இதுவரை அறியாத முகம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேரக் காத்திருந்தபோது, கோவில்பட்டியில் 200 பொறியியல் மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியாளராக மூன்று மாதங்கள் பணியாற்றினேன். எனது பணியின் பெரும்பகுதி அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியில் இருந்தபோதிலும், சில சமயங்களில் ஒரு பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிதியாகச் சுற்றுவட்டாரங்களில் இருந்த உள்ளொடுங்கிய கிராமப் பகுதிகளுக்குச் செல்வேன்.
செவல்பட்டி என்ற சிற்றூரிலிருந்த ஒரு கல்லூரிக்குச் செல்லும் வழியில் தூசி நிறைந்த சாலையின் குறுக்கே மயில் ஒன்று பறப்பதைப் பார்த்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. அந்தக் காட்சி, நகரத்தில் வளர்ந்த என் கண்களுக்கு, மிகவும் புதுமையாக இருந்தது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அங்கிருந்த இளம் கல்லூரி மாணவர்கள். என்னதான் ஆர்வம் மேலிட்டாலும் அவர்கள் மத்தியில் அந்நியமாகத் தோன்றிய என்னிடம் நேரடியாகப் பேச அவர்கள் காட்டிய தயக்கம் என்னை வியப்புறச் செய்தது. எனக்கும் அவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை என்றபோதும், நான் ஆங்கிலத்தில் பேசுவதாலேயே என்னிடம் ஏதோ அதிகாரத் தோரணை வந்துசேர்ந்துவிட்டதாக அவர்கள் உணர்வதை அறிந்தேன். அதோடு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறனை அவர்கள் எல்லோரும் பெறுவதற்கும் அதன்மூலம் வரக்கூடிய வேலை வாய்ப்புகளுக்குமான மந்திரக் கதவுகளைத் திறக்க வந்துள்ளேன் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணம்.
அந்த வகுப்புகளில் அவர்கள் தயக்கத்தைப் போக்கிச் சகஜமாகப் பேச வைக்க நான் மேற்கொண்ட முயற்சிகள் பல. முதலில், மாணவர்களைத் தங்கள் குடும்பங்கள், அவர்களின் சுற்றுப்புறம், சொந்த ஊர்களைப் பற்றிப் பேசச் சொன்னேன். ஆனால் ஆரம்பநிலைப் பயிற்சியே நான் நினைத்ததைவிடச் சவாலாக இருந்தது. முதல் தடையே, அவர்களை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டதுதான். அதன்பின் பார்வையாளர்கள் முன் நிற்பதால் வந்த கூச்சம்; மேலும் அவர்களின் வகுப்புத் தோழர்களிடையே எழுந்த பதற்றம் தோய்ந்த சிரிப்பொலி எனத் தடைகள் பெருகின. காலையில் தூங்கி எழுந்ததுமுதல் கல்லூரிக்குச் செல்வதுவரையான ஒருவரின் அன்றாடப் பணிகளைப் பட்டியலிடுவதே ஒரு கடினமான செயல் என்று நான் அதுவரை நினைத்ததில்லை. வாரங்கள் செல்லச் செல்ல, மேலும் பெரிய தடைகளைக் கண்டுகொண்டேன்: கல்லூரி வளாகத்திலும் வெளியேயும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்ட பாலினப் பிரிவினை, இறுக்கமான, பழமைவாதச் சூழலில் வளர்ந்ததால் நசித்துப்போன அவர்களின் கற்பனைத் திறன், பொதுவில் பேசப்படாவிட்டாலும் மாணவர்களிடையே புகையும் சாதிப் பூசல்கள்; அனைத்துக்கும் மேல், எதிர்ப் பாலின மாணவர் முன் அவமானப்படக் கூடாதே என்ற பதின்பருவக் கவலை.
