ஆகஸ்ட்
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட்
    • கட்டுரை
      அவசரநிலையும் எனது தலைமறைவு வாழ்க்கையும்
      அது ஓர் இருண்ட காலம்
      கருத்துரிமைக்குக் கறுப்பு நாட்கள்
    • கதை
      தீராக் கனல்
      நினைவுச் சிலை
      மாயச் சுண்ண வரைகோல்
    • சிறப்புப் பகுதி
      நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டு
    • நேர்காணல்: பக்தவத்சல பாரதி
      மனிதநேயத்திற்கான அறிவுத்துறையே மானிடவியல்
    • பதிவு
      வாழும் காலத்திலேயே உணரப்பட்ட மேதமை
    • தொடர் 80+
      ஆய்வுலகில் ஆ.சி.யின் பங்களிப்பு: அதிகாரமற்ற மனிதர்களின் அடையாள மீட்பு
    • திரை
      கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பகடிமொழியில் உக்கிரமான இலக்கிய ஆய்வு
      உணவு: நீதியும் மரபும்
    • முன்னுரை
      இதுவரை அறியாத முகம்
    • கவிதைகள்
      கடைசியாக
    • தலையங்கம்
      தலையங்கம்
    • கற்றனைத்தூறும்-9
      தூய்மைக் கலை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் திரை கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு

கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு

திரை
ரதன்

‘ஐம் ஸ்டில் ஹியர்’ படப்பிடிப்பின்போது

 

கியுபாவிற்கு ஒவ்வொரு தடவை பயணமாகும்போதும் அங்குள்ள அழகிய வெண்மணல் கடற்கரைகளைவிட, அம்மக்கள் சேகுவேராவை அலங்கரித்திருக்கும் முறையே என்னை அதிகம் கவர்ந்தது. அத்தீவு முழுக்க சே நிறைந்திருந்தார். அவர் சேகுவேரா எனப் பெயர் எடுக்கமும் முன்னர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இடங்களை மையப்படுத்தி பிரேசிலிய இயக்குநர் வால்டர் செலஸ் (Walter Salles) ‘மோட்டர் சைக்கிள் டயரீஸ்’ படத்தை இயக்கியிருந்தார். முகநூல் நண்பர் ஒருவர் சே பயணமான அதே இடங்களுக்குப் பயணித்து, அக்கதையைக் குறிப்புகளுடனும் படங்களுடனும் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் சே பயணமான இடங்கள் எனக் குறிப்பிடாவிட்டாலும், வால்டர் செலஸின் படமே அவருக்கு உந்துதலாக அமைந்திருந்தது.

வால்டர் செலஸ் ‘மோட்டர் சைக்கிள் டயரீ’ஸூக்கு முன்பாக ‘சென்ரல் ஸ்டேசன்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பல சீரிய சினிமா விமர்சகர்களின், ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. பல விருதுகளையும் பெற்றிருந்தது. இப்படத்தில் வால்டர் செலஸ் நிலப்பரப்பை உருவகப்படுத்திய, காட்சிப்படுத்திய முறை அபாரமானது. மலையின் உச்சியில் சிறுவனும் டோரவும் நிற்கிறார்கள். நிலம் மேலும் கீழும் நீண்டு பரந்ததாகவும், தனிமையாகவும் காட்சியளிக்கின்றது. அது முழுமையானதாகவும் வளமானதாகவும் மாறுகின்றது. அர்த்தம், அமைதி, பாரம்பரியம், அழகு, நம்பிக்கை ஆகியவற்றால் நிரம்பிவழிகின்றது.

வால்டர் இதுவரை 12 படங்களை இயக்கி யுள்ளார். இவர் தயாரிப்பாளருமாவார். பிரெஞ்ச் புதிய அலை, இத்தாலிய நவ-யதார்த்தவாதம் போன்றனபோல், பிரேசிலில் தோன்றிய சினிமா நோவாவின் இயக்குநர்களுள் வால்டர் செலஸ் முக்கியமானவர்.

