வாழும் காலத்திலேயே உணரப்பட்ட மேதமை
புதுமைப்பித்தன் எழுத்துகளைத் தொடர்ந்து செம்பதிப்பாக வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகம், அதன் அடுத்த முயற்சியாகப் புதுமைப்பித்தனைப் பற்றிச் சமகாலத்திலும் அவர் மறைவுக்குப் பிறகும் வெளிவந்த மதிப்பீடுகளின் தொகுப்பான ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’, புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘நினைவுத் தீ’, புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் எழுதிய ‘எந்தையும் தாயும்’ ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வைச் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 30.06.2025 அன்று நடத்தியது. புதுமைப்பித்தனின் 77ஆவது நினைவு நாளான அன்று அவரது நினைவுகளால் அரங்கம் நிறைந்திருந்தது.
பிற்பகல் மூன்று மணியளவில் ஆ. இரா. வேங்கடாசலபதி வரவேற்புரை வழங்கி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். தந்தை, தாய், மகள் மூவர் நூல்களும் ஒருசேர வெளியிடப்படுவதன் சிறப்பினைச் சுட்டியதுடன் தொண்ணூறுகளில் வெளிவந்த ‘அன்னை இட்ட தீ’ தொடங்கி தற்போது வெளிவரும் ‘நினைவுத் தீ’ வரையிலான புதுமைப்பித்தன் செம்பதிப்புத் திட்டத்தின் முப்பதாண்டுப் பணிகளையும் பயணத்தையும் குறிப்பிட்டார்.
புதுமைப்பித்தனை முதன்முதலில் கோட்டோவியமாக வரைந்த சிறப்பிற்குரிய டிராட்ஸ்கி மருது தலைமையுரை வழங்கினார். ஒன்பதாம் வகுப்பில் தற்செயலாகத் தனக்கு அறிமுகமான புதுமைப்பித்தன் கதைகள் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தையும் தனது தாத்தா, தந்தை ஆகியோருடன் சிறுவயதில் நிகழ்த்திய புதுமைப்பித்தன்குறித்த உரையாடல்களையும் புதுமைப்பித்தனிலிருந்தே தனது தொடக்க கால நவீன ஓவியப் பயிற்சி தொடங்கியதையும் பகிர்ந்துகொண்டார்.
தலைமையுரைக்குப் பின் மூன்று நூல்களும் வெளியிடப்பட்டன. ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ நூலை டிராட்ஸ்கி மருது வெளியிட கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கனும், ‘நினைவுத் தீ’ நூலை எஸ். ராமகிருஷ்ணன் வெளியிட சித்ரா பாலசுப்பிரமணியமும், ‘எந்தையும் தாயும்’ நூலைப் பழ. அதியமான் வெளியிட ஜா. தீபாவும் பெற்றுக்கொண்டார்கள்.
“புதுமைப்பித்தன் களஞ்சியம் நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன், கீழே வைக்க முடிய வில்லை” என்று நூலின் சிறப்பை வியந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்நூலைப் படித்து முடித்த பெருமிதத்துடன் வாழ்த்துரை வழங்கினார் சாரங்கன்.
தந்தையைப் பிரிந்தபோது இரண்டரை வயதுக் குழந்தையாக இருந்த தினகரி தன் தாயின் கண்கள் வழியே தன் தந்தையை எவ்வாறெல்லாம் உணர்ந்திருக்கிறார், கணவனை இழந்து கையறுநிலையில் வாழ்ந்த தன் தாயின் போராட்ட வாழ்க்கையையும் தந்தையின் நினைவுகளோடுத் தன்னையும் ஒருசேரச் சுமந்து வாழ்ந்த தாயின் தியாக வாழ்வை தினகரி எவ்வாறு அந்நூலில் பதிவுசெய்திருக்கிறார் என்பதையும் ‘எந்தையும் தாயும்’ நூலை அறிமுகப்படுத்தி சித்ரா பாலசுப்ரமணியம் பேசினார்.
புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் எழுதிய இருபத்திரண்டு கதைகள் அடங்கிய ‘நினைவுத் தீ’ நூலைக் குறித்து ஜா. தீபா பேசினார். கமலாம்மாள் சிறுகதைகள் அச்சில் இல்லாத நிலையில் அவற்றைத் தேடித் திரட்டி நூலாக வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் சலபதிக்கும் பாராட்டுத் தெரிவித்ததோடு சமகால எழுத்தாளர்களில் கமலாம்பாள் எவ்வாறு இரண்டு அடி முன் இருந்திருக்கிறார் என்பதையும், வழக்கமான கதைச் சொல்லும் முறையில் அல்லாமல் வேறுபட்ட பார்வைக் கோணத்தோடு கதைகள் அமைந்திருக்கும் தன்மையையும் சுட்டிக்காட்டி பேசினார். புதுமைப்பித்தன் பெயரைப் பயன்படுத்தித் தனக்கு அடையாளம் தேடிக்கொள்ளாமல் ‘எஸ்.கமலாம்பாள்’ என்ற பெயரிலேயே இவரது கதைகள் வெளிவந்திருப்பதைக் குறிப்பிட்டு அதன்வழி கமலாம்மாளின் எழுத்தாற்றல் மட்டுமல்லாமல் தன் மனைவியைக் கட்டுப்படுத்தாமல் வாழ்ந்த புதுமைப்பித்தனின் ஆளுமைப்பண்பு வெளிப்படுவதனையும் அருமையாக எடுத்தியம்பினார்.
‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ நூலை அறிமுகம்செய்து பேசிய பழ. அதியமான், நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களைச் சந்தித்து ஏராளமான செய்திகளைத் திரட்டினாலும் அவற்றுள் எதைத் தேர்வு செய்வது, எப்படிச் செய்வது என்று அறிந்திருக்கும் சலபதியை ‘அசகாய சூரன்’ எனப் பாராட்டி அவர் பணிகளை வியந்தார். சலபதியின் இருபத்தைந்து ஆண்டு காலத் தொடர்ச்சியான முயற்சியின் பயனாக வெளிவந்திருக்கும் இந்நூல் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு புதிய களங்களைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
புதுமைப்பித்தன் மறைந்தபோது இருபது வயதேயான சுந்தர ராமசாமி 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டுக் ‘குழந்தை தினகரிக்கு’ச் சமர்ப்பித்திருந்ததையும் தற்போது ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ நூலை சலபதி தினகரிக்குச் சமர்ப்பித் திருப்பதையும் தொட்டுக்காட்டி, புதுமைப்பித்தன் குறித்த எழுபது ஆண்டுகாலத் தொடர் உரையாடலை நினைவூட்டி அரங்கத்தை நெகிழவைத்தார். மேலும் இதுபோல இன்னும் இரண்டு நூல்கள் வெளிவருவதற்கான தகவல்கள் சலபதியிடத்தில் உள்ளன என்றும் அது விரை வில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தம் வாழ்நாள் முழுதும் புதுமைப்பித்தனைப் பேசிய, கொண்டாடிய சுந்தர ராமசாமியையும் புதுமைப்பித்தனுக்கு நண்பராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் வாழ்ந்த தொ.மு.சி.யையும் நினைவுகூர்ந்தார். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளான பாரதி, வ.உ.சி., புதுமைப்பித்தன் ஆகிய மூவரின் பங்களிப்புகளையும் ஒருசேர ஆவணப்படுத்திவரும் சலபதியின் உழைப்பைப் பாராட்டி யதுடன் எழுத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்குமான தொடர்பை யும் சுட்டினார். டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி ஆகியோருக்கு வாய்த்த மனைவிகள்போல் புதுமைப் பித்தனுக்குக் கமலாம்பாள் அமைந்ததையும் நெகிழ்ச்சியோடு பதிவுசெய்தார். சமகாலத்தில் புதுமைப்பித்தன் எவ்வாறெல்லாம் பார்க்கப்படுகிறார்; புறக்கணிப்பின் குழந்தையாக, சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்திருப்பதை இக்களஞ்சியத்தில் சலபதி ஆவணப்படுத்தியிருக்கும் திறத்தை எடுத்துரைத்தார். சலபதியின் பதிப்புப் பணியை மனதாரப் பாராட்டியதுடன் தமிழ்ச் சமூகம் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதையும் உணர்த்தி உணர்வுபூர்வமான உரை வழங்கி அவர் அமரும்வரை அவையினர் கட்டுண்டதுபோல் இருந்தார்கள்.
தினகரி அம்மாவின் உரைக்குப்பின் தன்னால் பேச இயலாது என்பதைக் குறிப்பிட்டு முன்னதாகவே ஏற்புரை வழங்கிய சலபதி, 2002இல் தான் எழுதிய ‘வானத்து அமரன்’ கட்டுரையின் தொடர்ச்சியான தேடலில் இத்தகைய களஞ்சியமாக உருவெடுத்திருக்கிறது என்றும், தான் அசகாய சூரன் அல்ல, பல நண்பர்களின் சகாயத்தினால்தான் இவ்வளவு பெரிய பதிப்புகள் சாத்தியமாகி இருக்கின்றன என்றும் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். புதுமைப்பித்தனின் மேதமை சமகாலத்திலே உணரப்பட்டதை எடுத்துக்காட்டி ஒவ்வொரு சொல்லிலும் உணர்வு மேலிட, கண்ணீரோடு நிறைவுற்ற ஏற்புரை அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் இதயங்களையும் ஈரமாக்கியது.
நிறைவுரையாற்றிய தினகரி, ‘தொ.மு.சி.க்குள் புதுமைப் பித்தன் ஆவி புகுந்துவிட்டதாக சுந்தர ராமசாமி கூறுவார். ஆனால் புதுமைப்பித்தன் ஆவி முழுவதும் உங்களுக்குள் தான் புகுந்துவிட்டது. நானல்ல புதுமைப்பித்தன் வாரிசு; நீங்கள்தான் உண்மையான வாரிசு’ என்று சலபதியைச் சுட்டித் தன் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார். புதுமைப்பித்தன் நினைவுமலரை வெளியிட்டு சுந்தர ராமசாமி தொடங்கிய முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கண்ணனுக்கும் உரை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஜெ. கிருத்திகா: முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி