ஜூன் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூன் 2026
    • கட்டுரை
      விஜய் எனும் புலப்பாடு
      மறைந்த மதச்சார்பின்மை: தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களின் மாற்றங்கள்
      ஈரான் போர் எங்கே நிற்கிறது இந்தியா?
      ஊடக மொழியாளுமையர்
      நீட் என்னும் வன்கொடுமை
      புவியின் சாட்சி
    • அஞ்சலி: ரகு ராய் (1938 & 2026)
      காலத்தைப் படம்பிடித்தவர்
    • பத்தி இன்றும் என்றும் - 2
      அரசியல் ஜூகல்பந்தி: ஏழு அரசியல் கூட்டாளிகள்
    • நேர்காணல்: இரா. முரளி
      “தமிழர் மெய்யியல் பன்முகமானது”
    • அஞ்சலி: இ. சுந்தரமூர்த்தி (1942 - 2026)
      நடமாடும் ‘கூகுள்’
    • கற்றனைத்தூறும்-17
      எலிப்பந்தயமோ கல்வி?
    • பதிவு
      அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு
      தன்யனானவர்
    • அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026)
      என் குருநாதர்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கதைகள்
      நரகத்தில் போர்ஹெஸ்
    • முன்னுரை
      மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள்
    • கவிதைகள்
      கவிதா முரளிதரன் கவிதைகள்
    • தலையங்கம்
      ‘தற்குறி’களின் வருகை அல்லது இருதுருவ அரசியலின் வீழ்ச்சி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2026 தலையங்கம் ‘தற்குறி’களின் வருகை அல்லது இருதுருவ அரசியலின் வீழ்ச்சி

‘தற்குறி’களின் வருகை அல்லது இருதுருவ அரசியலின் வீழ்ச்சி

தலையங்கம்
ஆசிரியர் குழு

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில், முக்கால் நூற்றாண்டுக் கால இருதுருவ அரசியலின் அடியாழத்தில் நிகழ்ந்திருக்கும் அதிர்வு. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் நிறுவனமயப்பட்ட சக்திகளைக் கடந்து, தேர்தல் அரசியலில் நுழைந்த மூன்றே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் ஏறியிருப்பது அரசியல் ஆய்வாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்கள் ஒரே நேரத்தில் தவெக திராவிட சிசுக் கட்சி என்றும் பாஜகவின் ரகசிய சந்நதி என்றும் கணித்துவருகின்றனர். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றை நோக்குபவர்களுக்கு, இது வரலாற்றின் சுழற்சிமுறையில் நிகழ்ந்திருக்கும் ஒரு சமூக இயக்கம்.

1967இல் அப்போதைய பெருவலிமை வாய்ந்த காங்கிரசை வீழ்த்தி அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1977இல் எம்ஜிஆரின் எழுச்சியின்போதும் தமிழகம் இத்தகையதோர் அலையைக் கண்டிருக்கிறது. 1965ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டமும், காங்கிரஸ் அரசின் ஒடுக்குமுறைகளும் அன்று திமுகவின் எழுச்சிக்கான தார்மீகத் தளத்தை அமைத்துக் கொடுத்தன. தமிழ் மொழியின் காவலர் என்ற தமது பிம்பத்தைக் கட்டமைக்கத் திரைப்படங்களையும் அடுக்குமொழி வசனங்களையும் அவர்கள் சாதுரியமாகப் பயன்படுத்தினர். 1977இல் எம்ஜிஆரின் வெற்றி வெறும் திரைக் கவர்ச்சியால் மட்டுமே சாத்தியப்படவில்லை. பெண்கள், விளிம்புநிலை மக்கள், ரசிகர் மன்றக் கட்டமைப்பு ஆகிய மூன்று சமூகச் சக்திகளின் கூட்டு இணைவாக அது திகழ்ந்தது.