மோட்டர் சைக்கிள் டயரீஸ் (2004)

சினிமா நோவா

வன்முறை என்பது பட்டினியால் வாடுவோருக்கு இயல்பான நடத்தை என்பதை சினிமா நோவா வெளிப்படுத்துகின்றது. சினிமா நோவோ வன்முறையின் அழகியல் பழமையானது அல்ல, புரட்சிகரமானது என்று கற்பிக்கிறது. வன்முறை தோன்றும் அந்தக் கணமானது, குடியேற்றவாசிகள் காலனித்துவத்தின் இருத்தலை உணர்ந்துகொள்ளும் கணமாகும். வன்முறையைக் குடியேற்றவாதி எதிர்கொள்ளும்போதே சுரண்டலின் வலிமையையும் பயங்கரவாதத்தையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஆயுதம் ஏந்தாதவரை குடியேற்றவாசிகள் அடிமையாகவே இருப்பார்கள். பொதுவாகக் கூறுவார்கள், “முதலாவது பொலீஸ் கொல்லப்பட்டபோதே பிரான்ஸூக்காரர்கள் அல்ஜீரியர்களின் பலத்தைத் தெரிந்துகொண்டார்கள்”என.

அறத்தின் அடிப்படையில் வன்முறை வெறுப்பால் நிறைந்ததல்ல. வன்முறைமீதான விருப்பு என்பது வன்முறையைப் போன்று கொடூரமானது. ஏனெனில் அது மனநிறைவு அல்லது சிந்தனையிலிருந்து உருவாகும் அன்பு அல்ல; மாறாக அது செயல்பாட்டின் மீதான, மாற்றத்தின் மீதான அன்பு.

சினிமா நோவோ என்பது நமது சிந்தனையைத் தெளிவுபடுத்திப் பசியின் பலவீன மயக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு தொடர்ச்சியான ஆய்வுச் செயல்முறை. பொருளாதாரச் சுரண்டல், கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இருத்தல் அவசியம்.

மரபுரீதியான படங்கள் வலதுசாரிப் படங்களாகவும், சமூகத்தின் பிரச்சினைகள்பற்றிய கவனம் எதுவுமின்றிக் கவர்ச்சியினை முதலீடுசெய்தும் உருவாக்கப்பட்டன.

சினிமா நோவோ குறைந்த முதலீட்டில், புதிய நடிகர்களை அல்லது தொழில்முறை நடிகர்கள் அல்லாதவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. புத்திஜீவிகளும் கல்விமான்களும் இப்படங்களை வரவேற்றார்கள்.

வால்டர் செலஸின் புதிய படமான ‘நான் இன்னமும் இங்கே இருக்கிறேன்’ (I’m Still Here’) 2024இல் பல்வேறு முக்கியத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படம் பிரேசிலில் 1964 -1985க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இராணுவ ஆட்சியையும் வன்முறையையும் கொடூரத்தையும் பதிவு செய்துள்ளது. பிரேசிலின் இடதுசாரி அரசியல்வாதி ருபென்ஸ் பைவாவின் வாழ்க்கை வரலாற்றினூடாகவே இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் செலஸ். ருபென்ஸ் பைவாவின் இளைய மகன் மாசெலோ பைவா எழுதிய நூலை அதே பெயரில் வால்டர் செலஸ் படமாக்கியுள்ளார். இந்நூல் 2015இல் வெளியானது.

