காலனுக்குக் கதை சொன்னவர்

படம்: புதுவை இளவேனில்
2007ஆம் ஆண்டாக இருக்கக்கூடும். பாண்டிச்சேரி அல்லயன்ஸ் ஃப்ரான்சைஸில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடல் நிகழ்வு. சேகுவேராவைப் பற்றிய ஆவணப்படம் முடிந்ததும் சற்றுப் பருமனான ஒருவர் உணர்ச்சி ததும்பப் படம் குறித்துப் பேசத் தொடங்கினார். பேச்சின் நடுவே பிரபாகரனை ஈழத்துச் சேகுவேரா என்றார். அரங்கத்தில் எழுந்த கைத்தட்டல் அடங்கச் சற்று நேரமெடுத்தது. பிறகுதான் அவர் பிரேம்-ரமேஷ் எனும் இரட்டை எழுத்தாளர்களில் ஒருவரான ரமேஷ் பிரேதன் எனத் தெரிந்துகொண்டேன்.அந்நிகழ்விற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து ரமேஷ்-பிரேமின் நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. அதுவரை சிறுகதை என்பது வடிவ ஓர்மையுடன் சொல்லப்பட வேண்டியது, அதில் அனைத்தும் கச்சிதமாய்ப் பொருந்தியிருக்க வேண்டுமென நம்பியிருந்தேன். ஆனால் ரமேஷ்-பிரேமின் கதைகளிலிருந்த கட்டற்ற பித்தும் சிதறடிக்கப்பட்ட வடிவங்களும் என்னை மிரளவைத்தன. அவர்களைத் தொடர்ச்சியாக வாசித்த பின் இனியான கதைகூறல் என்பது புனைவினூடாக ஒரு பித்தநிலையின் உச்சத்தைத் தொட நினைக்கும் எத்தனிப்பே என முடிவு செய்தேன்.
எனது மதிப்பீட்டில் 2005இல் வெளியான ரமேஷ்-பிரேமின் மிகுபுனைவுகள் தொகுப்பான ‘மகாமுனி’ அதுவரை தமிழில் வெளிவந்த கதைத் தொகுப்புகளில் மிகமுக்கியமான ஆக்கம்; அவற்றில் வெறும் உத்தி சோதனைகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சில கதைகள் இடம்பெற்றிருந்தாலும். ‘அடையாளம்’ வெளியிட்ட அந்நூலின் ஒரு பிரதியாவது மிச்சமிருக்குமா என்ற பதற்றத்துடன் 2011 சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்றது நினைவில் எழுகிறது. ஆனால் அடையாளம் அரங்கில் அந்நூல்கள் என் தோள்பட்டை உயரத்திற்கு ஐம்பது சதவிகிதக் கழிவு விலையில் இரு வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்நிகழ்வு தமிழ் வாசிப்புச் சூழல்மீது எனக்கு மிகப்பெரும் அவநம்பிக்கையை உருவாக்கியது.
ரமேஷ்-பிரேம் கதைகளில் காலவட்டத்துக்குள் இரு கண்கள், பிரம்மனின் உடலுக்கு வெளியே, பரதேசி, முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன, கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் ஆகிய ஐந்து கதைகளையும் தமிழின் சாதனைகள் என்றே குறிப்பிடுவேன். ஒரு ஒப்பீட்டுக்காக ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ சிறுகதையையும், ரமேஷ்- பிரேமின் ‘பிரம்மனின் உடலுக்கு வெளியே’ சிறுகதையையும் ஒன்றாக வாசித்துப் பாருங்கள். வைதிக எதிர்ப்பைக் கருவாகக் கொண்ட இரு கதைகளிலும் ‘திசைகளின் நடுவே’ வடிவத்தில் கச்சிதமான சிறுகதையாய் இருக்கலாம். ஆனால் பிரம்மனின் உடலுக்கு வெளியே நம் ஆழ்மனதில் புதைந்துள்ள சமூகத்தின் கூட்டு நனவிலியை ஒருவர் நம்மிடம் கதையாய் சொல்வதைப் போல் உணர முடியும்.
