கால் நூற்றாண்டுப் பயணம்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ தொடங்கி இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது இருவருக்கும், நூல்களுக்கான விருதுகள் மூவருக்கும் வழங்கப்பட்டன. கனடா, டொரண்டோவில் அக்டோபர் 4 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவின் முக்கிய அம்சங்கள் பற்றிய பதிவு இது.
2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்குமான பல செயல்பாடுகளை முன்னெடுத்துவருகிறது. சிறந்த தமிழ்ப் படைப்புகளை வெளியிடுவது, நல்ல படைப்பாளிகளை இனம் கண்டு விருதளிப்பது, டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து மொழிச் செயல்திட்டங்களை நிறை வேற்றுவது என்று தொடர்ந்து பணியாற்றிவருகிறது.
தமிழ்ப் படைப்பாளிகளையும் சாதனையாளர்களையும் அடையாளப்படுத்தி வழங்கப்படும் இவ்விருதுகளை இதுவரை பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 200 பேர் பெற்றுள்ளார்கள்.
வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அக்டோபர் 4 அன்று 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஏழு பேருக்கு வழங்கப்பட்டன.
விழாவின் தொடக்கத்தில் கனடாவின் ஆதிக்குடிகளுக்கும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் போரினாலும் இயற்கைச் சீற்றங்களாலும் உயிர் துறந்தவர்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவைத் தொடங்கிவைத்த தமிழ் இலக்கியத் தோட்டத்தின் காப்பாளர் பேராசிரியர் ஏ.ஜே.வி. சந்திரகாந்தன் இயல் விருதுக் குழுவின் பணிகளையும் பங்களிப்புகளையும் அதன் திட்டங்ளையும் உரையில் விரிவாக எடுத்துக் கூறினார். இலக்கியத் தோட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் மனுவல் இயேசுதாசன் வரவேற்புரை வழங்கினார். “தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதானது எங்களுடைய ஸ்தாபகரும் இந்த அமைப்புக்காக 25 வருடங்களாக அரும்பாடுபட்டுத் தனது பெரும்பான்மையான நேரத்தை அர்ப்பணித்து இதை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவருமான அ. முத்துலிங்கம் பெயரில் ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான புனைவு விருதை ‘பம்பாய் சைக்கிள்’ நாவலுக்காகப் பெற்ற இரவி அருணாச்சலம் “என் 65ஆவது வயதில்தான் எனது எழுத்துக்கு முதன்முதலாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” என்றார்.
‘எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்’ என்ற நூலுக்காக அல்புனைவு விருதினைப் பெற்ற த. பிச்சாண்டி, இந்த விருதைத் தன் வாழ்வில் பெற்ற முக்கிய அங்கீகாரமாகக் கருதுவதாகக் கூறினார்.
இரண்டு கவிதை நூல்களுக்கு விருது வழங்கப்பட்டது. ‘அருகிருக்கும் தனியன்’ நூலுக்காக விருது பெற்ற ரவி சுப்பிரமணியன் கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 25 ஆண்டுக்காலப் பங்களிப்புகளைப் பாராட்டிப் பேசினார். “தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் முன் நின்று அதனை அண்ணாந்து பார்க்கிற ஒரு சிறுவன்போல நான் வியந்து பார்க்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கவிதை நூலுக்கான இன்னொரு விருதை ‘நிலங்களின் வாசம்’ நூலுக்காக ரியாஸா எம். ஜவாஹிர் பெற்றார்.
மொழிபெயர்ப்புக்கான விருது நீத்ரா ரொட்ரிகோவிற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட நீத்ரா தமிழ்ச் சமூக மைய உருவாக்கத்திற்கான ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இயல் விருதுகள் எழுத்தாளர்கள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா, யுவன் சந்திரசேகர் இருவருக்கும் வழங்கப்பட்டன. சுகிர்தராஜா குறித்துக் கவிஞர் சேரன் அறிமுக உரையாற்றினார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஆஸ்டின் சௌந்தர் யுவன் சந்திரசேகரைப் பற்றி உரையாற்றினார்.
