முடக்கப்படும் வளாகங்கள்
தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகச் சத்தமின்றி மாணவர் மன்றத் தேர்தல் முடக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கடைசியாக சென்னை மாநிலக் கல்லூரியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தேர்தல் முடக்கப்பட்டது. இதுபற்றிய விவாதங்கள் பரவலான கவனத்தைப் பெறவில்லை; மாறாக, இதுவே இயல்புநிலையாக மாறிவிட்டது. 170க்கும் மேற்பட்ட அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் 20க்கும் மேற்பட்ட மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தேர்தல்கள் நடக்கவில்லை. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் அமைப்புகள் இயங்காமல் இருப்பது தமிழக ஜனநாயகத்தின் அலகுகளைப் பலவீனப்படுத்துகிறது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலும் தமிழகத்தின் பண்பாட்டுப் போக்கிலும் மாணவர் இயக்கம் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. 1940கள் முதல் 60கள் வரையிலான காலகட்டத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர் அரசியலின் மிக முக்கியமான களமாகத் திகழ்ந்தது. திராவிட இயக்கத்தின் எண்ணற்ற முதன்மைத் தலைவர்கள் உருவாவதற்குக் காரணியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் அரங்கம் விளங்கியது. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், முரசொலி மாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி. மனோகரன் என இப்பட்டியல் நீளமானது. அதேபோல, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் அரசியல் தளத்தில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியது. 1967இல் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான காமராஜரை விருதுநகர் தொகுதியில் வீழ்த்திய பி. சீனிவாசன், அன்றைய மாணவர் தலைவர். அன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் வழியே திராவிட இயக்கங்கள் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றின. இதற்கான அரசியல் விழிப்புணர்வு உருவான வரலாறு மனங்கொள்ளத்தக்கது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்த டி. ராஜா உள்ளிட்ட பல தலைவர்கள், தங்களின் கல்லூரி மாணவர் மன்ற விவாதங்களும் தேர்தல்களுமே தங்களின் அரசியல் விழிப்புணர்விற்கு அடித்தளம் என்பதைப் பதிவுசெய்துள்ளனர்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை குயின் மேரீஸ், மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்லூரிகளில் தேர்தல்கள் மிகுந்த ஜனநாயக விறுவிறுப்புடன் நடைபெற்றன. ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று வாக்குச் சேகரிப்பது, சின்னங்கள் ஒதுக்கிப் பிரச்சாரம் செய்வது, தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது என வெளியே நடக்கும் பொதுத் தேர்தலைப் போலவே கல்லூரிகளுக்குள்ளும் நடைபெற்றது. கல்லூரி உணவக வசதி, மின்விசிறி பழுதுபார்ப்பது, மாணவர் விடுதிக் கட்டமைப்பு, சாப்பாட்டுத் தரம் குறித்துப் பேராசிரியர்களிடமும், கல்லூரி முதல்வரிடமும் விடுதிக் காப்பாளர்களிடமும் பேசித் தீர்வு காண்பது என மாணவர்கள் நேரடியாகச் செயல்பட்டனர். இதன்மூலம், நிர்வாகத்தை எப்படி அணுகுவது, நடைமுறைச் சிக்கல்கள், எவற்றை நிறைவேற்ற முடியும், எவற்றை முடியாது என்ற முதிர்ச்சியான நிர்வாகப் பயிற்சியையும் நெளிவுசுளிவுகளையும் அவர்கள் மாணவர் பருவத்திலேயே இயல்பாகக் கற்றுக்கொண்டனர்.
அதேவேளையில், 80களின் பிற்பகுதியில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கல்லூரி மாணவர் அமைப்புகளை ஒடுக்குவதற்கான பணிகள் தொடங்கின; தொடர்ந்துவந்த திமுக அரசுகளும் இந்த நிலையை உறுதிப்படுத்தின. கள அரசியலில் இயங்கிய கட்சிகள் மாணவர் அமைப்புகளைத் தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்தத் தொடங்கியதும், நிதி வல்லாதிக்கமும், சாதிரீதியான பிரிவினைகளும் வன்முறைகளுக்கு வழிவகுத்தன. இத்தகைய வன்முறைகளையும் மோதல்களையும் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்களும் செயல்பாடுகளும் முற்றிலும் ஒடுக்கப்பட்டன.
