‘வென்றிலன் என்றபோதும்...’
மூத்த பதிப்பாளர் வைகறை சென்னையில் 01.08.2026 காலமாகிவிட்டார். 15.08.1950இல் பிறந்த ‘வைகறை’ என்றே அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் ஜெயபால் என்பது நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து பலரும் அறியாதது.
பதிப்பாளர் என்பது அவரது ஆளுமையின் பல அம்சங்களுள் ஒன்று. அது வாழ்தொழிலாகவும் பலரையும் கவர்ந்துவிட்டதாகவும் அமைந்துவிட்டது. எஸ்.வி. ராஜதுரை (சிந்திக்கும் நாணல்), பெ. மணியரசன் (மனிதனைப் பாடுவேன்), பெ. மணியரசன் - மா. வளவன் (அ. மார்க்ஸ்) (பாரதி - ஒரு சமூகவியல் பார்வை), தியாகு (சுவருக்குள் சித்திரங்கள்), மு. புஷ்பராஜன் (புலம் இழந்த துயர்), புதுவை இரத்தனகிரி கவிதைகள், ய. மணிகண்டன் (நேரிசை வெண்பா - இலக்கியக் களஞ்சியம்), ஆ. சிவசுப்பிரமணியன் (பொற் காலங்கள்- ஒரு மார்க்ஸிய ஆய்வுரை), ஆ. இரா. வேங்கடாசலபதி, பெருமாள்முருகன், க. பஞ்சாங்கம் போன்ற இன்றைய தமிழ் இலக்கிய உலகில் முதல் நிலையில் விளங்கும் பலரது தொடக்கக் கால நூல்களை அச்சடித்தும் பதிப்பித்தும் தந்தவர் வைகறை. விற்பனை அவருக்கு இரண்டாம் பட்சம். அச்சடிப்பது, நூலாக்குவது போன்றவையே அவருக்கு முதன்மை.
சுந்தரையாவின் ‘வீரத் தெலங்கானா: ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’ நூல் வைகறையின் சாதனைகளுள் ஒன்று. இடதுசாரித் தலைவர் வி. பி. சிந்தன், இலங்கை கே. டேனியல் அவருடைய தோழர்கள். முக்கியமானவர்களையும் முக்கியமானவற்றையும் முன்னுணரும் ஆற்றல் கொண்டவர் வைகறை. விற்கும் என்பதற்காக எந்தப் பிரதியையும் வெளியிடத் தேர்ந்தெடுக்காதவர். கொள்கைப் பற்றோடு பதிப்பகம் நடத்திய வெகு சிலருள் ஒருவர்.
பலரும் அறியாத கவிஞர் நாகை சாமிநாதனின் சமத்துவப் பாட்டைத் தேடியெடுத்து மீள்பிரசுரம் செய்தவர் வைகறை. அந்த இடதுசாரி மக்கள் கவிஞரின் நூலுக்கு வ.ரா. முன்னுரை வழங்கியிருந்ததை மீள்பிரசுரத்திற்குப் பிறகே வ.ரா. ஆய்வாளனான நான் அறியவந்தேன்.
மலர்களை வெளியிடுவதில் வைகறைக்குத் தீராத ஆர்வம். அவர் அணியம் செய்த மலர்களில், இரா. இளவரசுவின் ‘இளவரசியம்’, ‘நேற்றிருந்தார்’ (2016), ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கான ‘புத்தகம் பூத்த பொய்கை’ (2015), ‘தனித்தமிழ் நூற்றாண்டு மலர்’ (2016) ஆகியன நினைவில் நிற்பவை. அவை வரலாற்றுப் பெட்டகங்கள்.
இராசகிளி பிரிண்டர்ஸ் தொடங்கிப் பின் பொன்னி, சாளரம் என்ற பெயர்களைப் பெற்றிருந்தன வைகறையின் பதிப்பகங்கள். சென்னைப் புத்தகக் காட்சி நடக்கும் ஜனவரியில் ‘சாளரம்’ ஆண்டுக்கொரு முறை வழக்கமாகத் திறக்கும். அத்தகைய ஒரு சாளரத்தில்தான் கு. அழகிரிசாமி பற்றிய என் முதல் கட்டுரை வெளிவந்து பலரின் கவனத்தில் விழுந்தேன். இன்னொரு சாளரத்தில் சங்கொலி க. திருநாவுக்கரசுவின் நீண்ட நேர்முகம் இடம் பெற்றிருந்தது. சுருக்கமான வாழ்க்கை வரலாறு என்றே அதைச் சொல்லலாம். திராவிட இயக்க ஆய்வாளரான அவருக்கு இதைப் போன்றதொரு நீண்ட நேர்முகம் வேறு எதிலும் வரவில்லை. அரியவற்றை நிகழ்த்தியவர் அல்லது நிகழ்த்த விரும்பியவர் வைகறை.
