தலையங்கம்
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. இந்நிலையில் அதன் செயல்பாடுகளையும் தாக்கங்களையும் பற்றிய அலசல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நெருக்கடி நிலையின்போது நடந்தவைபற்றிய நினைவுகூரல்கள், விமர்சனங்கள் ஆகியவற்றுடன் தவிர்க்க முடியாமல் தற்போதைய ஆட்சியுடனான ஒப்பீடும் இடம்பெறுகிறது. தற்போது நெருக்கடி நிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த ஒப்பீடு நடக்கிறது என்பதையே இன்றைய ஆட்சியின் மீதான முக்கியமான விமர்சனமாகக் கொள்ளலாம்.
காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நரேந்திர மோடி அரசின் பல்வேறு தவறுகளைக் குறிப்பிட்டு, தனது தினசரிப் பதிவுகளில் #Emergency@11 என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தத் தொடங்கினார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை, ஆனால் மோடியின் யதேச்சாதிகார ஆட்சி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்துள்ளது என்பதையே ரமேஷ் இந்த ஹேஷ்டேக்மூலம் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ஒருவரே நெருக்கடி நிலையை விமர்சனபூர்வமாகக் குறிப்பிடுவதும் மோடியை விமர்சிக்க அதைப் பயன்படுத்துவதும் நகைமுரண்தான். எனினும் அவர் குறிப்பிடுவதில் இருக்கும் யதார்த்தம் விவாதிக்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.
நெருக்கடி நிலையை அறிவிக்காமலேயே நெருக்கடி நிலையை நினைவுபடுத்தும் ஆட்சியைத் தந்துவரும் ‘சாதனை’யைப் புரிந்திருக்கும் மோடி அரசு, யதேச்சாதிகார ஆட்சியை அமல்படுத்துவதற்கு அசாதாரணமான எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்பதைச் செயலில் காட்டிவரும் ‘சாதனை’யையும் செய்திருக்கிறது. நடப்பிலுள்ள சட்டங்களையும் நடைமுறைகளையும் பொது நிறுவனங்களையும் பயன்படுத்தியே மோடி அரசு ஊடகங்களை வழிக்குக் கொண்டுவந்திருக்கிறது, எதிர்க்கட்சிகளை உடைத்துப் பலவீனப்படுத்துகிறது, அரசியல் எதிரிகளைச் ‘சட்டபூர்வமாகவே’ கையாண்டு அவர்களை முடக்குகிறது. அரசை விமர்சிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரைச் சிறையில் அடைத்திருக்கிறது.
இத்தகைய செயல்பாடுகளுக்கு மோடி அரசுக்குப் புதிய சட்டங்கள் எதுவும் தேவைப்படவில்லை. காங்கிரஸ் அரசு பிறப்பித்த தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களைக் காங்கிரஸைக் காட்டிலும் ‘திறமை’யாகப் பயன்படுத்தித் தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது. அரசியல் எதிரிகளை முடக்கவும் முரண்டுபிடிக்கும் மாற்றுக் கட்சிக்காரர்களை வழிக்குக் கொண்டுவரவும் காங்கிரஸ் கடைப்பிடித்த அதே ‘ரெய்டு’ அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறது. காங்கிரஸைக் காட்டிலும் கூச்சமில்லாமல் பயன்படுத்துகிறது என்று சொல்லலாமே தவிர, இந்த விஷயத்தில் காங்கிரஸின் முன்னோடிப் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது.
இந்திரா காந்தி அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவற்றை ஆட்சியாளர்களுக்கு இசைவான முறையில் செயல்படவைக்க முயன்று அதில் பெருமளவு வெற்றிபெற்றார். அவரை அடியொற்றி மோடி, இந்தப் போக்கை பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இன்றியே அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றிருக்கிறார்.