பிரேசிலின் இராணுவ ஆட்சி 1964-1985

1961 செப்டம்பர் 8 பிரேசிலின் ஜனாதிபதியாக ஜோவ் கூலாட் (Joao Goulart) பதவியேற்றார். இவர் இடதுசாரிக் கருத்தியலைக் கொண்டிருந்தார். இவருக்குப் பிறகு 2003இல் மற்றொரு இடதுசாரி நாட்டின் அதிபரானார். இந்தத் தேர்தலில் இடது சாரித் தலைவர் ஜோவ் கூலாட் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக இவரை எதிர்த்த வலதுசாரிக் கும்பலுக்கு இரு புத்திஜீவி நிறுவனங்கள் நிதியளித்தன; ஆராய்ச்சி, சமூக ஆய்வுகள் நிறுவனம் (IPES), பிரேசிலிய ஜனநாயக நடவடிக்கை நிறுவனம் (IBAD) ஆகும். ஆகியவையே அந்நிறுவனங்கள். தென் அமெரிக்காவில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக ஜான் எஃப் கென்னடியின் உத்தரவின் பேரில் டேவிட் ராக்ஃபெல்லரின் உதவியுடன் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு அமெரிக்கத் தொழிலதிபர்கள் பெருமளவு நிதியளித்தார்கள். ஜோவ் கூலாட் சீனாவுடனும் சோவியத் ஒன்றியத்துடனும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தினார். இவரை அப்போதைய அமெரிக்கச் சட்ட அமைச்சர் ராபெட் கெனடி ‘பிரேசிலிய ஜிம்மி கொபா’ (Brazilian Jimmy Hoffa) என அழைத்தார். ஜிம்மி கொபா அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவராவார்.

பொதுவாகவே அமெரிக்கா மத்திய, தென் அமெரிக்காவில் உருவாகும் இடதுசாரித் தலைவர்களை வரவேற்பதில்லை. அதுவும் அந்நாடுகளின் ஜனாதிபதிகள்மீது அமெரிக்காவிற்கு அச்சம் அதிகம். ஜோவ் கூலாட்மீதும் அவர்கள் அச்சம் கொண்டார்கள். ஆப்ரேசன் பிரதர் சாம் (Operation Brother Sam) என்பது அமெரிக்காவின் பிரேசில்மீதான நடவடிக்கையாகும். இராணுவப் புரட்சிக்கான ஆயுதங்களை இத்திட்டம்மூலம் அமெரிக்கா கூலாட்டின் எதிர்ப்பாளர்களுக்கு வழங்கியது. அமெரிக்க மொழியில் ரெஜீம் சேன்ச் என்பது இயல்பாகவே நடைபெற்றது. 1964 ஏப்ரல் முதலாம் நாளன்று இராணுவச் சதிமூலம் ஜோவ் கூலாட்டைப் பதவியிலிருந்து அமெரிக்கா வெளியேற்றியது. இராணுவ அதிகாரி கஸ்ரலோ பிரான்கோ (Cas telo Branco) ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 1985இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு வரும்வரை ஆறு இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியாகப் பதவிவகித்தார்கள். யுஎஸ்எயிட் (USAID), உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றினூடாக பிரேசில் பல கோடி நிதியுதவியைப் பெற்றது. 1964-1970 வரையிலான காலப்பகுதியில் அமெரிக்கா அதிகளவு நிதியைப் பிரேசிலுக்கே வழங்கியது.

இராணுவ ஆட்சியில் வழக்கமாக நடைபெறுவதுபோல் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் கட்டுப் படுத்தப்பட்டன. பல்கலைக்கழகங்கள் கண்காணிக்கப் பட்டன. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இக்காலகட்டத்தில் 434 அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் இருபதினாயிரம் பேர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக காலம் இராணுவ ஆட்சி நடைபெற்ற நாடு பிரேசிலாகும்.

பிரேசில் போன்ற லத்தீன் அமெரிக்க, மத்திய, வட-அமெரிக்க நாடுகள் பூர்வீகக் குடிகளை அழித்து, அவர்களின் நிலங்களை அழித்துத்தோன்றிய நாடுகள். நீண்ட காலமாக இந்நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ நாடுகளாகவே இருந்துவந்தன. ஐரோப்பியரே பெருமளவாக இந்நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் தங்களது தாய் மண்ணிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களாகவுள்ளார்கள். இவர்களிடம் இருவித மனோபாவங்கள் உண்டு. ஒன்று, பூர்வீகக் குடிகளுக்கு எதிரானது. இரண்டாவது, தங்களது தாய் மண் ஆட்சியாளர்களின் காலனித்துவக் கருத்தியலுக்கு எதிரான கருத்தியல்.

வால்டர் செலஸ்1956ஆம் ஆண்டு ரியோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் மொறியாரா செலஸ் ஒரு அரசியல்வாதி, வங்கியியலாளர். பிரேசில் வங்கி முறைகளின் தந்தை என்றும் குறிப்பிடலாம். பிரேசிலின் வங்கி முறையில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர். முன்னாள் திறைசேரி அமைச்சர், பிரேசிலின் அமெரிக்கத் தூதுவர். வால்டர் செலஸ் தனது இளமைக் காலத்தில் பிரான்ஸிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வாழ்ந்தார். தனது பதினைந்தாவது வயதிலேயே பிரேசிலுக்குத் திரும்பி ரியோவில் வாழ்ந்தார்.

செலஸின் சக வகுப்பறைத் தோழி ருபென்ஸ் பைவாவின் மகள். வால்டர் செலஸ் ருபென்ஸ் பைவாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவருபவர். ‘ஐம் ஸ்டில் ஹியர்’ (Ainda Estou Aqui) போர்த்துக்கீஸ் மொழியில் எழுதப்பட்ட தன்வரலாறு. இதனை எழுதியவர் ருபென்ஸ் பைவாவின் மகன். 2015ஆம் ஆண்டில் வெளிவந்த இந்நூலை வாசித்த பின்னர் வால்டர் செலஸ் இதனைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். இதற்கு இவர் எடுத்துக்கொண்ட காலம் ஏழு வருடங்கள். ஏழு வருடங்களில் பிரேசிலில் பல அரசியல் மாற்றங்கள் நடந்திருந்தன. இந்தக் காலகட்டமும் அரசியல் மாற்றங்களும் இப்படத்தின் அவசியத்தை வால்டர் செலஸூக்கு உணர்த்தின.

சென்ட்ரல் ஸ்டேசன் (1998)

யார் இந்த ருபென் பைவா?

ருபென்ஸ் பைவா பொறியியலாளர். இவர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலங்களிலேயே பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டார். ”எண்ணெய் எங்களுக்கானது” (O petróleo é nosso - Oil is ours) போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். 1946இல் பிரேசிலின் எண்ணெய் வளத்தில் வெளிநாடுகளும் முதலீடு செய்யலாம் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. “எண்ணெய் (பெட்ரோல்) எங்களுக்கானது” என்ற அமைப்பு இதற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டது. 1962இல் பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் சார்பாக காங்கிரசுக்குத் தேர்வானார் ருபென்ஸ். அமெரிக்காவில் இருந்ததுபோல் அங்கும் “சிவப்பு அச்சம்” (Red Scare) இருந்தது. 1962 தேர்தலுக்கு முன்பாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பின்வருமாறு அமெரிக்கர்களின் அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தது: “எதிரிகள் தோற்கடிக்கப்படாவிட்டால் பிரேசில் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் சறுக்கிச் செல்லும் அபாயத்தில் உள்ளது’” இதில் எதிரிகளாக பிரேசிலின் தொழிலாளர் கட்சியே குறித்துக் காட்டப்பட்டது.

1964இல் இராணுவ ஆட்சியேற்பட்ட பின்னர் ருபென்ஸ் பைவா உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். ருபென்ஸ் பைவா யுகொஸ்லேவியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சிறிது காலம் தங்கியிருந்தார். பின்னர் நாடு திரும்பியபின் தனது பொறியியலாளர் நிறுவனத்தை நடத்திவந்தார். அத்துடன் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். ‘ச பலோ’ மாநிலத்தைச் சேர்ந்த, மக்கள் மத்தியில் அதிகம் அனுப்பட்ட, பரபரப்பான சிவில் இன்ஜினியர் அவர். சிறந்த பேச்சாளர். ஜனாதிபதியின் கட்சியில் வளர்ந்துவரும் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்தார். 1964, ஜூனில் ரகசிய அமெரிக்க அறிக்கை பைவாவை ஒரு “இடதுசாரித் தீவிரவாதி” என்று முத்திரை குத்தியது. நாடு சர்வாதிகார அடக்குமுறைக்குள் வெகு தீவிரமாகச் சென்றபோதும், ருபென்ஸ் பைவா அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாதேயிருந்தார்.

ருபென்ஸ் பைவா தன் குடும்பத்தின் துயரம் நிறைந்த வரலாற்றைத் திரைப்படமாக்க விரும்பினார். அவரது துணைவியாரும், ஐந்து குழந்தைகளின் தாயாருமான யுனிஸ் பைவாவினை மையப்படுத்தி அதே சமயம் பிரேசிலின் இராணுவ ஆட்சியின் கொடூரத்தை வெளிப்படுத்தி, அடுத்துவரும் சந்ததிகளுக்கு ஒரு பாடமாக்கவும் விரும்பினார். திரைப்படமாக்க எடுத்த ஏழு வருடங்களில் பிரேசிலின் நிலை இப்படத்தின் ‘ஐம் ஸ்டில் ஹிய’ரின் அவசியத்தை வால்டர் செலஸூக்கு வலியுறுத்தியது. இவ்வாறான படங்கள் பிரேசிலில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உரையாடலை ஏற்படுத்தின. 1970 இல் கிறிஸ்துமஸை ஒட்டிய நேரம். ருபென்ஸ் பைவாவின் வீட்டில் எப்போதும் மனிதர்கள் நிறைந்திருப்பார்கள். நடனம், பாட்டு, அளவற்ற உணவு, அளவற்ற நட்புகள், அத்துடன் அளவற்ற அரசியலும் நிறைந்த வீடு. தெரு நாயையும், தங்களது வீட்டு நாயாக வளர்க்கும் அன்பு நிறைந்த குடும்பம்.

ருபென்ஸ் பைவா தனது மகனுடன் இரவு பூஸ் போல் விளையாடுவது, இரவு உணவின் பின்னர் குடும்பத்தை ஜஸ்கிரீம் சாப்பிட அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் ருபென்ஸ் பைவாவின் குடும்பம் மீதான பற்றுதலை வெளிப்படுத்துகின்றன. வால்டர் செலஸ் இப்படத்தை ருபென்ஸ் பைவாவின் துணைவியார் யுனிஸ் பைவாவின் வாழ்க்கையூனூடாகக் காட்சிப்படுத்துகிறார்.

இராணுவமயமாக்கப்பட்ட சமூகத்தின் வெளிப்படையான அறிகுறிகளை யுனிஸ் பைவா கவனிக்கும் ஒவ்வொரு முறையும் தெளிவான ஒரு முன்னறிவிப்பை உணர்கிறார். வானத்தின் குறுக்கே ஹெலிகாப்டர் வெட்டுவது, தாழ்வாகப் பறக்கும் இராணுவ ஹெலிகாப்டர், பைவா குடும்பம் மணலில் ஓய்வெடுக்க முயற்சிக்கும்போது கடற்கரையைக் கடந்து வேகமாகச் செல்லும் துருப்புத் தொடரணி போன்றவற்றினூடாக முன்னறிவிப்பைக் காட்சிப்படுத்துகிறார் வால்டர். ரூபன்ஸின் நடவடிக்கைகள் பல புதிரானவையாகவே இருக்கின்றன. அவர் தனது குடும்பத்திலிருந்து எதையோ மறைத்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார் வால்டர்.

1971ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் பிரேசிலின் தலை நகரம் வெப்ப அலைகளால் சூடாகிக்கொண்டிருக்கிறது. கடற்கரையைப் பார்த்தவண்ணமிருந்த வீட்டை, இரண்டு இரும்புக் கரங்கள் தட்டுகின்றன. ஒரு சில நிமிடங்களில் கதவு திறக்கப்படுகிறது. உள்ளே புகுந்த இரும்புக் கர மனிதர்கள் தங்களை பிரேசிலின் விமானப்படை அதிகாரிகள் என அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். ரூபென்ஸ் பைவாவைச் சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். ருபென்ஸ் பைவாவின் துணைவியார் யுனிஸ் “எப்போது திரும்பிவருவீர்கள்” எனக் கேட்க, மதிய உணவிற்கு வந்துவிடுவேன் என அவர் பதிலளிக்கிறார். ஆனால் அவர் அதன்பின் திரும்பவில்லை. மறுநாள் ருபென்ஸ் பைவாவின் மனைவி யுனிஸூம் அவரது பதினைந்து வயது மகள் எலினாவும் விசாரணைக்காக இராணுவச் சித்திரவதைக் கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஒரு போலீஸ்காரரின் பின் இருக்கையில் அவளும் மகள் எலியானாவும் தலையைக் கறுப்பு முகத்திரையால் மூடச் செய்கிறார்கள். ருபென்ஸ் பைவாவுக்கு நெருக்கமானவர்களை அடையாளம் காட்டச் சொல்லி வற்புறுத்தப்படுகிறார். யுனிஸ் 12 நாட்கள் விசாரிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுகிறார். மகள் இரண்டு நாட்களின் பின்னர் விடுதலைசெய்யப்படுகிறார். ருபென்ஸ் பைவா கைது செய்யப்பட்ட மறுநாளே சித்திரவதைக்குள்ளாகி இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை ருபென்ஸ் பைவாவின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.

இயக்குநர் வால்டர் செலஸ்

இப்படத்தில் யுனிஸாக பெர்னாண்டோ டொர்ரெஸ் (Fernanda Torres) மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

யுனிஸுக்குத் திடீர்ப் பணச்சிக்கல் ஏற்படுகின்றது. வங்கியில் பணம் உள்ளது. ஆனால் அதனை எடுப்பதற்கு ருபென்ஸ் பைவாவின் கையொப்பம் தேவை. அல்லது அவர் இறந்துவிட்டார் என்ற மரணச் சான்றிதழ் தேவை. இக்கட்டத்தில் தமிழர்கள் உட்படக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நினைக்க வேண்டியுள்ளது. சிறு காணித்துண்டை விற்பதானாலும் மரணச் சான்றிதழ் தேவை. ஒரு கட்டத்தில் இவர்களுக்குத் துணைவர் இறந்துபோனார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்பதனைவிட அந்த மரணச்சான்றிதழே முக்கியமாகப்படுகின்றது. அண்மையில் டொரொன்டோவில் இரு பெண்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருவரின் கணவர் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர். இன்னமும் மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. மற்றைய பெண்மணியின் கணவர் முகவர்கள்மூலம் கப்பலில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர். பத்தொன்பது ஆண்டுகளாகத் திரும்பவில்லை. தொடர்புமில்லை. நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

திடீரென ஏற்படும் ஒரு சம்பவம் ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கின்றது? இறுதியாக யுனிஸ் தனது சொந்த ஊரான பாலோவிற்குச் செல்கிறார். அங்கு அவரது பெற்றோர் உள்ளார்கள். ரியோவைத் தமது சொந்த நிலமாக நினைக்கும் ருபென்ஸ் பைவாவின் பிள்ளைகளுக்கும் இந்தப் புலப்பெயர்வு மோசமான உளவியல் சிக்கலை ஏற்படுத்துகின்றது. புலம் பெயரும்போது பிள்ளைகளின் உளவியலை நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை. வால்டர் செலஸ் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் நுணுக்கமாகச் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்துகிறார்.

படம் 1996க்கு நகர்கின்றது. தற்போது யுனிஸ் பைவா, பிரேசிலின் பூர்வீக விவகாரங்களில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற வெற்றிகரமான வழக்கறிஞர். உலக வங்கியின், ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராகிறார். ருபென்ஸ் பைவாவைப் போல் காணாமல்போன பலரின் குடும்பத்துக்காகப் போராடுகிறார் யுனிஸ். 1985இல் முடிவடைந்த சர்வாதிகாரத்தால் அழிக்கப்பட்ட தனது கணவருக்கும் ஆயிரக்கணக்கான மற்றவர்களுக்கும் ஓரளவு நீதி கிடைக்க அவர் அயராது உழைக்கிறார்.

இறுதியாக பிரேசில் அரசு 25 ஆண்டுகளின் பின்னர் யுனிஸ் பைவாவிடம் அவரது காதல் கணவன் ருபென்ஸ் பைவாவின் மரணச் சான்றிதழை வழங்குகிறது. படம் மீண்டும் 2014க்கு நகர்கின்றது. யுனிஸ் பைவா வயதான மூதாட்டியாக இருக்கிறார். யுனிஸாக நடித்த பெர்னாண்டோ டொரிஸின் தாயான பெர்னாண்டோ மான்டெனெக்ரு (Fernanda Montenegro) மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வால்டர் செலஸின் ‘சென்ரல் ஸ்டேச’னில் டோராவாக நடித்தவர். யுனிஸ் பைவா அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தனது பேரப் பிள்ளைகள் சூழ வாழ்கிறார். அவரது குடும்பம் மகிழ்ச்சியாகவுள்ளது. வீடு அமைதியாக நிறைவான மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. கதிரையில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்தவாறிருக்கிறார். தொலைக்காட்சியில் இராணுவ ஆட்சியில் நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்கும் தேசிய விசாரணைக் குழு தீவிரமாகச் செயல்படுவதாகவும், அதனை ஜனாதிபதி தில்மா ரூசெஃப் (Dilma Rousseff) மேற்பார்வை செய்வதாகவும் செய்தியாளர் குறிப்பிடுகிறார். தில்மா ரூசெஃப் முன்னால் கொரில்லாப் போராளி; கொலினா (COLINA - Comando de Libertação Nacional) பிரேசிலிய மார்க்சிய கொரில்லா என்கிற அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்.

2024ஆம் ஆண்டு தனது குடும்பத்தின் சோதனையைப் பற்றிய நேர்காணலில் ரூபன்ஸ் - யூனிஸ் தம்பதியின் ஒரே மகனும் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தகத்தின் ஆசிரியருமான மார்செலோ ருபன்ஸ் பைவா, தனது தாயும் சகோதரியும் கைது செய்யப்பட்டதற்கான காரணம் ருபன்ஸின் முன்னிலையில் இருவரும் சித்திரவதை செய்யப்படவோ அல்லது அவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதை அவர் பார்க்க வேண்டும் என்பதற்காகவோதான் என்று கூறினார்.

ருபென்ஸ் பைவா எவ்வாறு கொல்லப்பட்டார், எப்போது கொல்லப்பட்டார் என்பதெல்லாம் பிரேசிலில் இருந்த அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியும். அவர்களில் ஒருவரது குறிப்பில் (1971, பெப்ரவரி 11) விசாரணையின்போது மாரடைப்பால் அல்லது வேறு காரணங்களால் இறந்திருக்கலாம் என எழுதப்பட்டுள்ளது. பிரேசிலிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வக் கதை, ஆயுதமேந்திய இடதுசாரித் தோழர்களால் ருபன்ஸ் பாதுகாப்புப் படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுப் பின்னர் போரில் கொல்லப்பட்டார் என்பதாகும்.

