சிம்பன்சிகளுக்காக வாழ்ந்தவர்
உலகப்புகழ் பெற்ற புரட்சிகரமான விலங்கியலாளர், சூழல் பாதுகாப்பியலாளர் சேன் குடால் (Dame Jane Goodall) 2025, அட்டோபர், 1 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சலசு நகரில் தன் 91ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
மாந்தர்களுக்கு மிக நெருக்கமான உயிரினமான சிம்பன்சி பற்றிய அவரது 60 ஆண்டுக்கால ஆய்வு மாந்தருக்கும் சிம்பன்சி போன்ற முதனிகளுக்குமான உறவைப் புதிய கோணத்தில் நம்மைக் காணச்செய்தது. 1960இல் அறிவியல் துறையில் எந்தப் பின்புலமும் பயிற்சியும் இல்லாமல் ஆப்பிரிக்காவில் தான்சானியாவில் உள்ள கோம்பே ஆற்று புரவுக் காட்டில் சிம்பன்சிகளைத் தான் உற்று நோக்கி அவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பெயர் சூட்டி, அவற்றின் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்துவந்தார். தான் கண்டவற்றை மிகுந்த துல்லியத்துடன் தனக்கே உரித்தான ஆனால் அறியப்பட்ட முறைகள் எவற்றையும் சாராத வகையில் பதிவு செய்துவந்தார். சிம்பன்சிகளின் வாழ்க்கையில் தானும் ஒருவராக முற்றுமாக இணைந்து மூழ்கியிருந்தார். இதன் பயனாக முன்பு யாரும் கண்டு பதிவு செய்யாத புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தார்.
மனித குலத்தின் புதிய வரையறை
அவரது மிகவும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பும், அது நம் கருத்தில் ஏற்படுத்திய பெருத்த மாற்றமும் என்பது சிம்பன்சிகள் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்துவதை அவர் கவனித்தது. 1960ஆம் ஆண்டில், தாவீது கிரேபியர்டு (David Greybeard) என்று பெயரிட்ட ஒரு சிம்பன்சி, கறையான்களைப் பிடிக்க ஒரு கிளையிலிருந்து இலைகளைப் பிடுங்குவதையும் உரிப்பதையும் அந்தக் குச்சியைக் கறையான் புற்றில் விட்டு எடுத்துக் கறையான்களை உண்ணுவதையும் கண்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும், அவரது வழிகாட்டியான பெரும்புகழ் ஈட்டியிருந்த தொல்காலங்களை ஆராய்ச்சி செய்யும் அறிவியலாளர் இலூயிசு இலீக்கி, “இப்போது நாம் ‘மனிதனை’ மறுவரையறை செய்ய வேண்டும், ‘கருவி’ என்பதை மறுவரையறை செய்ய வேண்டும் அல்லது சிம்பன்சிகளை மனிதர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்பதாக அறிவித்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த அவரது பணி, சிம்பன்சிகளின் சிக்கலான சமூக வாழ்க்கையையும், உணர்ச்சி நுண்ணறிவையும், தனித்துவமான ஆளுமைகளையும் வெளிப்படுத்தியது, அவை முன்னர் மனிதர்களாக மட்டுமே கருதப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுகின்றன என்பதை அழுத்தமாக நிறுவின, அவற்றுள் நீண்டகாலக் குடும்பப் பிணைப்புகள், இடம்பிடி வல்லடிப் போர், இரக்கமுள்ள பராமரிப்பு ஆகியன சிலவாகும். இந்த நுண்ணறிவுத்திறன்கள் மனிதனையும் விலங்குகளையும் பிரிக்கும் உறுதியான சுவரை உடைத்தது மட்டுமல்லாமல், விலங்கு நலனையும் பாதுகாப்பிற்கான உலகளாவிய இயக்கத்தையும் தொடங்கத் தூண்டின.
கூர்நோக்காளர் வழக்காடி
1934, ஏப்ரல், 3 இல் இங்கிலாந்தின் இலண்டனில் வேலரி சேன் மோரிசு-குடால் (Valerie Jane Morris-Goodall) பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே விலங்குகள்மீது ஆழ்ந்த அன்பைக் காட்டினார். இந்த ஆர்வத்தை அவரது தாயார் வான்னே குறிப்பாக ஊக்குவித்தார். 1957இல் ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவிற்கு மேற்கொண்ட ஒரு பயணம் அவரை அறிவியலாளர் முனைவர் இலீக்கியைச் சந்திக்க வழிவகுத்தது. முனைவர் இலீக்கியை அவர் சந்தித்தபோது குடாலின் பொறுமையையும் கூர்ந்த ஈடுபாட்டையும் கண்டு போற்றினார். அம்மதிப்பீட்டின் அடிப்படையில் கோம்பேயில் தனது ஆராய்ச்சியைத் தொடங்க குடால் நிதியைப் பெற்றார். பின்னர் அவர் 1966இல் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் விலங்கு வாழ்நடத்தைத் துறையில் (ethology) முனைவர் பட்டம் பெற்றார்.