மாணவர் அமைப்புகள் சுயசார்போடும் கொள்கைத் தெளிவோடும் இயங்கிய காலகட்டத்தில், கல்லூரிப் பிரதிநிதிகள் அதிகார மையங்களுக்கு அஞ்சாமல் மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தனர்; தலைவர்களின் ஏகபோகச் செயல்பாடுகளையும் உட்கட்சி ஜனநாயக மின்மையையும் கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்டவர் களாக விளங்கினர். ஒருவேளை, இத்தகைய மாணவர் மன்றங்கள் ஆரோக்கியமான தேர்தல்கள் வழியே தொடர்ந்து அறிவுச் சமூகமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற பிராந்திய இயக்கம் ஒரு குடும்பத்தின் தனிச்சொத்தாகச் சுருங்கியிருக்காது. பாமகவுக்கும் இது பொருந்தும்.
கருணாநிதிக்குப் பிறகு மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி எனத் தொடங்கி இன்றைக்கு உதயநிதி, இன்பநிதி வரை அதிகாரம் கைமாறும் குடும்ப வாரிசு அரசியல் தங்குதடையின்றிச் சாத்தியப்பட்டிருக்க முடியாது. மாற்றுத் தலைமைக்கான கேள்விகளும் தர்க்கங்களும் மாணவர் சமூகத்திலிருந்து எழுந்திருக்கும். எனவே, மாணவர் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டதன் மறைமுக விளைவு, கட்சிகளுக்குள் அதிகாரத்தைப் பரம்பரைச் சொத்தாக்கிக் கொள்வதையும், மாற்றுக் கருத்துகளற்ற வாரிசு அரசியலைச் சமூகத்தின் மீது இயல்பான ஒன்றாகத் திணிப்பதையுமே சாத்தியமாக்கியுள்ளது.
வளாக வன்முறைகளும் சாதியக் கோளாறுகளும் எவ்வகையிலும் ஏற்கத்தக்கவை அல்ல. அதேவேளையில், இத்தகைய அசம்பாவிதங்களைச் சாக்காக வைத்து மாணவர் தேர்தல்களையே ஒட்டுமொத்தமாக முடக்குவது ஆரோக்கியமான அணுகுமுறையுமல்ல. நாட்டின் பொதுத் தேர்தல்களில் தவறுகளும் மோதல்களும் நிகழும்போது ஜனநாயக நடைமுறையையே அரசு ரத்து செய்வதில்லையே! மாறாக, சட்ட ஒழுங்கை இறுக்கித் தேர்தலை நடத்தி முடிப்பதே முதிர்ச்சியான ஜனநாயகத்தின் அடையாளம். 18 வயதான ஒருவருக்கு நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முதிர்ச்சி இருக்கிறது என ஏற்றுக்கொள்ளும் சமூகம், தன் கல்லூரிப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் மறுப்பது முரண்பாடானது.
நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்றங்கள் இயங்கினால் தங்களின் நிர்வாக முடிவுகளுக்குச் சவால்கள் எழும் எனச் சில பேராசிரியர்களும் கல்லூரி முதல்வர்களும் கருதுகின்றனர். அன்றைக்கு மாணவர்கள் காட்டிய வேகத்தை எதிர்கொள்ள முடியாமல், ‘தேர்தலே இல்லை என்றால் தொல்லையில்லை’ என்ற சூழலை நிர்வாகங்களும் ஆசிரியர்களும் வசதியாக ஏற்றுக்கொண்டனர். 2015ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார்களை விசாரிக்கும் குழுவில்’ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். ஆனால், தேர்தல்கள் இல்லாத சூழலை நிர்வாகங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. தங்கள் சொற்படிக் கேட்கும் மாணவர்களை நியமித்துக்கொள்ளும் போக்கு நிலவுகிறது.
இப்பிரச்சினை தமிழ்நாட்டோடு மட்டும் முடிந்துவிடவில்லை. வடஇந்தியாவின் உயர்கல்வி மையங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் கைவிடப்பட்டுள்ளன. 96 ஆண்டுகால நெடிய பாரம்பரியம் கொண்ட அலகாபாத் பல்கலைக்கழகம் (2017), லக்னோ பல்கலைக்கழகம் (2006), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (1998) ஆகியவற்றில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. சட்டப்பேரவைகளில் கேள்விகள் எழும்போது “அரசுக்கு ஆட்சேபனை இல்லை; துணைவேந்தர்களே முடிவெடுக்க வேண்டும்” என அமைச்சர்கள் வழக்கமான பதிலை அளித்து நழுவுகின்றனர்.
அதேவேளையில், கர்நாடகத்தில் 1989-90ஆம் கல்வியாண்டில் அன்றைய காங்கிரஸ் முதல்வர் வீரேந்திர பாட்டீல் ஆட்சிக் காலத்தில் மாணவர் மன்றத் தேர்தல்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன. 1980களின் இறுதியில் கல்லூரி வளாகங்களில் கட்டுக்கடங்காமல் நிலவிய மோதல்கள், வரன்முறையற்ற வன்முறைகள், நிழலுலகக் குற்றக் கும்பல்களின் ஊடுருவல் ஆகியவற்றைக் காரணம் காட்டிச் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், கல்லூரி அரசியலில் சாதிய ஊடுருவல்களைக் கட்டுப்படுத்துவது, ஏபிவிபி போன்ற எதிர்த்தரப்பு அமைப்புகளின் வளர்ச்சியைத் தடுப்பது, புதிய இளம் தலைவர்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சிய மூத்த அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தடைக்குப் பின்னாலிருந்த உண்மையான அரசியல் காரணங்கள் என்ற விமர்சனமும் உண்டு.
