தவெகவின் நூறு நாள்கள்
ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நூறு நாள்களை நிறைவு செய்திருக்கிறது. இதை முன்னிட்டு அரசின் செயல்பாடுகளைப் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓர் அரசின் செயல்பாடுகளை அதன் நூறு நாள் பணிகளைக் கொண்டு மதிப்பிடுவது பொருத்தமானது அல்ல. எனினும் இந்த அரசு எந்தத் திசையில் செல்லவிருக்கிறது என்பதை இந்தக் கால அளவு சுட்டிக்காட்ட இயலும். ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழும் பேச்சுகளுக்கு இணையாக தவெக அரசும் தனது நூறு நாள் சாதனைகளை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் செய்கிறது. அது ஓரளவுக்கு எந்த வழியில் முன் நகரவிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவும் செய்கிறது.
இன்றைய தமிழக அரசிடமிருந்து குடிமக்கள் எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் அதிகம். முந்தைய அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டித்தான் தவெக அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த அரசு அந்தக் குறைகளைக் களையும் என்ற நம்பிக்கையின் பேரில்தான் மக்களும் அதிகாரத்தை அளித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை ஓரளவேனும் காப்பாற்றும் வகையில்தான் புதிய அரசின் நூறு நாள் ஆட்சி அமைந்திருக்கிறது. முந்தைய அரசுகளுக்கு இருந்த அரசியல் பின்புலமும் நீண்ட கால மரபும் இந்த அரசுக்கு இல்லை. இது அரசியல் சார்பாளர்களின் நோக்கில் குறையாகச் சொல்லப்பட்டாலும் பொது மக்களின் நோக்கில் புதிய நம்பிக்கைக்கு வழியமைத்திருக்கிறது.
முந்தைய திமுக அரசு தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்துவிட்டதாகவும் அதிலிருந்து மீட்கவே தனக்கு ஆட்சியதிகாரத்தை அளிக்குமாறு தவெக தனது தேர்தல் பரப்புரைகளில் கோரியது. அதை அங்கீகரிக்கும் வகையில்தான் அதற்கு அதிகார வாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்க இந்த அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது என்பது நூறு நாள்களில் தென்படுகிறது. சாதியைப் போல ஊழலையும் அறவே ஒழித்துவிட முடியாது என்று பழுத்த அரசியல்வாதிகளும் அறிஞர்களும் வீராப்புச் சொல்லும் சூழலில் ஊழலை விரட்டும் நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொவது ஆறுதல் அளிக்கிறது.
தனது கட்சியின் பெயரால் ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற முதல்வரின் தாக்கீது சில துறைகளில் பலனளித்திருப்பது கண்கூடு. அரசியல் செல்வாக்கு உள்ளது என்ற துணிவில் உள்ளூர் கட்சிக்காரர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரையானவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பணிகளுக்கான குத்தகை, வட்டாரப் போக்குவரத்து, காவல் நிலையங்கள், பத்திரப் பதிவுத் துறை, கல்வித்துறை போன்ற இடங்களில் அரசியல் பலத்தைக் காட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டிருப்பது நல்ல அறிகுறி. அரசியல்வாதிகள் இப்படி அபகரிக்கும் தொகை அந்தந்தக் கட்சியின் நிதியாகவும் மாறுவது வழக்கம். அவர்களின் அன்றாட கட்சி சார்ந்த செலவுகளுக்கு இருப்புத் தொகையாவதும் வழக்கம். இந்த வழக்கத்தை முதல்வர் விஜயின் எச்சரிக்கை முற்றிலும் ஒழித்துவிடவில்லை என்றாலும் மட்டுப்படுத்தியிருக்கிறது. தவெகவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அரசியலுக்குப் புதுமுகங்கள். எனவே தலைவரின் எச்சரிக்கை அவர்களுக்குப் பயத்தை அளித்திருக்கிறது. ஊழலில் மூழ்கவிடாமல் தடுக்கிறது. அதே சமயம் ஊழல் மன்னர்களாகவே பொது மக்களுக்குத் தெரியவந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இடம் பெற்றிருப்பது விஜயின் ஊழல் ஒழிப்பு நோக்கத்துக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற ஐயத்தையும் எழுப்புகிறது.
கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் களையும் முனைப்பிலுள்ள தவெக அரசு அதிகாரிகள் மட்டத்தில் தொடரும் முறைகேடுகளைக் கவனத்தில் கொள்ளவில்லையோ என்ற ஐயமும் நிலவுகிறது. எந்த அரசு வந்தாலும் இந்த நிலை ஊழல் தொடர்வது ஒழிக்கப்பட வேண்டும். மதுவிற்பனையில் நீடிக்கும் முறைகேடுகள் இந்த அரசுக்கு அவப்பெயரையே கொண்டுவரும். பத்திரப்பதிவுத் துறையில் இந்த அரசு கடைப்பிடிக்கும் வெளிப்படையான போக்கு இதர துறைகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்போது ஊழல் ஒழிப்பு ஒரு கோஷமல்ல; நடைமுறை என்பது உறுதியாகும்.
முந்தைய அரசின் ஆக்கபூர்வமான பணிகள் முடக்கப்படாது தொடரும் என்ற தவெக அரசின் நிலைப்பாடு வரவேற்கத் தகுந்த ஒன்று. அது பின்பற்றப்படுவதும் நம்பிக்கையை வளர்க்கிறது. கல்வி, பண்பாட்டுத் துறைகளில் இந்த நெறிமுறை செயல்படுவது ஓர் உதாரணம். முந்தைய ஸ்டாலின் அரசு முன்னெப்போதும் இருந்திராத வகையில் தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றில் காலத்துக்கு ஏற்பச் செயல்பட்டது. தவெக அரசு அந்தப் பணிகளைத் தொடர்வது மிக முக்கியம். அரசியல் நியமனங்கள் அல்லாத முந்தைய அரசின் துறை நியமனங்களை தக்கவைத்திருப்பது மெச்சத் தகுந்த செயல்.
தமிழக மக்கள் அனைவரின் சமாதான சக வாழ்வுக்கான பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு உண்டு. தவெக அரசு தனது நூறு நாள் ஆட்சியில் இதை கவனிக்கத் தவறியிருக்கிறது என்ற புகார் நிலவுகிறது. வன்கொடுமைகளும் கொலைகளும் அன்றாடச் செயல்கள்போல நிறைவேறுவதை இந்த அரசு கட்டுக்குள் கொண்டுவரத் திணறுகிறது. இது முன்னர் நிர்வாகத் திறனை மெய்ப்பித்த ஆட்சியல்ல. புதிய ஆட்கள். புதிய அமைப்பு. எனவே அந்தத் திகைப்பு ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் அந்தத் திகைப்பை ஒப்புக் கொள்ளாமல் சாக்குச் சொல்வது ஏற்கக் கூடியது அல்ல. கோவை மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது பொது உலகுக்கு அப்பட்டமாகத் தெரிந்த உண்மை. ஆனால் அரசின் சார்பில் அதைக் குறித்துப் பேசிய அமைச்சர் அது கோஷ்டி மோதல் என்று குறிப்பிட்டது ஏற்கத்தக்கதல்ல.
