காலத்தைப் படம்பிடித்தவர்

பட உதவி: அவினாஷ்
‘ரகு ராய்’ இந்தியாவின் புகைப்பட இதழியலுக்கு உலக அளவில் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தவர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். ரகு ராய் எவ்வாறு புகைப்பட இதழியலில் ஒரு தனித்துவத்தை உண்டாக்கினாரென்றும், தனது புகைப்படக் கலையில் என்ன வகையான தாக்கத்தைச் செலுத்தினாரென்றும் புகைப்படக் கலைஞரும், ஒளிப்பதிவாளருமான ரவிஷங்கரன் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
ரகு ராய் 1942 இல் அப்போதைய பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். ரகு ராயின் சகோதரர் பால் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் மூலமாகத்தான் ரகு ராய்க்கு கேமரா பரிச்சயம் ஆகிறது. பால் விடுமுறைக்கு வந்திருக்கும்போது அவருடைய கேமராவை எடுத்துச் சென்ற ரகு ராய், முதன்முறையாகக் கழுதை ஒன்றைப் புகைப்படமெடுக்கிறார். எல்லோரும் எடுப்பதுபோல முழுக் கழுதையின் முழு உருவத்தையும் படமெடுக்காமல் முகத்தை மட்டும் படம்பிடிக்கிறார். அப்புகைப்படம் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அக்கழுதையின் முகத்தின் வழி வெளிப்படும் உணர்வுகளைக் காட்டுவதாக இருந்தது. அதுதான் அவரின் முதல் புகைப்படம்.
பின்பு தில்லியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஸ்டேட்ஸ்மேன் நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியில் சேர்கிறார். பணியில் சேர்ந்தபோதே திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால் நாளிதழ்களைப் பொறுத்தவரை எடுக்கும் புகைப்படங்களின் வாழ்நாளானது ஒருநாள் என்று மட்டுமே அவர் உணர்கிறார். பத்திரிகையில் காலை வெளியாகும் புகைப்படம் மாலையே தன் ஆயுளை இழப்பதாகச் சொல்கிறார். வழக்கமான திறப்பு விழாக்கள், குத்துவிளக்கேற்றல்கள் எல்லாம் ஒருநாளுக்குள் பழைய படங்களாகிவிடுகின்றன. எனவே அவற்றைத் தாண்டிப் புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்கிற எண்ணம் அவருக்குள் ஆழமாக இருந்தது. அந்தத் தெளிவு அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது, கல்கத்தாவிலிருந்து வெளிவந்த புகழ்பெற்ற ஆனந்த பஜார் பத்திரிகைக் குழுமத்தின் இதழான சன்டே இதழில் பணியில் சேர்கிறார். அந்தப் பத்திரிகைக்காக எடுத்த புகைப்படங்களின் தனித்துவம், அவருக்கு இந்தியப் புகைப்பட இதழியலில் புகழைப் பெற்றுத்தருகிறது.
1975இல் இந்தியா டுடே வெளிவரத் தொடங்கியபோதே, அதில் பணிபுரிய ரகு ராய்க்கு அழைப்பு விடுக்கப் படுகிறது. இந்தியா டுடேவில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அதன் புகைப்படத் தொகுப்பாசிரியராகத் தானே இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார். ஏனெனில் அப்போதைய பத்திரிகைகளின் பக்க வடிவமைப்பாளர்கள், புகைப்படங்கள் குறித்த போதிய அறிவின்றி இருந்தமையால், ஒரு புகைப்படத்தின் அழகியலைப் புரிந்துகொள்ளாமல் பக்க வடிவமைப்புக்கு ஏற்பப் புகைப்படங்களை வெட்டி ஒட்டி அதன் இயல்பைச் சிதைத்துவிடுவார்கள். எனவே தானே புகைப்படத் தொகுப்பாசிரியராக இருந்தால் அது நிகழாமல் நினைத்த புகைப்படங்களை முழுமையாக வெளியிட முடியுமென ராய் நம்பினார். இந்தியா டுடேயும் அதை ஏற்றுக்கொண்டது. அவர் பணியில் இணைந்தார். அட்டைப் பக்கம் தொடங்கி, இறுதிப் பக்கம் வரைக்கும் வெளியாகும் புகைப்படங்களை அவரே தேர்ந்தெடுத்து அந்த இதழின் காட்சித் தரத்தை நிர்ணயித்தார். அவற்றில் வெளியான பல புகைப்படங்கள் காலம் கடந்து இன்றும் அழியாப் புகழுடன் விளங்குகின்றன.