37 ஆண்டுகாலத் தடைக்குப் பிறகு, 2026-27 கல்வியாண்டு முதல் மீண்டும் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்தத் தற்போதைய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்திருப்பது கவனிக்கத்தக்க மாற்றமாகும். புதிய தலைமுறையினரை ஜனநாயக நடைமுறையை நோக்கி ஈர்க்கும் அதேவேளையில், சாதி ஆதிக்கங்களுக்கோ நேரடிக் கட்சிக் கொடிகளுக்கோ இடமளிக்காமல், பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை அளித்துச் சுயேச்சையான முறையில் தேர்தல்களை நடத்த வழிவகை செய்திருப்பது ஆரோக்கியமான நகர்வாகும்.
மாணவர் சங்கத் தேர்தல்கள் தடை செய்யப்பட்டு அரசியல் முடங்கியதால் மாணவர் சமூகத்தில் நேர்மறை மாற்றங்கள் எதுவும் விளைந்துவிடவில்லை. அரசியல் களத்திற்குள் நுழையும் தலைவர்களுக்கான பயிற்சிப் பாதை அடைபட்டுள்ளது. வளாக ஜனநாயகம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அரசியல் கட்சிகள் பிரபலங்களையும் தொழிலதிபர்களையும் வேட்பாளர்களாகச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் முற்றிலும் முடக்கப்பட்டதால், அரசியல் கட்சிகளுக்குத் தேவையான அடுத்தகட்ட இளம் தலைவர்களைக் கல்லூரி வளாகங்களிலிருந்து கண்டெடுக்கும் வழிகள் அடைபட்டுவிட்டன. இந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கொள்கைப் பிடிப்புள்ள இளம் நிர்வாகிகளுக்குப் பதிலாக, மக்கள் மத்தியில் ஏற்கெனவே பிரபலமான நடிகர்களையும், தேர்தல் செலவுகளைத் தாங்கக்கூடிய பெரும் தொழிலதிபர்களையும், பாரம்பரிய அரசியல் குடும்பங்களின் வாரிசுகளையும் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கும் நிலை தொடர் நிகழ்வாகிவிட்டது.
கல்லூரித் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதால் மாணவர்களின் இயல்பான வேகமும் கோபமும் நேர்மறையான திசையில் மடைமாற்றப்படாமல், துண்டுதுண்டாக வெடித்து அணைந்துபோகிறது. ஈழப் போராட்டம், கண்ணகி சிலை அகற்றம், ஜல்லிக்கட்டு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காக மாணவர்கள் ஒன்றிணைந்து ஸ்தம்பிக்க வைத்தது போன்ற கூட்டுப் பொறுப்புணர்வோ சமூகப் பிரஞையோ மாணவர்களிடம் இல்லாமல் போயுள்ளது. வகுப்பறைத் தூய்மை, பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல் போன்றவற்றில்கூடப் பொறுப்பின்மை நிலவுகிறது.
