ஆய்வுலகில் ஆ.சி.யின் பங்களிப்பு: அதிகாரமற்ற மனிதர்களின் அடையாள மீட்பு
புலவர், பேராசிரியர், ஆசி, சிவம் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவர் ஆ. சிவசுப்பிரமணியன். (நா.வானமாமலை அவரை ‘மணி’ என்பார்.) அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்து வாழ்வு அவருடையது. நாட்டார் வழக்காற்றியல், சமூக வரலாறு, அடித்தள மக்கள் - விளிம்பு நிலை ஆய்வுகள், பண்பாட்டாய்வு, இலக்கிய ஆய்வு என அவரின் களங்கள் விரிந்தவை. மார்க்சியத்தில் வேரூன்றி அம்பேத்கரியத்தையும் பெரியாரியத்தையும் அரவணைத்து மக்கள்சார் கருத்தியலில் உறுதிபட நிற்பவர். இவரின் ஆக்கங்கள் தமிழ்ச் சூழலில் புதியவை. கல்விப் புலத்துக்கு வெளியே சமூகம் சார் கரிசனத்தோடு இயங்கும் ஆய்வு இயக்கம் இவர்.
ஆ. சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1943, ஏப்ரலில் பிறந்தவர். இவரின் அப்பா பெயர் ஓ.எஸ். ஆழ்வாரப்பன். அம்மா பெயர் சுப்பம்மாள். வீரபாண்டிய கட்டபொம்மனின் மதியூகமிக்க தலைமையமைச்சரும், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் நிர்வாகி