உண்மையின் அழகு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. ஓராண்டுக் கால நீண்ட தீவிர மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக் தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கிக் கிராமங்களிலும் நகரங்களிலும் பல உயிர்களைப் பலி வாங்கத் தொடங்கியது.
ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தேஷிவர சிற்றூரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று. அந்த ஊரில் அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குச் செல்வதற்காகக் காத்திருந்த ஓர் இளம்பெண்ணையும் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்களையும் கொண்ட குடும்பத்தை பிளேக் தாக்கி நிலைகுலையவைத்தது. அக்குடும்பத்தின் தலைவன் விவேகமில்லாத ஓர் உதவாக்கரை. பிறரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு இருப்பதைச் சாப்பிட்டுவிட்டு ஊர்சுற்றிப் பொழுது போக்குபவன். குடும்பத்தின் தலைவி அன்பும் பாசமும் கொண்டவள் என்றபோதும் அவளால் பிளேக் நோய் தாக்கிய பிள்ளைகளுக்கு மருத்துவம் செய்ய முடியவில்லை.
மருமகளாகப் புகுந்த வீட்டுக்குச் செல்ல வேண்டிய மகளை அவள் முதலில் இழக்கிறாள். அடுத்து விளையாட்டுப் புத்தி நீங்காத சின்ன மகன் இறக்கிறான். நடுப்பிள்ளையாவது உயிருடன் பிழைத்திருக்க வேண்டும் என்று அந்தத் தாயின் உள்ளம் துடிக்கிறது. தன் பிறவியே பொருளற்றுப் போய்விடுமோ என்று மனம் நடுங்குகிறது. இப்படி அடுத்தடுத்து மரணமடைவதைப் பார்க்கத்தானா இந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தோம் எனக் கதறி அழுகிறாள்.
ஏதோ ஒரு கணத்தில் ஆவேசத்துடன் உயிர்த்திருக்கும் பிள்ளையை அழைத்துச் சென்று, அவர்கள் வணங்கும் தெய்வத்தின் சந்நிதியில் தள்ளிவிடுகிறாள். “இனிமேல் இவன் என் பிள்ளை இல்லை. உன் பிள்ளை. இவனைப் பிழைக்கவைப்பதாக இருந்தாலும், உயிரைப் பறிப்பதாக இருந்தாலும், அது உன் பொறுப்பு. எனக்கும் இவனுக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை. இது சத்தியம். சத்தியம். சத்தியம்” என்று முழங்குகிறாள். இரவு வரைக்கும் அங்கேயே அமர்ந்து மனம் ஆறும்வரை அழுதுவிட்டுத் தாயும் மகனும் வீட்டுக்குத் திரும்புகின்றனர். ஒருசில நாட்களில் அச்சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி உயிர்பிழைத்துவிடுகிறான். அக்கிராமத்துத் தெய்வத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தான் அச்சிறுவன். அச்சிறுவனே சந்தேஷிவர லிங்கண்ணையா பைரப்பா என்கிற எஸ்.எல். பைரப்பா.
‘சுவர்’ என்னும் தலைப்பில் எஸ்.எல். பைரப்பா எழுதிய தன்வரலாறு கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கியமான தன்வரலாறுகளில் ஒன்று. அவருடைய இளமைக்கால அனுபவங்களையும் பிளேக்கால் பாதிக்கப்பட்ட தனது கிராமத்துச் சித்திரங்களையும் கல்வி கற்பதற்குப் பட்ட பாடுகளையும் அந்தத் தன்வரலாற்றில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
சிறுவயதுக்கே உரிய குறும்புகளோடும் துடுக்குத்தனத்தோடும் வளர்ந்திருக்கிறார் பைரப்பா. சந்தேஷிவர விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். திரும்பிய பக்கங்களிலெல்லாம் கிணறுகளும் கால்வாய்களும் இருந்தன. ஊரின் எல்லையில் இருந்த ஏரி, அந்த ஊருக்கு மட்டுமன்றி, அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்கும் நீராதாரமாக இருந்தது. நீரைப் பார்த்ததுமே இறங்கி நீச்சலடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பைரப்பா பொழுது முழுதும் கிணறுகளையும் கால்வாய்களையும் வலம் வந்தார். அதற்குப் பொருத்தமான நண்பர்கள் அவரைச் சுற்றி இருந்தார்கள். நீச்சல் பித்து மட்டுமன்றி அவருக்கு நாடகப் பித்தும் இருந்தது. தனது கிராமத்தில் நடிக்கப்படும் நாடகத்தை மட்டுமன்றிச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நடைபெறும் நாடகங்களுக்கும் நண்பர்கள் குழுவோடு தெரிந்தும் தெரியாமலும் புறப்பட்டுச் சென்று பார்க்கும் பழக்கமும் இருந்தது.