ஊடகங்களைப் பொறுத்தவரை இந்திரா காந்தி வெளிப்படையான தணிக்கையின் மூலமாகவும் அச்சுறுத்தலின் மூலமாகவும் உண்மை வெளிவராமல் பார்த்துக்கொண்டார். இந்த விஷயத்திலும் மோடி குருவை மிஞ்சிய சிஷ்யர்தான். உண்மைகளை மறைப்பது மட்டுமல்ல, பொய்களைப் பேசும்படி ஊடகங்களைக் கட்டாயப்படுத்துகிறார். அரசை விமர்சிக்கும் ஊடகவியல் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டது. வலுவான விமர்சனப்பூர்வமான இதழியலை முன்னெடுப்பவர்கள் அமைதியாக ஓரங்கட்டப்படுகிறார்கள். அவர்கள் சார்ந்துள்ள ஊடகங்களின் தலைமை தார்மிகச் செயல்பாடுகளைக் காட்டிலும் பிழைத்திருத்தலே முக்கியம் என்னும் நிலைக்கு வந்துவிட்டன.
ஊடகங்களைத் தனது தாளத்திற்கேற்ப ஆடச்செய்வதில் மோடி அரசு புதிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. பலவிதமான அச்சுறுத்தல்கள், வருமானத்தில் கை வைத்தல் ஆகியவற்றைத் தாண்டிப் பல ஊடகங்களை அது சித்தாந்தரீதியிலும் தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. மைய நீரோட்ட ஊடகங்களில் பெரும்பாலானவை பாஜக முன்னிறுத்தும் தேசியவாதத்தைக் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்ட விதத்திலேயே செயல்படுகின்றன. ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியின்போதும் பஹல்காம் தாக்குதலின்போதும் இந்தப் போக்கைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அரசின் தவறுகளையும் தோல்விகளையும் அம்பலப்படுத்துவதிலும் மையநீரோட்ட ஊடகங்கள் முனைப்புக் காட்டுவதில்லை. கொரோனா இரண்டாவது அலையின்போது அதைக் கையாள்வதில் நிர்வாகத்தின் தோல்வியை மிகச் சில ஊடகங்களே அம்பலப்படுத்தின. பஹல்காம் விஷயத்தில் அரசின் சொதப்பல்களை மைய நீரோட்ட ஊடகங்கள் மென்மையாகவே அணுகின.
காந்தஹார் கடத்தல் விவகாரத்தின்போதும் மும்பை குண்டு வெடிப்பின்போதும் புலிபோலச் சீறிய ஊடகங்களை ஒப்பிடும்போது இன்றைய அவல நிலையை நன்கு புரிந்துகொள்ளலாம். இன்று சமூக ஊடகங்கள் பெருகிய நிலையில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் பரவலாக வெளியாகின்றனவே தவிர மரபார்ந்த ஊடகங்களுக்கு அதில் பெரிய பங்கு இல்லை. ஊடகங்களை ஒடுக்கும் போக்கிற்கு விதைபோட்டது இந்திராதான் என்றாலும் மோடி அரசு இவ்விஷயத்தில் சாதித்துள்ளவற்றைப் பார்க்கும்போது இந்திராவைக் கற்றுக்குட்டி என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிகாரவர்க்கமும் 1970களில் இருந்ததைவிடச் சுதந்திரமற்றே இருக்கிறது. விசாரணை முகமைகள் அரசியல் எதிரிகளை ஒடுக்க மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின் முடிவு இந்திய ஊடகர்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. இனி அப்படியொரு காலம் வருமா?
நெருக்கடி நிலைக்கு முன்பும் பின்பும்கூட இந்திரா பெரும்பாலும் ஒருதலைப்பட்சமான, பிறரை அதிகம் கலந்தாலோசிக்காத பாணியிலேயே செயல்பட்டார். பி.என். ஹக்சர், சஞ்சய் காந்தி என யாரேனும் ஒருவரின் ஆலோசனையையே இந்திரா எப்போதும் கேட்டுவந்தார். மோடியும் அமித் ஷாவைத் தவிர யாரையும் நம்புவதாகத் தெரியவில்லை. அமித் ஷாவும் மோடியைப் போலவே வெளிப்படைத்தன்மையில் நம்பிக்கை அற்றவர்; யதேச்சாதிகாரப் போக்கைக் கொண்டவர்.