சட்டப்பேரவையை பொதுக் கவனத்துக்குக் கொண்டுவந்ததை தவெக அரசின் வெளிப்படையான செயல்பாடாகக் கொள்ளலாம். பேரவை நடவடிக்கைகளை நேரலைமூலம் பொதுமக்கள் காண அளிக்கப்பட்ட வாய்ப்பு இது. தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தங்கள் பிரச்சினைகளைப் பேசவும் தீர்வுகாணவும் உள்ள களமான மன்றத்தில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று வாக்களித்தவர்கள் தெரிந்துகொள்ளக் கிடைத்த ஜனநாயக அடிப்படையிலான வாய்ப்பு. முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் மோதிக்கொள்ளும் அட்டைக் கத்திச் சண்டை உட்பட எல்லாவற்றையும் காணும் மகத்தான வாய்ப்பு இது. முன்பெனில் இவை அவைக் குறிப்புகளில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த வெளிப்படைத்தன்மை சில பயன்களை அளிக்கிறது. தங்கள் நடவடிக்கைகளை மக்கள் பார்க்கிறார்கள் என்பது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை அளிக்கிறது. ஆளும் கட்சியின் முன் தயாரிப்பை அத்தியாவசியமாக்கியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்யும் சாகசத்தைக் குறைத்திருக்கிறது. நமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்லாமல் நடையைக் கட்டுகிறார்களே என்று வெகுமக்கள் குமுறலுக்கு அஞ்சியும் காலி நாற்காலிகள் தமது கட்சியின் அவல நிலையைக் காட்டிக் கொடுத்துவிடுமே என்று தயங்கியும் நாம் அவையில் இல்லாவிட்டால் நமக்கடுத்த கட்சி நல்ல பெயரைத் தட்டிச் செல்லுமே என்ற அங்கலாய்ப்பும் பிரதான எதிர்க் கட்சியை அவையில் அமரக் கட்டாயப்படுத்துகிறது. எதிர்க்கட்சியை அல்லது கட்சிகளை வெற்று சவால் பேச்சுகளிருந்து விலக்கி மக்களின் தேவைகளைப் பற்றிப் பேசக் கட்டாயப்படுத்துகிறது. ஜனநாயக விவாதத்தை மேலெடுத்துச் செல்ல உதவுகிறது.
முன்பு குறிப்பிட்டதுபோல ஐந்து ஆண்டுகள் மக்களுக்குப் பணிபுரியத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காலாண்டு செயல்பாட்டை வைத்துக் கணிப்பது பொருத்தமானது அல்ல. ஆனால் பிரச்சினைகளும் சிக்கல்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும் கவிந்திருக்கும் பின்புலத்தில் இந்த அரசின் செல்வழியை அறிய இந்தக் கணிப்பும் தேவையானதே. நூறு நாள்களில் தவெக அரசு சில வழித் தடங்களைக் காட்டியிருக்கிறது. ஒன்று: ஊழலுக்கு எதிரான கறாரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிறது. இரண்டு: வெளிப்படையான நிர்வாகத்துக்கான அறிகுறிகளை முன்னிருத்துகிறது. மூன்று: மக்கள் நலனுக்கானவை என்ற நோக்கில் முந்தைய அரசு முன்னெடுத்த திட்டங்களை (அவற்றின் பெயரை மாற்றி) தொடர்கிறது.
அரசியலில் முன் அனுபவமோ மேலாண்மையில் பயிற்சியோ இல்லாத புதியவர்களின் அரசு இது. எனினும் இந்த அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அதிகம். அவர்களின் எதிர்பார்ப்பின் வேகத்துக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது அரசின் தலையாய கடமை. அதற்காகவே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அமைந்த அரசுகள் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் முதன்மையாகக் காட்டியே தேர்தலில் போட்டியிட்டு வென்றன. தவெக அரசு மக்களின் எழுச்சியால், குறிப்பாக முந்தைய அரசுகளின் போதாமையை அடையாளம் கண்ட புதிய தலைமுறையினாரால் அதிகாரத்தை அடைந்திருக்கிறது. கொள்கைகளை முன்னிருத்தி ஆட்சியைப் பிடித்த முந்தைய அரசுகளுக்கு மாறாக மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை சார்ந்தே அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது தவெக. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக தனது கொள்கையை விரைந்து உருவாக்கிக்கொள்வதே இந்தக் கட்சியின் கடமை. அதைச் செயல்படுத்துவதே இந்த அரசின் பொறுப்பு. ச. ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசின் நூறு நாட்கள் அதற்கான வெள்ளோட்டக் காலம்.