இருப்பினும், அந்த இரு வரலாற்றுத் தருணங்களின் பின்னணியிலும் ஏதேனும் ஒரு தத்துவார்த்த அல்லது கொள்கைரீதியான பின்புலம் இருந்தது. ஆனால் தற்போதைய தவெகவின் வெற்றியில் அத்தகைய தத்துவப் பின்புலத்தை விடவும், திராவிடக் கட்சிகளின் மீது மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகள் மீதான ஆழ்ந்த அதிருப்தியும், மாற்றத்திற்கான அவாவும், புதிய தலைமுறையின் உளவியலுமே முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன.

எம்ஜிஆர் மீதான அன்றைய பெண்களின் ஈர்ப்பையும், விஜய் மீதான இன்றைய நம்பிக்கையையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிட முடியாது. இன்றைய பெண்கள் விஜய் என்ற பிம்பத்தை ஒரு திரைக் கதாநாயகன் என்ற நிலையைக் கடந்து, தங்களின் குடும்பத்தில் உள்ள ஓர் அண்ணனாகவோ, தம்பியாகவோ, மாமனாகவோ சுவீகரித்துக்கொண்டுள்ளனர் என்பதை அவர்களின் உணர்ச்சிமிக்க பேச்சுகள் உணர்த்துகின்றன.

கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பெண்கள் விடியல் பயணத் திட்டம் என மக்களின் வாழ்வாதாரத்தை நோக்கிய நேரடியான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டங்கள் மக்களின் வாழ்வில் சில சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தின. அதே நேரம் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவை நெருக்கடியை உருவாக்கின.

பள்ளிக் கல்வியில் பல சீரய திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால் ஏற்கெனவே சீரழிந்திருந்த உயர் கல்வித்துறை திமுக ஆட்சியில் மேலும் சீரழிந்தது. பண்பாட்டுத் தளத்தில் - தொல்லியல் முதல் இலக்கியம்வரை - இதுவரை ஏற்படாத முதலீட்டை திமுக அரசு செய்தது. பொது நூலகங்களைக் கட்டமைப்பதிலும் அவற்றில் தகுதியான நூல்களை வாங்குவதிலும் பல முக்கிய முயற்சிகள் நடந்தன. பதிப்புத்துறையின் மேம்பாட்டுக்கும் வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கவும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் இருப்புக்கு எதிராக வீசிய அலையில் திமுக ஆட்சியும் வீழ்ந்தது.

இன்று தேர்தலின் போக்கை முற்றிலும் தீர்மானிப்பவர்களாக 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பெருமைகளைவிடவும் தங்களின் சமகால வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வுகளையே அவர்கள் முதன்மையாகக் கருதுகிறார்கள்.

இங்குதான் திமுகவின் இருபதாம் நூற்றாண்டுப் பாணி அரசியல் அணுகுமுறை பலனளிக்கவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய தலைமுறை, முற்றிலும் மாறுபட்ட நவதாராளவாதத் தொழில்நுட்ப நுகர்வோர் மனநிலையைக் கொண்டது. உணவு முதல் அத்தியாவசியப் பொருட்கள்வரை அனைத்தும் சில நிமிடங்களில் தங்கள் வாசலுக்கு வந்துசேர வேண்டும் என்றும், ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் பழகிப்போன நுகர்வோர் சமூகம் இது. இந்தத் துரிதத் தீர்வுக்கான எதிர்பார்ப்பு அரசியலுக்கும் நிர்வாகத்தளத்திற்கும் நீண்டுவிட்டது. இன்றைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் தலைமுறையினர் “அடுத்த பத்தாண்டுகளில் இந்த உள்கட்டமைப்பை மாற்றுவோம்” என்ற பாரம்பரிய அரசியல் வாக்குறுதிகள்மீது அவநம்பிக்கையும் பொறுமையின்மையும் கொண்டிருக்கின்றனர். திமுக அரசு மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தங்களின் ஐம்பதாண்டுக் காலச் சாதனைகளைப் பேசிக்கொண்டிருந்தபோது, அது தொழில்நுட்பத் தலைமுறையினருக்குப் பழங்கதையாகவே தோன்றியது.

