முஸ்லிம்களும் இடஒதுக்கீடும் ஒரு வரலாற்றுப் பார்வை
1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தின்போது முஸ்லிம்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாயினர். இதனால் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசுமீது அவர்கள் கடும் வெறுப்பும் கோபமும் கொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில்தான் ஆங்கிலேய அரசு லார்டு மெக்காலேயின் பரிந்துரைகளை ஏற்றுப் புதிய கல்வித் திட்டத்தை நாடெங்கும் அறிமுகப்படுத்தியது. தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், கல்லூரிகள் என மூன்று வகையான கல்வி நிலையங்கள் நாடெங்கும் தொடங்கப்பட்டன. இந்தக் கல்விக் கூடங்களில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தது அல்லது அது ஒரு மொழிப்பாடமாக இருந்தது. புதிய கல்விக் கொள்கையில் சமயக் கல்விக்கு இடம் இல்லை.
ஆங்கிலேய அரசின்மீது வெறுப்புக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அவர்களின் மொழியான ஆங்கிலத்தையும் வெறுத்தனர். ஆங்கிலம் கற்பது ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) எனச் சில மார்க்க அறிஞர்கள் ‘பத்வா’ கொடுத்தனர். பள்ளியில் சமயக் கல்வி இல்லாததால் தங்களது பிள்ளைகள் இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து நழுவிச் செல்ல நேரிடும் எனவும் கருதினர். இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களுடைய பிள்ளைகளை இந்தப் பள்
