எந்தத் தமிழ்ச்சொல் மெய்யில் தொடங்குகிறது?
‘அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி’ எனத் தலைப்பிட்டு எனது ‘Oxford Compact Tamil-Tamil-English Dictionary’ பற்றிக் காலச்சுவடு ஆகஸ்ட் இதழில் வெளியிட்டுள்ள ஏழு பக்க மதிப்புரை குறித்து:
முதலாவதாக, ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை இ. அண்ணாமலையின் தலைமையில் உருவாக்கப்பட்ட க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (மூன்றாம் பதிப்பு)யை உரைகல்லாகவும் அளவுகோலாகவும் கொண்டு மதிப்பீடு செய்துள்ளமை பத்திக்குப் பத்தி தெளிவாகத் தெரிகிறது. இதுவே ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக்கு மதிப்புரையாளர் இழைத்துள்ள பெரும் அநீதியாகும். எவ்வாறெனின்:
அந்த அகராதியின் தலைப்பில் உள்ள ‘க்ரியா’வை நோக்குங்கள். எந்தத் தமிழ்ச் சொல் மெய்யில் தொடங்குகிறது?
தலைச்சொல் தெரிவு வகையில், விஷம் என்ற தலைச்சொல்லின்கீழ் பொருள் தரப்பட்டு, மூவாயிரம் ஆண்டுகளின் ஊடாக இன்றும் வழக்கில் உள்ள நஞ்சு என்ற தமிழ்ச்சொல் (நற்.355; குறள் 500) ‘காண்க’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இருதயம்-இதயமும் அவ்வாறே. இவைபோன்ற மிகப் பல பதிவுகள். மேலும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இடம்பெற்றுள்ள அஸ்தியில் ஜுரமும் அஷ்டதிக்குப் பாலகரும் அஷ்டமத்தில் சனியும் எந்தத் ‘தற்காலத்’ தமிழில் பயின்றுவருகின்றன?
“வடசொற்கிளவி வடஎழுத்து ஒரீஇ” புறந்தள்ளத்தக்க நூற்பாவா? அறம், பொருள், இன்பம் எனும் மூன்றே வாழ்வின் உறுதிப்பொருள் எனத் தொல்காப்பியமும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டும் திருக்குறளும் மொழிய, ஆரிய மூடத்தனத்தின் பிள்ளையான வீடு/முத்தி க்ரியா அகராதியில் நுழைந்தது எவ்வாறு? உயர்திணை மனிதர்கள், தேவர்கள் (க்ரியா, ப.187) அஃறிணை மனிதர், தேவர், அரக்கர் அல்லாத பிற உயிர்கள் (க்ரியா, ப.1)
இவ்வாறு தொல்காப்பியம் கூறுகிறதா? இவற்றைப் பட்டியலிட ஏழு பக்கங்கள் போதாது. இவ்வாறாக, மூடத்தனத்தையே வாழ்வியலாகக் கொண்ட ஆரியத்தை நிலைநிறுத்தும் நோக்கில் சமஸ்கிருத வெறியர்களால் உருவாக்கப்பட்ட க்ரியா அகராதியை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியுடன் ஒப்பிடும் எண்ணம் வந்தது எவ்வாறு? அந்த அகராதிக்குத் தலைவராக இருந்து வழிநடத்தியது இ. அண்ணாமலை தமிழ் மொழிக்கு நல்கிய பங்களிப்பா? அகராதியியல் நியதிகள் தொடர்பிலும் க்ரியாவின் குளறுபடிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, பெயர்ச்சொல் பதிவுக்குப் பெயர்ச்சொல் வடிவிலும் வினைச்சொல் பதிவுக்கு வினைச்சொல் வடிவிலும் என்ற முறையில் பொருள் அமைய வேண்டும் என்பது உலகளாவிய அகராதியியல் நியதி. உங்கள் க்ரியாவை நோக்குங்கள்: உடம்புக்கு முடியாமல் வி.அ. be ill அயோக்கியத்தனம் பெ. dishonest வானளாவ வி.அ. extol
பொருள் வகையிலும் தமிழும் ஆங்கிலமும் முரண்பட்டே செல்லும். அமைதி கா வி. பொறுமையைக் கடைப்பிடி be peaceful மொழியியல் அறிஞர். மேற்பார்வையிட்ட இலக்கணப் பதிவுகள் மேலும் குளறுபடிகள் நிறைந்தவை: வினைத்திரிபு பெ. inflection of the verb [conjugation-உம் inflection - உம் ஒன்றல்ல!] வினைமுற்று பெ. செயல் முடிவதைக் குறிப்பதாகவும் வாக்கியத்தில் பயனிலையாகவும் வரும் வினைச்சொல் finite verb [finite verb shows a particular tense, person and number (OALDCE p.589) பயனிலை என்றால் என்ன என்றுகூட அறியாத, அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் அகராதியியலுக்கும் தமிழ் மொழிக் கல்விக்கும் சிறுமை தேடித்தந்துள்ள க்ரியா அகராதியை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியோடு மல்லிகை-கனகாம்பரம் உவமைவழி ஒப்பிடுவது எத்துணைத் துன்பியல் நகைமுரண்!
ஆக்ஸ்ஃபோர்டு அகராதி 2200 முழுப் பக்கங்களைக் கொண்டது. அது ஆக்ஸ்ஃபோர்டு தளத்தில் எண்ம வடிவில் (digital version) உள்ளது. அகராதி பயன்பாட்டு வழிகாட்டி அங்கு தரப்பட்டுள்ளது. மதிப்புரையாளர் கண்டது சுருக்கமான, 1000 பக்கத் தாள்வடிவப் பதிப்பு. சுருக்கமாகச் செயல்முறையில் சில பிழைகள் நேர்ந்துள்ளதை அறிவோம்; அவற்றைச் சரிசெய்துவிடுவோம். முகவுரையில் இதனை நாங்கள் கூறியிருந்தும் மதிப்புரையில் அவற்றையெல்லாம் நீங்கள் கடந்து சென்றுவிட்டது எவ்வளவு பெரிய அவலம்!