வைகறை திருவையாறு தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; ஆம், இலக்கணமும் அறிந்த பாவலர் அவர். களத்தில் நிற்பவர் என்றாலும் கனவுகளும் நிரம்பியவர். இல்லையென்றால் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பிய தருணத்தில், “இனி நாடெங்கும் புரட்சி வெல்லும். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடும். எதற்கு இந்தப் பொல்லாத பட்டம்” என்று பெற்ற கல்லூரிப் பட்டத்தைக் கிழித் தெறிந்திருப்பாரா? க. பஞ்சாங்கம் குறிப்பிட்ட செய்தி இது. கனவுகள் நிரம்பியவர் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?
பிறந்த தஞ்சையிலிருந்து 1970களின் இறுதியில் சென்னைப் வந்துசேர்ந்தவர் வைகறை. தமிழியக்கம் கண்ட பேராசிரியர் இளவரசு, இளமுருகன், செந்தலை கவுதமன் போன்றோருடன் இணைந்து தமிழியக்கச் செயல்பாடுகளில் முன்னின்றவர். தமிழுக்கு, தமிழர் நலனுக்கு ஊறுநேரும்போதெல்லாம் கிளர்ந்தெழுந்த எண்பதுகளின் தமிழ்க் கூட்டங்களில் வைகறை தவறாது இருப்பார். அவருடன் அரணமுறுவலையும் இணைந்து பார்க்கலாம். முறுவல் வன்தொண்டர் எனில் வைகறை மென்தொண்டர்.
நட்பு வைகறையின் பலம். நட்பே வைகறையின் பலம் என்றும் அத்தொடரைக் கூர்மைப்படுத்தலாம். “தென்திசை (அவரது இல்லத்தின் பெயர்) உருவாக க. சந்திரசேகரனும் முத்தையாவும்தான் காரணம்” என்று நண்பர்களைப் போற்றி உயர்த்துகிறார். அவரது நட்புரிமைக்குப் பல சான்றுகள் சொல்லலாம். வாழ்வின் இறுதியில் நிகழ்ந்த ஒன்றை மட்டும் இங்கு கூறலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அரசு வழங்கும் நிதிஉதவியைப் பெற வாழ்வின் இறுதியில் வைகறை ஏனோ முயன்றார். அதற்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் முன்வந்து செய்த உதவியை மனம் கனிந்து என்னிடம் அண்மையில் சொன்னார். அது நிறைவேறுவதற்குள் எல்லாம் மாறிவிட்டது. அவரும் போய்விட்டார். எந்தப் பெயரையும் விடாது அவரது நண்பர்களின் பட்டியலைச் சொல்ல எவருக்கும் இயலாது.
வைகறையைப் பற்றிப் பேசும் எவரும் தியாகராய நகரில் அவர் வாழ்ந்த சாரி தெரு வீட்டைக் குறிக்காமல் இருக்க மாட்டார்கள். தஞ்சை சார்ந்து சென்னை வருபவர் எவருக்கும் அதுதான் நித்திரை ஸ்தலம், உணவு விடுதி, அந்த வீட்டுக்குச் செல்ல அனுமதி அவசியமில்லை, முன் அறிமுகமும்கூட.
வைகறை எழுத்தாளரும்கூட. ‘மௌனமும் மணிமுடியும்’ அவரது கட்டுரை நூல்களுள் ஒன்று. ‘கொடை தருக கோடி பெருக’ அவருடைய கவிதை நூல். அதற்கு முன்னுரை எழுதியுள்ளேன். 2018 வாக்கில் திண்டுக்கல்லில் அதை அச்சிட்டார். தமிழகம், முழுவதும் அவருக்குத் தொடர்புகள் உண்டு.
பத்திரிகையாளராகவும் வைகறை பணி செய்தவர். நெ.து. சுந்தர வடிவேலு ஆசிரியராக இருந்த மக்கள் செய்தி (1979), நக்கீரன் (1980), கார்க்கி நூலகம் (1982), போர்வாள், நூல் நயம் (1984), நட்புறவுப் பாலம் (1980கள்), சங்கொலி (1995- 96), காக்கைச் சிறகினிலே (2011) எனப் பல இதழ்களில் பணியாற்றியுள்ளார். அவரது இயல்புக்குக் கொஞ்சமும் பொருத்தமற்ற குமுதத்தில்கூடச் சில காலம் பணிபுரிந்தார். வைகறை பதிவுசெய்து வைத்திருந்த பெயரை வாங்கித்தான் மாணவர் நகலகம் அருணாசலம் நந்தன் இதழை நடத்தினார். அதில் பொறுப்பாசிரியராக இருந்தபோது இணைந்த தமிழன்பன், சுப்பிரமணி, பச்சியப்பன், சுப. வீ போன்றவர்கள் அவருடன் இறுதிவரை நட்பில் தொடர்ந்தார்கள். விமர்சனத்திற்கு என்று மட்டுமே வந்த இதழ் நூல் நயம். நட்புறவுப் பாலம் சில காலம் வந்தது. அந்த இதழில்தான் சுப. வீயின் பகத்சிங் நூலுக்கு ஆ.இரா. வேங்கடாசலபதி விமர்சனம் எழுதினார். எஸ்.வி. ராஜதுரையின் ‘ரஷ்யப் புரட்சியின் இலக்கிய சாட்சியம்’ என்ற நூலுக்கு ‘ஒரு குறுக்கு விசாரணை’ என்ற தலைப்பில் சலபதியின் விமர்சனமும் அந்த இதழில்தான் வெளிவந்தது.
2011இல் காக்கைச் சிறகினிலே பத்திரிகையை மிகவும் சிறப்பாக நடத்த வைகறை முயன்றதை அறிவேன். ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கடும் வெயில் நேரத்தில் சைதாப்பேட்டையில் நடத்தினார். அழகிய பெரியவன், எட்வின் போன்றவர்கள் அதில் கலந்துகொண்டது நினைவில் உள்ளது. தஞ்சாவூர்க் கவிராயர் பிரபலமானது இந்தப் பத்திரிகையில்தான். ஏனோ அதிலிருந்து வைகறை விலகினார். பத்திரிகையில் பெயர் இல்லாததைப் பார்த்து அவரிடம் விசாரித்தபோது நண்பர்களிடம் கேளுங்கள் என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார். நெருங்கிய நண்பர்களுக்குள் அயலான் நுழைவது நியாயம் அல்ல என்று நான் யாரிடமும் எதுவும் வினவவில்லை. பரீக் ஷா ஞாநிபோல ஓரிடத்தில் நிலை கொள்ளாதது வைகறையின் கால். எப்போதும் கொந்தளிப்பான, சமரசத்திற்கு உடன்படாத, அமைதியற்ற மனம் வைகறை உடையது.
முதுமை கூடியபோதும் கருப்பு மையை நாடாத இயல்பானவர் வைகறை. ‘கிழவன்’ வைகறைவாணன் என்றே முகநூலில் தன் பெயரைக் குறித்திருந்த ஆச்சர்யக்காரர்!
எளிய நடுத்தரக் குடும்பம் வைகறையுடையது. குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாத இயல்பினர். இத்தகைய ஒருவரைக் கொஞ்சமும் சிணுங்காமல் கவனித்துக்கொண்டவர் அவர் மனைவி இந்திரா. “வைகறைக்குக் கிடைத்த ஒரே திரவியம்” என்று அவரை இறுதிச் சடங்குக்கு வந்தவர்கள் தம்முள் பேசிக்கொண்டி ருந்தனர். யாழ் மொழிச்செல்வன் அவரது ஒரே மகன். தமிழைப் படித்து அப்பாவைப் போல வீணாகாமல் தகவல் தொழில்நுட்பம் பயின்று நல்ல பணியில் உள்ளார்.
தமிழ்க் குடும்பச் சந்திப்பு சிலவற்றை 1999 முதல் சில ஆண்டுகள் பேராசிரியர் இளவரசு நடத்தி வந்தார். சாதி, மதம் கடந்து தமிழால் இணைந்த உறவுகள் குடும்பத்தோடு அச்சந்திப்பில் கலந்துகொள்வது வழக்கம். படப்பையில் நடந்த அத்தகைய நிகழ்வொன்றில் நானும் குடும்பத்துடன் கலந்துகொண்டிருக்கிறேன். அத்தமிழ்க் குடும்பச் சந்திப்புகளை ஒருங்கிணைப்பதில் வைகறையின் பங்கு அதிகம்.
தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் வைகறைக்கு ஈடுபாடு அதிகம். ஈரோஸ் அமைப்புடன் நெருக்கம் அதிகம். தமிழ் ஈழ நட்புறவுக் கழகத்திற்குப் பங்களித்தவருள் முக்கியமானவர் வைகறை. “உலகத்தில் நான் பயணம் போகிற நாடுகளில் இருக்கும் [ஈழத்] தோழர்கள் ஒவ்வொருவரும் என்னைப் பார்க்கும்போது வைகறையை விசாரிப்பார்கள்” என்கிற தகவலை டிராட்ஸ்கி மருது ஒருமுறை சொன்னார். ஆனால் வைகறை ஒரு முறை கூட ஈழத்தில் கால் வைத்ததில்லை.
ஈழத்தின் தொடர்பிலிருந்து விலகாதவராகவே தன் இறுதி வரை வாழ்ந்தார் வைகறை. சென்ற ஜூலை மாதம்கூட ஈழத்து எழுத்தாளரும் அமைச்சராக இருந்தவருமான ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூலை மறுஅச்சு வெளியிட்டார்; வெளியீட்டு விழாவையும் நடத்தினார்.
வைகறை பார்க்க மென்மையானவர்; உள்ளமோ எஃகைப் போன்ற வன்மை கொண்டது. எப்போதும் தான் விரும்பியதையே செய்பவர் என்று நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
‘தென் திசை’ என்ற தன் மடிப்பாக்க வீட்டுக்கு ஒரு மாலை வேளையில் புதுமனை புகுவிழா வைத்திருந்தார், புலால் உணவுடன்.
சடங்குகளில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர் வைகறை அவரது உடல் வைக்கப்பட் டிருந்த உறைவிப்பான் பெட்டியின் தலைமாட்டில் காமாட்சி அம்மன் விளக்கு சுடர்விட்டுக்கொண்டிருந்தது. வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி என வழக்கமான வெள்ளுடையில் கால் நீட்டி படுத்திருந்தார். மடியில் அவரது வாழ்க்கை படிப்பினை மலர். சடங்குகளோடு இறுதிப் பயணம் நிகழ்ந்ததாக முகநூலில் யாரோ எழுதியிருந்தனர். இறப்பிலும் விடாது கால் பிடித்திழுக்கும் சடங்குகள்!
தஞ்சையே வந்ததுபோல் செல்வபாண்டியன், இளமுருகன் எனப் பலர் வந்திருந்தார்கள். ஈழ நண்பர் திருமதி பாலகுமாரன் வந்திருந்தார்.
வைகறையோடு பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்த அமைச்சர் வன்னியரசு முதல், பேச்சாளர் அருள்மொழி, எழுத்தாளர் ஜீவ சுந்தரி- அப்பண்ணசாமி, அடிநாள் தோழர்கள் மங்கை - வீ. அரசு, அச்சக நண்பர்கள் சரவணன்- விவேகானந்தன், பத்திரிகையாளர் சுந்தர புத்தன், பேராசிரியர் சுப்பிரமணி, அரசு அலுவலர்களான செல்வ புவியரசன், ஏ.எஸ். பன்னீர்செல்வம் எனப் பலரும் வைகறையை வழியனுப்ப வந்திருந்தனர். எவ்வளவு பேரைக் குறிப்பிட்டாலும் சில பெயர்கள் விடுபட்டதாகவே இந்தப் பட்டியல் அமையும்.
விருதுகூட வைகறை பெற்றிருக்கிறார் என்பது அவரது இயல்பை அறிந்த பலருக்கும் ஆச்சரியமான செய்தியாக இருக்கும். நக்கீரன் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் 2016ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது வைகறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுக் காலப் பதிப்புப் பணிக்காகப் பபாசியின் விருது 2023ஆம் ஆண்டு வைகறைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பதிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், செயற்பாட்டாளர், பகுத்தறிவாளர், ஈழ ஆதரவாளர், தனித்தமிழ்ப் பற்றாளர் எனப் பல்வேறு அம்சங்களில் வாழ்வை அவர் கடந்திருந்தாலும் பதிப்பாளராகவே வைகறை பொதுச் சமூகத்தால் அறியப்படுகிறார். பதில் தெரிந்துகொண்டே, “நீங்கள் வெற்றி பெற்ற பதிப்பாளரா” என்று அவரைக் கேட்டபோது, “இலாப நட்டக் கணக்கு பார்த்தால் படுதோல்வி அடைந்த பதிப்பாளன் நான்” என்றார் வைகறை சிரித்துக்கொண்டே .
வெற்றி எது, தோல்வி எது மனித வாழ்க்கையில்? மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதைத் தவிர வேறு என்ன இந்த வாழ்க்கையில் இருக்கிறது!
மின்னஞ்சல்: athiy61@yahoo.co.in