ஆளுங்கட்சி தவறவிட்ட இந்த இடத்தைத் தவெக துல்லியமாகக் கைப்பற்றியது. உறுப்பினர் சேர்க்கைமுதல் கொள்கை முழக்கங்கள்வரை அனைத்தையும் நவீனத் தொழில்நுட்ப வடிவிலும் செயலிகள் வழியாகவும் கச்சிதமான காட்சி ஊடக உத்திகள் மூலமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மந்தமான, அதிகாரத்துவ அணுகுமுறைக்கு மாற்றாக, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வேகத்தையும் புதுமையையும் கைக்கொண்ட தவெகவின் உத்தி, புதிய தலைமுறையின் உளவியலோடு சரியாகப் பொருந்தியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள்வரை திமுகவிற்குப் பெரும்பயன் அளித்த பாஜக / சனாதன எதிர்ப்பு என்ற முழக்கம், இந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் முற்றிலுமாக நீர்த்துப்போனது. பல சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சனாதன எதிர்ப்புப் பேசுவது வெற்று முழக்கமாகச் சரிந்தது. தேசிய அளவிலான மதவாத அச்சுறுத்தலைக் காட்டி, மாநில அரசின் நிர்வாகத் தோல்விகளையும், மீறல்களையும் மூடிமறைக்க முயன்ற ஆளுங்கட்சியின் உத்தியை மக்கள் நிராகரித்துள்ளனர்.

பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகக் களம் கண்டுதான் திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த அரசியலின் தவிர்க்க முடியாத பின்விளைவாகத் தமிழகத்தில் பாஜகவும் திமுகவுக்கு எதிரான பிரதான சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தி வளர்ச்சியடைந்தது. திமுக வெற்றி பெற்ற 2021 தேர்தலில்தான் பாஜகவின் வாக்குச் சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டியது. அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவராகவே மக்களால் பார்க்கப்பட்டார். பாஜக எதிர்ப்பை தவெக இந்தத் தேர்தலில் முதன்மையாகக் கைக்கொள்ளவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் எந்த அரசியல் கட்சியும் நுழைய முடியாத பாஜகவின் பேட்டைகளிலும் தவெக ஆதரவைப் பெற்றுள்ளது. பாஜக இந்த நூற்றாண்டில் தமிழகத்தில் கண்ட வளர்ச்சியில் முழுப் பின்னடைவைக் கண்டுள்ளது.

எதிரி யார் என்பதைக் காட்டி வாக்குகளைக் கோருவதைவிட, நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற ஆக்கபூர்வ அரசியலே வெல்லும் என்பதைத் தவெகவின் 108 இடங்கள் நிரூபித்துள்ளன.

சாதிச் சங்கங்களின் ஆதரவைப் பெறுவது, மதரீதியான வாக்கு வங்கிக் கணிப்புகள், சிறுபான்மை மதத் தலைவர்கள் வழி அம்மக்களின் வாக்குகளைப் பெறும் உத்தி, இறுதி நேரப் பணப்பட்டுவாடா போன்ற வழக்கமான தேர்தல் அரசியல் உத்திகள் இந்த மாற்றத்தின் முன்னால் செல்லாக்காசாகிப் போய்விட்டன. “பணத்தையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வோம்; ஆனால் வாக்கை மாற்றத்திற்காகச் செலுத்துவோம்” என்ற வாக்காளர்களின் உளவியல், பண பலத்தால் வாக்குரிமையை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற திமுக, அதிமுக, பாஜகவின் இறுமாப்பை உடைத்துள்ளது. மக்களை ஊழலில் பங்காளிகளாக்கும் “திருமங்கலம் பார்முலா” தோல்வியடைந்த தருணம் இது. சாதியக் கூட்டணிகளும் மதவாதப் பிரிவினைகளும் மொழி, இனத் தூய்மைவாதங்களும் புதிய அலையின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

மாவட்ட, உள்ளூர் அளவிலான திமுக நிர்வாகிகளின் அதிகார துஷ்பிரயோகங்கள், கனிமவளக் கொள்ளைப் புகார்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த விமர்சனங்கள் நடுத்தர வர்க்கத்தினரிடம், குறிப்பாகப் பெண்களிடம் கடுமையான அதிருப்தியைத் தொடர்ச்சியாக வளர்த்துவந்தன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவான மாற்றாகப் பொதுமக்களால் பார்க்கப்படாத சூழலில், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் தவெகவை நோக்கிச் சென்றன.