அதன்பின் ஒளிப்படக் கட்டுரை எனப்படும் புகைப்படங்கள் மூலம் கதைகள் சொல்லும் புகைப்பட வரிசையை ரகு ராய் தொடங்கினார். இதற்காக இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கும் வந்திருக்கிறார். ஏர்வாடி தர்காவைச் சுற்றியிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா எனப் படம்பிடித்திருக்கிறார்.
அவை எல்லாவற்றிலும் மனித முகங்களும், கதைகளும் நிறைந்துநின்றன. கண் தெரியாத முஸ்லீம் ஆணும், ஊனமுற்ற இந்துப் பெண்ணும் தெருவில் ஒன்றாகப் பிச்சையெடுப்பதை ஒருமுறை பார்க்க நேரிடுகிறது. அவர்களுக்குள் தந்தை - மகள் போன்ற உறவிருந்ததாக உணர்கிறார். எனவே அவர்கள் செல்லும் இடமெல்லாம் இவரும் அவர்களைத் தொடர்ந்து சென்று புகைப்படங்கள் எடுக்கிறார். அந்தப் புகைப்படத் தொகுப்பு மனித உணர்வுகளை வெளிகாட்டுவதாக அமைந்திருந்தது.
இதனிடையே பட்டப் படிப்பை முடித்து நானும் புகைப்படக் கலைஞனாகப் பணியில் சேர்ந்தேன். அப்போது இந்தியா டுடே மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியா டுடே இதழ்களிலிருந்த புகைப்படங்கள் மற்ற இதழ்களில் வருபவற்றைவிட மேம்பட்டவையாகவும் புதிதாகவும் இருந்தன. குறிப்பாக ராய் எடுத்த ஏர்வாடிப் புகைப்படங்கள். அவை எனக்குள் புகைப்படக் கலையின் வேறொரு கோணத்தை அறியச் செய்தன. தொடர்ந்து ராயின் புகைப்படங்களைப் பார்த்து ஒரு காட்சியை அல்லது தருணத்தை எப்படி கேமரா வழியாகப் பார்ப்பதென்று கற்றுக்கொண்டே இருந்தேன். ஆனால் அப்போது ராய் எப்படியிருப்பாரெனத் தெரியாது. அவரை நேரில் சந்திக்காமலே மானசீக வழிகாட்டியாகக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.

இந்தச் சமயத்தில்தான் அன்னை தெரசா சென்னைக்கு வந்திருந்தார். அவரைப் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தேன். அங்கு ஒரு மனிதர் என் கண்களுக்கு வித்தியாசமாகத் தென்பட்டார். அவரது தோற்றமே முதலில் என்னை ஈர்த்தது. ராணுவப் பச்சை வண்ணத்தில் மேல் ஜாக்கெட்டும், நிறைய பாக்கெட்டுகளுடன் கூடிய காற்சட்டையும் அணிந்த அந்த மனிதரைப் பார்க்கிறேன். இடப்புறம் மூன்று கேமராக்கள், வலப்புறம் மூன்று கேமராக்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லோரையும்போல அவர் சடக்சடக்கெனப் புகைப்படங்கள் எடுக்கவில்லை. அன்னை தெரசா மேடையில் இருக்கிறார். அந்த மனிதர் மேடைக்கு அருகில் சென்று தெரசாவின் முகத்தைப் பார்த்தபடி நிற்கிறார். சிறிது நேரம் முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்கிறார். கேமரா ஒன்றை எடுத்துச் சில புகைப்படங்கள் எடுக்கிறார். ‘ஃப்ளாஷ்’ எதுவும் உபயோகிக்கவில்லை. என்ன வெளிச்சம் இருக்கிறதோ, அதற்கேற்ப புகைப்படங்கள் எடுக்கிறார். பின் சிறிது தள்ளிச் செல்கிறார். அங்கிருந்து அன்னை தெரசாவைப் பார்க்கிறார். அந்தக் கோணத்திலிருந்து சில புகைப்படங்கள் எடுக்கிறார். நான் இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
.jpg)
அவர் கவனிக்கிறார்; பின் யோசிக்கிறார். ஏதோவொன்று தட்டுப்பட்டவராக கேமராவை எடுக்கிறார். சில படங்கள் எடுக்கிறார். பின் நகர்ந்துவிடுகிறார். இப்படியாக அந்த நிகழ்வில் மிகக் குறைந்த படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு அன்னை தெரசாவுடனே காரில் ஏறிச் சென்றுவிடுகிறார். செல்வதற்கு முன் தெரசா, “எதுவும் புகைப்படங்கள் கிடைத்ததா” எனக் கேட்கிறார். “மிகச் சில கிடைத்திருக்கின்றன” என்று அவர் பதிலளிக்கிறார். யார் அவர்? ஏன் இப்படிப் புகைப்படமெடுக்கின்றார் என்ற கேள்விகள் எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தன.
