என் குருநாதர்

பட உதவி: மு. இளங்கோவன்
பேராசிரியர் துரை. சீனிச்சாமி என்ற அந்த உயர்ந்த மனிதர் மறைந்தார் என்பதை ஏற்க முடியவில்லை. என்னுடைய ஆய்வு நெறியாளர் மட்டுமல்ல, வாழ்க்கையை யதார்த்தமாய் நகர்த்தக் கற்றுக்கொடுத்தவர். புளியங்குடிக்கு அருகில் உள்ள சிந்தாமணியில், 1944ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் துரைராஜ், அன்னம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தந்தை பள்ளி நிர்வாகி; தாய் அன்னம்மாள் அதே பள்ளியில் ஆசிரியர். புகுமுக வகுப்பினைத் திருநெல்வேலி சேவியர் கல்லூரியிலும் இளங்கலைப் பட்டப் படிப்பினை விருதுநகர், செந்தில்குமார நாடார் கல்லூரியிலும் பயின்றவர். முதுகலைப் படிப்பினைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்றார். முதுகலையில் பல்கலைக்கழக அளவில் பதக்கம் பெற்றுப் பெருமை சேர்த்தவர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘கம்பராமாயாணத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் அ.ச. ஞானசம்பந்தனின் நெறிகாட்டுதலின்கீழ் முனைவர் பட்டம் பெற்றவர். காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வித்துறையில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் 1982இல் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில். பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
நான் ஜேஆர்எஃப் (JRF) தேர்ச்சி பெற்று ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் பத்து மாதம் கழிந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முனைவர் பட்டப் படிப்பில் சேரவில்லை எனில் ஆய்விற்கான உதவித்தொகை பெற இயலாமல் காலாவதி ஆகும் என்கிற நிலையில் உடனடிச் சேர்க்கைக்காக 1998 இல் ஜூலை மாதம் தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றேன். ஆய்வியல் நிறைஞர் படிப்பில் காப்பியத்தில் ஆய்வு நிகழ்த்தியதால் துரை. சீனிச்சாமியைப் பாருங்கள் என கு.வெ. பாலசுப்ரமணியன் சொன்னார். பிறகுதான் அந்த உயர்ந்த மனிதரைப் போய்ப் பார்த்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தென் மாவட்டம் என்றதும் நானும் நெல்லைச் சீமைதான், சிந்தாமணி என்றார். அது எங்கே இருக்கிறது என்பதெல்லாம் அப்போது தெரியாது. ஆனால் நெல்லை தெரியும். ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்ற நூலை என் கையில் கொடுத்தார். 1995ஆம் ஆண்டு நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘முதல் தமிழ்ப் புதினம்’ என்று வெளியிடப்பட்ட நூல். சிட்டி, சிவபாதசுந்தரத்தின் முன்னுரையுடன் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. “ஒரு நல்ல ஆய்வாளர் கிடைச்சா இத குடுக்கணும்னு வச்சிருந்தேன். இதைப் படிச்சிட்டு வா. சிறுசா இருக்குன்னு நெனச்சுறாத விசயங்கள் நெறைய இருக்கு.” அன்றே விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டுத் தந்தார். ‘கதைக் கவிதை மரபில் ஆதியூர் அவதனி சரிதம்’ என்ற தலைப்பில் பதிவுசெய்தாகிவிட்டது.
நாவல்களில் உளவியல் சிக்கல்கள் குறித்து விரிவாகக் கருத்துக்களைப் பகிர்வார். கையில் நோட்டு, பேனா இல்லாமல் அவர்முன் அமர்ந்ததில்லை. உளவியல் அணுகுமுறையை ஓராண்டுக்கு மேல் விளக்கியிருக்கிறார். இக்கால இலக்கிய வடிவங்கள் எல்லாம் மேலைநாடுகளிலிருந்து வந்தவை; ஆங்கில நூல்களைப் படி என்பார். மூன்றாம் ஆண்டில்தான் எழுத ஆரம்பித்தேன். ‘கதை உரை மரபும் புதினமும்’ என்ற தலைப்பில் நூறு பக்கம் எழுதிக் கொடுத்தேன். முதல் வரியில் பச்சை மையில் கோடிட்டு அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆறு மாதங்கள் கழிந்த பிறகு முதல் இயல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘ஆதியூர் அவதானி சரிதம்’ மட்டும் பத்தாது ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ‘கமலாம்பாள் சரித்திரம்’, ‘தீனதயாளு’ இப்புதினங்களை எடுத்து முடிவுகளை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி முடிவுரையையே ஆய்வுரையாக அமைக்கச் சொன்னார்.
மூன்று மணிநேரப் பயணத்தில் தென்காசி, பாவூர்சத்திரம் சென்று அவர் வீட்டை (அன்னம்மாள் நிலையம்) நெருங்கினேன். 20.04.26 இல் உயிரை நீத்த மனிதர் மூன்று நாளாய்ப் பேழைக்குள் மகனுக்காகக் காத்திருந்தார். தாமதமாகச் செய்தியறிந்த நானும் (22.04.26) அவரைப் பார்க்கச் சென்றேன். தாமதம் எனக்குப் பார்க்க வழி விட்டதாக எண்ணிக்கொண்டேன். பனை மரத்தில் பாதி உயரம் இருக்காரே மனுசன் எனச் சொல்வார்கள். வேகமாய் நடக்கும் மனிதர். யாரிடமும் பகையும் இல்லை, நெருக்கமும் இல்லை என வாழ்ந்தவர். கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக்கொண்டிருந்தார். கால்மாட்டில் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் அவர் படைத்த புத்தகங்களான ‘அந்தி’, ‘உரித்த யானை’, ‘காப்பியக் கொள்கைகள்’ முதலானவை வரிசையாய் அணிவகுத்து நின்றன.
ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட மனிதர் மெலிந்த தேகமாய்ப் படுத்திருந்தார். அம்மாவின் கையைப் பற்றி “சந்தனமாரியம்மாள்” என்றேன். “கோவில்பட்டிதானேம்மா.” கண்ணீர் பெருகத் தலை அசைத்தேன். “அமெரிக்கா வந்தாலும் அவங்க போற ஒரு இடம் நூலகம்தான். காலை போனா மாலைதான் வருவார். நடந்தே வீட்டுக்கு வந்துருவார்.” கண்ணீரோடு அம்மா கூறும்போது அவரின் வாசிப்பு ஆர்வம் வியக்கவைத்தது. அவர் மத அடையாளத்தை என்றும் காட்டியதில்லை. சிலுவை தாங்கிய பேழைக்குள் படுத்தபடி விண்ணுலகம் புறப்பட்டார்.
கோ. சந்தனமாரியம்மாள், கோவில்பட்டியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையில் இணைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
மின்னஞ்சல்: gsminiyan@gmail.com
