எனது காலத்தின் குரல்

கறுப்பு ஜூலையின் 25ஆம் ஆண்டு நினைவுகூரலின் பொருட்டு, 2008ஆம் ஆண்டிலே கனேடியத் தமிழர் பேரவை பன்முகப்பட்ட நிகழ்வுகளை ரொரன்ரோவின் பல பாகங்களிலும் ஒழுங்கு செய்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சேரனின் ‘வான் பொய்த்தால்’ ‘What if the Rain Fails’ என்ற ஆங்கில நாடகம் பல காட்சிகளாக ரொரன்ரோவில் Distillary historic Districtஇல் அமைந்துள்ள Young Center for the Performing arts அரங்கிலே மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தைப் புகலி அரங்கக் குழு சார்பாக நான் நெறியாள்கை செய்திருந்தேன்.
அந்த நிகழ்வுகளின் நோக்கம் தமிழ் இளையோருக்கும் தமிழர் அல்லாதவர்களுக்கும் இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமைகள்பற்றியும் இன அழிப்புப் பற்றியும் எடுத்துரைப்பதே என்பதால், ஒவ்வொரு மேடையேற்றத்தின் முடிவிலும் பார்வையாளர்களுடனான ஒரு கலந்துரையாடலையும் ஒழுங்குசெய்திருந்தோம். ஒரு மேடையேற்றத்தின் முடிவிலே, தமிழர் அல்லாத ஒரு பெண்மணி, தான் யாழ் நூலக எரிப்பைப் பற்றி அறிந்திருந்ததாகவும், ஆனால் நாடகத்தில் பேசப்பட்ட வேறெந்த நிகழ்வுகள் பற்றியும் அறிந்திருக்கவில்லையென்றும் கூறி, அந்த நிகழ்வுகளெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றனவா எனக் கேட்டார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த சேரன், ‘ஈழத்தமிழரின் விடுலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் நான் எனது கவிதைகளுடாகப் பதிவுசெய்து ஆவணப்படுத்தியிருக்கிறேன்’ எனக் கூறினார்.
அந்தப் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு மானிடவியல் பேராசிரியர், இன அடிப்படையிலான ஒடுக்குமுறைகள்பற்றியும் இன அழிப்புகள் பற்றியும் பல்கலைக்கழகத்திலே பாடத்திட்டம் அமைப்பதிலும், விரிவுரை யாற்றுவதிலும், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதிலும் ஈடுபட்டிருக்கின்ற ஒரு அறிவுஜீவி, சட்டர்டே ரிவியூ ஊடாகவும் சரிநிகர் ஊடாகவும் யுத்தகால ஊடகவியலாளராக விளங்கிய ஒரு அரசியற் செயற்பாட்டாளர், தான் பின்னிப்பிணைந்திருந்த, தனது வாழ்வை நிழலாகத் தொடர்ந்திருந்த ஒரு சமகாலப் போராட்டத்தைப் பதிவுசெய்யத் தான் தேர்ந்த முக்கியமான கருவி தனது கவிதைகளே எனச் சொன்னதே எனது வியப்புக்குக் காரணம்.
உருத்திரமூர்த்தி சேரன் என்ற மனிதருக்குப் பல முகங்கள் இருந்தாலும், தனது முக்கிய முகமாக அவர் கருதுவதும் வரித்துக்கொண்டுள்ளதும் கவிஞர் என்ற முகமே என நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. அந்தவகையிலே ஹரி ராசலெட்சுமியும் எம். பௌசரும் தொகுத்திருக்கும் ‘உறைய மறுக்கும் காலம்’ என்ற நூல் ‘கவிஞர்’ சேரனை முன்னிறுத்தி வெளிவந்திருப்பது மிகவும் பொருத்தமானதே. இந்தக் கனதியான பணியை முன்னெடுத்து நிறைவேற்றிய தொகுப்பாளர்களுக்கும், வெளியிட்ட சமூகம் இயல் பதிப்பகத்தினருக்கும் வாழ்த்தும் நன்றியும்.