என்னதான் அவர்கள் அனைவரையும் ஊக்குவித்தாலும், எந்த வகுப்பிலுமே திரும்பத் திரும்ப எழுந்து பேச ஆர்வம் காட்டியவர்கள் ஒரு சில தன்னம்பிக்கை மிகுந்த மாணவர்கள் மட்டுமே. ஏறக்குறைய மூன்று வாரங்களுக்குப்பின், நான் விதிகளைச் சற்றுத் தளர்த்திச் சில ஆங்கில வார்த்தைகளுடன் மாணவர்களைத் தமிழில் பேச அனுமதித்தேன். அதுவரை அமைதியாகப் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த பலரும் இப்போது அவர்களுக்குச் சொந்தமான பண்ணைகள், விலங்குகள், அவர்களது பாரம்பரியமான குடும்பத் தொழில்கள், அவர்களின் கனவுமிக்க எதிர்காலத் திட்டங்களைப் பற்றியெல்லாம் விவரிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் உண்மையிலேயே, ஆங்கிலம் கலந்த தமிழிலாவது பேசத் துணிந்த, இவர்கள் ஓரளவு சமூக முன்னேற்றமடைந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். என் எல்லா முயற்சிகளையும் மீறி எதற்கும் மசியாமல் வாய் மூடிய பதுமைகளாக அமர்ந்திருந்தோர் சிலர். அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பின்னர் வகுப்பறைக்கு வெளியே நடந்த உரையாடல்கள்மூலம் அறிந்தேன். அவர்கள் குடும்பத்தினர் அவர்களைக் கல்லூரியில் சேர்க்க முடிந்ததே பெரிய விஷயம். அம்மாணவர்கள் மிகவும் கீழ்ப்படிதலும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். நான் பேசுவதையெல்லாம் விடாமல் குறித்துக்கொள்பவர்கள். ஆனால் அதிலிருந்து ஒரு வார்த்தையையும் அவர்களால் திரும்பச் சொல்ல முடிவதில்லை.
கிராமப்புற அரசுக் கல்லூரிகளில் மிகவும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல தசாப்தங்களாகப் பாடம் நடத்திவரும் அனுபவமுள்ள பெருமாள்முருகன், வெளியாளாக இருந்து ஒரு புதிர்போல நான் அணுகிய கேள்விகளுக்கு முக்கியமான, நுட்பமான பதில்களை வழங்குகிறார். அப்படி அவர் பார்வையில் படுவன: மாணவர்களுக்கு ஆங்கிலம்மீதான உறையவைக்கும் பயம், வகுப்புக்குள்ளும் நிலவும் பாலின வரையறைகள், எங்கு தொடங்கினாலும் திருமணத்தில் மட்டுமே சென்று முடிகின்ற கட்டுப்பெட்டிக் கனவுகளையே சுமந்திருக்கும் மாணவியர், மாணவர்களின் உலகப்பார்வை மேல் திரைப்படங்களும் திரைப்பட நட்சத்திரங்களும் செலுத்தும் அளவுக்கு மீறிய ஆதிக்கம், காதல் உணர்வுகள் மிகவும் அடக்கப்பட்டதன் விளைவாக நிகழும் அவசரத் திருமணங்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கும் மிதமிஞ்சிய பொருளாதாரக் கவலைகள். இதே போன்ற சூழலில் தானும் வளர்ந்ததால், பெருமாள்முருகன் அம்மாணவர்களுடன் தன்னை இயல்பாகப் பொருத்திக்கொள்கிறார். அவர்களுடன் தனது வீடு, உணவு, பணம், உடமைகளைச் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்கிறார். புனைப்பெயர்களை வைத்துத் தன் மாணவர்களைக் கேலி செய்வதால், எந்த ஆசிரியரும் பொறாமை கொள்ளும் வகையிலான தோழமையை அவர்களுடன் பேணுகிறார்.
துக்கம், மகிழ்ச்சி ஆகிய இரண்டிலும் பங்கெடுத்துக்கொள்ள அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார், அதே நேரத்தில் தனியாக இருக்க அவர்களுக்கு எப்போது இடம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். அவர்களின் சூழ்நிலையைத் தாண்டி சமூகத்தில் உயர்ந்து வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதிக்கும் திறனையும் அவர்களிடம் காண்கிறார். எந்த நிலையிலும் மாணவர்களிடமிருந்து ஒன்றைக் கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறார். தன் சொந்த விருப்புவெறுப்புகளின் காரணமாகச் சில சமயங்களில் மாணவர்களைத் தவறாக மதிப்பிட்டபோதும் அதை ஒப்புக்கொள்வதில் நேர்மையாக இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும், அவருக்கு ஒவ்வொரு தனி மாணவர்மீதும், குறிப்பாகச் சமூகத்தில் நலிந்தவர்கள்மீது இருக்கும் ஆழ்ந்த அக்கறை வெளிப்படுகிறது. அவர் மாணவர்களின் கல்வித் தகுதிகள், சிறப்புத் திறமைகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு, அவர்களை உயர்கல்வியை நோக்கி நகர்த்துவதில் தொடர்ந்து முனைப்பு காட்டுகிறார். பல்வேறு காரணங்களால் அவருடைய மாணவர்கள் பட்டப் படிப்பை முடிக்க முடியாமல் போகும்போதோ குறைந்த ஊதியத்தில் வாழ்நாள் முழுவதும் உழைக்கும்படியான வேலைகளில் சிக்கித் தவிக்கும்போதோ பெரிதும் வேதனைப்படுகிறார். பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதற்காக அவர்களின் கல்வியை நிறுத்த முயற்சிக்கும்போது அவர் தலையிடுகிறார்.