கிராமப்புறங்களில் தலித் மக்கள் மீதான சாதிய வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறியது தலித் அறிவுஜீவிகள், இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை உருவாக்கியது. புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தில் இத்தனை ஆண்டுகளாகியும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கத் தவறியதும், நாங்குநேரியில் கல்வி நிலையத்திற்குள் நிகழ்ந்த சாதிய வன்முறையும், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அரசு கையாண்ட விதமும் தொடர் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு கிடப்பில் போட்டதும் திராவிட மாடலின் சமூகநீதி அரசியல் மீதிருந்த நம்பிக்கையைச் சிதைத்தன. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் எளிய தலித் மக்கள் என்பது விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளைத் தீவிரப்படுத்தியது. 1.30 கோடி பெண்கள் 1,000 ரூபாய் உரிமைத்தொகை பெற்றாலும் மொத்தம் 2.28 கோடிக்கு அதிகமான குடும்ப நல அட்டைகள் புழக்கத்திலிருக்கும் தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடிக் குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடையவில்லை. தடையின்றிப் புழங்கிய போதைப்பொருள் கலாச்சாரத்தால் குடும்ப அமைதி கெடுவதும், சட்டம்-ஒழுங்குச் சீர்குலைவால் சமூகப் பாதுகாப்பு இல்லாததுமே அவர்களின் பெரும் கவலையாக மாறியது. “பணம் தருகிறார்கள், ஆனால் நிம்மதி இல்லை” என்ற பெண்களின் உளவியலைத் திமுக அரசு கணிக்கத் தவறிவிட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அதிகாரத்திற்கு வரும்போது நிகழும் ஊழல்களைச் சமூக மாற்றத்தின் அங்கமாகக் கருத வேண்டும் என்ற போலித் தர்க்கம், சமூகநீதி என்ற உன்னதக் கோட்பாட்டையே கொச்சைப்படுத்தியது. ஊழலும் குடும்ப ஆட்சியும் சமூகநீதியின் அங்கங்கள் அல்ல; அதன் ஆகப்பெரும் எதிரிகள். நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் அடித்தட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பின் தரத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

அதேபோல், அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கமாகக் கொண்ட சமூகநீதிக்கு முற்றிலும் நேர் எதிரானது குடும்ப அரசியலின் அதிகாரக் குவிப்பு. ஒட்டுமொத்த அதிகாரமும் தமிழக அளவில் ஒரே குடும்பத்தையும் ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு குடும்பங்களிலும் குவியும்போது, தகுதியுடைய தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டு, நிலப்பிரபுத்துவ சிந்தனையின் நவீன வடிவமாக அது மாறுகிறது. இக்குடும்ப ஆட்சியின் விளைவாக மாநிலத்தின் முதன்மைப் பொருளாதார வளங்கள் சில நபர்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குள் முடங்குவது, நவதாராளவாதச் சூழலில் வளரத் துடிக்கும் எளிய, நடுத்தர வர்க்கத் தொழில்முனைவோரின் வாய்ப்புகளை முற்றிலுமாக நசுக்குகிறது. இந்த யதார்த்தங்களை மறந்து குடும்பங்களின் வாரிசு அரசியல் வழியாகத்தான் சமூக நீதியும் கொள்கையும் பரவுகின்றன என எழிலன் நாகநாதன் போன்ற பலரும் வாதிட்டுவந்தது தேர்தல் களத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தின.