1980களில், முனைவர் குடால் தனது பணியைக் காட்டில் மட்டும் நிறுத்திக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தார். உலகளவில் சிம்பன்சிகள் மீதான வாழ்விட அழிவுகளும் சிம்பன்சிகள் வன்கொடூரமாக நடத்தப்படுவதையும் கண்ட அவர், தான் முழுநேர ஆராய்ச்சியிலிருந்து சிம்பன்சிகளின் நலனுக்காக உலகளாவிய ஆதரவிற்குத் தனது கவனத்தை மாற்ற வேண்டும் என்னும் பெரு முடிவை எடுத்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 300 நாட்கள் பயணம் செய்தார், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு நம்பிக்கையையும் காப்பையும் அறநெறி சார்ந்த பொறுப்பையும் பற்றிய கருத்துகளை எடுத்துச் சென்றார்.
ஒரு நீடித்த மரபு
1977ஆம் ஆண்டில், கோம்பேயில் தனது ஆராய்ச்சியை ஆதரிப்பதற்கும், உலகம் முழுவதும் பாதுகாப்பும் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும் அவர் சேன் குடால் நிறுவனத்தை (Jane Goodall Institute) நிறுவினார். 1991ஆம் ஆண்டில், அவர் வேர்களும் முளைகளும் (Roots & Shoots) என்னும் அமைப்பைத் தொடங்கினார், இது இளைஞர்களுக்கான சுற்றுச்சூழலையும் மாந்தநேயத்தையும் போற்றி வளர்க்கும் ஒரு புதுமையான கல்வித் திட்டமாகும், இது இப்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான குழுக்களைக் கொண்டுள்ளது.
முனைவர் குடாலின் பெருமைகளும் பரிசுகளும் ஏராளமாக இருந்தன, அவற்றில் 1990இல் அவர் பெற்ற நிப்பானின் கியோத்தோ பரிசும், 2025இல் அமெரிக்காவின் முதன்மைப் பரிசுகளில் ஒன்றாகிய குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கமும் (Presidential Medal of Freedom), 2003 இல் பிரித்தானியப் பேரரசு (DBE) தேம் கமாண்டர் பதவி அளித்துப் பெருமைப்படுத்தியதும் 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைதித் தூதராகப் பணியாற்றியதும் குறிப்பிடத்தகுந்தவற்றுள் சிலவாகும். தொராண்டோ பல்கலைக்கழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்கள் இவருக்குப் பெருமைய முனைவர் பட்டம் அளித்துள்ளன.
1971 இல் வெளிவந்த ‘மாந்தனின் நிழலில்’ (In the Shadow of Man) என்னும் நூலும் ‘சாளரம் வழியாக’ (Through a Window) என்னும் நூலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கோம்பே உலகத்தைக் கொண்டுவந்து காட்டின. மாந்தனின் நிழலில் என்னும் நூல் 48 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. சேன் குடால் தன் வாழ்நாளில் 32 நூல்கள் எழுதியுள்ளார், அவற்றுள் 15 குழந்தைகளுக்கானவை. இவை தவிர 40 திரைப்படங்களுக்குக் கருவாக இருந்துள்ளன.
சேன் குடால் டச்சு நிழற்படக் கலைஞர் பரோன் இயகோ வான் இலூயிக்கு என்பாரை மணந்தார் (1974இல் மணவிலக்குப் பெற்றார்). அவர்களின் மகன் இயூகோ எரிக்கு இலூயிசு வான் இலாயிக்கும், குடாலின் அயராத உழைப்பால் ஈர்க்கப்பட்ட பரந்த உலகளாவியப் பாதுகாப்பு ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் இளைஞர்களும் அவர் பிரிவால் துயருற்று இருக்கின்றனர். குடாலின் இரண்டாவது கணவர் தெரக்கு பிரைசன் (Derek Bryceson) (மணம் 1975), 1980இல் இயற்கை எய்திவிட்டார்.சேன் டாலுடைய வாழ்க்கை அறியார்வம், பொறுமை, இரக்கம் ஆகிய ஆற்றல்களின் வலுவுக்கு ஒரு நல்ல சான்றாக அமைந்தது. “ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறான்” என்று அவர் அடிக்கடி நினைவூட்டினார். அதற்கு அவரே விளக்கமாகத் திகழ்ந்தார். அவர் செய்த மாற்றம் அளவிடற்கு அரியது. அவர் விட்டுச்சென்ற மரபால் சிம்பன்சிகள் தங்களுக்கிடையே பேசுவதைத் நாம் தொடர்ந்து கேட்கவும், சிறந்த, நிலைப்பான உலகம் திகழவும் அவற்றுக்கான போராட்டம் உலகில் தொடரும் என்பதை நம்மால் நம்ப முடிகின்றது.
செல்வகுமாரன்: இயற்கை ஆர்வலர், கனடாவில் வசிக்கிறார்.
மின்னஞ்சல்: c.r.selvakumar@ gmail.com