கட்டுப்பாடான ஓர் இடத்தில் மகன் இருப்பதுதான் அவன் வாழ்க்கைக்கு நல்லது என நினைத்துத் தாயார் பாகூரு என்னும் சிற்றூரில் வாழ்ந்துவந்த தன் சகோதரரின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். படிப்பதற்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
எதிர்பாராதவிதமாக அவருடைய தாயார் இயற்கை எய்தினார். அதற்குப் பிறகு தாய்மாமனின் குடும்பத்தில் அவரிடம் பாரபட்சமாக நடக்கத் தொடங்கினர். வசைகளும் அடிகளும் பொறுக்க முடியாத எல்லைக்குச் சென்றன. அதனால் ஆசிரியரொருவரின் உதவியோடு அங்கிருந்து வெளியேறிச் சிறிது தொலைவில் உள்ள நுக்கேஹள்ளி என்னும் சிற்றூருக்குச் சென்று அங்கிருந்த பள்ளியில் சேர்ந்தார்.
புதிய கிராமத்தில் தங்குவதற்கு இடமில்லை. அதனால் கோயில் மண்டபத்தில் படுத்துறங்கினார். மண்டபத்தில் சீட்டுக்கட்டு விளையாட வந்த ஊர்க்காரர்கள் படிக்கிற பிள்ளைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டில் சாப்பாடு அளித்து உதவினார்கள். தொடக்கப்பள்ளியில் படித்து முடித்ததும் அவர்மீது நல்ல மதிப்பு கொண்டிருந்த ஆசிரியரொருவர் சென்னராயப் பட்டணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சேர உதவினார். அங்கும் கோயில் மண்டபத்தில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் சாப்பாடு வாங்கிப் பசியைத் தணித்துக்கொண்டார். அவர் பிராமண மாணவர் என்பதால் அந்த ஊரைச் சேர்ந்த அக்கிரகாரத்துக் குடும்பங்கள் அவருக்கு உணவு வழங்கின.
அவர் அங்கிருப்பதை எப்படியோ அறிந்துகொண்ட அவருடைய தந்தையார் ஒருநாள் அவரைத் தேடிக்கொண்டு அந்த ஊருக்கு வந்துவிட்டார். அவர் தங்கியிருந்த கோயில் மண்டபத்திலேயே அவரும் தங்கிக்கொண்டு தனக்கும் சேர்த்துச் சாப்பாடு வாங்கிவந்து கொடுக்குமாறு கட்டளையிட்டார். வேறு வழியில்லாமல் நான்கு நாட்களுக்கு வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார் பைரப்பா. ஐந்தாம் நாள் காலையில் பள்ளிக்கூடம் கிளம்புவதற்கு முன்பே இனிமேல் தன்னால் அவருக்கும் சேர்த்து உணவு வாங்கிக் கொண்டுவர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
அதைக் கேட்டுச் சீற்றம் கொண்ட அவருடைய அப்பா மகனைப் பழிவாங்க முடிவு செய்தார். அக்கிரகாரத்தில் அவருக்குச் சாப்பாடு வழங்கிய குடும்பத்தினரைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு “பைரப்பா அணிந்திருப்பது கள்ளப் பூணூல். அவனுக்குச் சாப்பாடு போடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்துவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டார். அன்று இரவு சாப்பாடு வாங்குவதற்குச் சென்ற பைரப்பாவின் தட்டில் ஒருவர்கூடச் சாப்பாடு போடவில்லை. எல்லா வீட்டிலும் அவரைத் தாழ்த்திப் பேசி அனுப்பினார்கள். ஏமாற்றத்தோடும் பட்டினியோடும் கோயில் மண்டத்துக்குத் திரும்பிய அவர் அன்று சோர்வில் மூழ்கிவிட்டார். அப்போதும் அவருக்கு உதவியாக நின்றவர் ஓர் ஆசிரியரே.
