மறைந்த மதச்சார்பின்மை: தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களின் மாற்றங்கள்
இந்துத்துவம், இந்துத்துவா என்று தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கையாளப்பட்டு வந்த சொற்களை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. கிட்டத்தட்ட அச்சொற்கள் காணாமல் போயிருக்கின்றன. கடந்த 15 ஆண்டு காலத் தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. இந்தச் சொற்கள் இல்லாமல் போயிருப்பதும் அவ்வகையான மாற்றங்களில் ஒன்றுதாம். இம்மாற்றங்கள் சொற்கள் சார்ந்தது மட்டுமல்ல அவை பிரதிபலிக்கும் அரசியல் சார்ந்ததும்தான் என்ற வகையில் இவை விவாதிக்கத்தக்கனவாக இருக்கின்றன.
மதவாத எதிர்ப்பு என்னும் சொல்லாடல்
1990களில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்திய அரசியல் களத்தில் மதவாதம் மையக் காரணியானது. இதன் அரசியல் முகமாக பாஜக முன்னெழுந்தது. தேர்தல் அரசியல் மதவாத ஆதரவு, மதவாத எதிர்ப்பு என்கிற இருமைச் சட்டகத்திற்குள் சென்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவோடு அரசியல் கூட்டணி ஏற்படவில்லையென்றாலும் அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக (1991-1996) ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவையை ஆதரித்திருந்தது. ஜெயலலிதாவால் வேதாகமக் கல்லூரி போன்றவை தொடங்கப்பட்டன. 1990களின் இறுதியில்