அடுத்த வாரம் தி இல்லுஸ்ரேட்டட் வீக்லியில் ‘ரகு ராயின் சிறந்த புகைப்படங்கள்’ (The Best of Raghu Rai) என்ற தலைப்பில் அவரின் புகைப்படமொன்று அட்டைப் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதில் அவரது முகத்தைப் பார்த்ததும், ‘அய்யயோ இப்படிப் பக்கத்துல வந்தவர்கிட்ட பேச முடியாம போச்சே...’ என எனக்கு வருத்தம் மேலோங்கியது.
புகைப்படக் கலையில் எனது ஆதர்சங்களென்று ஹென்றி கார்டியர் - பிரெஸான், ரகு ராய், அன்செல் ஆடம்ஸ் (Henri Cartier-Bresson, Raghu Rai, Ansel Adams) ஆகியோரைச் சொல்வேன். புகைப்பட இதழ்களை வாங்கிப் படிக்கும் பழக்கமும் எனக்கிருந்தது. அப்படி வந்த இதழொன்றில் ரகு ராயின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் அவர் எவ்வாறு புகைப்படங்கள் எடுக்கிறார், ஒரு தருணத்தைக் காட்சிப்படுத்த எவ்வாறு தயாராகிறார் என்பதைப் பற்றிச் சொல்லியிருந்தார். அதில், ‘ப்ளாக் லென்’ஸை (Block Lens) என்பதை அதிகம் பயன்படுத்துவதாகச் சொல்லியிருந்தார். மேலும் ‘டார்க் ரூம்’ எனப்படும் புகைப்படத்தை அச்சாக்கும் தொழில்நுட்பம் தன்னுடைய மேற்பார்வையில் தான் நடக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு என்னுடைய புகைப்படக் கலையை மேம்படுத்தத் தொடங்கினேன். அவரின் புகைப்படங்களில் அழகியல் எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். என் லென்ஸுகளை நான் தேர்ந்தெடுக்கத் தொடங்கினேன். ‘ப்ளாஷ்’ பயன்பாட்டைக் குறைத்து இயல்பான ஒளியை என் புகைப்படங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினேன். என் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் இது ரவிஷங்கரன் எடுத்தது எனச் சொல்லுமளவுக்கு என் புகைப்படச் சட்டங்கள் தனித்துவமாக இருக்க வேண்டுமென்கிற உந்துதலை ரகு ராயிடமிருந்தே பெற்றுக்கொண்டேன்.