இளமையில் அடுத்தடுத்துச் சந்தித்த மரணங்களும் வறுமைச் சூழலும் அவரைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தின. விடை தெரியாத எண்ணற்ற கேள்விகள் அவர் நெஞ்சில் பொங்கிப் பொங்கி எழுந்தன. யமுனாச்சாரியார் என்னும் தத்துவப் பேராசிரியர் அவரைத் தத்துவப் பிரிவில் சேர்ந்து படிக்கும்படி தூண்டினார். தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு செய்தியைப் புரிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் தத்துவம் உதவும் என்ற ஆசிரியரின் சொல்லை பைரப்பா ஏற்றுக்கொண்டார். தத்துவப் பிரிவிலேயே இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார். முனைவர் பட்டமும் பெற்றார். படித்து முடித்து கல்லூரிப் பேராசிரியராக வேலையில் சேர்ந்தார். படிக்கும் காலத்தில் தனக்குக் கிடைத்த சிறுசிறு வேலைகளையெல்லாம் செய்தார். தியேட்டரில் வாயில்காப்பாளனாக வேலை பார்த்தார். கடையில் கணக்கு எழுதினார். எல்லாத் துயரங்களிலிருந்தும் மீண்டு வரக் கல்வி அவருக்கு நற்றுணையாக விளங்கியது.
தத்துவ வாசிப்பு அவரை இலக்கியம் வாசிப்பவராகவும் மாற்றியது. சரத்சந்திரர், அநாக்ரு என அழைக்கப்பட்ட. கிருஷ்ண ராவ், தேவுடு நரசிம்ம சாஸ்திரி, சிவராம காரந்த் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பிப் படித்தார். வாசிப்புப் பயிற்சி அவருக்குள் எழுத்தார்வத்தை உருவாக்கியது. மாணவப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டார்.
தனது நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கும் தன் தாயாரின் நினைவுகளைத் தொகுத்து ‘அம்மா’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை முதன்முதலாக எழுதினார். கஸ்தூரி என்னும் இதழில் அச்சிறுகதை வெளிவந்தது. அந்தக் கதை அவருக்கு எழுத்து சார்ந்து நம்பிக்கையையும் தெளிவையும் அளித்தது. அதேசமயத்தில் சிறுகதைகளை அல்ல, நாவல்களை மட்டுமே தன்னால் எழுத முடியும் என்பதையும் உணர்ந்துகொண்டார். தனது சிந்தனைகளுக்கும் அனுபவங்களுக்கும் நாவல் வடிவமே பொருத்தமாக இருக்குமென நம்பினார். அதனால் அந்த ஒரே சிறுகதையோடு, சிறுகதையை விட்டு விலகி நாவல் தொடர்பான சிந்தனையில் மூழ்கினார்.
தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற பைரப்பாவுடைய ஆய்வேட்டின் தலைப்பு ‘உண்மையும் அழகும்’. இன்றளவும் அந்த ஆய்வேடு முன்னோடி ஆய்வேடாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இறுதி மூச்சுவரை தன்னைத் தத்துவ மாணவராகவே கருதிவந்தார். வெவ்வேறு பின்னணிகளில் தனது நாவல்கள் எழுதப்பட்டாலும் அந்தப் பின்னணியில் அமைந்திருக்கும் உண்மையையும் அழகையும், தத்துவத்தைக் கருவியாகக் கொண்டு ஆய்ந்தறிவதே தனது படைப்புகளின் நோக்கம் எனப் பல அரங்குகளில் சொல்லிவந்திருக்கிறார்.
