விருதுகள், வாழ்த்துகள்
ய. மணிகண்டனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் விருது

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 49ஆம் ஆண்டு கபிலர் விழாவில், பேராசிரியர் ய. மணிகண்டன் எழுதிய ‘பாரதியின் தராசு’ நூலுக்கும், அந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் ‘சிறந்த நூல்; பதிப்பகத்திற்கான பரிசு’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இல்லறஞானி அமரர் பூமலை உடையார் நினைவாக, பூமலை ஆசைத்தம்பி அவர்கள் நிறுவிய அறக்கட்டளை சார்பாக இப்பரிசுகள் வழங்கப்பட்டன. திருக்கோவலூர் ஸ்ரீ சுப்ரமணிய திருமண மகாலில் நடைபெற்ற விழாவில், சிறந்த நூலுக்காகப் பேராசிரியர் ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகத்திற்குத் தலா ரூ.10,000 பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன.
**********************************************
சுகுமாரனுக்கு பாணர் வாழ்நாள் சாதனையாளர் விருது

‘காயல்: யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழா 2026’ நிகழ்வில் எழுத்தாளரும் காலச்சுவடு இதழ்ப் பொறுப்பாசிரியருமான சுகுமாரனுக்கு ‘பாணர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. தமிழ்க் கவிதை உலகில் அவரின் நீண்டகால சாதனைகளையும், விமர்சனம், மொழிபெயர்ப்பு, பதிப்புத் துறைகளில் அவரது பங்களிப்புகளையும் போற்றும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. இக்கவிதைத் திருவிழாவில் சுகுமாரன், அனிதா தம்பி, குட்டி ரேவதி உள்ளிட்ட பல முக்கியக் கவிஞர்கள் கலந்துகொண்டனர்.
**********************************************
பெருமாள்முருகனின் ‘ஆளண்டாப் பட்சி’க்கு புக் பிரம்மா விருது

பெருமாள்முருகன் எழுதிய ‘ஆளண்டாப் பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘ஃபையர் பேர்ட்’ (Fire Bird) 2026ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆங்கிலப் புனைவுக்கான விருதை வென்றுள்ளது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் குரலாகத் திகழும் எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கும் நாவலை நேர்த்தியாக மொழிபெயர்த்த ஜனனி கண்ணனுக்கும் காலச்சுவடின் வாழ்த்துக்கள்.
**********************************************