இந்தியா டுடே தன்னுடைய தென்னகப் பதிப்பைக் கொண்டுவரும்போது, அதற்குப் புகைப்படக் கலைஞர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள் என்று அறிந்து விண்ணப்பித்திருந்தேன். இறுதிச்சுற்றுக்கு இரண்டு பேர் மட்டும் தேர்வாகியிருந்தோம். என்னோடு தேர்வான இன்னொருவர் பின்னாட்களில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த். நான் நேர்காணல் அறைக்குள் நுழைகிறேன். என்னை நேர்காணல் செய்யக் காத்திருந்தவர் ரகு ராய். எவரை என் ஆதர்சமாக நினைத்தி ருந்தேனோ அவரே என்னை நேர்காணல் செய்கிறார் என்பது ஆச்சர்யமாக இருந்தது. நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவரைப் போலவே இயலொளியைப் பயன்படுத்துதல், ‘வைட் ஆங்கிள் லென்ஸுக’ளைப் (Wideangle Lense) பயன்படுத்துதல், புகைப்படத்தில் கதை சொல்லல் போன்றவை இருந்ததால் என்னைத் தேர்ந்தெடுத்தார் என நினைக்கிறேன். ரகு ராயின் தாக்கம் எனக்குள் இருந்தது. அவரின் ஆளுமையைப் பிரதியெடுக்க முயன்றேன். அவரது பாணிக்குள் என் தனித்துவத்தைத் தேடத் தொடங்கினேன்.
ரகு ராய் இசைக் கலைஞர்கள், அரசியலாளர்கள் புகைப்பட வரிசைகளைச் செய்துள்ளார். அப்படி எனக்கும் செய்துபார்க்க வேண்டுமென்கிற ஆர்வமிருந்தது. அப்போதுதான் நண்பர் இளையபாரதி வழியாக கோமல் சுவாமிநாதன் அறிமுகமானார். சுபமங்களா இதழுக்காக எடுக்கப்படும் எழுத்தாளர்களின் நேர்காணலுக்கு அவர்களைப் புகைப்படமெடுக்கும் பொறுப்புக்கு என்னைக் கேட்டார்கள். கோமல் சுவாமிநாதனிடம் “வழக்கமான புகைப்படங்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்று சொல்லிவிட்டுத்தான் பணியை ஆரம்பித்தேன்.

எம்.டி. வாசுதேவன் நாயர்தான் நான் சுபமங்களா இதழுக்காகப் புகைப்படமெடுத்த முதல் எழுத்தாளர். அவரை நேர்காணலுக்காகச் சந்திக்கச் சென்றபோது லுங்கி அணிந்தவராக டீக்கடை வாசலில் நின்றிருந்தார். அங்கிருந்தே புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டேன்; வீட்டிற்குள் பீடி பற்றவைப்பதுபோலச் சில புகைப்படங்கள்; பின் அவர் முகத்தின் ஒருபுறம் மட்டும் ஒளி விழச் சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன். அச்சாகி வரும்வரைக்கும் நான் எடுத்த புகைப்படங்கள் மேல் கோமல் சுவாமிநாதனுக்குப் பெரிய நம்பிக்கையில்லை. புகைப்படங்கள் அச்சாகி வெளிவந்தபோது அதிலிருந்த தனித்துவத்தைப் பார்த்த கோமல் சுவாமிநாதன் என்னை நம்பத் தொடங்கினார். அதன்பின் சுபமங்களா இதழுக்காக எழுத்தாளர்கள் பலரையும் புகைப்படமெடுக்கத் தொடங்கினேன். அவை எதுவும் வழக்கமான படங்களாக இருக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். எடுக்கின்ற படங்களில் ஏதாவது புதிதாக இருக்க வேண்டுமென்கிற பிடிவாதம் என்னிடமிருந்தது. அதில் மறக்க முடியாதது கலைஞர் கருணாநிதியை அவர் வீட்டின் தரையில் அமர வைத்து எடுத்த புகைப்படம். செய்கின்ற பணியில் எனக்கு இப்படித் தனித்துவம் வருவதற்குக் காரணம் ரகுராய்தான். அவர் இந்திரா காந்தியை எடுத்த படங்கள்தான் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் புகைப்படங்களில் துடிப்பானவர்களாகக் காட்ட எனக்கு உத்வேகத்தைத் தந்தன.
ரகு ராய் காபி டேபிள் புக்ஸ் எனப்படும் புகைப்பட வரிசைப் புத்தகங்கள் 20 க்கும் மேல் போட்டிருக்கிறார். முக்கியமானவை ‘இந்திரா காந்தியின் வாழ்வில் ஒரு நாள்’, ‘அன்னை ரெசா’, ‘வாரணசி’, ‘போபால் அவலம்’, ‘தாஜ்மஹால்’ (The Day in the Life of Indira Gandhi, Mother Thersa, Varanasi, Bhopal Tragedy, Tajmahal) ஆகியவை. இதில் தாஜ்மஹாலைத் தவிர மற்ற எல்லாம் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். ராயின் பெரும்பாலான புகைப்படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவைதான். அவர் சொல்லும் காரணம், பார்வையாளர் சில நேரங்களில் வண்ணங்களால் கவனம் சிதறி நான் சொல்ல வந்ததைக் கவனிக்காமல் போகக்கூடும். பொருள் தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்புண்டு. எனவே கருப்பு வெள்ளையில் எடுக்கிறேன் என்றார்.

