அப்படி ஓர் உலகம்

ஷாலினி பிரியதர்ஷினி, கோ. ஒளிவண்ணன், ஜி. குப்புசாமி, மருதன், மு. வேடியப்பன்
சென்ற நூற்றாண்டில் உலகத்தை உலுக்கிய படைப்புகளில் ஒன்று இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘தீரமிகு புது உலகம்’ (Brave New World). இந்தப் புத்தகம் உலகத்தை உலுக்கியதன் காரணம் மிக எளிமையானது: எதிர்காலம் குறித்த அச்சம் உலகை உக்கிரமாகப் பீடித்திருந்த காலகட்டத்தில் வெளியான நாவல் இது. ஆனால் அச்சத்தைப் போக்காமல் அதிகரிக்கச் செய்ததோடு ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டிய நாவல். நூல் 1932இல் வெளிவந்தபோது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஆனால் பின்னர், பல இடங்களில் தடை செய்யப்பட்டது. “இந்தப் புத்தகம் மனிதகுலத்திற்கு உகந்ததல்ல” என்று சிலர் கூறினார்கள். சில நாடுகளில் தடை செய்யப்பட்டதால் இந்நாவல் பெரும் கவனத்தை ஈர்த்து, மக்கள் அதை இன்னும் அதிகமாக வாசிக்கத் தொடங்கினார்கள்.
1932, உலக வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போருக்கு இடைப்பட்ட காலம். உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்தது.
முதலாம் உலகப் போரில் நடந்த உயிர்ப்பலிகள் மக்கள் அதுவரை கண்டிராதவை. அதற்கு முன்பு போர்களில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய ஆயுதங்களை அதீத அறிவியல் முன்னேற்றத்தினால் உருவாக்கப்பட்ட விமானங்களும் வெடிகுண்டுகளும் கொத்துக்கொத்தாக மனிதர்களைக் கொன்றழித்தன. இது மக்களிடையே ஒரு பெரும் அவநம்பிக்கையை உருவாக்கியது. எல்லாவற்றின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கியதுதான் நவீன இலக்கியம் உருவானதற்கான முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் இயல்பான மனித உணர்வுகளைச் செயற்கையான அறிவியல் வளர்ச்சி ஆட்கொள்ளும்போது எதிர்காலம் ‘என்ன ஆகும்?’ என்ற கேள்விக்கு விடையாக ‘தீரமிகு புது உலகம்’ ஆசிரியர் எழுதியுள்ளார்
‘தீரமிகு உலகம் போன்ற படைப்புகளை டிஸ்டோபியன் – துர்க்கற்பனை இலக்கியம் எனக் கூறுவார்கள். சமூகம் எங்கே செல்கிறது? தொழில்நுட்பம் எவ்வாறு மனிதனை மாற்றுகிறது, மக்கள் தேடும் அறிவு வளர்ச்சி அவர்களை எங்கு கொண்டு நிறுத்தும் என்பதற்கான எச்சரிக்கை. அடிப்படையான மனித இயல்புகளைக் கணக்கில் கொள்ளாமல் அறிவியல் கண்மூடித்தனமாக முன்னேறிக்கொண்டிருக்கும்போது, அது நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தும் என்பதற்கான எச்சரிக்கை.
இந்தக் கதை தொடங்குவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, உலகமே ஆந்த்ராக்ஸ் போரினால் (Anthrax War) முற்றிலும் அழிந்துவிடுகிறது. அப்போது அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்றவை பற்றி மக்களுக்குத் தெரியாது. அதனால், ஆசிரியர் ஆந்த்ராக்ஸ் போரை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார். அந்தப் போருக்குப் பிறகு, புதிய உலகம் உருவாகிறது. இது ‘புதிய உலக ஒழுங்கு’ (New World Order) என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் புதிய உலகின் விதிகள்:
• இனிமேல் நாடுகள் என்பதே கிடையாது. உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்கும்.
• ஒரே ஒரு மொழி மட்டுமே இருக்கும்.
