அகப்பயணத்தின் தடம்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியத்தில் இயங்கிவரும் கவிஞர் ஆனந்த்தின் படைப்புகள் குறித்து ஒருநாள் கருத்தரங்கம் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டு அரங்கில் 01.08.2026 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. ‘காலவெளியில் பூத்த அளவில்லாத மலர்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்களால் அரங்கு நிறைந்திருந்தது.
கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்து ஆர். சிவகுமார் “ஆனந்த் என்ற கவிஞனைப் புரிந்துகொள்ள, அவருடைய கவிதைகளை மட்டும் வாசிப்பது போதாது; அவருக்குள் உயிர்சக்தியாகத் தோன்றும் ‘இளவரசி’, அவரை உருவாக்கிய தந்தை–இலக்கியச் சூழல், சிறுபத்திரிகை இயக்கம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம் போன்ற உறவுகள், நினைவாகத் தொடர்ந்து வாழும் மரங்களும் மனிதர்களும், மொழி குறித்த அவருடைய ஆரம்பகாலத் தேடல், 1970களிலிருந்து வளர்ந்த நவீனத் தமிழ் கவிதையின் வரலாறு ஆகியவை ஒன்றாக வாசிக்கப்பட வேண்டும்” என்றார்.
கல்யாணராமன், ஆனந்த்தின் படைப்புகளில் காணப்படும் தத்துவ ஆழம், எளிமையான மொழி, நுண்ணிய கவித்துவப் பார்வை ஆகியவை நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவருக்குத் தனித்துவமான இடத்தை அளித்துள்ளதாகக் கூறிச் சில சுவாரசியமான செய்திகளை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
கவிதை அமர்வில் ஷாஅ, ஆனந்த்தின் கவிதைகளுக்கு நாற்பத்தேழு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு எனக் குறிப்பிட்டார். “ஆனந்த்தின் கவிதை வெளி உலகைப் பதிவு செய்வதற்கான மொழி அன்று; தன்னை அறிந்து முழுமையை நோக்கிச் செல்லும் அகப்பயணம்” என்றார்.
றாம் சந்தோஷ் வடார்க்காடு பேசுகையில் ஆனந்த்தின் கவிதை தனிமனித “நான்” என்பதில் தொடங்கிப் பிரபஞ்சத்தை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டார். அவரது கவிதைகளை அவர் “நான் – காலம் – இடம் – பிரபஞ்சம்” எனும் தத்துவக் கோணத்திலேயே வாசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
வேணு வேட்ராயன் “ஆனந்த்தின் கவிதை மனக்காயங்களையும் அகப்பிரளயத்தையும் வெளிப்படுத்தும் கருவி மட்டுமன்று; அவற்றிலிருந்து மீண்டு, ஆழ்மனதில் மறைந்திருப்பதை உணர்ந்து, தன்மையின் எல்லைகளைக் கடந்து, நினைவு – காலம், பார்வையாளர் – காட்சி என்ற இருமைகளைக் கரைத்து, காலமற்ற அனுபவ நிலையை அடையும் அகமாற்றச் செயல்பாடு” என விளக்கினார்.
நாவல் அமர்வில் உரையாற்றிய சுரேஷ் பிரதீப், ‘சுற்றுவழிப் பாதை’ மெய்மையைத் தேடி ஓர் இறுதி முடிவை அடையும் நாவல் அல்ல; மனித மனவெளி, நிகழ்காலம், பரிவு, காதல், விழிப்புணர்வு ஆகியவற்றின் வழியே மனிதன் தன்னைத் தொடர்ந்து தேடும் பயணத்தைப் பற்றிய மெய்யியல் நாவல்” என்றார்.
பிரபாகரன் சண்முகநாதன் ‘சுற்றுவழிப் பாதை’ நாவலிலுள்ள தத்துவ விசாரங்களை நீக்கிவிட்டால் அது ஒரு வரலாற்றுப் புனைவின் எல்லைக்கு அருகே நிற்கும் நாவல் என அழுத்தமாகக் குறிப்பிட்டார். “தன்னையறிதலின் வழியே உலகைப் புரிந்துகொள்ள முயலும் மனித மனத்தின் முடிவற்ற கேள்வி கொண்ட பயணமே இந்நாவல்” என முடித்தார்.
பெஷாரா, ‘சுற்றுவழிப் பாதையோடு பயணம்’ எனும் தலைப்பில் உரையாற்றுகையில், இந்நாவல் தனக்குள் ஊடாடி, தன் மனதை அலைக்கழித்த வினாக்களுக்கு விடை கண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஆனந்த்தின் மொழியாக்கங்கள், கட்டுரைகள் குறித்த அமர்வில் பேசிய லதா அருணாச்சலம், “ஆனந்த்தின் மொழியாக்கங்கள் மூலப் படைப்பின் கருத்தை மட்டும் கடத்தவில்லை. அதன் தொனி, பண்பாட்டு அடர்த்தி, அந்நியத்தன்மை ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொண்டு தமிழில் சரளமான வாசிப்பு அனுபவத்தையும் உருவாக்குகின்றன” என விரிவாக எடுத்துரைத்தார்.
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் பேசுகையில், “மனித மனத்தின் ஆழங்களையும் காலத்தின் இயக்கத்தையும் கவிதை, புனைவு, மொழிபெயர்ப்பு, சிந்தனை வழியே தொடர்ந்து ஆராயும் ஆனந்த், கலையை மனித வாழ்வை மீட்டுருவாக்கும் சக்தியாகக் கொண்டாடுபவர்” என்றார்.
கிருஷ்ணமூர்த்தி, ‘காலவெளிக் காடு’ நூலில் “நான்” யார் என்பதை நேரடியாகத் தேடும் சிந்தனை, ‘கவிதை எனும் வாள்வீச்சு’ நூலில் கவிதை வழியே தன்னை உணரும் நிலையாக மாறுவதாகக் குறிப்பிட்டார்.
நிறைவரங்கத்தில் பேசிய கவிஞர் மோகனரங்கன்; ஆனந்த்தின் நட்பு, மனிதநேயம், பரஸ்பர மரியாதை, உரையாடல், அகப்பார்வை ஆகியவற்றின் வழியே அவருடைய படைப்புலகை அறிமுகப்படுத்தினார்.
தேவேந்திர பூபதி, “ஆனந்த்தை வெறும் எழுத்தாளராக மட்டும் நான் பார்க்கவில்லை. தமிழின் நீண்ட படைப்புப் பாரம்பரியத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஓவியம் எனப் பல தளங்களில் இயங்கும் முழுமையான படைப்பாளியாகக் காண்கிறேன்” எனக் கூறினார்.
நிறைவுரையாற்றிய யுவன் சந்திரசேகர், “ஆனந்த்தை இலக்கியத்தின் வழக்கமான வரையறைகளுக்குள் அடைக்காமல், அனுபவங்களையும் உணர்வுகளையும் சிந்தனையின் வழியாகக் கீறிப் பார்க்கும் தனித்துவமான சிந்தனையாளராகப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கவிஞர் ஆனந்த் தமது ஏற்புரையில், இலக்கியம் பிறருக்காக எழுதுவது அல்ல; தன்னை அறியவும் வாழ்க்கை அனுபவங்களின் பொருளைத் தேடவும் மேற்கொள்ளும் முடிவற்ற அகப்பயணமே. இதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து தேடுவதும் அனுபவிப்பதும் முக்கியம் என்றார்.
மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com