அதே அளவு தீவிரம் இந்தியக் கல்வி முறையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதிலும் அவரது நேர்மையான விமர்சனத்திலும் பிரதிபலிக்கின்றன. மாணவர்களின் வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும்படி கல்வித் துறையில் பெருகிவரும் ஊழல், ஆசிரியப் பணியிலுள்ளோர் கொண்டுள்ள தன்னாணவப் போக்கு ஆகியவற்றைச் சாடுகிறார். அவர் எப்போதும் அடக்குமுறை, அதிகாரத்திற்கு எதிராகத் தனது மாணவர்களின் பக்கத்தில் நிற்கிறார். அவர்களின் தவறுகளை எளிதில் மன்னிக்கிறார். அவர்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது அவர்களைப் பாதுகாக்க எல்லா முயற்சிகளும் எடுக்கிறார். ஆக, இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் நாம் இதுவரை அறியாத அவரது மற்றொரு முகத்தை, கரிசனமும் மனசாட்சியும் கொண்ட நல்லாசிரியர் என்ற முகத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன. அவரது கதைகளில் வருவதைப் போன்றே இந்நூலிலும் பெயர்களும் புனைப்பெயர்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்களை அவரோடு இணைக்கும் பாலமாக மட்டுமின்றி, பெயர்களே சீரிய ஆய்வுப் பொருள்களாகவும் திகழ்கின்றன.
பெயர்களைக் குறித்துச் சொல்லும்போது, ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆங்கில வரிவடிவில் தமிழ்ப் பெயர்களை எழுதும்போது கல்வித் துறையில் புழங்கும் எழுத்து வடிவைப் பின்பற்றாமல் பொதுவழக்கான ஆங்கிலத்தில் பயன்படுத்தும் வரி வடிவிலேயே எழுதியிருக்கிறேன். அதுவே இயல்பாகவும் படிப்போருக்கு வசதியாகவும் இருக்குமென்று நம்புகிறேன். பெருமாள்முருகன் மேற்கோளாகக் காட்டியிருக்கும் குறள்களிலும்கூடத் தளை-சீர் விதிகளை மனதில் கொண்டு பிரிக்காமல், எளிமையாகப் பொருள்கொள்ளும்படியே சீர் பிரித்து எழுதியுள்ளேன்.
தமிழ்ச் சொற்களை நேரடியாக இவ்வாங்கில நூலில் எடுத்தாண்டுள்ள இடங்களில் சாய்வெழுத்தாக அவற்றை அச்சிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இக்கதைகள் தமிழ் பேசும் நிலத்தில்தான் நிகழ்கின்றன என்பதை இந்நூல் மறைக்க முயலாதபோது, ஓரிரு இடங்களில் தோன்றும் ‘அப்பா’ எனும் சொல்லையோ ‘பரோட்டா’ எனும் சொல்லையோ சேர்ப்பதற்கு மன்னிப்புக் கோரும் விதமாக ஏன் சாய்ந்து வணங்க வேண்டும்? சொல்லளவிலும் நம் நிமிர்வு வெளிப்படட்டுமே!
எந்த மொழியாக்கத்திலும் உள்ள ஒரு பெரிய சவால், அதைப் படிப்பவருக்கு எளிதாக ஆக்கும் அதே நேரத்தில், மூலநூலின் தெளிவான நடையையும், அம்மண்ணுக்கே உரிய தனித்தன்மையையும், நூலின் அடிநாதமான உணர்வுகளின் உண்மைத்தன்மையையும் வாசகருக்குக் கடத்துவதே. ஒரு மொழிபெயர்ப்பாளராக நான் செய்திருக்கும் தெரிவுகள் அத்தகைய வாசிப்பனுபவத்தை ஆங்கிலத்தில் அளிக்கும் என்றே நம்புகிறேன்.
(பெருமாள்முருகன் எழுதிய ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலை வை. ஐஸ்வர்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘ஸ்டூடென்ட்ஸ் எட்ச்ட் இன் மெமரி’ (Students Etched in Memory) என்னும் தலைப்பில் ஜனவரி 2025இல் இந்நூலைப் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. அதற்கு வை. ஐஸ்வர்யா எழுதிய மொழிபெயர்ப்பாளர் உரை இது.)