90களில் தமிழ்ச் சூழலில் அறிமுகமான இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விவாதங்களில் ரமேஷ்-பிரேம் முக்கியத் தரப்பாய்த் திகழ்ந்தார்கள். அவர்களின் புனைவெழுத்திலிருந்த மொழி வசீகரம் அவர்களது அபுனைவு எழுத்துக்களில் சற்றும் இல்லை. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். பிரேம்-ரமேஷின் அபுனைவு எழுத்துக்களை முதலில் வாசித்தவர்கள் அதிலிருந்த குழப்பமான மொழிநடையால் அவர்களின் புனைவுகளை வாசிப்பதைத் தவிர்த்தார்கள். அல்லது அவர்களின் சிடுக்கான மொழி குறித்தான விமர்சனத்தை அவர்களின் புனைவுகளின் மீதும் வைத்தார்கள். உண்மையில் அவர்களது புனைவின் மொழி கற்பனாவாதத் தன்மை நிறைந்தது. கவித்துவமான பித்தநிலை கைகூடியது. மாறாக அவர்களது ‘சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின்நவீனத்துவ பிரச்சினைப்பாடுகள்’ நூலை ஒவ்வொரு முறை வாசிக்கும்தோறும் என் பின்னந்தலை வீங்குவதைப் போல் உணர்ந்தேன். அப்படியான சிக்கல் நிறைந்த உரைநடை அது.
உண்மை சார்ந்த உரையாடல், பேச்சு மறு பேச்சு போன்ற நூல்களின் மூலம் கோட்பாடுகள் பற்றிய அறிதலே இனிப் புனைவெழுத அடிப்படைத் தகுதி எனும் மனப்பிம்பத்தை அவர்கள் எனக்குள் விதைத்தார்கள். ஆகவே எனது வாசிப்பில் கணிசமான நாட்களை அடையாளம் வெளியிட்ட இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நூல்களை வாசிப்பதில் செலவழித்தேன். கோபிசந்த நாரங்கின் அமைப்பு மையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக் காவிய இயல் போன்ற தலையணை அளவு நூல்களோடு போராடிய காலகட்டம் அது. எப்படியோ ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் நிகழ்வுறும்’ எனும் நன்னூல் வரி என்னைக் காப்பாற்றியது. கோட்பாடுகளை வாசிப்பதை நிறுத்தி புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி.ஜா., கி.ரா. ஆகியோரை மறுவாசிப்புச் செய்த பின்னரே என்னால் சிறுகதைகளை எழுத முடிந்தது. இருப்பினும் ரமேஷ்- பிரேமின் சொல் என்றொரு சொல் நாவலின் ததாகதரின் இறுதி இரவுப் பகுதியும், அம்பிகை வசிய வாலைப் பகுதியும் நான் படைப்பூக்கத்திற்காக பைபிளைப் போல் மீண்டும் மீண்டும் வாசிப்பவை.
பிரேமுடனான பிரிவிற்குப் பின் ரமேஷ் பிரேதன் படைப்பாளியாய்த் தனக்கான ஒரு ஆன்மிக அக உலகை உருவாக்கிக்கொண்டார். அவரது புனைவுகளில் அதற்கு முன் கட்டியெழுப்பியதைப் போன்ற பிரம்மாண்ட புற உலகு இடம்பெறவில்லை. அப்புனைவுகளின் வடிவமோ சித்தர்களின் மெய்ஞானப் புலம்பலுக்கு நெருக்கமானது. வேறு யாரேனும் அவரை நகுலனோடு ஒப்பீடுசெய்ய வாய்ப்புள்ளது.
பரதேசி கதையில் யூத வதைமுகாமில் பேராசிரியர் பச்சையப்பன் மரச் சுவரில் எழுதப்பட்ட “எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” எனும் தாயுமானவரின் வரிகளைக் காண்பார். ஃபாசிசத்தைக் குறித்து ஓயாமல் பேசிய ரமேஷ் பிரேதனின் கதைசொல்லிகளோ உள்ளுக்குள் தனிப் பெருங்கருணைக்காக இறைஞ்சுவதைக் காணலாம். எனது எழுதுகோலின் நுனியில் அருட்பெருஞ்சோதி சுடர் விட வேண்டுமென ஆசை கொள்வதையும். ஆனால் அவர்கள் உணரும் உண்மை வேறுவிதமாய் உள்ளது. “இவ்வுலகில் கடவுளை விட மாபெரும் கற்பனை எது தெரியுமா? அது அகிம்சை என்கிற கருத்து” ‘ஐந்தவித்தா’னில் மாதவனின் இக்கூற்றிற்கும் தனிப் பெருங்கருணைக்குமிடையே அவரது கதாமாந்தர்கள் அல்லாடித் திரிகிறார்கள். ‘நல்லபாம்பு’ நாவலில் தன்னிடமிருக்கும் கட்டுச் சோற்றைப் பகிர்ந்துண்ண அழைக்கும் வழிப்போக்கனிடம் செம்புலி “மகனே, உன்னைவிட என்னைவிட எந்தவொரு பேரரசனையும்விடப் பிடிச்சோறே உலகில் உயர்ந்தது. கோடானுகோடி வயிறுகளில் உயிர் மலர்ச்சியை உண்டாக்கும் சோறு ஈசனின் முதல் வடிவம். நட்டுவைத்த ஒற்றைச் சோற்றுப் பருக்கையே லிங்கரூபம். நீ உனது கடவுளைப் பகிர்ந்துண்ண அழைக்கிறாய்” என்கிறார். ஆனால் அந்தச் செம்புலியோ தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நிகழ்ந்த அன்று தன் மனைவி நல்லதங்கத்தைக் கொல்வதற்காகக் கட்டுச்சோற்றில் பாம்பை வைத்துக் கட்டியவர்.
ரமேஷ் பிரேதனின் அழகியல் நம் மரபில் வேர் கொண்டது. அது காரைக்கால் அம்மையின் அழகியல். தாய்மை திரிந்த பேய்மையின் அழகியல். பேயைப் புணரும் வேட்கையோடு எழுந்த படைப்பூக்கத்தின் அழகியல். பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர ஆசை கொண்ட ஆண்டாளுக்கு எதிரிடையான அழகியல். அவன் பெயர் சொல் நாவலின் கதைசொல்லி பேயுரு கொண்ட காரைக்கால் அம்மையைத் தீயைப் போல் அழகானவள் என்கிறான். “தமிழ் அணங்கு புனிதவதி. அவள் ஈன்ற சிசு நான். உலகின் உச்சபட்ச கவித்துவம் அவள். அம்மையை அம்மையே என்னைப் பேயாக்கு. நான் பேய்மையின் கவித்துவமாக வேண்டும்” என வேண்டி நிற்கிறான்.
ரமேஷ் பிரேதனின் தன்னிலை இந்த நூற்றாண்டில் இல்லை. அது அவரே சொல்வதைப் போல மூளைக்குள் புறப்பொருள் அறிதல் சேகரமாகி அதிலிருந்து மொழி முளைத்த காலந்தொட்டு இருத்தலைக் கணக்கிடுவது. ஈராயிரமாண்டுகளுக்கு முன் தன்னைத் தேவகுமாரன் எனச் சொல்லி சிலுவையில் ஏற்றப்பட்டு வலி தாளாமல் தேவனிடம் மன்றாடும் தன் நண்பனை ஒளிந்து நின்று வேடிக்கை பார்ப்பது. கண்ணகி மதுரை மாநகரைத் தன் முலையைத் திருகிப் பிய்த்தெறிந்து அதன் கனலால் எரித்தபோது; அப்பெருந்தீ போர்க்களத்திலிருந்து தப்பித்து வந்தவனாய்த் தன்னை உணர்வது. நள்ளிரவில் கடலுக்குள்ளிருந்து வெளிவந்த அருகன் மேட்டில், அவ்வூர் உயிர்ப்போடிருந்த நாட்களில் பெய்த மழையின் ஈரம் காயாத தெருக்களில் அலைந்து திரிவது. அங்கே யவனப் பெண் ரேமாவைக் கண்டு உரையாடுவது. காலத்தின் புதிர்ப்பாதைகளின் பின்னலில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளத்தின் ஒருமை குலைந்து பைத்தியமாவது. இந்தப் பூமி தனது சுழற்சியை நிறுத்தும்வரை எனக்கு அழிவில்லை என உரைப்பது. நல்லபாம்பின் செம்புலியையும் அருகன் மேட்டின் வள்ளானையும் அந்தத் தன்னிலையைக் கொண்டே புரிந்துகொள்ள முடியும்.
ரமேஷ் பிரேதனுக்கு உடலையும் மரணத்தையும் எழுதித் தீரவில்லை. அருகன் மேட்டின் ரேமா மெய்க் கடந்த காமமே மெய்யியலின் விவாத வெளி என்கிறாள். ஆனால் வள்ளான் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மெய்யில் நிலைக்கும் தனது காதல் உரையாடல்களை ஒவ்வொரு முறையும் ரேமா மெய்யியல் உரையாடல்களாக மடைமாற்றிவிடுவதாய்ப் பிணக்கம் கொள்கிறான். வள்ளானுக்குக் காமம் ஒரு நிகழ்த்துக் கலை. வன்செயல் தவிர்த்த உடம்பால் விளையும் எல்லாம் கலையே. புணர்ச்சியும் தூக்கமும் செயலிழந்த உடம்பில் வன்மம் கொழிக்கும். மாறாக, புணர்ச்சியும் தூக்கமும் ஒருசேரத் தழுவி மனிதவுடம்பைக் கலைபொருளாக்கும்.
ரமேஷ் பிரேதனின் கதாமாந்தர்கள் கொலையையும் தற்கொலையையும் குறித்து ஓயாமல் பேசுகிறார்கள். யோசித்துப்பார்க்கிறேன், ரமேஷ் பிரேதனின் புனைவுகளில் ஏதாவது ஒரு முக்கியக் கதாப்பாத்திரம் இயற்கை மரணம் அடைந்துள்ளதா என. ஐந்தவித்தானில் மாதவனின் அப்பாவான நாவிதர் நினைவுக்கு வருகிறார். அவரையும் குளிப்பாட்டிப் பாடையில் ஏற்றிய பிறகு தோழி தேவகி மாதவனின் காதில் அப்பா இன்னும் சாகவில்லையெனக் கிசுகிசுப்பாள். அதற்கு மாதவன் உதடுகள் பிரியாமல் தெரியும் என்பான். உயிரோடு கொள்ளியிட்டு வீடு திரும்பியபின் தீ தன்னைச் சுடுவதை அப்பா உணர்ந்திருப்பார் என எண்ணிக்கொள்வான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்தல் என்பது பிறந்ததிலிருந்து மரணத்தை நோக்கிய உயிரியல் பயணம்.
கடலில் தற்கொலை செய்துகொள்ள வருபவர்களை அருகன் மேட்டில் வள்ளான் தடுத்து நிறுத்துவதில்லை. பிறரின் திட்டமிடலில் குறுக்கீடு செய்யத் தான் ஒருபோதும் முனைவதில்லை என வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டுச் செல்பவன். ஆனால் கொலை குறித்து அவனுக்குத் திடமான பார்வையுள்ளது. “மூளையில் மொழி முளைக்காத உயிர்களை உணவுக்காகக் கொல்கிறோம்; மூளையில் மொழி முளைத்த மனிதரை மேலாதிக்கத்திற்காகக் கொல்கிறோம். கொன்றவரைத் தின்றுவிடு என்று சமூகத்தின் சட்டவரையறை தீர்ப்பு வழங்கினால் நாம் சக மனிதக் கொலைகளைத் தவிர்த்திடுவோம்” என்கிறான்.
ரமேஷ் பிரேதனின் கதைசொல்லிகள் சமூகத்திலிருந்து வெளியேறி எதிர்த்திசையில் இயங்குபவர்கள். கோயில் குளமாய் ஒற்றைப் புள்ளியில் சுருங்கிய கடலின் கரையில் அமர்ந்திருக்கும் செம்புலி, மனச்சிதைவுக்கு உள்ளாகி வீடு முழுதும் எலிகளோடு வாழும் மாதவன் என. அவர்கள் இடைவிடாது யாருடனாவது உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்; சில நேரங்களில் யாருமே இல்லையென்றாலும். ஒருவேளை ரமேஷ் பிரேதன் அக்கதாமாந்தர்களினூடாக ஒரு வாசகரை உருவகப்படுத்தி உரையாடுகிறாரோ எனத் தோன்றும். ஆனால் இப்போது யோசிக்கும் வேளையில் தீராத வலியோடும் செயலிழந்த உடலோடும் தன் சுட்டுவிரலால் மட்டும் தட்டச்சு செய்துகொண்டிருந்த ரமேஷ் பிரேதன் தன் அறையில் காத்திருந்த காலனுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்குக் கதை சொல்வதன் மூலம் மட்டுமே இவ்வளவு காலம் தனது மரணத்தை ஒத்திவைத்திருந்தார்.
மின்னஞ்சல்: vinocithran@gmail.com