• யாருக்கும் சொந்தமாகப் பெயர் கிடையாது.
• யாருக்கும் தனிப்பட்ட சொத்து (private property) கிடையாது.
• மிக முக்கியமாக, குடும்பம் என்பதே கிடையாது. ‘அப்பா’, ‘அம்மா’ போன்ற வார்த்தைகள் மிகவும் மோசமான வார்த்தைகளாகக் கருதப்படுகின்றன.
பாலியல் விளையாட்டுகள் சிறிய வயதிலிருந்து கட்டாயமான ஒன்று. ஆனால் கருத்தரிக்க முடியாது. அப்படியென்றால், குழந்தைகள் எப்படி உருவாகின்றன? உலகம் முழுவதும் பல கருத்தரிப்பு மையங்களில் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன. செயற்கை முறையில் கருத்தரித்தல் பற்றியெல்லாம் மக்கள் அறியாத காலகட்டத்தில், அதாவது 1932இல் இதை அவர் எழுதுகிறார்.
மக்கள் ஏன் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்குச் செல்கிறார்கள் என்றால், அது ‘என் குழந்தை’ என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்தக் கதையில், அந்த மையத்திற்குச் சென்றால், அந்தக் குழந்தை தனக்குச் சொந்தமானது என்று தெரியாது. ’மனிதன் வேட்டையாடும் வாழ்க்கையிலிருந்து விவசாயப் புரட்சிக்கு வந்தபோதுதான் பிரச்சினைகள் தொடங்கின. அவன் ‘எனது நிலம்’ என்று சொல்லத் தொடங்கியபோது, ‘எனது குடும்பம்’ என்ற எண்ணமும் வரத் தொடங்கியது. அதுவே பின்னர் நாடு, அரசு, சமூகம் என வளர்ந்துவிட்டது. ஆனால் இந்தப் புதிய உலகில் அது கிடையாது’ என்கிறது தீரமிகு புது உலகம்.
குழந்தைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி முதல் அத்தியாயத்திலேயே பெர்னார்ட் என்ற இந்தக் கதையின் பாத்திரத்தின் மூலம் ஹக்ஸ்லி விளக்குகிறார். பெண் கருமுட்டை சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட விந்தணுவின் மூலம் கருவேற்றப்படுகிறது. கருமுட்டை கதிரியக்கத்தின் மூலம் 96 பிரிவுகளாகத் துண்டிக்கப்பட்டு ஒவ்வொன்றும் தனித்தனிக் கருக்களாக வளர்க்கப்படுகின்றன. இந்த 96 குழந்தைகளும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். இது கிட்டத்தட்ட ஹென்றி ஃபோர்டின் அசெம்பிளி லைன் போலத்தான்.
அந்த வளரும் கருக்களை அவர்கள் ஐந்து படிநிலைகளில் பிரித்துவைத்து ஒவ்வொரு பிரிவில் இருக்கும் கருக்களையும் ஒவ்வொரு விதமாக வளர்க்கிறார்கள். இந்தக் கருத்தாக்கத்துக்கும் இந்தியாவுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது. ஆல்டஸ் ஹக்ஸ்லிக்கு ராமகிருஷ்ண மடத்தின் மூலமும், பிற அமைப்புகள் மூலமும் இந்தியாவின் சமூக அமைப்பு, சாதிப் படிநிலை பற்றித் தெரிந்திருக்கிறது. அவர் 1920களில் இந்தியாவுக்கு வந்தவர்.
அவர் குழந்தைகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்:
1. ஆல்ஃபாக்கள்: இவர்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். மிக அறிவாளிகள். இவர்கள் எந்தவிதமான உடல் உழைப்பும் செய்ய மாட்டார்கள். ஒரு கோப்பைத் தண்ணீர்கூட எடுத்துத் தர மாட்டார்கள். உத்தரவிடுவது மட்டுமே இவர்கள் வேலை.
