உணவு: நீதியும் மரபும்
நாஞ்சில் நாட்டு உணவு
(கட்டுரைகள்)
நாஞ்சில் நாடன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு,
நாகர்கோவில் - 629 001
பக். 504
ரூ. 590
பண்பாடு எப்போதுமே நேர்கோட்டுச் சிந்தனை உடையதாய் இருந்ததல்ல; அது பன்முகத்தன்மை கொண்டது. வழக்காறும் எல்லாக் காலத்திலும் பன்முகத் தன்மைமையுடன்தான் இயங்கி வந்திருக்கிறது. இதன் சிறப்பே வட்டாரச் சார்பு உடையது என்பதுதான். நாட்டார் வழக்காற்றின் வகைமைகள் எல்லாமே பன்முகத் தன்மை கொண்டவை இவற்றில் உணவு பற்றிய பதிவுகள் தமிழில் குறைவாகவே இருக்கின்றன.
ஒரு வட்டாரத்தின் அல்லது சமூகத்தின் புழங்கு பொருட்கள், சடங்குகள், உணவுப் பழக்கம் போன்றவை அந்தச் சமூகத்தின் தொன்மையை, மரபு வழியான வளர்ச்சியைக் காட்டுவன. உணவு, சாப்பாடு என்பது வயிற்றை நிரப்புவதற்கும் உயிர் வாழ்வதற்கும் மட்டும் உரியதல்ல, அது அந்தச் சமூகத்தின் வாழ்க்கை வட்டக் கூறுகளில் எல்லா அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதை நாஞ்சில் நாடன் இந்த நூலில் விரிவாகவே விளக்குகிறார். இந்த வகையில் தமிழில் இந்நூலை முதல் நூலாகக் கொள்ளலாம்.
இது சமையல் புத்தகம் அல்ல, ஆனால் உணவு சமைக்கும் பக்குவத்தையும் முறையையும் சொல்கிறது; வட்டார உணவுகள்குறித்த சேகரிப்பின் மூலம் அந்த வட்டாரப் பண்பாட்டுக் கோலங்களை வரைபடமிட்டுக் காட்டுவது நூலின் தனிச்சிறப்பு. உணவு வகைகளைச் சொல்வதன் மூலம் அந்தப் பண்பாட்டுக் கூறுகளையும் சுவைபடச் சொல்வது சவாலான காரியம்.
நாட்டார் கலைகள், நாட்டார் தெய்வங்கள்பற்றிச் சுவையாகச் சொல்வதற்கு அவற்றின் பின்னணி இடம் தரும். ஆனால் உணவு வகைகளைப் பற்றிச் சொல்வதிலும் சுவாரசியத்தைக் கொண்டுவர முடியும் என்பதை நாஞ்சில் நாடன் நிரூபித்திருக்கிறார்.
உணவு பரிமாறுவதிலும் அதன் வரிசையிலும் முறையான நீதியும் மரபும் உண்டு. இந்த மரபை மீறும்போது குறிப்பிட்ட சமூகத்துக்குள் வட்டாரத்துக்குள் உரசல்கள் வந்திருக்கின்றன. இதுபற்றிய பதிவுகள் எழுத்துச் சான்றுகளில் மட்டுமே உள்ளன. வாய்மொழி மரபிலும் உணவுப் பண்பாட்டிலும் இது உண்டு என்பதை நூல் தொட்டுச் செல்கிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பல உணவு வகைகள் இன்று வழக்கில் இல்லை. ஒரு சமூகத்தின் குடிப்பெயர்ச்சி, வசதிக் குறைவு போன்ற காரணங்களால் அவற்றின் சடங்குகளும் அவை தொடர்பான உணவுகளும் மறைந்துவிடும் மாற்றத்தை உணவுப் பண்பாட்டின் வழி ஆழமாகப் பதிவுசெய்தி ருக்கிறார் ஆசிரியர். இந்த வகையில் தமிழில் வந்த பண்பாட்டு மானுடவியல் நூலாகவும் இதைக் கருதலாம்.
மின்னஞ்சல்: perumalfolk@gmail.com