அம்பை சுமந்த பெட்டி
1
எந்தச் சுதந்திரமான பெண்ணும் இந்தச் சமூகத்தில் இயங்கக் கொடுக்கும் விலை ஒன்றுள்ளது. அதை நினைவூட்டும் ஒரு சித்திரத்தை எழுத்தாளர் பெருமாள்முருகன் மதுரையில் நடந்த (நவம்பர் 28, 2024) அம்பை 80+ நிகழ்வில் கொடுத்தார். அவர் உரை அம்பையுடனான தொடர்பையும் ஆய்வுப் பணிகளுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தையையும் சிலாகிக்கும் விதமாக இருந்தது. அம்பையை அறிந்தவர்களின் எத்தனையோ நினைவுப் பகிர்வுகள் இருப்பினும் அந்த நாளில் பெருமாள்முருகன் காட்டிய சித்திரம் மட்டும் என் நினைவை விட்டு அகலவில்லை.
சரோஜா ராமமூர்த்தியின் தொகுப்பு நூலுக்கான பணியில் ஈடுபட்டிருந்த அம்பை இரவு இரண்டரை மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கிக் கனமான புத்தகங்கள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு வருகிறார். அந்தப் பெட்டியைப் பார்த்து பெருமாள்முருகன் பயந்ததாகவும், அதைத் தூக்கி வர முடியாமல் தான் சிரமப்பட்டு “ஏன் இவ்வளவு எடுத்து வருகிறீர்கள்” என்று கேட்டபோது தானே அதைச் சுமப்பதாகச் சொல்லிக் கோபித்துக்கொண்டதாகவும் சொன்னார். ஆய்வு நூலுக்கான பணிகளில் அவர் வேலைபார்க்கும் விதம் வ