2. பீட்டாக்கள்: இவர்களுக்கு ஆல்ஃபாக்களைப் போல் அவ்வளவு ஆதிக்கக் குணம் இருக்காது. ஆனால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு கீழ்நிலையில் இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
3. காமாக்கள்: இவர்கள் ஓரளவு திறன் கொண்டவர்கள். அரைத் திறனாளர்கள்.
4. டெல்டாக்கள்: இவர்களுக்கு எந்தத் திறனும் தெரியாது. முழு முட்டாள்கள். இவர்களுக்குப் புத்தகம் படிக்கவோ, கவிதை எழுதவோ, கட்டுரை எழுதவோ தெரியாது. சொல்வதை மட்டும் அப்படியே செய்பவர்கள்.
இந்த நான்கையும் தாண்டி எப்சிலான் என்று ஒரு பிரிவும் உண்டு. மலம் அள்ளுவது, சாலை பெருக்குவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்பவர்கள் இவர்கள்.
இந்தச் சமூகப் பிரிவுகளை எப்படி உருவாக்குகிறார்கள்? இந்தக் கதையில், இது அறிவியல்ரீதியாக விளக்கப்படுகிறது. உதாரணமாக, டெல்டா குழந்தைகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.
அந்தக் குழந்தைகளுக்குப் புத்தகத்தைக் கண்டாலே எரிச்சல் உண்டாகும்படி வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தைகள் வளரும்போது, அவர்களுக்குப் புத்தகங்களையும் வண்ணப் புத்தகங்களையும் மலர்களையும் அருகில் கொண்டு வருவார்கள். அந்தக் குழந்தை அதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். அதைத் தொட நெருங்கும் நேரத்தில், திடீரென ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்கும். உடனே அவர்களுக்கு அதிர்வு உண்டாகும். உடல் நடுங்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பயந்துபோவார்கள். இது ஒருமுறை, இருமுறை அல்ல, சுமார் 200 முறை தொடர்ச்சியாக நடக்கும். அதன் விளைவாக, அந்தக் குழந்தைகள் புத்தகத்தைப் பார்த்தாலே பயந்து ஓடிவிடுவார்கள்.
ஏன் புத்தகங்கள்? ஏனெனில், புத்தகங்கள் ஆபத்தானவை. படிக்காத சமூகத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. எல்லோரும் ‘எஜமான்’ என்று அடுத்தவர் காலைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், படிக்க ஆரம்பித்த பிறகுதான் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் உலகத்தில் பல இடங்களில் நூலகங்கள் எரிக்கப்பட்டன. அலெக்சாண்டிரியா நூலகத்திலிருந்து யாழ்ப்பாணம் நூலகம்வரை, புத்தகங்கள் என்ன செய்தன? அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் அழித்தார்கள்.
ஆல்ஃபா பிரிவிலுள்ள குழந்தைகளுக்கு, அவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ்தான் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லி வளர்க்கிறார்கள். இந்தக் குழந்தைகள் ஐந்து முறைகளில் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்:
1. ஹிப்னோபீடியா: இது ‘ஹிப்னாடிக்ஸ்’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அதாவது, ‘துயில் நிலைக் கல்வி’. ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மூளை அதை ஏற்றுக்கொள்கிறது. இதைத்தான் இன்றைய மூளை அறிவியலில், ரெட்டிகுலர் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (RAS) என்று சொல்கிறார்கள். இந்த RASக்கு நாம், “நான் ஒரு சிறந்த பாடகன், மேடைப் பேச்சாளன்” என்று திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அது அதற்கான சான்றுகளைச் சேகரித்து நமக்குத் தருகிறது. இது ஒரு நேர்மறையான சுழற்சியை உருவாக்கி, ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. இதையேதான் இந்தக் குழந்தைகள்மீது திரும்பத் திரும்பச் செலுத்திப் பழக்கப்படுத்துகிறார்கள்.
