அவசரநிலையும் எனது தலைமறைவு வாழ்க்கையும்
அ. சவுந்தரராஜன்
1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் அர்த்த ராத்திரியில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது எனக்கு வயது 26. 1970ஆம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகவும் தொழிற்சங்க ஊழியராகவும் எனது பொது வாழ்வைத் தொடங்கினேன். இதற்கு முன்பாகவே சென்னை, மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டேன்.
1964க்குப் பிறகு சென்னை நகரம் தொழிலாளர்களின் போர்க்களமாக இருந்தது. சிறிதும் பெரிதுமான எல்லாத் தொழிற்சாலைகளிலும் அடுத்தடுத்து வேலை நிறுத்தங்களும் தொழிலாளர்களுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறைகளும் துப்பாக்கிச் சூடுகளும் ரவுடிகளின் தாக்குதல்களும் தொழிலாளர்களுக்கு எதிரான பொய் வழக்குகளும் ஊர்க் கடத்தல்களும் என ஏராளமாக நடந்துகொண்டிருந்த காலம். இந்தப் போராட்டங்களை ஒட்டி நடைபெறுகிற பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங