டிசம்பர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • பாரதி நினைவு நூற்றாண்டு
      பாரதியும் ‘கற்பக’மும்
    • கவிதை
      சற்றுமுன் இடிந்த அரண்மனை
    • மதிப்புரை
      செம்மை மாதர் திறம்புவதில்லை
    • அஞ்சலி: கே.எஸ். (1937-2020)
      உற்ற நண்பர் கே.எஸ்.
    • தலையங்கம்
      கற்றனைத்து ஊறும் அறிவு
    • அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன் (1944-2020)
      புதிதினும் புதிது காண்பார்
    • கட்டுரை
      அல்லாடும் அமெரிக்க ஆன்மா
      மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்
      7.5% கூர் இருளில் மின்மினி வெளிச்சம்
      மான் புக்கர் பரிசு 2020: டக்ளஸ் ஸ்டூயர்ட்டின் ஷகி பெயின்
      திராவிட இயக்க மீட்பு: சொல்லாடல்களின் மாற்றங்கள்
      இரும்புக் கோட்டையைத் தாக்கும் இந்துத்துவ ஈட்டி
      மொழியியல் நோக்கு: இலக்கணமும் இலக்கண மரபுகளும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      வழுவழுப்பான கல்
    • நூல் அறிமுகம்
      ஜித்தனும் சித்தனும்
    • கதை
      செல்லப்பன்
      தோட்டத்தின் அந்தம்
    • அறிக்கை
      நிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்
    • உரை
      அயர்விலாப் பெருந்தொண்டர்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2020 மதிப்புரை செம்மை மாதர் திறம்புவதில்லை

செம்மை மாதர் திறம்புவதில்லை

மதிப்புரை
வாஸந்தி

செம்மை மாதர் திறம்புவதில்லை

மதிப்புரை

வாஸந்தி

The Brass Note Book  

A Memoirs

Devaki Jain

Speaking Tiger Books
125-A, Ground Floor
Shahpur Jat
New Delhi – 110049

Pages 232

Price  Rs 599/-

தேவகி ஜெயின்  ஆச்சரியங்கள் மிகுந்த பெண். பொருளாதார வல்லுநர்களில் மிக முக்கியமானவர். காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்; இந்திரா காந்தியின் அவசர நிலையை எதிர்த்தவர்; ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பாதையைப் பின்பற்றி ஜனதா கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரத்தைத் தில்லியில் முன்னெடுத்தவர்; வினோபா பாவேயுடன் பூதான பாதயாத்திரை சென்றவர். அவருக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருது ஓர் அலங்காரம் மட்டுமே. அவர் சாதித்தது பலப்பல.

தேவகி ஜெயினின் 87ஆம் வயதில் வெளிவந்திருக்கும் தன்வரலாறு ‘The Brass Note book’ இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிக முக்கியமான பதிவு. ஒரு போராளியின், அறிவுஜீவியின் சரளத்துடன் அழகிய ஆங்கிலத்தில் விரியும் சுவாரசியமான புத்தகம் இது.

சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் -1933- மைசூரில் ஆச்சாரமான பழக்கவழக்கங்கள் கொண்ட தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர். உயர்கல்வி பயில வேண்டும் என்ற அவரின் வேட்கை என்னவெல்லாம் செய்யவைத்தது என்பதைப் பற்றிய ஒளிவுமறைவற்ற பாசாங்கற்ற கதை. கல்வியில் இருந்த ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான ஆர்வம் எல்லா விஷயத்திலும் இருந்தது அவருக்கு; பாட்டு, நாட்டியம், சைக்கிள் விடுதல், குதிரைச் சவாரி, மேடைப் பேச்சு, பாலியல் உணர்வுகள் உள்பட எல்லாவற்றிலும். ஆழ்ந்த பொருளாதார, பெண்ணிய, காந்தியக் கருத்துகள் இழையோடும் வாழ்க்கைக் குறிப்பில் அன்றைய 50-60களின் சந்தர்ப்பச் சூழலால் பால் இன வேறுபாடு இல்லாமல் பழகவும் பயணம் செய்யவும் அதில் ஏற்பட்ட ஆண்களுடனான நட்பு, உறவு, காதல், பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்பை மீறிக் காதலர் லக்ஷ்மி சந்த் ஜெயினை - ஒரு ஆண்டு சேர்ந்துவாழ்ந்தபிறகு - மணம் செய்துகொண்டது ஆகியவற்றை வெளிப்படையாக எழுதியிருக்கும் நேர்மை அசத்துகிறது.

இருபது வயதில் லண்டனிலிருந்து காபுல்வரை தரைமார்க்கமாக லாண்ட் ரோவர் வண்டியை ஓட்டிக்கொண்டு துணிந்து மேற்கொண்ட சாகசங்கள் நிறைந்த தன்னிச்சையான பயணங்கள், ஆதர்ச ஆசிரியர் என்று நினைத்த ஒருவரிடம் ஏற்பட்ட மோசமான பாலியல் அனுபவம், அதன்மூலமாக உளரீதியாக அனுபவித்த பாதிப்புகள் ஊடாக அவர் இங்கிலாந்தில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் உயர்பட்டப் படிப்புப் படித்ததே பெரிய சாகசம். (பல நல்ல மனங்கள் உதவி செய்தாலும் பணப் பிரச்சினையின் காரணமாக ஒரு ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவிச் சமாளித்தார்.  பிறகு அவர் பெண்ணிய இயக்கத்தில் முக்கிய பங்காற்றியதும், இன்னும் ஆற்றிவருவதும், பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பிரசித்திபெற்ற அறிவாளிகள், எழுத்தாளர்கள், போராளிகள் பலருடன் நட்புக்கொண்டு பணியாற்றியதும் நம்ப முடியாத கதை. உண்மையில் தேவகி செய்யாததே ஒன்றுமில்லையென்று நினைக்கத் தோன்றுகிறது.

தேவகியின் தந்தை மண்டியம். ஏ. ஸ்ரீனிவாசன் மதராஸில் 1897இல் பிறந்தவர். மிகச் சாமான்யக் குடும்பத்தில் பிறந்து சொந்தத் திறமையால் உயர்ந்து மைசூர் மாகாண அமைச்சகத்தில் மந்திரி ஆனார். அவரது நிர்வாகத் திறமையைக் கேள்விப்பட்ட மத்திய அரசு அவரைக் குவாலியர் மாகாணத்தின் பிரதம மந்திரி ஆக்கியது. அவருக்கு அப்போது வயது 49. அதன்மூலமாகச் சுதந்திர இந்தியாவின் சட்ட சாசனத்தை வடிவமைக்கும் செயற்குழுவில் உறுப்பினர் ஆனார். அவருக்குப் பல கலைகளில் ஆர்வம் இருந்தது. மைசூரின் மேயராகப் பதவி வகித்தபோது எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, சௌடையா ஆகியோருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. 

ஸ்ரீனிவாசன் அலுவல் விஷயமாகப் பல இடங்களுக்குச் செல்வார். உடன் மனைவி, குழந்தைகளையும் அழைத்துச் செல்வார். அப்படிப் பயணித்தபோதுதான் சிறுவயதிலேயே யானை ஏற்றம், குதிரைச் சவாரி, நீச்சல், வண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தேவகி கற்றுக்கொண்டார். ஸ்ரீனிவாசன் தன் மனைவிக்கு நிறையச் சலுகைகள் தந்தவர். விலங்குகள் மிகுந்த காடுகளில் அவர் சஃபாரிக்குச் செல்லும்போது மனைவியும் மகள்களும் காக்கி டிரௌசர் அணிந்துசெல்வார்கள். அத்தகைய விஷயங்களைப் பிராமணக் குடும்பத்துப் பெண்கள் செய்ததே இல்லை.

ஆனால் ஸ்ரீனிவாசன் முரண்கள் மிகுந்தவர். மனைவியை நடத்துவதில் முற்போக்குவாதியாகத் தெரிந்தாலும் அடிப்படையில் சடங்குகள், அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதில் பழைமைவாதியாக இருந்தார். தேவகியின் தாய்க்குத் தான் ஆங்கிலம் கற்கவில்லை, விருந்துகளில் சக விருந்தினர்களுடன் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று மிகுந்த குறை உண்டு. அதனாலேயே தேவகியையும் அவரது சகோதரிகளையும் பெங்களூர் ஸேக்ரெட் ஹார்ட் கான்வென்ட் பள்ளியில் சேர்த்தார். தேவகி பார்த்த வெளியுலகம் வேறு; வீட்டுப் பழக்கவழக்கங்கள் வேறு. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் நேராக வீட்டிற்குள் நுழையாமல் பின்வாசல் வழியாக வந்து உடுப்பைக் களைந்து கைகால் கழுவி வேறு உடை உடுத்தியபிறகே உள்ளே நுழைய முடியும். வீட்டில் மிக ஆச்சாரம் பார்க்கும் வயதான விதவை அத்தைகள் இரண்டுபேர் இருந்தார்கள். அவர்கள் சொல்படி ஸ்ரீனிவாசன் நடந்தார். தேவகியின் அக்கா கௌசல்யா பதின்மூன்று வயதில் பூப்பெய்தியபோது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். மூன்றுநாட்கள் அவளைத் தனியே உட்காரவைத்ததோடு தேவகியை அவளுக்குத் துணையாக அமரும்படி சொன்னார்கள். தேவகியால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சிறைவாசம்போல சாப்பாடு கதவுக்கு அடியிலிருந்து உள்ளே தள்ளப்பட்டது. நான்காம்நாள் கௌசல்யாவுக்கு நீராட்டிப் பெரிய பண்டிகைபோலக் கொண்டாடப்பட்டது. எட்டு வயது தேவகிக்குக் காரணம் புரியாமல் எரிச்சல் ஏற்பட்டது. கௌசல்யாவுக்குக் குடும்ப வழக்கப்படிப் பூப்பெய்திய கையோடு பதின்மூன்றாவது வயதில் திருமணமும் செய்விக்கப்பட்டது.

தேவகிக்குப் பதினெட்டு வயதிலிருந்து மாப்பிள்ளை வேட்டை தொடங்குகிறது. தேவகிக்கு அப்பாவின் மேல் அபரிதமான மரியாதையும் நெருக்கமும் இருந்தது. ஆனால் கடைசியில் தந்தையின் வார்த்தையை மீறித் தனது மணவாழ்வை அமைத்துக்கொண்டார்.

பத்துவயதில் அவருக்கு அதிர்ச்சி தரும் அனுபவம் சொந்தத் தாய் மாமனிடமிருந்து ஏற்பட்டது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தேவகியை விளையாட்டில் ஈடுபட அழைத்து பாலியல் ரீதியாகச் சுரண்ட நெருங்கியபோது அது என்னவென்று புரியாமல் அருவருத்துத் தேவகி ஓடிவிட்டார். நடந்ததைத் தாயிடம் சொன்னபோது அவர் அதிர்ந்துபோனார். அதைப்பற்றி வெளியில் பேசக்கூடாது என்று உபதேசித்தார். ஆனால் மாமாவிடம் அதைப்பற்றி ஏதும் கேட்கவில்லை. தேவகிக்கு அதிக பாதுகாப்பு அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இத்தகைய சூழலில்தான் தேவகி ஒரு சூட்டிகையான, அசாதாரண புத்திசாலித்தனம் கொண்ட உற்சாகமான பெண்ணாக வளர்ந்தார். மவுன்ட் கார்மல் கல்லூரியில் கணிதத்தையும் பொருளாதாரத்தையும் முக்கியப் பாடமாக எடுத்துப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். மாகாணத்தில் முதல்நிலை பெற்று மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார்.