ஜனநாயகத்தின் பல்வேறு தூண்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்ற அரசின் யதேச்சாதிகாரப் போக்கே அதன் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணியாக அமைந்தது. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த சுயாதீன யூடியூப் பத்திரிகையாளர்கள், சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் பலர்மீது காவல்துறையினர் மூலம் வழக்குகள் பதியப்பட்டதை எடிட்டர்ஸ் கில்ட் போன்ற அமைப்புகள் வன்மையாகக் கண்டித்தன. முதன்மை ஊடகங்கள் பலவும் அரசின் விளம்பரப் பலன்களுக்காகவும் மறைமுக அழுத்தங்களினாலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை விவாதிக்கத் தயங்கின.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை ஊடகங்களும் அறிவுஜீவிகளும் மறைக்க முயன்றபோது, மக்கள் தங்களின் கோபத்தைத் தேர்தல் வாக்குப்பதிவில் வெளிப்படுத்தினர். முதலமைச்சரின் சொந்தக் கோட்டையான கொளத்தூரிலேயே அவர் தோல்வியடைந்தது இந்தத் தேர்தலின் ஆகப்பெரும் திருப்புமுனை.

தங்களின் அரசியல் விருப்பங்களுக்கு மாறாக மக்கள் வாக்களிக்கும்போது, அவர்களின் அறிவாற்றலையே கேள்விக்குள்ளாக்குவது அதிகார மனப்பான்மையின் வெளிப்பாடு. தவெகவை ஆதரித்த இளம் தலைமுறையை எதிர்கொள்ள அறிஞர் பெருமக்கள் உருவாக்கி, தாராளமாகவே பயின்ற ‘தற்குறி’ என்ற சொல் இந்தத் தேர்தலில் ஆற்றிய பங்கு தனி ஆய்வுக்கு உரியது. (இதே தலைமுறையை நோக்கி வீசப்பட்ட ‘கரப்பான் பூச்சிகள்’ என்ற சொல் ஏற்படுத்திய தாக்கத்தோடு இதை ஒப்பிடலாம்.) இந்திய அரசியலில் ஜனத்தொகையின் ஒரு பகுதியை ஒதுக்கி, இழிவுபடுத்தி அரசியல் செய்யும் கட்சி பாஜக. தமது சமூகத்தின் அடுத்த தலைமுறையையும் பெண்களையும் இழிவுபடுத்தித் தேர்தலை எதிர்கொண்டவர்கள் திமுக அறிஞர்கள். இவர்கள் இளையர்கள்மீது கொட்டித் தீர்த்த வெறுப்பை அந்த ‘தற்குறி’த் தலைமுறை எதிர்கொண்ட விதம் வியப்பளித்தது. கொதித்தெழுந்து எதிர்வினையாற்றுவதற்குப் பதில் இன்முகத்துடன் இந்த இழிசொல்லைத் தமது அடையாளமாகவே மாற்றிக்கொண்டனர். ‘தற்குறி’ என்று வழங்கப்பட்ட அடையாளத்தின் பின் திரண்டு சாதித்தனர். தேர்தலின் முடிவு தமது கற்பனைகளுக்குள் பொருந்திப் போகவில்லை என்பதும் தமது சிந்தனைச் சிதறல்களை பெருவாரியான மக்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் அறிஞர்களுக்கு ஆத்திரமூட்டியது. மக்களை இழிவுபடுத்துவதிலிருந்து மக்களைத் தண்டிக்கும் யோசனைக்கு அவர்களில் சிலர் நகர்ந்தார்கள். இடதுசாரிக் கருத்துகளைப் பதிவிடும் ஆர். ஷாஜகான், “வழக்கமாக பத்தாம் தேதி பெண்கள் கணக்கில் போடுகிற உரிமைத் தொகையை போடப்படாது. அப்போ பெண்களும் கதற ஆரம்பிச்சிருப்பாங்க” என்று முகநூலில் பதிவிட்டார். முகநூலில் தத்துவங்கள் பேசும் அறிவுஜீவிகளைவிட, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்துகொண்டே சிந்தித்து வாக்களிக்கும் அடித்தட்டு மக்களின் அரசியல் தெளிவு மேலானது. ஏனெனில் மக்கள் மன்றத்தைவிட உயர்ந்த ஜனநாயகக் களம் வேறு இல்லை.