கொள்கைரீதியான அரசியல் விழிப்புணர்வு துண்டிக்கப்பட்டதன் விளைவாக, இன்றைக்கு மாணவர்கள் சாதிரீதியாக ஒருங்கிணைந்து இயங்கும் நிலை உருவெடுத்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் விடுதிகளிலும் கல்லூரிகளிலும் குறிப்பிட்ட சாதிய அமைப்புகளும் கட்சிகளும் பிரதேசம் சார்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. பள்ளி, கல்லூரிப் பருவத்திலேயே துண்டறிக்கைகளிலும் குறிப்பேடுகளிலும் சாதிய அடையாளங்களை எழுதுவதும், பெண்கள் உட்படச் சாதிய அரசியலுக்குள் சுருங்குவதும் அதிகரித்துவருகிறது. கொள்கைக் கூட்டணி இல்லாததால் சாதியமைப்பு மட்டுமே மக்கள் திரளும் அடிப்படையாக மாறியுள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அரசியல் சார்ந்த இயங்குதளங்களும் தகவல்களை அணுகும் வசதிகளும் பெருமளவில் விரிவடைந்துள்ளன. இருப்பினும், அவர்கள் நேரடி அரசியலில் களமிறங்குவதில்லை; அரசியலுக்கு வெளியிலிருந்தே தங்களின் கருத்துகளையும் அழுத்தங்களையும் பதிவுசெய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கொள்கைப் பிடிப்போ தெளிவான லட்சிய அரசியலோ இல்லாமல், குழுக்களாகவும் திரள்களாகவும் மட்டுமே இயங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் அண்மையில் ஜென் ஸீ தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள், அமைப்பாக்கப்படாத இளைஞர்களின் கொந்தளிப்பு எந்தத் திசையிலும் வெடிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் கீழ் இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டங்களை வெறும் கொந்தளிப்பாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. தங்களின் கோரிக்கைகளுக்காக அவர்கள் அமைப்பாய்த் திரண்ட விதம், கல்லூரிப் பருவத்திலேயே அரசியலைப் புரிந்துகொள்வதற்கும், கள அனுபவத்தைப் பெறுவதற்குமான ஓர் அவசியமான தொடக்கப் புள்ளியாக அமைகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் போன்றவை மாணவர் அரசியலுக்கான மாதிரிகளாகத் திகழ்கின்றன. 1970களில் இருந்து பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, அருண் ஜேட்லி காலம் தொடங்கி கன்னையா குமார், உமர் காலித், ஆயிஷி கோஷ், தேஜஸ்வி சூர்யா வரை தேசிய அளவில் கவனிக்கப்படும் எண்ணற்ற தலைவர்களை இவை உருவாக்கியுள்ளன. மாணவர் ஜனநாயகத்திற்கான முன்னோடிகளாக உலகளவில் பேசப்படும் தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டின் தேர்தல் மாதிரிகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. தில்லி பல்கலைக்கழகத்தின் தேர்தல் என்பது, பிராந்திய நிலப்பிரபுத்துவச் சாதி அமைப்புகளான ஜாட்-குஜ்ஜார் சமூகங்களின் வலைப்பின்னல்களின் கரங்களிலும், கோடிக்கணக்கான பணபலம், வலிமையான ஆண்களின் பிடியிலும் சிக்கிய ஜனநாயகமாகும். சாதாரண மாணவர்களைப் பங்கேற்பற்ற வெறும் பார்வையாளர்களாக மாற்றும் இத்தேர்தல்கள், நாட்டின் பொதுப் பிரச்சினைகளையோ வளாகப் பிரச்சினைகளையோ பிரதிபலிப்பதில்லை. இருப்பினும் இந்த மாணவர் அரசியல் களத்திலிருந்து உருவானவர்தான் இன்று நாடெங்கும் இளைஞர்களைத் திரட்டிவரும் நேகா போரா.
தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் பணநாயகப் போக்கைப் புறந்தள்ளி, ஜே.என்.யுவின் ஜனநாயக மரபையும், கர்நாடக அரசு அண்மையில் முன்னெடுத்துள்ள சாதி - கட்சி அடையாளங்களற்ற சுயேச்சை முறையையும் கலந்ததொரு ஆரோக்கியமான முன்னுதாரணத்தைக் கையிலெடுக்க வேண்டும். அதுவே வளாகங்களில் சாதியக் கோளாறுகளையும் அடாவடிப் போக்குகளையும் தவிர்த்து உண்மையான சிந்தனைத் தெளிவும் சமூகப் பொறுப்பும் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்கும்.
மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான மாணவர் சங்கங்கள் அவசியம். தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் இக்காலத்தில், மாணவர்களைப் பாதிக்கும் முடிவுகளில் அவர்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவதே சரி.
2006இல் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ தலைமையிலான குழு மாணவர் தேர்தல்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. வயது வரம்பு, 75% வருகைப்பதிவு போன்ற சில கட்டுப்பாடுகள் நியாயமானவை என்றாலும், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நிர்வாகங்கள் மாணவர்களின் வேட்புமனுவை நிராகரிப்பது போன்ற சில பரிந்துரைகளில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் உட்பட அனைத்துக் கட்சிகளுமே இதைப் பரிசீலிக்க வேண்டும். எதிர்காலப் பொதுவாழ்விற்கான தலைவர்கள் உருவாகும் இயல்பான களங்கள் எவை என்பதை யோசிக்க வேண்டும். மாணவர்கள் பொருளாதாரச் சூழலையும் சமூக அமைப்பையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்ள அவர்கள் அரசியல் செய்வதற்கான வழிகளை உருவாக்கித் தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் லிங்டோ குழுவின் வழிகாட்டுதல்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, ஆரோக்கியமான விவாதங்களையும் நிர்வாகப் பயிற்சியையும் ஊக்குவிக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களை உயர்கல்வி நிறுவனங்களில் மீண்டும் முன்னெடுப்பது இக்காலகட்டத்தின் அவசியத் தேவை.
