
ஊடகம் - அரசு - நீதி
இந்திய முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் கடந்த 2021 டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த வான்விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி உட்பட பதின்மூன்று பேரும் விபத்தில் பலியானார்கள். நாட்டை உலுக்கிய கொடும் விபத்து இது.
விபத்தைப் பற்றிப் பிரபலங்களும் பொதுமக்களும் சமூக வலைத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். ‘பிரபல’ யூடியுப் பதிவரான மாரிதாசும் பதிவிட்டிருந்தார். ‘விபத்துக்குக் காரணம் சதிவேலை. ‘திமுக ஆட்சியில் தமிழகம் மற்றொரு காஷ்மீராக மாறிக்கொண்டிருக்கிறது. நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்கள் மாநிலத்தில் தீட்டப்படுகின்றன’ என்று கூறியிருந்தார். இந்தப் பதிவின் அடிப்படையில் மாரிதாஸ்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்மீது தேசத்துரோகம், சமூக நல்லிணக்கத்தைக் குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் நோக்கம் ஆகிய குற்றப் பிரிவுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டது. கூடவே அவர்மீது பதிவான பழைய வழக்குகளின்பேரிலும் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்; தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மாரிதாஸ் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அரசின் நடவடிக்கை, ஊடகங்களின் பொறுப்பு, நீதிமன்றச் செயல்பாடு தொடர்பான வினாக்களை முன்வைக்கிறது. ஜனநாயக அமைப்பில் கருத்துச் சுதந்திரத்தின் நிலைபற்றிய விவாதத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
“தமிழக அரசு திட்டமிட்டே மாரிதாசைக் கைது செய்தது. கைதுக்கு முகாந்திரமான குற்றத்தைச் சுட்டிக் காட்டும் முதல் தகவல் அறிக்கை அளிக்கப்படவில்லை, பிணையில் வெளிவர முடியாத வழக்கில் உட்படுத்தப்பட்டார்” என்று மாரிதாஸ் தரப்பினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர் இழைத்ததை அவதூறு பரப்பும் குற்றச் செயலாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
மாரிதாஸ் தொடர்ந்து தரக்குறைவான கருத்துகளையும் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளையும் பதிவேற்றி வருவது கண்கூடு. இந்த அவதூறுச் செயல்களுக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுவதில் பிழையில்லை. ஆனால் திமுக அரசை விமர்சிக்கும் விதமாகப் பதிவேற்றியதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மத்திய அரசு தனக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்களுக்குப் பாடம் கற்பிக்கப் பயன்படுத்தும் அதே ஆயுதத்தைத் தமிழக அரசும் கையாண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் சகிப்பின்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக அரசும் அதே வழியில் செல்வது கருத்துச் சுதந்திரத்துக்கு இணக்கமானது அல்ல. இச்சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று மனித உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். இத்தகைய ஒரு சட்டத்தைக் கையாள்வதை முற்போக்கான பார்வையுடன் இயங்கிவரும் திமுக அரசு தளர்த்தியிருக்க வேண்டும். அரசியல் காழ்ப்பின் பேரில் எவர்மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
மாரிதாஸின் பதிவுலகச் செயல்கள் அவதூறானவையா, கிரிமினல் நோக்கம் கொண்டவையா எனச் சட்டத்தின் வழியேதான் தீர்மானிக்க முடியும். அவரது அவதூறுக் கருத்துகளை ஊடகங்கள், கிரிமினல் குற்றங்களாக ஊதிக் காட்டுகின்றன. இந்தச் செயல் ஊடகங்களுக்கு எதிராகவே திரும்பும் அபாயமும் உள்ளது. ஊடக நிறுவனங்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திப் பல ஊழியர்களின் பணிநீக்கத்துக்கும், அதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் மாரிதாஸ் உலைவைத்திருக்கிறார். ஆகவே அவரது கைதை ஊடகப் பணியாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார்கள். இது ஊடக – நிறுவனங்களில் நடைபெறும் ‘காலை வாரும் கைங்கரியத்தை’ ஒத்தது இல்லையா? ஊடகங்கள் அளிக்கும் செய்திகளிலும் தகவல்களிலும் காட்ட வேண்டிய பொறுப்பை ஊடகங்கள் பணிச் சூழலிலும் பின்பற்ற வேண்டிய தேவையை இது சுட்டிக் காட்டுகிறது.
மாரிதாஸ் மீதான தேசத்துரோக வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை இருக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்குப் பின் வழக்கைத் தள்ளுபடி செய்தார். மாரிதாஸின் பதிவு முதிர்ச்சியற்ற ஒன்று என்று குறிப்பிட்டார். அப்படிக் குறிப்பிடுவதற்கான காரணங்களை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 51ஏ பிரிவின்படி எடுத்துக்காட்டியும் இருந்தார்; அந்தத் தீர்ப்புக்காகவே ஏளனத்துக்கும் விமர்சனத்துக்கும் இலக்கானார். இதே சட்ட அடிப்படையிலான சான்றுகளை முன்வைத்துக் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் தீர்ப்பளித்தவர் அவர் என்ற உண்மை வசதியாக மறக்கப்பட்டது.