“கடந்த காலத்தின் அட்டூழியத்தை மீண்டும் சொல்கிறோம் என நினைத்தே இப்படத்தை ஆரம்பித்தோம். ஆனால் அது நமது நிகழ்காலத்தின் பிரதிபலிப்பாக உள்ளது என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்” என இயக்குநர் வால்டர் செலஸ் குறிப்பிட்டுள்ளார். “என்ன நடந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்தச் சக்திகளுக்கு எதிராக உந்துவதற்கும்- மறதியைத் தவிர்க்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக சினிமா இருக்க முடியும். நினைவாற்றல் இல்லாத நாடு எதிர்காலம் இல்லாத நாடு.

ஆனாலும் படம் பெர்னாண்டோ என்ரிக்கே கார்டோஸோ (Fernando Henrique Cardoso) வைக் குறிப்பிடத் தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளின் பேரில், சர்வாதிகாரத்தின்போது ஏற்பட்ட இறப்புகள், காணாமல் போதல்கள், மனித உரிமை மீறல்களுக்கு அரசின் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட சட்டமான 9.140 ஐ கார்டோஸோ ஆதரித்தார். கார்டோஸோ 1995-2003வரை பிரேசிலின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். இவர் ருபென்ஸ் பைவாவின் நெருங்கிய நண்பர். ருபென்ஸ் பைவா 1962 தேர்தலில் வெற்றிபெறப் பல வழிகளில் உதவியவர். கார்டோஸோ அடிப்படையில் பேராசிரியர். இராணுவ ஆட்சியின்போது வெளிநாடுகளில் வாழ்ந்தவர். சட்டம் 9.140 கையெழுத்து இடும் அல்லது உறுதிப்படுத்தப்படும் நிகழ்வின்போது “ருபென்ஸ் பைவாவின் இறப்பால் இன்றுவரை நான் வேதனைப்படுகின்றேன்” என உரையாற்றியிருந்தார்.

‘ஐ’ம் ஸ்டில் ஹியர்’ 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக ஆஸ்கார் விருதைப் பெற்றது. அது மட்டுமல்லாமல் வெனிஸ் உட்படப் பல திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறிப்பிடத்தக்கப் படமிது.

பிரேசில் இராணுவப் புரட்சியின் விளைவுகளைப் பற்றி பல படங்கள் வெளிவந்துள்ளன. இப்படம் எம்முடன் நெருக்கமானது. இன்றும் எமது மக்கள் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினை மிக உக்கிரமான பிரச்சினையாகும். ரிச்சட் டி சொய்சா, ருபென்ஸ் பைவா போன்றே அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பத்திரிகையாளர். இவரை ஹெலிஹாப்டரிலிருந்து தூக்கியெறிந்தது போலவே பல சம்பவங்கள் பிரேசிலிலும் அர்ஜெண்டீனாவிலும் நடைபெற்றன. வெள்ளைக் கொடி காட்டிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை உலகம் அறியும். இலங்கை அரசு அதனை அறிவிக்க மறுக்கின்றது. காணாமல் போனவர்கள்பற்றிய தமிழ்ப் படைப்புகள், குறிப்பாக, திரைப் படைப்புக்களில் ரஞ்சித் ஜோசப் தவிர்த்த மற்றைய படைப்பாளிகள் அதன் பின்னால் உள்ள நுண் அரசியலைப் பேசத் தயங்குகிறார்கள்.

‘ஐ’ம் ஸ்டில் ஹியர்’ மூலம் செலஸ் இராணுவ அடக்குமுறை ஐனநாயகத்தைப் புதைத்து, மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது என்பதனைப் பதிவுசெய்துள்ளார். அரசாங்கம் தன் குடிமக்கள்மீது போரை அறிவிக்கும்போது என்ன நிகழுகின்றது என்பதனை உறையவைக்கும் சித்திரமாக மாற்றிக்காட்டியுள்ளார்.

 மின்னஞ்சல்: rathan100@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.