இந்திராவைப் போலவே மோடியும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை அவர் கலைக்கவில்லை என்றாலும் ஆளுநர் என்ற அரசியல் சார்பற்ற பதவியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் அரசுகளுக்குக் குடைச்சலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். கல்வி, நியாய விலைக் கடைகளின் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மையப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை மூன்றாவது மொழியாக நுழைப்பதில் தீவிரம் காட்டிவருகிறது அவருடைய அரசு. எதிர்க்கட்சிகளை உடைத்து, மாநில அரசுகளை அமைக்கச் சிறிதும் வெட்கமின்றி அரசு இயந்திரங்களைப் பயன்படுத்திவருகிறது.
தன்னுடைய எதிரிகளைத் தேசத்தின் எதிரிகளாகக் கட்டமைப்பதிலும் மோடி இந்திராவின் வழியையே பின்பற்றுகிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனை மேற்குலக ஏஜென்ட் என்று இந்திரா முத்திரை குத்தினார். பாஜகவின் பிரச்சார வலையமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஜார்ஜ் சோரோஸின் கைக்கூலி என்று குற்றம் சாட்டுகிறது. ‘இந்திராவே இந்தியா’ என்பது நெருக்கடிநிலைக் காலத்தின் பிரபலமான கோஷங்களில் ஒன்று. இந்தியாவின் நலன்களை மோடியால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று மோடியின் பிரச்சார இயக்கம் கூறுகிறது.
காங்கிரசின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சிக்கும் மோடியின் தனிப் பெரும்பான்மை ஆட்சிக்கும் இடைப்பட்ட 25 ஆண்டுகளில் இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம். இக்காலத்தில் ஜனநாயக நிறுவனங்கள் வலுப்பட்டன. இவையே இந்தப் பத்தாண்டுகளில் அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாகச் சிதைந்துவிடாமல் இந்தியாவைப் பாதுகாத்துவருகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் உருவாக்கிய முன்னுதாரணங்களை அடியொற்றி, அசாதாரணச் சட்டங்களோ உத்தரவுகளோ இல்லாமலேயே யதேச்சாதிகாரத்தைச் சகல தளங்களிலும் அமல்படுத்த முடியும் என்று காட்டுவதில் மோடி இந்திராவைப் பெருமளவில் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.
சுயாதீன வலைதளங்கள், மாநில மொழிகளில் வரும் செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை இருப்பதால் மோடி அரசால் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக முடக்கிவிட முடியாத நிலை இன்று உள்ளது. நெருக்கடி நிலையின்போது அரசியல்ரீதியான போராட்டங்களுக்கு இடமில்லாத நிலை இன்று இல்லை. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளையும் காங்கிரஸ் கட்டுப்படுத்தியிருந்தது. தற்போது அரை டஜனுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாஜகவைக் கடுமையாக எதிர்க்கும் கட்சிகளின் கைகளில் உள்ளன.
எனினும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பொது நிறுவனங்கள் அதீதமான அரசியல் தலையீட்டால் மிகவும் சேதமடைந்துள்ளன. அதிகாரவர்க்கத்தின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவே உள்ளன. நீதித்துறையின் மீது கடுமையான விமர்சனங்களும் அதிருப்தியும் இருந்தாலும் அதுவே பல சமயங்களில் யதேச்சாதிகாரத்துக்கு எதிரான பெரும் ஆறுதலாகவும் இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு கிளை அமைப்புகளும் நூறு ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் அயராத முயற்சிகளின் பலனாக, இந்துத்துவ தேசியவாதமும் அதிரடியான பெரும்பான்மைவாதமும் இன்றைய இந்தியாவில் பரவலான ஏற்பைப் பெற்றுள்ளன. இவை அதிகார வலிமை கொண்ட யதேச்சாதிகாரத்துடன் இணைந்திருப்பது மிக ஆபத்தானது. நரேந்திர மோடியின் ஆட்சி முடிந்த பிறகும் செப்பனிடுவதற்கு மிகவும் கடினமான, ஆழமாக வேரூன்றிய பிறழ்வாக இது உருப்பெற்றுள்ளது. 18 மாதங்கள் மட்டுமே நீடித்த நெருக்கடி நிலையைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கக்கூடிய இந்தப் பிறழ்வு நமது ஆழமான கவலைக்குரியதாக உள்ளது. இந்நிலையில் குடிமைச் சமூகத்தின் விழிப்புணர்வும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பும் முன் எப்போதையும்விட தற்போது மிக மிக அவசியமாகியிருக்கிறது.