‘பீமகாய’ அவருடைய முதல் நாவல். கல்லூரி மாணவராக இருந்தபோதே, அந்நாவலை எழுதி வெளியிட்டார். அது ஒரு பயில்வானுடைய கதை. ஒரு மல்யுத்த வீரனின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பையும் தியாகத்தையும் அந்த நாவலில் சிறப்பாகவே பதிவு செய்திருந்தார் பைரப்பா.
1958 முதல் 2017 வரையில் ஏறக்குறைய அறுபதாண்டு காலத்தில் பைரப்பா இருபத்தைந்து நாவல்களை எழுதியிருக்கிறார். அவரை மரபான கதைசொல்லி என ஒருபோதும் சுருக்கி மதிப்பிட முடியாது. ஒவ்வொரு நாவலையும் ஒவ்வொரு பின்னணி சார்ந்து எழுதியிருக்கிறார். பின்னணி சார்ந்த தகவல்களை மிகவும் பாடுபட்டுத் திரட்டுபவர் அவர். ஆனால் அத்தகவல்களைத் தனது நாவலில் ஒருபோதும் நிறைத்துவைப்பதில்லை. ஒவ்வொரு பின்னணியிலும் அடிப்படையாக உள்ள ஆன்மிகத் தளத்தைத் தொட்டுப் பார்ப்பதே அவருடைய நோக்கமாக இருக்கிறது.
அவருக்கு மாபெரும் புகழைத் தேடிக் கொடுத்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ கிட்டத்தட்ட அவருடைய தன்வரலாற்றின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். சூறாவளிக் காற்றில் சிக்கி மரம் வேரோடு சாய்வதுபோல வறுமையும் அறியாமையும் பின்னிப்பிணைந்த சூழலில் சிக்கிய ஒரு குடும்பம், கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துவிழும் காட்சியை நாவலில் பார்க்க முடியும். மற்றொரு தொடக்க கால நாவலான ‘வம்ச விருட்சம்’ மரபுக்கும் மரபு மீறலுக்கும் இடையிலான உரசலை முன்வைக்கும் படைப்பு. அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத் தந்த ‘தாட்டு’ நாவல் காதலையும் சாதி மீறிய திருமணத்தின் உளவியல் சிக்கல்களையும் முன்வைக்கும் படைப்பாகும். ‘மந்த்ர’ இசையைப் பின்னணியாகவும் ‘யானா’ விண்வெளிப் பயணத்தைப் பின்னணியாகவும் கொண்டவை.
‘ஆவரண’ இருவேறு மதங்களின் முரண்பாடுகளைப் பேசுபொருளாகக் கொண்டது. தொன்ம அடையாளங்கள் எதுவுமின்றி, புராண பாத்திரங்களை எளிய மனிதர்களாக உலவவிட்டு அவர்களுடைய மன ஓட்டங்களை உற்று நோக்கித் தொகுத்துக்கொள்வதை அவர் விரும்பிச் செய்தார். நமது நாட்டின் பழைய இதிகாசங்களான மகாபாரதத்தை ‘பருவம்’ என்னும் தலைப்பிலும் இராமாயணத்தை ‘உத்தரகாண்டம்’ என்னும் தலைப்பிலும் மீட்டுருவாக்கம் செய்து எழுதினார். ஒரு படைப்பைப் போல இன்னொரு படைப்பை எழுத அவர் மனம் விரும்புவதில்லை. புதியவற்றைத் தேடுவதும் புதியவற்றை எழுதுவதும் பைரப்பாவின் மனம் விரும்பும் செயல்களாக இருந்தன.
தனது எண்பதாம் வயது நிறைவையொட்டி தான் பிறந்துவளர்ந்த சந்தேஷிவர கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென பைரப்பா விரும்பினார். மரபுவழியாக அவருக்குக் கிடைத்த பரம்பரை வீடு அந்த ஊரில் இருந்தது. பழுதுபார்க்கும் வேலைகளைச் செய்து அந்தக் கட்டடத்தை ஒழுங்குபடுத்தி, கிராமத்து மக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் ஒரு நூலகத்தை உருவாக்கினார். பொதுமக்களில் பலர் தொடக்கத்தில் நூலகத்துக்கு உற்சாகமாக வந்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார்கள். ஆயினும் அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தபடியே சென்றது. அது அவரைச் சற்றே நிராசையுறச் செய்தது என்றபோதும் அதைக் கண்டு பைரப்பா மனம் தளரவில்லை.
நாமாகவே கிராமத்துக்கு எதையேனும் செய்வதற்குத் திட்டமிடுவதற்குப் பதிலாக அவர்களுடைய தேவையை அவர்களையே கேட்டுச் செய்துகொடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்ற எண்ணத்தை பைரப்பா வந்தடைந்தார். அடுத்த கட்டமாகத் தனது ஊருக்குச் சென்று அங்கிருந்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய தேவையைக் கேட்டார். அவருடைய சிறுவயதுக் காலத்தில் அந்தக் கிராமத்தினரிடம் நிறைந்திருந்த விவசாய நாட்டம் ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே நீடித்திருக்கிறது என்பதையே அவர்களோடு நிகழ்த்திய உரையாடல் வழியாகப் புரிந்துகொண்டார். “கிணத்தில தண்ணி இல்லை”, “வாய்க்கால்ல தண்ணி இல்லை” ,“ஏரி வத்திப் போச்சி”, ”விவசாயம் செய்ய முடியலை” என்பதையே வெவ்வேறு வடிவங்களில் அனைவரும் எடுத்துரைத்தார்கள்.
பெருகியிருக்கும் விவசாய நிலத்தின் அளவுக்கேற்பத் தண்ணீர் வசதி இல்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது. நீர்த்தேவையை ஈடுகட்ட அந்தக் காலத்தில் கிடைத்ததுபோன்ற மழைநீர் மட்டுமே இப்போது போதுமானதாக இல்லை. கூடுதல் நீர் தேவையாக உள்ளது. “உங்களால முடிஞ்சா கூடுதல் தண்ணிக்கு வழி செய்ங்க” என்பதுதான் கிராமத்தினர் பைரப்பாவிடம் முன்வைத்த வேண்டுகோள்.
சந்தேஷிவர கிராமத்தின் கிணறுகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டுமெனில் ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டும். ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டுமெனில் அது ஏதோ ஒரு வகையில் பத்து, பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஹேமாவதி நதியிலிருந்து நேரிடையாகப் பிரிந்துசெல்லும் கால்வாயுடன் இணைக்கப்பட வேண்டும். அது ஒன்றுதான் வழி. ஓர் எழுத்தாளராக அதைச் சாத்தியப்படுத்தும் செயல் தனது சக்திக்கு மீறிய விஷயம் என்பது பைரப்பாவுக்கு நன்றாகவே புரிந்தது. ஆயினும் எந்த முயற்சியையும் தொடங்காமல் தோல்வியை ஏற்றுக்கொள்ள அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. “முடிந்தவரை முயற்சி செய்கிறேன்” என்று கிராமத்தினரிடம் தெரிவித்துவிட்டு மைசூருக்குத் திரும்பிவிட்டார் பைரப்பா.
அப்போது முதல்வராக இருந்தவர் பி.எஸ். எடியூரப்பா. ஒருநாள் பெங்களூருக்கு வந்து அவரைச் சந்தித்தார் பைரப்பா. தனது கிராமத்தின் தேவையை முதல்வரிடம் முன்வைத்தார். ஓர் எழுத்தாளரின் கனவை உறுதியாக நிறைவேற்றுவதாக வாக்களித்த முதல்வர் உரிய அதிகாரிகளிடம் அதைப்பற்றிப் பேசி உடனடியாக ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி தெரிவித்தார். திட்டம் தயாரான சமயத்தில் எதிர்பாராத விதமாக அரசியல் காரணங்களுக்காக முதல்வர் பொறுப்பிலிருந்து எடியூரப்பா வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
சற்றும் மனம் தளராத பைரப்பா, புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்த பசவராஜ் பொம்மையைச் சந்தித்து திட்டத்தைப்பற்றி நினைவூட்டினார். தனது அரசு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என வாக்களித்த முதல்வர் அதிகாரிகள் தயாரித்த திட்டத்துக்கு அனுமதி வழங்கி, உடனடியாக வேலையைத் தொடங்க நிதியையும் ஒதுக்கியளித்தார். பத்து கிலோமீட்டர் நீளத்துக்குக் குழாய்களைப் பதிக்கும் வேலை தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்ததால் தொடங்கிய வேலை நின்றுவிட்டது.
தேர்தலில் வென்று புதிய கட்சி பொறுப்பேற்றது. மனம் சலிக்காத பைரப்பா புதிய முதல்வரான சித்தராமையாவைப் பார்த்து எல்லா விஷயங்களையும் நினைவூட்டினார். அச்செயலை நிறைவேற்றித் தருவதாகப் புதிய முதல்வர் பைரப்பாவுக்கு வாக்களித்தார். உரிய அதிகாரிகளுக்கு உத்தரவும் தேவையான நிதியும் வழங்கப்பட்டன. இரண்டாண்டுக் காலம் தொடர்ச்சியாக நடைபெற்ற பணிகள் முடிந்து திட்டம் நிறைவேறியது. இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு 25 கோடி ரூபாயைச் செலவு செய்தது.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த இணைப்புக் கால்வாயின் திறப்பு விழா நடைபெற்றது. பைரப்பாவும் அவ்விழாவில் கலந்துகொண்டார். தான் பிறந்துவளர்ந்த சந்தேஷிவர கிராமத்தின் ஏரியும் கால்வாய்களும் கிணறுகளும் தனது பால்யகாலத்தில் நீர் நிறைந்து காட்சியளித்ததுபோலவே அப்போது காட்சியளித்ததை ஆனந்தக் கண்ணீரோடு கண்டு மகிழ்ந்தார். சந்தேஷிவர கிராமத்து மக்களும் தங்களது தேவை நிறைவேறியதை நினைத்து மகிழ்ந்தார்கள். பைரப்பாவை பகீரதன் என்று கொண்டாடினார்கள்.
பைரப்பா 1966ஆம் ஆண்டில் ‘தாட்டு’ நாவலை எழுதியமைக்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார். 2010ஆம் ஆண்டில் சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றார். 2016ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருதையும் 2023ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதையும் மத்திய அரசு வழங்கியது. சந்தேஷிவர கிராமத்தில் வாழும் படித்த, படிக்காத மக்கள் அனைவரும் அன்று அவரை நெஞ்சில் ஏந்திய கணம், அவர் பெற்ற எல்லா விருதுகளையும்விட உயர்வானது.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட தமது படைப்புகளால் கன்னட மொழிக்குப் பெருமையைச் சேர்த்தவர் எஸ்.எல். பைரப்பா. அவருடைய படைப்புகள் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன. எல்லா மொழிகளிலும் பைரப்பாவுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். தன் மங்காத படைப்புகள் வழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவருடைய பெயரும் புகழும் நிலைத்திருக்கும். அதற்கு இணையாக இலக்கிய வாசனையே இல்லாத பொதுமக்களும் அந்தத் தண்ணீர்த் திட்டத்தின் காரணமாக அவரை நன்றியுடன் நினைத்துப் பாராட்டுவார்கள்.
சந்தேஷிவர கிராமம் மட்டுமன்றி, பதினோரு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் குழாய்வழிப் பாதையில் அமைந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளும் இனி நீர் நிறைந்து காணப்படும். நிரம்பி வழியும் ஏரியைப் பார்க்கும்போதெல்லாம் பைரப்பாவின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். நிரம்பி வழியும் ஏரி ஒருவகையில் அன்பு நிறைந்த அவருடைய மனத்தின் படிமமாகவே நிலைத்திருக்கக்கூடும்.
மின்னஞ்சல்: writerpaavannan2015@gmail.com