‘What if the Rain Fails’ நாடகம் 81ஆம் ஆண்டுமுதல் 83ஆம் ஆண்டுவரையான காலத்தில் நிகழ்ந்த பல கோர நிகழ்வுகளை நினைவுகொள்வது. அந்த நினைவுகளை மீட்க சேரன் அந்தக் காலகட்டத்திலேயே எழுதப்பட்ட கவிதைகளையும், சிறுகதைகளின் பகுதிகளையுமே பயன்படுத்தினார். அந்த நாடகத்தை முழுமையாக நாடகத்திற்கான உரையாடல்களைக் கொண்ட ஒரு பனுவலாக உருவாக்காமல் கவிதைகளையும் சிறுகதைகளையும் சேர்த்து உருவாக்கிய காரணத்தை நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். அதற்குப் பதிலாக, ‘அந்தந்தக் காலகட்டத்திலே அந்தந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய அஞருக்கு எதிர்வினையாக, அது ஏற்படுத்திய காயங்களுக்கான கைமருந்தாக எழுதப்பட்ட கவிதைகளின் வீச்சையும் அதிர்வையும் காலங்கடந்து எப்படித்தான் முயற்சித்து எழுதினாலும் இப்போது கொண்டுவர முடியாது’ என்ற பொருள்படப் பதிலிறுத்தார். காலத்தையும் வரலாற்றையும் நேர்மையாகப் பதிவுசெய்யப் பொருத்தமான கருவிகள் கவிதையும் கதையுமே என்ற அவரின் நம்பிக்கையை இந்தப் பதிலிலும் காணலாம்.மேலும், நினைவெழுத்திலும் புனைவிருக்கிறது என்ற சேரனின் கருத்தும் இதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
எழுபதுகளிலே கவிஞராகக் கவனம் பெறத் தொடங்கிய சேரன், அன்றுமுதல் இன்றுவரை நமது காலத்தின் நியாயப்பூர்வமான குரலாக இருந்துவருகிறார் என இந்த நூலின் தொகுப்பாளர்களும் பதிப்பாளர்களும் முன்மொழிவதையே கருணாகரனும் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘உறைய முடியாக் காலம்’ என்ற தனது கட்டுரையிலே வழிமொழிந்து “இது அவர் தானாக ஏற்றுக்கொண்ட சிலுவை. தார்மீக அடிப்படையிலான பொறுப்பேற்றல்” எனக் கூறுகிறார்.
இந்தப் பொறுப்பை சேரன் மிகவும் சிரத்தையுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதற்கான சாட்சியமாக, தனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் இதே காலத்தின் குரலாக விளங்கிய தனது சமகாலக் கவிஞர்கள் மீதும் சேரன் தன்மீது பாய்ச்சப்பட்ட ஒளியைத் தெறிக்கவிட முயற்சித்துவந்துள்ளார் என்ற உண்மையை எடுத்துக்காட்டலாம். தனது What if the rain
Fails’ நாடகத்திலே ஊர்வசியினதும், ‘Basil Fernando’ வினதும் கவிதைகளோடு, ரஞ்சகுமாரின் கோசலை சிறுகதையின் ஒரு பகுதியையும் இணைத்துக்கொண்டார். ‘Not by Our Tears’ நாடகத்திலே சேரனின் கவிதைகளுக்குச் சமமாக புதுவை இரத்தினதுரையின் கவிதைகளும், வ. ஐ. ச. ஜெயபாலனின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கும். 2012ஆம் ஆண்டிலே எழுத்தாளர் அ. முத்துலிங்கம், பேராசிரியர் செல்வா கனகநாயகம், கவிஞர் சேரன் ஆகியோரை முன்னிறுத்தி ரொரன்டோ தமிழ் இலக்கியக் குரல்கள் என்ற நிகழ்ச்சியை ரொரன்ரோ பொதுநூலகம் தனது மல்வேர்ண் நூலக அரங்கிலே ஒழுங்குசெய்திருந்தது. அங்கே நிகழ்த்தப்பட்ட ஆற்றுகையிலே சேரனின் கவிதைகளோடு ரொரன்ரோவாசியான கவிஞர் திருமாவளவனின் கவிதையும் இடம்பெற்றிருந்தது. வின்சர் பல்கலைக்கழகத்தில் தான் கற்பிக்கும் இனப்படுகொலை குறித்த பாடத்திட்டத்தில் தனது கவிதைகளோடு ஜீன் அரசநாயகத்தின் கதைகளையும், பெஞ்சமின் டிக்ஸ் லின்ட்சே பொலாக் ஆகியோரின் ‘வன்னி’ சித்திர நாவலையும் சேர்த்துள்ளதை அபர்ணா ஹல்பேயுடனான அவரது நேர்காணலிலிருந்து அறிய முடிகிறது. இவை நான் அறிந்த தருணங்கள் மட்டுமே. அறியாதவை இதைவிடக் கூடுதலாக இருக்கும்.