ராய் ஒரு புகைப்படக் கலைஞனாக மட்டுமின்றி வரலாற்றைக் காட்சியாக ஆவணப்படுத்துபவராகவும் இருந்திருக்கிறார். அதற்குச் சிறந்த உதாரணம் போபால் விஷவாயுக் கசிவுத் துயரம். அந்தத் துயரம் இரவு நிகழ்கிறது. காலையில் ராய் அங்கு தன் புகைப்படக் கருவியுடன் இருக்கிறார். மக்கள் விழுந்து இறந்து கிடந்த வீதிகளையும், புதைக்கப்பட்டுக்கொண்டிருந்த குழிகளையும், மருத்துமனையில் குவிக்கப்பட்ட உடல்களையும் புகைப்படமெடுக்கின்றார். அவரின் புகழ்பெற்ற மண் மூடிய குழந்தைப் புகைப்படத்தை அவர் எடுக்கும்போது இன்னும் மூவரும் அதே கோணத்தில் எடுக்கின்றனர். ஆனால் ராய் எங்கு தனித்துத் தெரிகிறாரென்றால் அந்த இறந்த குழந்தையின் தலையை ஒரு கை வருடுவதுபோல அவர் அந்தக் காட்சியை எடுக்கின்றார். இந்தியா டுடேவிலும், டைம்ஸ் இதழிலும் அது அட்டைப் படமாக வெளியாகிறது. அது எல்லோரின் மனதையும் உலுக்குகிறது. அந்த ஆவணப்படுத்துதல் நிகழ்ந்ததினால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளேனும் கிடைத்தது. ஒரு கலைஞன் அடிப்படை மனிதத்தன்மையோடு எழுந்து நின்ற இடம் அது.
போட்டோகிராப் சொசைட்டி ஆப் மெட்ராஸுக்கு ரகு ராய் வந்திருந்தபோது நேரில் சந்தித்து, சிறுவயதில் அவர் புகைப்படங்களைப் பார்த்து உத்வேகம் அடைந்ததையும், என்னை நேர்காணல் மேற்கொண்டதையும் அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார். நான் திரைப்பட ஒளிப்பதிவாளராக ஆனதையும் சொல்ல, மகிழ்ந்தார். அவரின் எளிமை என்னை ஆச்சரியப்பட வைத்தது. இறுதியாக என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டது என்னை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
ரகு ராய் மறைந்த செய்தி என்னைச் சங்கடப்படுத்தியது. அதனினும் சங்கடம் தமிழின் பெரும்பாலான ஊடகங்கள் அவரது மறைவைச் சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டதுதான். வெறும் இரண்டு வரி செய்திக் குறிப்புகளோடு அதைக் கடந்துசென்றுவிட்டனர்.
நம்மை மீட்டுருவாக்கவும், உயிர்ப்பாக வைத்துக் கொள்ளவும் செய்வன புகைப்படங்கள். அதற்கு உந்து சக்தியாக இருந்தவர் ரகு ராய். ‘பிசாசு’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து முடித்திருந்தேன். என்னுடைய பெயர் திரையில் என்னவாக வரலாமென ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமும் இயக்குநர் மிஷ்கினும் ஆலோசித்தார்கள். நான் என் வழிகாட்டியாக, குருவாக நினைத்த ரகு ராயின் பெயர் என்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமென விருப்பத்தை கூற ரவி ராய் என என் பெயர் திரையில் தோன்றியது. ஆம், ரகு ராய் அப்படித்தான் என்னுடன் எப்போதும் இருக்கிறார்.
சந்திப்பும் கட்டுரையாக்கமும்: நவீன்ராஜன்
மின்னஞ்சல்: wideangle33@gmail.com