2. நியோ-பவ்லோவியன் கண்டிஷனிங்: இது ‘பவ்லோவின் நாய்’ பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாய்க்கு உணவுடன் மணி அடிக்கும்போது அதன் வாயில் உமிழ்நீர் சுரக்கும். ஆனால் நாளடைவில் மணி அடிக்கும் சத்தம் கேட்டாலே அதற்கு உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும். குழந்தைகளைப் புத்தகங்களையும் மலர்களையும் கண்டு பயப்படவைத்தது இந்த முறையின் அடிப்படையில்தான்.
3. கட்டுப்படுத்தப்பட்ட சூழல்: எப்சிலான் போன்றவர்களை உருவாக்க, குழந்தைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு திட்டமிட்டுக் குறைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறைத்தால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அந்த அளவுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. இதைவிடக் குறைத்தால் குழந்தை இறந்துவிடும். இந்த முறையில் வேண்டுமென்றே அவர்களின் மூளை வளர்ச்சியைத் தடுக்கிறார்கள்.
4. உறவுகள் இல்லாத உலகம்: இங்கு உறவுகள் என்பதே கிடையாது. ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ புத்தகத்தில் முதல் சில அத்தியாயங்களில் வருவதுபோல, அங்கு யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்தக் கதையில் குழந்தைகள் தனிப்பட்ட உடைமைகள் அல்லர். அவர்களின் விளையாட்டுகளில் பாலியல் விளையாட்டுக்கள் மிக முக்கியமானவை. ஏனென்றால், யாரும் கருத்தரிப்பதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இங்கு சோமா (Soma) என்ற ரசாயனப் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நகரத்தின் சில பகுதிகளில் இரவு 8 மணிக்கு மேல் போக வேண்டாம் என்று சொல்வார்கள். அங்கு போதைப்பொருள் பழக்கம் கொண்ட மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அங்குள்ள அரசாங்கம், அந்த மக்கள் எப்போதும் போதையில் இருப்பதையே விரும்புகிறது. ஏனென்றால், அவர்கள் போதையில் இருக்கும்வரை, அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் காலையில் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்.
இந்த ஐந்து விதமான வழிகளில், குழந்தைகளை நிபந்தனைக்குட்படுத்தி உருவாக்குகிறார்கள். இதைத்தான் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த, இன்னொரு கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெர்னார்ட் என்பவனுக்கு லீனா என்ற பெண் துணை இருக்கிறாள். இவர்களுக்குள் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. பெர்னாட் ஆல்ஃபா பிரிவைச் சேர்ந்தவன். ஆனாலும், அவனுக்கு இந்தச் சமூக அமைப்பு பிடிக்காமல் இருக்கும். ஆனாலும், அவன் இந்த அமைப்பிற்குள் இருக்கிறான். ஏனென்றால், அது அவனுக்குப் பல நன்மைகளைத் தருகிறது.
ஒரு கட்டத்தில் பெர்னார்ட், லீனா இருவரும் ஒரு புதிய இடத்திற்குச் செல்லலாம் என்று முடிவுசெய்து, ‘நியூ மெக்ஸிகோ’ என்று அழைக்கப்படும் பகுதிக்குச் செல்கிறார்கள். அது இவர்களின் ‘புது உலக’த்தைப்போல முன்னேறியிருக்கும் பகுதியல்ல. பண்டைக் காலத்தில் இருந்ததைப்போலவே மிச்சமிருக்கும் இடம். அந்த இடத்தில் உள்ள மக்கள், ‘காட்டுமிராண்டிகள்’ (Savages).
புது உலகினரைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் அசிங்கமானவர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் குடும்பம் நடத்துவார்கள். சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடி மக்கள்போல, நாகரிகம் இல்லாதவர்கள். அங்கு இருக்கும் ஜான் என்னும் இளைஞன் ஷேக்ஸ்பியரைப் படித்தவன். அவன் பேசும்போதே, ஷேக்ஸ்பியர் வரிகள் இடையிடையே வரும். தீரமிகு புது உலகத்துக்குள் அவன் பிரவேசிக்க நேர்கிறது. அதனால் நடக்கும் சிக்கல்கள் கதையின் மையமாக விளங்குகின்றன. கதையில் ஜான் லண்டனுக்கு வந்த பிறகு, அவன் பேசும் விஷயங்கள் அங்குள்ள மக்களுக்கு வெறுப்பை உருவாக்குகின்றன. ஏனெனில், அவன் அவர்களின் சமூகத்தைக் கெடுப்பதாக நினைக்கிறார்கள். இறுதியில் இப்புதிய உலகின் மனிதத் தன்மையற்ற விதிகளைப் பொறுக்க முடியாமல் மாய்ந்துபோகிறான்.
ஜி. குப்புசாமியின் மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு இந்நாவலை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. தமிழில் வாக்கிய அமைப்பு, சொற்களின் தேர்வு ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன. இந்நாவலைப் பல வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வாசித்தபோது, மிகவும் நிதானமாகவும் கவனத்துடனும் படிக்க வேண்டியிருந்தது. பல இடங்களைத் திரும்பத் திரும்ப வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. மிகக் கடினமான, சிக்கலான பகுதிகள் எல்லாமே மிகச் சரளமாக, எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தமிழில் மொழிமாற்றம் அடைந்திருக்கிறது. அவரது தமிழ் நடை, ஆங்கில மூலம் என்ன சொல்ல வருகிறதோ அதை அப்படியே கடத்திவிடுகிறது. முதல் அத்தியாயம் மிகவும் கடினமானது, ஏனென்றால் அதில் ஒரு விஞ்ஞானி குழந்தைகள் எப்படி உருவாகின்றன என்பதை விளக்குவார். அதை நான் எடுத்துப் படிக்க ஆரம்பித்ததும் உண்மையிலேயே வியந்துபோனேன். தமிழ் மொழியின் சிறப்பு, அந்தச் சந்தம், ஓசை எல்லாம் சேர்ந்து வரும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் அருமை. முனங்கொலி, சீழ்க்கையொலி, முரலொலி, உராய்வொலி போன்ற சொற்களை அவர் பயன்படுத்தியிருப்பார். படிக்கப் படிக்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகத்தில், மொழிபெயர்ப்பாளர் எந்தச் புதிய சொல்லைப் பயன்படுத்தினாரோ, அதைத்தான் நான் பார்ப்பேன். ஒரு சொல்லை மொழிபெயர்த்தால், அதுவும் அதிக அளவில் பயனில் இல்லாத சொற்களை எப்படிப் புத்தகம் முழுவதும் ஒன்றுபோலப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது முக்கியம். ஒத்திருத்தல் அவசியம். அதை அவர் சரியாகச் செய்திருக்கிறார்.
இம்மொழிபெயர்ப்பில் குப்புசாமியைப் பாராட்டுவதற்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒருவர் பேசும்போது, திடீரென நமக்குத் தெரியாத சங்க இலக்கிய வரிகளைப் பேச்சுக்கு இடையே சொன்னால், நாம் திகைப்படைவோம். அதைப்போலவே ஜான் பேசும்போதே பல இடங்களில் ஷேக்ஸ்பியர் வரிகளை மேற்கோள் என்று குறிப்பிடாமல் பேச்சோடு பேச்சாகப் பயன்படுத்துகிறான். நாமாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது மொழிபெயர்ப்பாளருக்குப் பெரும் சவால். இந்தப் புத்தகம் நவீன இலக்கியம் அல்ல. இந்தப் புத்தகம் 90 வருடங்களுக்கு முந்தைய கரடுமுரடான ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அதில் ஷேக்ஸ்பியர் வரிகளைத் தேடி எடுத்து, மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சவாலான வேலை. குப்புசாமி அன்னம் பாலையும் நீரையும் பிரிப்பதைப் போல அவற்றைப் பிரித்தெடுத்து முறையான மொழிபெயர்ப்பை வழங்கியுள்ளார்.
2025, ஆகஸ்ட் 15 அன்று சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசியதன் சுருக்க வடிவம்.
மின்னஞ்சல்: olivannang@gmail.com