2008லே ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழியல் மாநாட்டிலே கவிஞர் சோலைக்கிளியின் கவிதைகள் பற்றிய ஆய்வொன்றைச் சேரன் நிகழ்த்தியிருந்தார். அதே அரங்கிலே, சேரன் – ஜெயபாலன் -புதுவை இரத்தினதுரை ஆகியோரின் கவிதைகள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுரையைப் பேராசிரியர் செல்வா கனநாயகம் நிகழ்த்தியிருந்தார். ‘எல்லோரும் உங்கள் கவிதைகளை ஆய்வுசெய்துகொண்டிருக்க, நீங்கள் ஆய்வுசெய்வதற்காக சோலைக்கிளியைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன’ என அவரிடம் நான் வினவியபோது ‘சோலைக்கிளி எமது காலத்தின் மிக முக்கியமான குரல் ஆனால் அந்த முக்கியத்துவத்திற்குரிய கவனம் அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பது என் ஆதங்கம்’ எனச் சேரன் கூறியது நினைவில் இருக்கிறது.
சேரன் தன் முயற்சியாக மேற்கொண்டுவந்துள்ள இந்தச் செயற்பாட்டின் தாக்கமும், “ஒரு படைப்பாளியின் படைப்புக் குறித்து வெளிவந்தவற்றைத் தொகுக்கும்பொழுது அந்தப் படைப்பாளி மட்டுமல்ல, அக்காலத்தில் எழுதிய எழுத்தாளர்களும் பதிவுசெய்யப்பட்டுவிடுகிறார்கள்” எனக் கூறும் இந்த நூலின் தொகுப்பாளர்களின் நோக்கமும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது.
தனது காலத்தை – எமது காலத்தை – பதிவுசெய்ய சேரன் கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணம் கவிதையே ஒரு மொழியின் உச்சவடிவம் என அவர் நம்புவதே எனலாம். இந்தக் கருத்தைச் சேரன் பல இடங்களிலே பதிவுசெய்துள்ளார். பன்மொழி ஆளுமை பெற்றிருக்கும் அவர், கவிதைகளைத் தன்னால் தமிழில் மட்டுமே எழுத முடியும் என்றும் ஆணித்தரமாகப் பதிவுசெய்துள்ளார். அவரின் இந்தத் தமிழ்மொழிமீதான பற்றும் ஆளுமையுமே “என் தாய்மொழியில் செயல்படும் இலக்கிய ஆர்வலன் என்ற அளவில், என்னுடைய ஆர்வமெல்லாம் கவிதையின் அழகியல் குறித்தானதுதான்” என இந்தத் தொகுதியிலே இடம்பெற்றுள்ள தனது கட்டுரையிலே பதிவிட்டுள்ள யுவன் சந்திரசேகரை ‘சேரனின் காஞ்சி உலகளாவிய ஒரு கவித் தருணம்’ எனச் சிலாகிக்கவைக்கிறது. அந்தவகையிலே, வரலாற்றுப் பதிவு என்பதற்கு அப்பால் தமிழின் செழுமையை ஊடுகடத்தவும், அதனால் வரலாற்றில் தமிழோடு வாழவும் சேரனின் கவிதைகளால் முடிகிறது. இதன்மூலம், எமது காலத்தின் குரல் காலம் கடந்தும் ஒலிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இது உறைய மறுக்கும் குரல்.
(2025, மே 10 அன்று சேரனின் எழுத்து வாழ்வு 50 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டுக் கனடாவில் வெளியிடப்பட்ட ‘உறைய மறுக்கும் காலம்’ நூலின் வெளியீட்டு விழா உரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)
மின்னஞ்சல்: dushyg@gmail.com