தனது எழுத்துக்கள், தமிழுக்கும் தனக்குமான உறவு பற்றி விரிவாகப் பேசிய சுகிர்தராஜா, “நாம் இன்னும் காலனியப் பார்வையில்தான் இருக்கிறோம். நாம் நம்முடைய எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், நடனக் கலைஞர்கள் பெருமையை நிரூபிக்க மேற்கு எழுத்தாளர்களைத்தான் ஒப்பிடுகிறோம். இப்போது சமீபத்தில் வந்த ‘வேள்பாரி’ கதையை இதுதான் தமிழகத்தின் ‘வார் அண்ட் பீஸ்’ என்று சொல்கிறோம். ஏ.ஆர். ரகுமானைப் பற்றிச் சொல்லும்போது ‘ரகுமான்தான் மெட்ராஸின் மோசார்ட்’ என்கிறோம். ‘மோசார்ட்தான் ஜெர்மனியின் ரகுமான்’ என்று எப்போது சொல்லப்போகிறோம்? இங்கிலாந்தின் பாரதிதாசன் யார் என்று நாம் கேட்கவே இல்லை. அமெரிக்காவின் அம்பை யார் என்று கேட்கவே இல்லை. அந்த நிலை மாறினால்தான் தமிழும் முன்னேறும். இந்த விருதைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.
வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. “நான் பிறவி எழுத்தாளன் இல்லை. திட்டமிட்டு எழுத்தாளன் ஆனவனும் கிடையாது. தற்செயலாக எழுத்தாளன் ஆனவன். பத்து வருஷம் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். அது ரொம்ப நிம்மதியான காலம். ஏனென்றால் கவிதை எழுதுவதற்கு உடல் உழைப்பு வேண்டாம்” என்று தொடங்கியவர், தான் புனைகதை எழுதத் தொடங்கியது பற்றியும் எழுத்து சார்ந்த அவஸ்தைகள் பற்றியும் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார். தன் “காதல் மனைவி உஷாவுக்கு மிகுந்த பிரியத்தோடு” இந்த விருதைச் சமர்ப்பிப்பதாகத் தழுதழுப்புடன் கூறினார்.


காலச்சுவடு வெளியீடான ‘பம்பாய் சைக்கிள்’ நாவலுக்காக இலக்கியத் தோட்ட விருது 2024 பெறும் எழுத்தாளர் இரவி அருணாசலத்துக்கு காலச்சுவடின் வாழ்த்துக்கள்.
சிறப்பு விருந்தினராக அமெரிக்காவாழ் தமிழ் எழுத்தாளர் சொர்ணவேல் ஈஸ்வரனும் ஒட்டாவா நாடாளுமன்றம் சென்ற முதல் கனேடிய தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய ஜொனிட்டா நாதன் விழாவில் முதன்மை விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.
இறுதியாக உரையாற்றிய அ. முத்துலிங்கம், “25 வருடத்துக்கு முன்பு மகாலிங்கமும் செல்வமும் நானும் செல்வ கனகநாயகத்தைச் சந்திக்க டொரண்டோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றோம். அப்போது அங்கே உதித்ததுதான் இந்த இயல் விருது என்ற விஷயம். அப்போது இது 25 வருடம் தொடரப்போகிறது என்று எங்களுக்கே நம்பிக்கை இல்லை. ஆனால் வெற்றிகரமாக இந்த 25 வருடத்தை நாங்கள் முடித்திருக்கிறோம். சில குறைகள் இருக்கலாம், பிழைகள் இருக்கலாம், தவறுகள் இருக்கலாம், குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் வெங்கடாசலபதி சொல்வார், ‘பானை ஓட்டை என்றாலும் கொழுக்கட்டை வெந்துவிட்டது’ என்று. 25 வருடக் கொழுக்கட்டையும் வெந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.
இயல் விருதுப் பயணத்தில் தனக்கு உதவிவரும் தன்னுடைய குடும்பத்தினருக்கு முத்துலிங்கம் நன்றி தெரிவித்தார். “25 வருடம் என்றால் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு. அதை இந்த விருதுக்காகக் கொடுத்திருக்கிறேன். இந்த வருடத்திலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். இதேபோல் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
பிரசாந்த் ஜெயராம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். எஸ்.ஜே. ராம்பிரசன் நன்றி கூறினார்.
மின்னஞ்சல்: arulselvanakm4@gmail.com