ஊடகங்களைப் பொதுச் சமூகம் கையாளும் விதத்திற்கும் மாரிதாஸ் விவகாரம் உதாரணம். அச்சிதழ்கள், தொலைக்காட்சி போன்ற தொடர்புச் சாதனங்களின் பங்கை இன்று சமூக ஊடகம் எடுத்துக்கொண்டிருக்கிறது. முன்னவற்றில் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருந்தன. சமூக ஊடகங்கள் கட்டற்ற சுதந்திரத்தைக் கொண்டிருப்பவை. மிகப் பரந்த ஜனநாயக வெளியைக் கொண்டவை. அந்தச் சுதந்திரத்தையும் ஜனநாயக உணர்வையும் தவறாகப் பயன்படுத்துபவர்களில் ஒருவர் மாரிதாஸ். ஆனால் அவர் மட்டும்தானா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வது கருத்துச் சுதந்திரம் குறித்த மேம்பட்ட புரிதலுக்கு உதவலாம்.
திமுக அரசு பதவியேற்ற சில நாட்களுக்குள் இதே போன்ற குற்றச் சாட்டின் பேரில் இணையப் பதிவாளர் கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டார். அதை சுட்டிக்காட்டிச் இதழ் எண் 261 செப்டம்பர் 2021 தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:
இணையத்தில் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்த கிஷோர் கே. சுவாமியின் மீதான புகார்களின் பேரில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது திமுக அரசு. கிஷோர், இணையத்தில் உலாவும் தரங்கெட்ட ரவுடிகளில் ஒருவர் என்பதில் ஐயமில்லை. அவர் திமுக தலைவர்களுக்கு எதிராகவும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராகவும் ஆபாச அவதூறு வசைகளைத் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் வலுவாகவே இருக்கிறது. ஆனால் அவர் திமுக தலைவர்களைத் தரக்குறைவாக வசைபாடியதற்காகத்தான் இந்த அரசு அவரைக் கைதுசெய்திருக்கிறது. சாதாரண மக்கள், குறிப்பாகப் பெண்கள்மீது அவர் கொட்டிய அவதூறுக் குப்பைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. தவிர, அவர்மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் அரசியல் எதிரிகள் மீது ஏவுவதற்காகவே பயன்படுத்தப்படுவதாகும். இதை வைத்து யாரையும் மிரட்டலாம் என்பதால் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மாறாக, குடிமையியல் (சிவில்) அவதூறுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நெடுங்காலமாகக் கோரிவருகிறார்கள். கிஷோர் போன்ற ஒருவருக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தாலோ அல்லது அதைப் பாராமுகமாக இருந்துவிட்டாலோ நாளை அரசியல் காழ்ப்பிற்காகவே இந்தச் சட்டத்தை வேறொருவர்மீது பிரயோகிக்கும்போது அதை எதிர்ப்பதற்கான நியாயத்தை நாம் இழந்துவிடுவோம்.
இந்த வாசகங்கள் இன்று மாரிதாஸ் விவகாரத்திலும் துல்லியமாகப் பொருந்தும்.
சமூக வலைத்தளங்களை அதிகாரம் என்னவாக எதிர்கொள்கிறது என்பதற்கான சமீபத்திய சிறந்த உதாரணம் இது.
மதுரையைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிப் பிரமுகர் மதிவாணன் தமது குடும்பத்தினருடன் சிறுமலைக்குச் சென்றார். மலையுச்சியில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டார். அதற்கு அவர் கொடுத்த குறிப்பு ‘ஷூட்டிங் பயிற்சிக்காகச் சிறுமலைப் பயணம்.’ அதைப் பார்த்த வாடிப்பட்டி காவல்துறையினர் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அவரைக் கைது செய்திருக்கின்றனர். மாநில அரசின் மீது தாக்குதலுக்கு ஆயத்தம் செய்கிறார் என்பது அவர்மீது பதியப்பட்ட வழக்குக்கான காரணம். மாரிதாஸ் வழக்கைத் தள்ளுபடி செய்த அதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே வழக்கை விசாரித்தார். ‘சிரிப்பது கடமை என்று சட்டபூர்வமாக்குமாறு நமது அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படும் காலம் நெருங்கிவிட்டது’ என்றும் கூறியிருக்கிறார்.
நமது சட்டங்கள் சிரிப்புக்குரியனவாக நடைமுறைப் படுத்தப்படுவது கருத்துச் சுதந்திரத்துக்கும் ஜனநாயக உரிமைக்கும் விடப்படும் அறைகூவல். அதை மாரிதாசும் அவரை முன்னிருத்தி அனைவரும் செய்து கொண்டிருப்பது நகைப்புக்குரியதல்ல, வேதனைக்குரியது.