2026இல் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றம் திமுக அரசின் நலத்திட்டங்களின் தோல்வி அல்ல; மாறாக, அந்த நலத்திட்டங்களையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகரத் துடித்த ஒரு புதிய தலைமுறையின் போக்கு. இந்த மாற்றத்தின் வழி தமிழ்நாட்டில் நிலவிவந்த அரசியல் கலாச்சாரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்துள்ளனர். ஆளுங்கட்சிக்குத் சிறப்புப்பெரும்பான்மை கிடைக்கும்போது, அது சட்டமன்றச் சர்வாதிகாரமாக மாறும் அபாயம் இங்கு பலமுறை நிகழ்ந்துள்ளது. தற்போது சட்டமன்றம், ஜனநாயகம் தழைக்கும் கூட்டணி ஆட்சியை நோக்கி நகர்ந்துள்ளது. கூட்டணி ஆட்சியில், முதலமைச்சரோ ஆளுங்கட்சியோ தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை, கொள்கைகளை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு முக்கிய முடிவிற்கும் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், அதிகாரத்துவத்தின் தன்னிச்சையான போக்கு கட்டுப்படுத்தப்படும்; நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் 2026இல் வழங்கிய தீர்ப்பின்படி அவர்கள் ஒரு புதிய தலைமையை ஆட்சியில் அமர்த்த விரும்பினாலும், அவர்களுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தை வழங்கத் தயாராக இல்லை. அதிகாரத்தை ஓரளவு பரவலாக்கி, பிற ஜனநாயகக் கட்சிகளின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் புதிய அரசு செயல்படுவதன் மூலம், அரசியல் மாற்றம் வேண்டும், அதேசமயம் அது மீண்டும் குடும்ப ஆதிக்கமாகவோ அல்லது யதேச்சாதிகாரமாகவோ மாறிவிடக் கூடாது என முடிவெடுத்துள்ளனர். புதிய ஆட்சியாளர்கள் மக்களின் இந்த நுட்பமான தீர்ப்பைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

அறுதிப் பெரும்பான்மை அற்ற கூட்டணி ஆட்சியின் சாதகங்கள் உடனடியாகவே காணக்கிடைக்கின்றன. சில காலப்போக்கில் துலக்கம்பெறும்.

திமுக ஆட்சியில் கடும் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருந்த ஊடகங்கள் உடனடியாக எல்லா அரசியல் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தலைப்பட்டுள்ளன. அனைத்துக் கருத்துகளுக்கும் இடமளிக்கின்றன. இதனால் அவற்றின் பார்வையாளர் வருகையும் பெருமளவு அதிகரித்துள்ளது.

சட்டசபை வலுவானதாக, அதன் நடவடிக்கைகள் ஆழ்ந்த கவனத்திற்குரியதாகவும் மாறிவிட்டது.

தமிழகத்தில் அமைச்சரவை என்ற முக்கியமான ஜனநாயக சாதனம் 50 ஆண்டுகளாக கவனம் பெற்றதே இல்லை. அங்கே விவாதங்கள் நடந்ததாகவும் தெரியவில்லை. முதலமைச்சரின் ஆதிக்கத்திலேயே கடந்த அரை நூற்றாண்டாக ஆட்சிகள் நடக்கின்றன. (ஜெயலலிதாவுக்கு பிந்தைய அதிமுக ஆட்சி இதில் ஒரு விதிவிலக்கு.) ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி அமைச்சரவை என்பது முக்கியமானதாகவும் கவனத்திற்குரியதாகவும் இருக்கும் என்று நம்பலாம்.

தவெகவின் அமைச்சரவையிலும் அதிகார நியமனங்களிலும் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் உரிய பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இரண்டு பிராமணர்களும் அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இதனால் பாஜகவின் இந்துத்துவ அரசியலில் பெரிதும் தஞ்சமடைந்துள்ள தமிழகப் பிராமண சமூகத்தின் போக்குத் திசை திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கிழடுதட்டிப்போன அரசியல் சூழலில் பல இளையர்களின் வருகை ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஊழல் ஒழிப்பு என்பது தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகளின் கண்காணிப்பில் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் பங்கேற்புடன் தமிழக அரசியல் வரலாற்றில் 1952க்குப் பிறகு முதல்முறையாக ஏற்பட்டுள்ள கூட்டணி ஆட்சி முதல் நிலையில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையை, தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் புதிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.