அந்தச் சமயத்தில் வேலை நிமித்தமாக ஸ்ரீனிவாசன் இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஓர் உபரி டிக்கெட்டும் இருந்தது; தேவகியும் புறப்பட்டார். லண்டன் மாநகரப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு வியப்பை அளித்தன. லண்டனில் இன்னும் கொஞ்ச நாட்கள் தங்குவதற்குத் தந்தையிடம் அனுமதி பெற்றார். ஓராண்டு ஆக்ஸ்ஃபோர்ட் ரஸ்கின் கல்லூரியில் டிப்ளோமா வகுப்பில் சேர்ந்தார். அவருக்கு மிகச் சுலபமாக நண்பர்கள் கிடைத்தார்கள். பணப்பிரச்சினை மிகுந்த கவலை அளிக்கும் நாட்கள் இரண்டாம்முறையாக அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக மேற்படிப்புக்கு வந்தபோது ஏற்பட்டது. இருந்தாலும் பல நண்பர்களின் ஆசிரியைகளின் உதவி கிடைத்தது. அதைவிட வந்த புதிதிலேயே அவரை ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்த்துக்கொண்ட சிறந்த அறிவாளி என்று அறியப்பட்ட பேராசிரியரிடம் மிக மோசமான அனுபவமும் ஏற்பட்டது. காரில் செல்கையில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டபோது தேவகி அதிர்ந்துபோய் காரின் கதவைத் திறந்து குதிப்பேன் என்று மிரட்டித் தப்பித்தார். பேராசிரியரின் கடும் கோபத்துக்கு உள்ளானார். பலர் முன்னிலையில் அவரை முட்டாள், வேலைக்குத் தகுதியில்லாதவர் என்று பேராசிரியர் இகழ்ந்தார். அன்றிலிருந்து அவரது சம்பளம் நிறுத்தப்படும் என்றார். தேவகி நிலைகுலைந்துபோன தருணம் அது. எப்படியோ அவருக்கு ஸெயின்ட் ஆன் கல்லூரியில் பொருளியல் வகுப்பில் இடம் கிடைத்தது. அது பெண்கள் கல்லூரி. பேராசிரியைகள் மிகுந்த அன்புடன் இருந்தார்கள்.

தில்லி திரும்பியதும் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் ஆசிரியை வேலை கிடைத்தது. பொருளியலில் நாட்டம்கொண்ட அவர் பெண்ணியவாதியானது எதேச்சையானது. ‘இந்தியப் பெண்கள்’ என்று ஒரு கட்டுரை எழுதவேண்டியிருந்தது சர்வதேசப் பெண்கள் ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக. அதிலிருந்து நட்புகள் விரிந்தன. பார்வை விரிந்தது. க்ளோரியா ஸ்டீன்ஹாம் என்ற பிரபலப் பெண்ணியவாதியின் நட்பு முன்பே அவருக்கு இருந்தது. இப்போது வலுப்பட்டது. பெண்ணின் வளர்ச்சிக்குத் தடை பொருளாதாரச் சமத்துவமின்மையே என்ற அவரது வாதம் பலரால் பாராட்டப்பட்டது. எல்லாப் புள்ளிவிவரங்களிலும் ஆய்விலும் பெண் ஒரு பங்காளியாகப் பார்க்கப்படுவதில்லையென்று சுட்டிக்காட்டினார். அவருடைய கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பல மாநாடுகள். பல இடத்தில் தலைமைப் பங்கு. ஜூலியஸ் நைரேர் தலைமையில் தென்பகுதி ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில்தான் காந்தியவாதியான லக்ஷ்மி சந்த் ஜெயினுடன் நட்பும் காதலும் ஏற்பட்டது. அந்தக் காதலை ஸ்ரீனிவாசன் மிகக் கடுமையாக எதிர்த்தார்.  ஆனால் (இருவரும்) தேவகி மிகப்பிடிவாதமாகத் தன் முடிவில் இருந்தார். முப்பத்தைந்து ரூபாய் செலவில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் இருவருடைய உறவும் பரஸ்பர அன்பும் மிக அழகிய காதல் ஓவியம்போலப் புத்தகத்தில் மலர்கிறது. இருவரும் சேர்ந்து பல பொதுப்பணிகளில் பணியாற்றினார்கள். லக்ஷ்மி ஜெயின் தெற்கு ஆஃப்ரிக்காவுக்கு இந்திய ஹைகமிஷனராகச் சென்றபோது நெல்சன் மண்டேலாவுடனும் டெஸ்மன் டுட்டுவுடனும் மிக நெருக்கமான நட்பு ஏற்பட்டது மிகப்பெரிய வாய்ப்பு. இந்தியாவில் பல அறிவுஜீவிகளுடன் நெருக்கமான தோழமை இன்றும் தொடர்கிறது. அமர்த்தியா ஸென் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

கடைசிப் பகுதியில் தாயின் மரணத்தையும் லக்ஷ்மி ஜெயினின் மரணத்தையும் மிகுந்த உருக்கத்துடன் விவரிக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் பிரமிப்பும், வாழ்க்கையை முழுமையாக நேசித்த தீரமான பெண்ணுடன் உரையாடிய திருப்தியும் ஏற்படுகின்றன.

            மின்னஞ்சல்: vaasanthi.sundaram@gmail.com

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.