பாரதியாரும் சரஸ்வதியாரும்
ஔவையார், காக்கைபாடினியார், காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் முதலிய ‘ஆர்’ விகுதி பெற்ற பெண் ஆளுமையர் பெயர்களைத் தமிழ் வரலாறு கண்டதுண்டு. ‘சரஸ்வதி’ என்னும் பெண்பாற் பெயர் ‘ஆர்’ விகுதி பெற்ற வடிவம் அரிதான வழக்காகவே காட்சிதருகிறது. ஆயினும் ‘சரஸ்வதியார்’ என்னும் பெயர் வடிவம் தாங்கிப் பாரதியாரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ இதழில் 1914ஆம் ஆண்டு ‘கீதை’யின் மொழிபெயர்ப்புப் பகுதி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த சரஸ்வதியார் யார் என்னும் கேள்விக்கு நாம் விடை கண்டால் பாரதியியல் ஒரு புதிய ஒளியைப் பெறும் என்று தோன்றுகின்றது.
‘சி. சுப்பிரமணியன்’ என்னும் இயற்பெயரில் எட்டயபுர மன்னருக்கு 1897இல் எழுதிய ஒரு விண்ணப்பக் கவிதையைத் தவிர எந்தப் படைப்பையும் பாரதி எழுதியதாகத் தெரியவில்லை. அதனை ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்னும் பெயர் வடிவில் கையொப்பமிட்டுப் பாரதி எழுதியிருந்தார். நமக்குக் கிடைக்கின்ற காலத்தால் முந்தைய பாடல்கள், படைப்புகளில் பார
