பணி என்பதை உணர்த்தியது.
காலச்சுவடு நூல்கள், இதழ்க் கட்டுரைகள் கல்வித்துறையில் செலுத்திய கவனம் பற்றித் தமிழாசிரியரும் நாமக்கல் தமிழ்ச்சங்கச் செயலருமான கோ. நாராயணமூர்த்தி பேசினார். “நவோதயா பள்ளிகள், சமச்சீர்க் கல்வி, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு எனக் கல்வி தொடர்பான திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படும்போது காலச்சுவடு முறையான தரவுகளுடன் விமர்சனம் செய்து மாற்று ஏற்பாடுகளையும் முன்வைத்தது. கல்வியின்மீது செலுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிரான யுத்தத்தைக் காலச்சுவடு தொடர்ந்து நிகழ்த்திக் காட்டியிருக்கிறது” என்றார். அயலகத் தமிழ்மொழிக் கல்வி பற்றிக் காலச்சுவடு வெளியிட்ட கட்டுரைகளைச் சிறப்பித்துப் பேசினார்.
காலச்சுவடின் அஞ்சலிக் கட்டுரைகள் குறித்துப் பேச நீண்ட கட்டுரையுடன் வந்திருந்தார் பழ. அதியமான். 300 இதழ்களில் 355 அஞ்சலிக் கட்டுரைகள் வந்துள்ளன எனத் தொடங்கியவர் இதழில் அதிக எண்ணிகையிலான அஞ்சலிக் கட்டுரைகளை எழுதியவர் சுகுமாரன் எனக் குறிப்பிட்டார். “எழுத்தாளர்கள் மட்டுமல்லாது சமூகச் செயற்பாட்டாளர்கள், துறை ஆளுமைகள், அறிஞர்கள், கலைஞர்கள் முதலிய பலருக்கும் காலச்சுவடில் அஞ்சலிகள் வெளியாகியுள்ளன. கண்ணன் எழுதிய அஞ்சலிகளில் மிகச் சிறந்தது அவரது பாரீஸ் நண்பர் கலைச்செல்வன் பற்றியது” என்றவர் அந்த அஞ்சலிக் குறிப்பின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார்.
இறந்தவர்களைப் புனிதப்படுத்தும் நோக்கில் அஞ்சலி எழுதாமல் அவர்தம் பங்களிப்பை நடுநிலையோடு மதிப்பிடும் ஆவணமாகக் காலச்சுவடின் அஞ்சலிக் குறிப்புகள் விளங்குவதைச் சான்றுகளுடன் விவரித்தார். ஒரே இதழில் இரண்டு அஞ்சலிக் கட்டுரைகளை எழுதியவர்கள் அம்பையும் பெருமாள்முருகனும் எனச் சுட்டினார். பகடியாக வந்த அஞ்சலிகள் குறித்தும் அஞ்சலிகளுக்கு வந்த எதிர்வினைகள் குறித்தும் விவரித்தார்.
படைப்பூக்கத்துடன் தொடர்புடைய ஒரு குட்டிக் கதையுடன் ஏற்புரையைத் தொடங்கினார் கண்ணன். “ஒரு காலகட்டத்தில் ஏற்புடைய சிந்தனைகள் மற்றொரு காலகட்டத்தில் மாறும். எல்லாக் காலகட்டங்களிலும் முழுமையான சுதந்திரத்தோடு சிந்தனைகளை அனுமதிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பது காலப்போக்கில் நிர்ணயிக்கப்படும். காலச்சுவடு கருத்துச் சுதந்திரத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறது; வரையறை ஏதும் வைக்கவில்லை” என அழுத்தமாகப் பதிவு செய்தார்.
“சென்னையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தி கார்டியன் என்ற பிரிட்டன் நாளிதழின் ஆசிரியர் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பிரிட்டனில் நிலவும் பொதுக்கருத்துக்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளை எழுதுவதற்காகவே தமது பத்திரிகையில் பிரத்தியேகமாக ஒரு பத்தியாளரை நியமித்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர் எழுதும் பத்தி வாரந்தோறும் வெளியாகியிருக்கிறது. ஒரு பொதுக்கருத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதேபோல அதற்கான மாற்றுக் கருத்தும் சமூகத்தில் இருக்கும் என்பதை ஏற்கப் பழக வேண்டும்” என விவரித்தார்.
“காலனியக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்வதற்காக, நமக்கென்று தனித்துவமான ஆற்றல்மிக்க மொழியோ பண்பாடோ இல்லை என்ற கருத்தியலைக் கட்டமைத்தனர். இதற்கு எதிரான சிந்தனையாக, பாரதியார் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடிப் பெருமிதம் கொண்டார். பிற்காலத்தில் பெரியார் ‘வெங்காயம் வந்து பாயுது காதினிலே’ என இதைச் சாடியிருப்பார். இந்த இரண்டும் நம் பார்வையில் இருக்க வேண்டிய கருத்துகள்” என விளக்கினார்.
“காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தாலும் காலச்சுவடின் பார்வை என்று எதுவும் கிடைக்காது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு பார்வையைத் தரும்; ஒன்றுக் கொன்று முரணாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டவர் கீழடி கட்டுரை வெளியீடு பற்றியும் பேசினார்.
“கீழடி குறித்துப் பொதுவான ஒரு கருத்து நிலவும்போது நிறையப் படித்துச் சிந்திக்கக்கூடிய ஒருவர் அதற்கு மாற்றான பார்வையை முன்வைத்துக் கட்டுரை எழுதி அனுப்பினார். பொதுக்கருத்துக்கு மாறான விஷயங்களை யோசிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை காலச்சுவடு கொண்டிருப்பதால் அந்தக் கட்டுரையைப் பிரசுரித்தோம். அக்கட்டுரைக்கு மாற்றான கருத்துகளைக்கொண்ட கட்டுரைகளையும் பிரசுரித்தோம். பொ. வேல்சாமி அக்கட்டுரைக்கான எதிர்வினையைக் காலச்சுவடு இதழுக்கு எழுதி அனுப்பியிருந்தால் கண்டிப்பாகப் பிரசுரித்திருப்போம். வேறு ஊடகத்தில் எழுதும்போது அங்கு சென்று விளக்கம் அளிப்பதில்லை. மேலும் அக்கட்டுரையின் கருத்து எங்களுடைய கருத்து அல்ல” எனத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
“காலச்சுவடு கல்வியைப் பற்றிச் சிறப்பிதழ் கொண்டு வரும்போது அதற்கு வரும் எதிர்வினைகள் கணிசமாக இருக்கும். கல்வியைப் பற்றி நம் சமூகம் தொடர்ந்து சிந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறி நிறைவு செய்தார். நாமக்கல் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலர் செல்வ. செந்தில்குமார் வரவேற்புரையும் ஒருங்கிணைப்பாளர் மா. தில்லைசிவக்குமார் நன்றி யுரையும் வழங்கினார்கள். தமிழ். சாவித்ரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மூன்றரை மணிநேரம் நீங்காமல் அரங்கில் குழுமியிருந்தோரின் அறிவுப் பசிக்கு டி.கே.சி. எழுதிய ‘இதயஒலி’ நூலைப் பரிசாகக் கொடுத்ததோடு வயிற்றுப் பசி நீங்க நல்லுணவும் வழங்கினார்கள்.
பிரேம்குமார்: முனைவர் பட்ட ஆய்வாளர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மின்னஞ்சல்: premkumarpk2811@gmail.com
